காஞ்சி சங்கரமட பீடாதிபதிகள்

குருபிரம்மா குருர்விஷ்ணு:

குருர்தேவோ மஹேஸ்வரக!

குருஸ்ஸாஜாத் பரப்ரஹ்ம:

தஸ்மை ஸ்ரீ குருவே நம:!!

குருவே, படைக்கும் கடவுளான பிரம்மா. குருவே, காக்கும் கடவுளான விஷ்ணு.

குருவே, தீவினைகளை அழிக்கும் கடவுளான மகேஸ்வரன். குருவே, பரப்ரம்மமும் ஆவார். போற்றுதலுக்குரிய அந்த குருதேவனுக்கு வணக்கம்.

ஜகத்குரு ஆதிசங்கரரின் புனித வரலாற்றை விரிவாகப் பார்த்த நாம், இப்போது அவர் ஸ்தாபித்த காஞ்சி மடத்தின் ஆசாரியார்களைப் பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

1. ஜகத்குரு ஆதிசங்கரர்
(அருளாட்சி : கி.மு.509-477)

கேரளாவில் உள்ள காலடியில் அவதரித்து, பாரதமெங்கும் தெய்வீக திக்விஜயத்தை நடத்தி முடித்த சங்கரர், இறுதியாக காஞ்சிபுரத்தில் தங்கி, சர்வக்ஞபீடத்தையும், சங்கர மடத்தையும் நிறுவினார்.

தாமிரபரணிப் படுகையைச் சேர்ந்த, ஞானவானான ஒரு பாலகனுக்கு சன்னியாச தீட்சை அளித்து, சர்வஞாத்மன் என்று பெயரும் சூட்டினார். தனக்குப் பிறகு, காஞ்சி மடத்தின் பீடாதிபதியாகும் பொறுப்பை அவருக்குத் தந்து அதுவரை ஸ்ரீ சுரேச்வராசாரியரின் பராமரிப்பில் இருக்க ஆணையிட்டுவிட்டு அன்னை காமாட்சியுடன் இரண்டறக் கலந்தார்.

அவர் அருளிய நூல்களுக்கும், செய்த நெறிமுறைகளுக்கும், பெற்ற வெற்றிகளுக்கும், நடத்திய அற்புதங்களுக்கும் அளவேயில்லை. திருச்சூர் வடக்கு நாதனே, சங்கரராக அவதரித்தார் என்றால், இதைச் சொல்ல வார்த்தைகள் ஏது?

பிரம்மச்சர்யத்திலிருந்து நேரடியாக சன்னியாசம் பெற்றவர் ஆதிசங்கரர். அதே முறைதான் காஞ்சி மடத்தில் இன்றுவரை பின்பற்றப்படுகிறது. காமகோடி பீடத்தின் ஆசார்ய பரம்பரை, ஒரு சங்கிலித்தொடர் போன்றது. இடையே எந்தத் தொய்வும் இல்லாதது பெருமிதத்திற்குரியது.

ஆதிசங்கரர், இந்திரனையும் சரஸ்வதியையும், வெற்றி கொண்டதால் அவரைப் பின் தொடர்ந்து வந்த ஆசார்யர்களின் பெயருடன் `இந்திர சரஸ்வதி' என்ற பெயரும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

ஸ்ரீ சந்திரமௌளீஸ்வரருக்கு தினமும் 3 கால பூஜைகளை இந்த ஆசார்யர்களே நிறைவேற்றுகிறார்கள்.

2. ஸ்ரீ சுரேச்வராசாரியார்
(கி.மு.477-407)

ஜகத்குரு ஆதிசங்கரரின் சீடர்களுள் வயது முதிர்ந்த, அதிகம் கற்றறிந்த சீடர் இவர். மாகிஷ்மதி என்ற ஊரைச் சேர்ந்த இவர், பூர்வமீமாம்ச கொள்கையுடன், மண்டன மிஸ்ரர் என்ற பெயரில் இருந்தவர். ஆதிசங்கரர், இவருடன் வாதிட்டு வென்ற கதையும், சுரேச்வரர் என்று பெயரிட்டு, சன்னியாசம் வழங்கி, தன்னுடனேயே அழைத்துச் சென்ற கதையும் நமக்குத் தெரிந்ததுதான்.

