தைபூச திருநாளில்.......



அன்பார்ந்த தமிழ் மக்களே ,
இந்த இனிய நாளான ,தைபூச திருநாளில் ,வடலூர் வள்ளலார் , ஜோதியிடம் ,கலந்த தினம். இன்று ,வடலூரில் ,சிறப்பாக கொண்டாடப்படுகிறது .இதனை பற்றிய பதிவு
இன்று தங்களுக்காக வெளியிட பட்டுள்ளது .தாங்கள் படித்து இன்புற வேண்டுகிறேன் .



சிவனின் அம்சமே முருகப் பெருமான் என்பதை, 'ஈசனே அவன் ஆடலால் மதலை ஆயினன் காண்’ என்று கந்த புராணம் சுட்டுகிறது. அதனால்தான் சிவனுக்கும், முருகனுக்கும் உரிய நாளாகக் கொண்டாடப்படுகிறது... தைப்பூச திருநாள்! என்றாலும், முருகன் ஆலயங்களில்தான் இந்நாள் பெரும் சிறப்புப் பெறுகிறது!

ஆண்டுதோறும் தை மாதத்தில் பௌர்ணமியோடு கூடி வருகின்ற பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் தைப்பூசம், இந்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி வருகிறது.

ஆதிசேஷனின் அம்சமான பதஞ்சலி முனிவரும், புலியின் கால்களை உடைய புலிக்கால் முனிவரும் (வியாக்ரபாதர்) தில்லையில் கூத்தப் பெருமானின் நடனத்தைக் காண தவம் புரிந்தனர். அதன் காரணமாக முதன் முதலாக சிவன் தில்லையில் நடனமாடிய நாள், தைப்பூச நாள் என்பது ஒரு சிறப்பாக குறிப்பிடப்படுகிறது.

மதுரையை ஆண்ட வரகுண பாண்டியன், தன் குதிரையில் சென்று கொண்டிருந்தபோது ஓர் அந்தணர் மிதிபட்டு இறந்ததால், மன்னனை 'பிரம்மஹத்தி தோஷம்' பிடித்துக் கொண்டது. 'சோழ நாட்டில் இருக்கும் திருவிடைமருதூர் திருத்தலத்தில் வழிபட்டால் தோஷம் விடுபடும்' என்று மன்னனின் கனவில் தோன்றி கூறினார் சோமசுந்தர கடவுள்!



அதன்படியே அங்கே சென்று, சித்தா தீர்த்தத்தில் மூழ்கி எழுந்த மன்னன், இரண்டாவது வாயிலுக்குச் சென்றபோது... பிரம்மஹத்தி தோஷம் அவனை விட்டு விலகியது. அதேசமயம், வழிபாட்டை முடித்துத் திரும்பும்போது பாண்டியனைப் பிடித்துக் கொள்ளலாம் என்று அங்கேயே காத்திருந்தது (இன்றும் காத்துக் கொண்டிருக்கின்றது!). மன்னனோ... பின் வாசல் வழியே வெளியே சென்று விட்டான். தோஷத்திலிருந்து விடுதலை கிடைத்தது தைப்பூச நாளில்தான். அதனால், திருவிடைமருதூர் கோயிலில் தைப்பூச விழா ஆண்டுதோறும் நடைபெற வேண்டுமென்று மானியம் ஏற்பாடு செய்தான் வரகுண பாண்டியன்.

ஹம்சத்துவன் எனும் சோழ மன்னனும் அறியாமல் ஓர் அந்தணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க, திருவிடைமருதூர் சிவனைத்தான் வழிபட்டிருக்கிறான். அந்த தோஷம் நீங்கிய சந்தோஷத்தில், இவனும் தைப்பூசம் கொண்டாடுவதற்கு மானியங்களையும் நிலங்களையும் வழங்கியிருக்கிறான்.

தைப்பூச நாளில் திருநெல்வேலியில் உள்ள தாமிரபரணியில் நீராடுவது மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. காரணம்... இந்த நதிக்கரையில் தவம் மேற்கொண்ட உமையம்மைக்குத் தைப்பூச நாளில்தான் ஈஸ்வரன் வரம் அருளினான் என்பது புராணம். இந்நாளில் அவன் புத்திரன் முருகனின் திருவினைகளும் ஏராளம். அதில் ஒன்று... முருகன் - வள்ளி - தெய்வானை முக்கோண காதல்.

