தியாகத்தை உணர்த்தும் லிங்க வடிவம்!

மூன்று பட்டணங்கள்; தங்கம், வெள்ளி, இரும்பு ஆகிய மூன்று உலோகங்களால் உருப்பெற்றவை. இவற்றை 'முப் புரம்' என்றும் அழைப்பதுண்டு. இந்தப் பட்டணங்களை எரித்து சாம்பலாக்கியவர் முக்கண்ணனாகிய சிவபெருமான். அவரை 'திரிபுராரி' என்பர்.



எதிரிகள் எளிதில் உள்ளே நுழைய முடியாதபடி பாதுகாப்புடன் திகழ்ந்த இந்த மூன்று பட்டணங்களையும் அரக்கர்கள் மூவர் ஆட்சி செய்தனர். அறத்தை அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்ட இவர்களை வாழ விட்டால், அறம் வாழ்க்கையை இழந்து விடும். அறத்தைக் காப்பது ஆண்டவன் பொறுப்பு.

குறிப்பாக தேவர்கள் அனைவரும் இந்த அரக்கர்களால் பாதிக்கப்பட்டனர். தங்களது துயர் தீர, தேவர்கள் போரிட்டும் பலன் இல்லை; சோர்வடைந்தனர். 'அரக்கர்களது பிடியில் சிக்கி அகில உலகமும் அழிவைச் சந்திக்க நேரிடலாம். அந்தத் தீய சக்திகளைச் செயலிழக்கச் செய்ய வேண்டும்... என்ன செய்வது?' என்ற சிந்தனையுடன் பிரம்மன், விஷ்ணு, சிவபெருமான், இந்திரன், முப்பத்துமுக்கோடி தேவர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்தனர். 'ஜகமத்யம் மஹாபலம்'... அதாவது, ஒற்றுமை வலிமை வாய்ந்தது என்பர். அந்தக் கூட்டத்தில் 'அரக்கர்களை அடக்குவது யார்?' என்று கேள்வி எழுந்தது. மௌனம் நிலவியது. இறுதியில் ஒருமனதாக ஒரு முடிவுக்கு வந்தனர்.

அக்னி தேவன்- பாணமாக (அம்பாக) மாறினான். சோம தேவன்- அந்த அம்பின் 'சல்ய'மாக மாறினான் (அம்பின் கூர்முனையை சல்யம் என்பர்). விஷ்ணு- சல்யத்தின் (கூர்முனை யின்) வலுவாக... அதாவது எதிரியைப் பிளக்கும் தகுதியுடைய உருப்படியாக மாறினார். இப்படியரு புதுமையான அம்பை உருவாக்கினர் தேவர்கள். அக்னியாகிய நெருப்பு, சோமனாகிய கூர்முனை மற்றும் விஷ்ணுவாகிய அதன் வலிமை... என மூன்று தெய்வங்களது சக்தி ஒன்று சேர்ந்து, வலுவான ஆயுதம் தயாரானது!

இப்போது, அடுத்த கேள்வி எழுந்தது! 'இந்த அம்பை யார் தொடுப்பது? அந்தத் திறமை யாருக்கு உள்ளது?' கூட்டத்தில் மீண்டும் மௌனம். 'பாணத்தைத் தொடுப்பவன், வீரனாக மட்டுமின்றி, போரிடும் வேளையில் வேகம் கொண்டவனாகவும் திகழ வேண்டும். அப்படிப் பட்டவன் யார்?' என்ற கேள்விக்கு 'ருத்ரன்' என்று பதில் வந்தது. அதன்படி, 'பரமேஸ்வரனே பாணத்தைத் தொடுக்க வேண்டும்; திரிபுரம் அழிய வேண்டும்!' என்று தீர்மானம் ஆயிற்று. உடனே, பரமேஸ்வரன் ஒரு நிபந்தனையை முன் வைத்தார். 'உயிரினங்கள் அனைத்துக்கும் நானே தலைவன் என்று பிரகடனப்படுத்தினால், நான் தயார்!' என்றார். அனைவரும் அதை ஏற்றுக் கொண்டனர்.

உயிரினங்களுக்கு 'பசு' என்றும் பெயர் உண்டு. ஆறறிவு இல்லாத மாடு மட்டுமல்ல, ஆறறிவு பெற்றிருந்தும் அறியாமையில் தத்தளிப்பவர்களும் பசுக்களே! ஆகையால், 'தாங்கள் பசுக்களுக்கு அதிபதி!' என்று ஈசனை போற்றியது தேவர்கள் கூட்டம். உடனே செயல்பட்டான் ஈசன். திரிபுர சம்ஹாரம் நிகழ்ந்தது. மாபெரும் ஆபத்தில் இருந்து உலகம் தப்பியது. 'எங்களிடம் இருக்கும் 'பசு' தன்மையை, அதாவது அறியாமையை அகற்று என்று ஈசனை வணங்கினால், அறியாமை அகலும்!' என்கிறது வேதம்.