பிருகதாரண்ய உபநிஷத்துக்கு உரை மற்றும் நைஷ்காம்ய சித்திக்கு தத்துவார்த்தமான உரை ஆகியவற்றை இவர் எழுதினார்.

கி.மு.407-ல் சுக்ல ஏகாதசி அன்று கேட்டை நட்சத்திரத்தில் பவ வருடத்தில் காஞ்சிபுரத்திலேயே இவர் முக்தியடைந்தார். இன்றும்கூட அவரது பழைய பெயரில், மண்டனமிஸ்ரர் அக்ரஹாரம் என்று ஒரு தெரு காஞ்சியில் உள்ளது.

இது மட்டுமன்றி காஞ்சி மடத்தில், ஒரு கற்சிலை வடிவில் ஸ்ரீ சுரேச்வராசாரியார் அருள்பாலிக்கிறார். தினசரி வழிபாடும் இவருக்கு உண்டு.

3. ஸ்ரீ சர்வஞாத்மன்
(கி.மு.407-364)

காஞ்சியில் ஆதிசங்கரர், பீடத்தை அலங்கரித்தபோது, பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பண்டிதர்களும், அறிஞர்களும் காஞ்சிபுரத்தில் குழுமினார்கள். அவர்களுள் தாமிரபரணிப் பகுதியைச் சேர்ந்த பிரம்ம தேசம் மற்றும் அதன் அண்டைப் பகுதியிலிருந்து வந்திருந்த கல்விப் பெருந்தகையாளர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். அவர்கள் தேவ பேதம், மூர்த்தி பேதம் போன்ற பல தலைப்புகளில் ஆசாரியாருடன் விவாதித்தார்கள். தன்னுடைய அத்வைத சித்தாந்தத்தை முன்னிறுத்தி, அந்த வாதங்களில் அவர்களைப் பேச்சிழக்கச் செய்தார் ஆதிசங்கரர். பிறகு சர்வஞான பீடத்தை ஆரோகணித்த ஆசார்யார் பார்வையை ஏழு வயது நிரம்பிய சிறுவன் ஒருவன் ஈர்த்தான். அச்சிறுவனுடைய பெற்றோருக்குச் சொல்லியனுப்பினார் ஆதிசங்கரர். அவர்களும் தம் மகனுடன் வந்து ஆசார்யாரை நமஸ்கரித்தார்கள். அவர்களிடம், அவர்களுடைய மகனை அந்தக் காஞ்சிமடத்தின் பீடத்துக்கு வாரிசாக நியமிக்க, தான் விரும்புவதாகச் சொன்னார். பெற்றோர் அதைக் கேட்டுப் பெருமிதம் அடைந்தார்கள். மகிழ்ச்சியால் பூத்த அவர்கள், ஆசார்யாரின் யோசனைக்குத் தம்முடைய பூரண சம்மதத்தைத் தெரிவித்தார்கள்.

அதன்பிறகு, அந்தச் சிறுவனை சந்நியாச தர்மத்திற்கு உட்படுத்தி, தீட்சையும் அளித்தார். அவனுக்கு சர்வஞாத்மன் என்று நாமம் சூட்டினார். இந்த பால சந்நியாசி, சுரேச்வராசாரியாரின் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் ஒப்படைக்கப்பட்டார். சர்வஞாத்மன், ஆதிசங்கரரின் ருத்ர பாஷ்யத்தைத் தொகுத்து, உரையெழுதி மெருகூட்டினார். இவருடைய இந்த விளக்க விமரிசனமானது, `சம்ஸ்கேஷப சரீரிகா' என்று அழைக்கப்பட்டது. அதேபோல சர்வஞான விலாசா என்ற கவிதை வழி ஆராய்ச்சித் தொகுப்பையும் இவர் இயற்றினார். சம்ஸ்கேஷப சரீரிகா, மொத்தம் 1267 பாடல்களைக் கொண்டது. மிகவும் எளிமையானதாகவும், கம்பீரமானதாகவும் விளங்குகின்றன அப்பாடல்கள். சிறப்புமிக்க பல வருடங்களை ஆசார்ய பொறுப்பில், திறம்பட செலவிட்ட சர்வஞாத்மர் (கி.மு.365ஆம் ஆண்டு) நள வருஷம் வைசாக கிருஷ்ண சதுர்தசி முன்னிரவில் விதேஹர் முக்தியடைந்தார்.

