தேவர்கள் என்றாலும்... பூலோகத்தில் பிறந்தால் மனிதர்களே!

குருசேத்திரப் போர் நிகழ்ந்த காலம். மகா ஞானியும் அக்ரகண்யர் என்று புகழப்படுபவருமான பிதாமகர் பீஷ்மர், அர்ஜுனனின் அஸ்திரங்களால் தாக்கப்பட்டு, அம்புப் படுக்கையில் வீழ்ந்து கிடந்தார்.

மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்த அவருக்கு கடும் தாகமும், தன் அன்னை கங்காதேவியைக் காணும் ஏக்கமும் எழுந்தது. பீஷ்மரின் உள்ளுணர்வை புரிந்து கொண்ட அர்ஜுனன், அவரது விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்தான்.

புனித கங்கையை பீஷ்மரிடம் கொண்டு வந்து சேர்ப்பது என்பது, அவனுக்கொன்றும் கடினமான காரியம் இல்லையே! ஆக்னேயம், வாருணம், ஸெளம்யம், வாயவ்யம், வைஷ்ணவம் ஆகிய வீர்யம் மிகுந்த அஸ்திரங்களையும் லாகவத்துடன் கையாளும் திறன் படைத்தவன் அல்லவா அவன்! சக்தி மிகுந்த அஸ்திரம் ஒன்றை கையில் எடுத்தவன், பூமியை குறிப்பார்த்து தொடுத்தான்.

அந்த அஸ்திரம், பூமியைத் துளைத்து, பாதாளம் வரை சென்றது. அங்கு, 'போகவதி' எனும் பெயரில் பாய்ந்தோடும் கங்கையைத் தடுத்து நிறுத்தியதுடன், அவளை பூமிக்கும் மேலே கொண்டு வந்து, பீஷ்மரின் மீது பொழியச் செய்தது அந்த அஸ்திரம்.



அகம் குளிர்ந்த பீஷ்மர், அன்னை தந்த அமுதத்தை- கங்கையின் நீரை பருகி பேரானந்தம் அடைந்தார். தம்மை திருப்திப்படுத்திய அர்ஜுன னுக்கு பார்வையாலேயே நன்றி சொன்னார்.

மைந்தனைப் போலவே கங்காதேவியும் பாசத்தில் பரிதவிக்க நேர்ந்தது. பீஷ்மர் இறந்த செய்தியைக் கேட்டதும் புத்திர சோகம் தாளாமல், தனது நீரோட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். அத்துடன், பீஷ்மருக்கு நீத்தார் கடன் புரிய வந்த பெரியோர்களிடம், ''புண்ணிய புருஷர்களே... பாவியாகிய என் இதயம் இன்னும் பிளந்து போகாமல் இருக்கிறதே!'' என்று புலம்பித் தீர்த்தாள்.

மகனை இழந்து தவிக்கும் கங்கைக்கு, ஆறுதல் கூறினார் பகவான் கிருஷ்ணர்: ''மங்கள வடிவினளே... உன் புத்திரர் உத்தம லோகம் சேர்ந்து விட்டார். நதி தேவதையான நீயே இப்படி புலம்பலாமா? பூவுலகில் தோன்றிய அனைத்து ஜீவன்களுக்கும் மரணம் நிச்சயம் என்பது உனக்குத் தெரியாதா?

உன் புத்திரர் சாதாரணமானவர் அல்ல! அஷ்ட வசுக்களில் ஒருவர். ஒரு சாபத்தின் காரணமாக உனக்கு மகனாகப் பிறந்தார். பூவுலகில் அவரது காலம் முடிந்து விட்டது. எனவே, அவர் குறித்து நீ துக்கப்படுவது கூடாது. மனதைத் தேற்றிக் கொள்!''- அவரது வார்த்தைகள், கங்கைக்கு ஆறுதல் அளித்தன. இயல்பு நிலைக்கு திரும்பியவள், தனது கடமையை தொடர்ந்தாள்.

கங்காதேவி, பீஷ்மர் - இருவரும் தேவ கணங்களே! சாபத்தின் விளைவால் இருவரும் தாய்- மகன் என்ற பந்தப் பிணைப்புடன் பூவுலகில் பிறந்தனர்.தேவ கணங்கள் என்றாலும், பூவுலகில் தாயும் சேயுமாக அவதரித்ததால், லௌகிக பந்தம் எனும் பூலோக மாயை அவர்களையும் விட்டு வைக்கவில்லை!

Comments