மந்திரமும் மருந்தும் சேர்ந்தால், நோய்க்கு நிரந்தரத் தீர்வு

இந்திர லோகம். ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகியோர் அற்புத நடனமாட... ரசித்துக் கொண்டிருந்தான் இந்திரன். அப்போது அங்கு, தேவ குருவான பிரகஸ்பதி வந்தார். அவரைக் கண்டதும் இந்திரனுக்கு எரிச்சல் தாளவில்லை. 'ச்சே... இவர் எதற்காக இங்கே வந்தார்!' என்று அலுத்துக் கொண்டான்.



குருநாதர் வருகிறார் என்றால், எழுந்து ஓடோடிச் சென்று அவரை வரவேற்று பூஜிப்பதுதானே முறை? ஆனால் தனது உல்லாசத்தை இழக்க விரும்பாத இந்திரன், தன் குருநாதரைப் பார்த்தும் பார்க்காதது போல் நடந்து கொண்டான். 'அவன் தன்னை வேண்டுமென்றே தவிர்ப்பது ஏன்?' என்பது, பிரகஸ்பதிக்கும் புரிந்தது. இந்திரனின் எண்ண ஓட்டத்தை அறிந்தவர், வந்த வேகத்திலேயே திரும்பிச் சென்றார்.

வணங்க வேண்டியவர்களை எப்போதும் வணங்க வேண்டும். தவறினால், புத்தியில் கோளாறு ஏற்படும். இந்திர னின் நிலையும் அப்படியே ஆனது! குருநாதரை அலட்சியம் செய்ததால், அவனது எல்லா செயல்களிலும் தடுமாற்றம் ஏற்பட்டன!

நடந்த விஷயங்கள் அனைத்தையும் அசுர குருவான சுக்கிராச்சார்யரும் அறிந்தார். 'தேவர்களைத் தாக்க இதுவே தக்க தருணம்!' என்று அசுரர்களை அறிவுறுத்தினார். தேவலோகத்தின் மீதான அசுரர்களது தாக்குதல் ஆரம்ப மானது. இந்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் தவித்தனர் தேவர்கள்!

இந்த தருணத்தில், குருவருளே துணை செய்யும் என்பது இந்திரனுக்குத் தெரியாதா என்ன?! அவன், பிரகஸ்பதியைத் தேடி அலைந்தான். ஆனால், அவன் கண்களுக்குப் புலப் படாமல் தன்னை மறைத்துக் கொண்டார் பிரகஸ்பதி. வேறு வழியின்றி, பிரகஸ்பதி கோபம் தணிந்து திரும்பி வரும் வரை, விஸ்வரூபன் என்பவரை குருவாக ஏற்றான் இந்திரன்.

'தேவர்கள் மீண்டும் பலம் பெற யாகங்கள் பல செய்ய வேண்டும்!' என்று தீர்மானித்த விஸ்வரூபன், அதுவரை தேவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் விதம் அவர்களுக்கு நாராயண கவசத்தை உபதேசித்தார்!

நாராயண கவசம், மத் பாகவதத்தில் உள்ளது. இதை, ஜபிப்பவர்களுக்கு எந்த ஆபத்தும் வராது. இதே போல், அனைவருக்கும் தெரிந்த மற்றொன்று- கந்த சஷ்டி கவசம். இன்னுமொரு கவசமும் உண்டு. அது, பாம்பன் சுவாமிகள் இயற்றிய ஷண்முக கவசம்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் எப்படி மயானத்திலும் கடும் தவம் செய்தாரோ, அதே போல பாம்பன் சுவாமிகளும் பிரப்பன் வலசை என்ற ஊரின் மயானத்தில் கடும் தவம் இயற்றினார்.

நாம், நோய் வந்தால்... மருத்துவர்களையும், மருந்துகளையும் நம்புகிற அளவுக்கு, பிரார்த்தனைகளை நம்புவது இல்லை. ஆனால், பிரார்த்தனை எவ்வளவு வலுவானது என்பதற்கு, பாம்பன் சுவாமிகளது வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சம்பவமே சான்று.