4. ஸ்ரீ சத்யபோதேந்திர சரஸ்வதி
(கி.மு. 364 - 268)

கேரள நாட்டைச் சேர்ந்த அமராவதி தீரம் என்ற இடத்தைச் சேர்ந்தவர். பூர்வாஸ்ரமத்தில் பாலினீகர் என்று அழைக்கப்பட்டார். தலினேச சர்மா என்பவரின் மகன்.

இவர் சாக்கியர், புத்தர், சமணர் ஆகியோரை வாதிட்டு வென்றார்.

ஆதிசங்கரரின் பாஷ்யத்திற்கு `பாதகாசதா' என்ற உரையை எழுதிய இவர், நந்தன வருடம் (கி.மு. 268) வைசாக மாதம் கிருஷ்ண அஷ்டமியில் காஞ்சியில் முக்தி அடைந்தார்.

5. ஸ்ரீ ஞானாந்தேந்திர சரஸ்வதி
(கி.மு. 268-205)

சந்நியாசத்திற்கு முன் ஞானோத்தமர் என்றுஅழைக்கப்பட்டார். தமிழக பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். தந்தையின் பெயர் நாகேசா. ஞானாந்தேந்திரா, தர்க்க சாஸ்திரத்தில் வல்லவர். சுரேச்வராசாரியாரின் நைஷ்காம்ய சித்தி என்ற நூலுக்கு `சந்திரிகா' என்ற உரை எழுதியுள்ளார். இந்நூலில் தன் குருவான ஸ்ரீ சத்யபோதர் மற்றும் ஸ்ரீசர்வஞாத்மன் ஆகியோரைப் பற்றி மிகச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். காஞ்சி பீடத்தின் ஞான ஒளியாக தன்னைப் பற்றியும் இதில் கூறியிருக்கிறார்.

இவர் சுக்ல சப்தமி அன்று மன்மத மாதம் (கி.மு.205) மிருக சீருஷத்தில் காஞ்சியில் முக்தி அடைந்தார்.

6. ஸ்ரீ சுத்தானந்தேந்திர சரஸ்வதி
(கி.மு.205-124)

வேதாரண்யத்தைச் சேர்ந்த இவர், பார்வு என்ற பண்டிதரின் மகன். பூர்வாஸ்ரமப் பெயர், விஸ்வநாதன். நள வருடம் ஜ்யேஷ்ட மாதம் சுக்ல சஷ்டி அன்று (கி.மு.124) காஞ்சியில் முக்தி அடைந்தார்.

7. ஸ்ரீ ஆனந்த ஞானேந்திர சரஸ்வதி
(கி.மு.124-55)

கேரளத்தைச் சேர்ந்த இவரது பூர்வாசிரமப் பெயர் சின்னைய்யா. தகப்பனார் பெயர் சூர்ய நாராயண மஹி. இவர் ஒரு சக்தி உபாசகர். கடவுள் கிருபையால் இலக்கிய ஞானம் கைவரப் பெற்றவர். ஆதிசங்கரரின் பாஷ்யத்திற்கும் சுரேச்வராசாரியாரின் நூலுக்கும் உரை எழுதியுள்ளார்.

ஸ்ரீசைலத்தில் கிருஷ்ண நவமி அன்று வைசாக மாதம் க்ரோதான வருடம் (கி.மு. 55) முக்தி அடைந்தார்.