முருகப் பெருமான் வள்ளியை மணம் செய்ததால்... தெய்வானை ஊடல் கொண்டதாகவும், இருவரும் முற்பிறவியில் சகோதரிகள் எனவும், தன்னை அடைய வேண்டி இருவருமே தவம் புரிந்ததால் கற்பு மணம், களவு மணம் மூலம் இருவரையும் மணந்ததாகவும் எடுத்துக் கூறித் தெய்வானையைச் சமாதானப்படுத்திய நிகழ்வைக் குறிப்பதே தைப்பூசம் என்று கூறுபவர்களும் உண்டு.

தைப்பூசம் தோன்றியது என்னவோ தமிழகத்தில்தான். ஆனால், அதை மிக பிரமாண்டமாக கொண்டாடுவது... மலேசியத் திருநாட்டில் கோலாலம்பூரில் உள்ள பத்துமலை எனும் குகைக் கோயிலில்தான்! 2007-ல் தைப்பூசத்தன்று 13 லட்சத்துக்கும் மேலான மக்கள் இங்கு கூடினர். இவர்களில் சுமார் 25,000 பேர் பால் குடம், காவடி என எடுத்துத் தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றினர் என்பது உலக சாதனை. அந்நாட்டு அரசு, ஆண்டுதோறும் தைப்பூச நாளில் விடுமுறையும் அளிக்கிறது. உலக நாடுகளில் தைப்பூசத்துக்காக அரசு விடுமுறை இங்கு மட்டுமே என்பது சிறப்பு.

பால் காவடி, பன்னீர் காவடி, அலகுக் காவடிகளை எடுத்து வந்து நாடு முழுவதும் உள்ள மலேசியத் தமிழர்கள், சீனர்கள், புத்த மதத்தினர், ஆங்கிலேயர், சீக்கியர் என்று சமய, இன, மொழி வேறுபாடின்றி அனைவரும் காவடி எடுத்து தைப்பூச நன்னாளைக் கொண்டாடுவது, கண்கொள்ளாக் காட்சி!

கடலூர் மாவட்டம், வடலூர், தைப்பூச விழாவில் சிறப்பிடம் பெறுகிறது. சன்மார்க்க சங்கம், சத்திய தரும சாலை, சத்திய ஞான சபை, சித்தி வளாகம் போன்ற அமைப்புகளை நிறுவி பசிப்பிணி போக்கி, பக்தி நெறியைப் பரப்பிய அருளாளர் ராமலிங்க அடிகளார் 1874-ம் ஆண்டு தைப்பூச நன்னாளில் இறைவனுடன் கலந்தார். ஆண்டுதோறும் தைப்பூச நன்னாளில் வடலூரில் ஏழு திரைகள் விலகி ஜோதி தரிசனம் நிகழும். ஒவ்வொரு திரைக்கும் ஒவ்வொரு சக்தி என்பது நம்பிக்கை. (கண்ணாடிக் கதவுகளில்) கறுப்புத்திரை என்பது மாயா சக்தி, நீலத்திரை - கிரியாசக்தி, பச்சைத் திரை - பராசக்தி, சிவப்புத் திரை - இச்சா சக்தி, பொன்வண்ணத் திரை - ஞானசக்தி, வெண்மைத் திரை - ஆதிசக்தி, கலப்புத்திரை - சிற்சக்தி!

அருட்பெருஞ்சோதியாகிய இறைவனை அன்று தரிசிக்கிறோம் என்பது கருத்து. தைப்பூச நாளில் விடியற்காலையில் மேற்கே சந்திரனும் கிழக்கே சூரியனும் காணப்பெறும். அந்த நேரத்தில்தான் ஞான சபையில் அருட்பெருஞ்ஜோதியைக் காட்டியருளினார் அடிகள்!

சிவன், முருகன் அருள்பெற, தைப்பூச விரதமிருப்போம்!







விரதம் அனுஷ்டிக்கும் முறை...



மூன்று முதல் நாற்பது நாட்கள் வரை அவரவர் வசதிக்கு ஏற்ப விரதம் இருக்கலாம். விரதம் அனுஷ்டிப்பவர்கள் அருகில் இருக்கும் முருகன் தலத்துக்குச் சென்று... அலகு குத்தி, காவடி எடுத்து முடி காணிக்கைக் கொடுத்து விரதத்தை நிறைவு செய்வார்கள்.

விரதம் இருக்கும் நாட்களில் காவடி சிந்து பாடல்களைப் பாராயணம் செய்ய வேண்டும் என்பது நம்பிக்கை. சபரி மலைக்குச் செல்லும் பக்தர்களைப் போல் தைப்பூச விரதம் அனுஷ்டிப்பவர்களும் உண்டு. மாலை அணிந்து, பச்சை ஆடை உடுத்தி யாத்திரையாகவே பலரும் பழனிக்கோ... அல்லது ஆங்காங்கே இருக்கும் முருகன் ஆலயத்துக்கோ செல்வது வழக்கம்.









Comments