1923-ஆம் வருடம் டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று, சென்னை- பாரிஸில் உள்ள தம்புச்செட்டித் தெருவில், நடந்து கொண்டிருந்தார் பாம்பன் சுவாமிகள். அப்போது, வேகமாக வந்த குதிரை வண்டி ஒன்றின் சக்கரம், சுவாமிகளின் இடக் காலில் ஏறியது. இதனால், அவரின் கணுக்கால் எலும்பு முறிந்தது. அந்த வழியே வந்த பக்தர்கள் சிலர், உடனடியாக சுவாமிகளை ஒரு வண்டியில் ஏற்றி அழைத்துச் சென்று பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

அப்போது, சுவாமிகளும் அவரின் பக்தர்களும் ஷண்முக கவசத்தை, பாராயணம் செய்தபடியே இருந்தனர். குறிப்பாக,

ஏராகத் தேவன் என்தான் இருமுழங் காலும் காக்க
சீருடைக் கணைக்கால் தன்னைச் சீரலை வாய்த்தே காக்க

என்ற வரிகளை மீண்டும் மீண்டும் பக்தியுடன் உள்ளம் உருக வாசித்துக் கொண்டிருந்தனர். அப்போது, சுவாமிகளது கால்களை... திவ்யமான- தேஜோமயமான இரண்டு வேல்கள் தாங்கிக் கொண்டிருப்பதை பக்தர்கள் கண்டு சிலிர்த்தனர்.

சிகிச்சையின் போது மயில்கள் இரண்டு விண்ணுக்கும் மண்ணுக்குமாக வியாபித்து நிற்பதை கண்டார் பாம்பன் சுவாமிகள். அந்த மயில்களின் கால்கள் பூமியில் படவில்லை! இந்தக் காட்சி, சுவாமிகளின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. இந்தச் சம்பவம், மார்கழி மாதம் 23-ஆம் தேதி நிகழ்ந்தது. இதை, சுவாமிகள் தனது வாழ்நாள் முழுவதும் 'மயூரவாகன சேவனம்' என்று பெயரிட்டு கொண்டாடி வந்தார். அவரின் பக்தர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர்.

மற்றொரு திவ்விய காட்சியும் அப்போது சுவாமிகளுக்குக் கிடைத்தது. குழந்தை வடிவ முருகப் பெருமான், தன் தலையணையின் மீது கால் நீட்டி அமர்ந்திருக்கும் காட்சியே அது! தரிசனம் தந்ததுடன் மட்டுமல்லாமல், ''இன்னும் பதினைந்து நாட்களில் கால் புண் ஆறி விடும். அதுவரை மருத்துவமனையை விட்டுச் செல்ல வேண்டாம்!'' என்றும் அருளினாராம் முருகப் பெருமான். சிகிச்சைகள் முழுமையாக முடிவடையும் முன்னரே அவரின் முறிந்த எலும்புகள் ஒன்றாகச் சேர்ந்ததை, மருத்துவர்கள் ஒரு அதிசயமாகவே கருதினர்.

நோயைத் தீர்க்க மருந்து மட்டும் போதாது; மந்திரமும் தேவை. அதற்காக மந்திரம் மட்டுமே போதும் என்று பொருள் கொள்ளக் கூடாது. மந்திரத்தால் கிடைக்கும் இறையருளால் நோய்க்குக் காரணமான பாவம் தீரும். நாம் உட்கொள்ளும் மருந்தால், நோய் குணமாகும். இதைத்தான் வள்ளுவரும் 'நோய் நாடி நோய் முதல் நாடி' என்றார் போலும்.

மந்திரமும் மருந்தும் சேர்ந்தால், நோய்க்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் என்பதை அறிந்து வாழ்ந்தால், தினம் தினம் திருநாளே!

Comments

  1. nice post but how manytimes one have to read pamban swamigal mantras?

    ReplyDelete

Post a Comment