அரக்கர்களை ஓட ஓட விரட்டியவர், நமது அறியாமையையும் விரட்டுவார். கொசுவை விரட்ட 'வத்தி' வைக்கிறோம். 'அறியாமையை விரட்ட, ஈஸ்வரனை நமஸ்கரிக்க வேண்டும்!' என்பது வேதத்தின் அறிவுரை. ஆபத்பாந்தவன், அனாத ரட்சகன் என்றெல்லாம் ஆண்டவனுக்குப் பெயருண்டு.

அழியா வரம் பெறுவதற்காக அமிர்தம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர். ஆனால் அதில், ஆலகால விஷம் தோன்றியது. அனைவரும் தலை தெறிக்க ஓடினர். கொடிய விஷத்தில் இருந்து உலகைக் காப்பாற்ற அவர்களால் முடியவில்லை.

உலகத் தந்தை ஈசனுக்கு பொறுப்பு உண்டு என்பதால், எவரும் அழைக்காமலேயே அங்கு தோன்றினார். 'தான் அழிந்தாலும் பரவாயில்லை, உலகம் மீள வேண்டும்!' என்று விஷத்தைக் கையில் எடுத்து உண்டார்.

அப்போது பார்வதிதேவி ஓடி வந்து, விஷம் சிவனாரின் உடலுக்குள் இறங்கி விடாதபடி தன் திருக்கையால் அவர் கழுத்தைப் பிடித்து, விஷத்தை அங்கேயே நிலைநிறுத்தினாள். சிவனாரின் உடலுக்குள் இருக்கும் ஜீவராசிகளும் காப்பாற்றப்பட வேண்டும் என்பது உமையின் எண்ணம்.

ஈசனின் எண்ணத்தை ஈடேற்ற ஒத்துழைத்தாள் அன்னை. அவள், உலகத்தின் தாய். அவளது பங்கை அவள் செயல்படுத்தினாள். அனாதைகளைக் காப்பதிலும், ஆபத்தில் சிக்கியவர்களை விடுவிப்பதிலும் தாய்- தந்தையரான பார்வதி- பரமேஸ்வரர் காட்டிய சுறுசுறுப்பு, நம் இளைஞர்களுக்கும் வேண் டும். இல்லறத்தில் நுழையும் முன்பே இந்த எண்ணங்கள் மனதில் பதிந்திருக்க வேண்டும். வேதம் காட்டிய நெறியை அம்மையப்பன் இருவரும் செயல் வடிவில் நடைமுறைப்படுத்தினர். தாய்- தந்தையின் நடைமுறையை பிற்காலச் சந்ததியினரும் பின்பற்ற வேண்டும். 'மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ' என்ற குரல் இளைஞர்களின் காதில் விழ வேண்டும் என்பதால் உரக்க உச்சரிக்கப்படுகிறது.

வேலையில் அமர்வதற்கு முன்பே வாழ்க்கை யின் அடிப்படைத் தத்துவங்களை மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். குழந்தை வெளி வருவதற்கு முன், அதன் உணவான தாய்ப் பால் தயாராகி விடுகிறது. இது, இயற்கை தந்த பாடம். ஆனால், நெருப்பு கொழுந்துவிட்டு எரியும் போது அதை அணைக்கும் தண்ணீருக்காகக் கிணறு தோண்ட முயற்சிக்கக் கூடாது. எதை முன்னே செய்ய வேண்டும்... எதை பின்னே செய்ய வேண்டும்... என்பதை வேதம் வரையறுத்துள்ளது. அதை நம்ப வேண்டும்.

ஈசனின் விளையாட்டை வெறும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல், அதில் ஒளிந்துள்ள நல்ல கருத்து களைத் தேட வேண்டும். கடலில் மூழ்கி முத்தெடுக்க வேண்டும். கல்வியில் மூழ்கி, அதன் சூட்சுமமான கருத்தைப் பெற வேண்டும். விஷத்தைக் கழுத்தி லும், கடலில் இருந்து தோன்றிய சந்திரனை தலையிலும் வைத்துக் கொண்டதால், நீலகண்டன் மற்றும் சந்திரசேகரன் ஆகிய பெயர்களைப் பெற்றார் சிவபெருமான். 'பிறரது நல்ல குணங்களை உயர்வாக மதித்து, தலையசைத்துப் பாராட்ட வேண்டும். குறைகளை கழுத்தில் நிறுத்தி, வெளியிடாமல் இருக்க வேண்டும்!' என்ற அறிவுரையை சந்திரசூடனும், நீலகண்டனும் வழங்குகின்றனர்.

கண்ணால் பார்க்கும் விஷயங்கள் எளிதாக மனதில் பதிந்து விடும். குழந்தைகள், பார்த்ததை மனதில் பதித்துக் கொள்ளும். நாமெல்லாம் ஈசனின் குழந்தைகள். நமக்கு விளையாட்டு காட்டி புரிய வைக்கிறார் அவர். அவரது உருவம், அவரது செயல்பாடு அலாதியானது.