8. ஸ்ரீ கைவல்யானந்த யோகேந்திர சரஸ்வதி
(கி.மு.55-கி.பி.28)

இயற்பெயர், மங்கண்ணா. சொந்த ஊர், திருப்பதி. தகப்பனார் பெயர், திரைலிங்க சிவய்யா. சர்வதாரி வருடம், (கி.பி.28) மகர மாதம் முதல் நாள் காஞ்சியில் முக்தியடைந்தார்.

9. ஸ்ரீ கிருபாசங்க ரேந்திர சரஸ்வதி
(கி.பி.28-69)

ஆந்திராவைச் சேர்ந்த பிராமணர் வகுப்பைச் சேர்ந்த இவரது இயற் பெயர், கங்கேஷா பாத்யாயர். சீரழிந்து கொண்டிருந்த இந்து மதத்தின் பிற்போக்கு மற்றும் காலத்திற்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களை முழு மூச்சுடன் கண்டித்து அவற்றை அறவே ஒழித்தவர் இவர். ஆதிசங்கரருக்குப் பிறகு அவர் ஏற்படுத்திய மார்க்கத்தை அவர் வழியிலேயே செம்மைப்படுத்தி உயர்த்தியதில் பெரும் பங்கு கிருபா சங்கரருக்கு உண்டு. குருவின் ஷண்மத மார்க்கத்தை வழிபாட்டு முறையாக்கி சிவன், விஷ்ணு, அம்பிகை, சூரியன், கணபதி, ஸ்கந்தன் என்று பிரித்து வழிபட வகை செய்தார். இவற்றை சங்கரரும் அவர் வழியில் கிருபாசங்கரரும் முறைப்படுத்தியதால் பின்னர் வந்த சைவ- வைணவ மதத் தலைவர்களுக்கு தங்கள் பணியை எளிதாய்ச் செய்ய முடிந்தது.

விந்திய மலை அருகே கிருஷ்ண திருதியை அன்று கிருத்திகை மாதம் விபவ வருடம் (கி.பி.69) இவர் முக்தி அடைந்தார்.

10. ஸ்ரீ சுரேஷ்வர்
(கி.பி.69-127)

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இவரது பூர்வாஸ்ரமப் பெயர் : மஹேஷ்வரர். தகப்பனார் பெயர்: ஈஸ்வர பண்டிதர். காஞ்சியில் ஆஷாட மாதம் அட்சய வருடம் (கி.பி.127) பௌர்ணமி அன்று முக்தியடைந்தார்.

11. ஸ்ரீ சிவானந்த சித்கனேந்திர சரஸ்வதி
(கி.பி.127-172)

இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். பூர்வாஸ்ரமப் பெயர் ஈஸ்வரவது. தந்தை, உஜ்வலபட்டர். சிவானந்தர், தன் பெயருக்கேற்ப சிவா அத்வைதத்தில் ஈடுபாடுடையவர். சுக்லதசமி, ஜேஷ்டமாதம் விரோதி கிருதி அன்று (கி.பி.172) விருத்தாசலத்தில் முக்தியடைந்தார்.

12. ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி !
(கி.பி. 172-235)

பாலாறு அருகிலுள்ள சிறு கிராமத்தைச் சேர்ந்த வத்ஸ பட்டர் என்பவருடைய மகன். இவரது பூர்வாஸ்ரமப் பெயர் ஹரி. மடத்தின் பணிகளை ஒரு சீடரிடம் ஒப்படைத்துவிட்டு, எப்போதும் யோக மார்க்கத்திலேயே ஈடுபட்ட இவர், 63 ஆண்டுகள் காஞ்சி மடத்தின் தலைவராக இருந்தார். ஆனந்த வருடம் (கி.பி.235) ஆஷாட மாதம், சுக்ல நவமியன்று சேஷாசலம் சென்ற இவர், அங்கேயுள்ள ஒரு குகையில் நுழைந்தவர், திரும்பி வரவில்லை. அங்கேயே மறைந்துவிட்டார்.

Comments