லிங்க வடிவமாக, அலங்காரம் செய்ய இயலாத உருவமாக (அதாவது உருவத்துடன் இருக்கும் மற்ற தெய்வ வடிவங்களுக்குச் செய்வதைப் போல அலங்காரம் செய்ய முடியாது) தோன்றுகிறார். நீரை ஊற்றினாலும் லிங்கத்தில் தங்காது. அவருடன் ஒரு பொருளும் ஒட்டாது. இது தியாகத்தின் வெளிப்பாடு. போகத்தைவிட தியாகத்தை நம்பலாம். போகத் துக்கு முற்றுப்புள்ளி கிடையாது. அதில் நுழைந்தால், வெளியே வர இயலாது; பத்ம வியூகம் போன்றது. 'போகத்தில் சிக்கிக் கொண்டால் வாழப் பிறந்த நாம், துயரத்தில் மூழ்கித் தவிப்போம். தியாகம், தன்னிறைவைத் தரும்!' என்ற உண்மையை சிவலிங்கம் அறிவுறுத்துகிறது.

நீர், நெருப்பு, ஆகாயம், காற்று, ப்ருதிவி ஆகிய ஐந்தும் ஈசனின் உருவம். இயற்கையின் மறு பதிப்பு ஈசன். நீரும் நெருப்பும் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும். ஈசனின் தலையில் கங்கை இருக்கிறாள். தண்ணீர் பெருகிக் கொண்டிருக்கிறது. நெற்றியில் நெருப்பு அணையாமல் விளங்குகிறது.

மேகம், நீரை அளிக்கிறது. பூமியும் நிலத்தடி நீரை வழங்கு கிறது. கற்கள் உரசினால் நெருப்பு வருகிறது. இவை அனைத்தும் இயற்கையின் பங்கு; அனைவருக்கும் பொது என்பதை அறிவுறுத்துகிறது சிவ உருவம்.

குழாயும், அணைக்கட்டும், மின்சாரமும் போதும் என்று எண்ணாமல், கோயிலும், குள மும், தீபாராதனையும் வேண்டும் என நினைக்க வேண்டும். 'குழாய், குளம், மின்சாரம் ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டும்!' என்ற எண்ணத்தை கோயிலும் குளமும் தீபாராதனையும் நமக்குள் உண்டு பண்ணி விடும். இயற்கை பொய்க்காமல் இருக்க, இறையருள் வேண்டும். குளத்தில் குளித்து, ஆலயம் சென்று ஆண்டவனை வழிபட்டால் ஆணவம் அழியும்; அடக்கம் பிறக்கும். வாழ்க்கை இனித்து, வளம் பெருகும். ஆன்மிகத்துடன் இணைந்த வாழ்வே சிறக்கும்.பார்வதி- பரமேஸ்வரர் ஆன்மிகத் துடன் இணைந்தவர்கள்.

அணிகலன்களின் மூலப் பொருள் தங்கம். இதை, நாம் விரும்பிய அணிகலனாக மாற்றலாம். ஆனால் மூலப் பொருள் மாறாது. மண் பானைகளின் மூலப்பொருள் மண். இதை, நாம் விரும்பும் வண்ணம் பலவகை பானைகளாக மாற்றலாம்; பயன்படுத்தலாம். ஆனால், மண்ணை மாற்ற முடியாது.

அதுபோல, மூலப் பொருள் லிங்கம். சுந்தரேஸ்வர னாகவும், திரிபுராரியாகவும், சந்திர மௌலியாகவும், ஆலால சுந்தரனாகவும், கயிலாய நாதனாகவும், சொக்கனாகவும் அவனைப் பார்க்கலாம். நம் மனம் அப்படிப் பார்க்கிறது. நம் மனதில் அவன் குடியிருந் தால், உலகில் உள்ள அத்தனை பொருட்களிலும் அவன் தென்படுவான். 'நான் அனைத்து தெய்வத் திருவுருவங்களிலும் மூலப் பொருளைப் பார்க்கிறேன். இருப்பினும் என் மனம், ஏனோ அந்தச் சந்திரசூடனில் லயிக்கிறது!' என்றார் அப்பய்ய தீட்சிதர்.

'கிருஷ்ணனுக்கு மேல் ஒரு தத்துவம் இருப்பதாக எனக்குத் தெரியாது!' என்றார் மதுசூதன சரஸ்வதி. இந்த எண்ணங்கள் இளைஞர்களின் மனதில் உதித்தால், அது அவர்களது முன்னேற்றத்துக்குப் பயன்படும்.

நம் மனதை திருப்திபடுத்த பல உருவங்களில் தோன்றுகிறார் பரம்பொருள். மக்களது ருசிபேதத்துக்கு உகந்தவாறு பல்வேறு தெய்வ வடிவங்கள் கட்டாயம் வேண்டும். அப்போது பாமரனும் பரமபதத்தை அடைய இயலும்!

Comments