ஸ்ரீபரசுராமர் கதை... காமதேனுவால் வந்த கோபம்!

உலகில் அதர்மம் அதிகரிக்கும்போது, அதை அழித்து தர்மத்தை நிலை நாட்ட மகாவிஷ்ணு எடுத்த அவதா ரங்களில் குறிப்பிடத்தக்கவை 10 அவதாரங்கள். இதில், 6-வது அவதாரம்- ஸ்ரீபரசுராமர்.

ஜமதக்னி முனிவர்- ரேணுகாதேவி தம்பதிக்கு மக னாக அவதரித்தவர் ஸ்ரீபரசுராமர். முனி குமாரனாக இருந்த போதிலும் அரசர்களுக்கே உரிய சகல போர்க் கலைகளிலும் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார் ஸ்ரீபரசுராமர். இவர், பரமேஸ்வரனை தியானித்து தவம் இருந்து, அவரிடம் இருந்து மழுவாயுதம் (கோடரி) பெற் றார். (பரசுராமரது பக்தி மற்றும் தவத்தால் மகிழ்ந்த சிவ னார், மழு ஒன்றைத் தோற்றுவித்ததாகவும், அதனால் இவருக்கு மழுவாளன், பரசுராமர் ஆகிய பெயர்கள் ஏற்பட்டதாகவும் கூறுவர்.)

ஒரு முறை க்ருதவீர்யன் என்ற மன்னன், தனது சேனையுடன் ஜமதக்னி முனிவரது ஆசிரமத்துக்கு வந்தான். ஜமதக்னி முனிவரும் ரேணுகாதேவியும் தங்களிடம் இருந்த தெய்வீக பசுவான காமதேனுவின் உதவியுடன் அவர்களுக்கு சிறப்பான விருந்தளித்தனர். விருந்துண்ட க்ருதவீர்யனுக்கு, 'சாதாரண முனிவர் ஒருவர், இவ்வளவு அருமையான- அறுசுவையுடன் கூடிய விருந்தளிப்பது சாத்தியமா?' என்று சந்தேகம் எழுந்தது. அதை முனிவரிடமே கேட்டு விட்டான். 'தனது ஆசிரமத்தில் வளரும் காமதேனுவின் கைங்கரியம் இது!' என்று விளக்கினார் முனிவர்.



இதைக் கேட்ட க்ருதவீர்யன், காமதேனுவை தனக்குத் தரும்படியும் பதிலுக்கு ஏராளமான பசுக் களை தருவதாகவும் கூறினான். முனிவர் மறுத்து விட்டார். இதனால் சினம் கொண்ட க்ருதவீர்யன், காம தேனுவை கவர்ந்து செல்ல முற்பட்டான். ஆனால், காம தேனுவின் உடலில் இருந்து தோன்றிய ஏராளமான வீரர்கள், க்ருதவீர்யனையும் அவனது சேனையையும் அழித்தனர். க்ருதவீர்யன் இறந்த செய்தியைக் கேட்டு கோபமுற்ற அவன் மகன் கார்த்தவீர்யார்ஜுனன், ஜமதக்னி முனிவரது ஆசிரமத்துக்கு வந்து, அங்கு தவத்தில் இருந்த முனிவரின் தலையை வெட்டி வீழ்த்தினான்.

ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்துத் திரும்பிய ரேணுகாதேவி, தன் கணவரின் நிலை கண்டு கதறினாள். தன் மார்பில் 21 முறை அடித்துக் கொண்டு அழுதாள். அப்போது, அங்கு வந்த ஸ்ரீபரசுராமர் தன் தந்தை இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ந்தார். அருகில், ரத்தக் கறை படிந்த வாளுடன் நின்ற கார்த்தவீர்யார்ஜுனனை கண்டு சினமுற்று அவனை வெட்டி வீழ்த்தினார். ரேணுகாதேவி தீயில் மூழ்கி தெய்வநிலை எய்தினாள்.



பெற்றோரின் மரணத்துக்குக் காரணமான அரச குலத்தினர் மீது கோபம் கொண்ட ஸ்ரீபரசு ராமர், அவர்களை அழிப்பதாக சூளுரைத்தார். 21 தலைமுறைகளாக... அரசர்களைக் கொன்று அவர்களின் குருதியை ஓரிடத்தில் சேகரித்து, அதில் பெற்றோருக்கு இறுதிக் கடன் செய்தார். இருந்தும் அவரது கோபம் தணியவில்லை. இதனால் பயந்த அரசர்கள் பலரும் இறுதியில் காசிப முனிவரைச் சரணடைந்தனர்.

அவர்களைக் காப்பாற்றும் பொருட்டு ஸ்ரீபரசுராம ரிடம் சென்ற காசிபர், ''எனக்கு ஓர் உபகாரம் செய்ய வேண்டும்!'' என்று கேட்டார்.

''சொல்லுங்கள் செய்கிறேன்!'' என்றார் ஸ்ரீபரசு ராமர்.

''பல்வேறு மன்னர்களை வெற்றி கொண்டு நீ அடைந்த பூமியை எனக்கு தானம் தர வேண்டும்!'' என்றார் காசிபர். மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்ட பரசுராமர், பூமியை காசிபருக்கு தாரைவார்த்துக் கொடுத்தார். உடனே காசிபர், ''பரசுராமா... இனி, இந்த பூமி எனக்குச் சொந்தமானது. நீ இங்கிருந்து அகன்று, சினம் தணிந்து சிவபூஜை செய்வாயாக!'' என்றார். அதன்படி அங்கிருந்து கிளம்பிய ஸ்ரீபரசுராமர் மேற்குக் கடற்கரை பகுதிக்குச் சென்றார். கரையில் நின்று தனது மழுவாயுதத்தை சமுத்திரத்தை நோக்கி வீசியெறிந்தார். அதன் தாக்குதலால் சமுத்திர நீர் உள்வாங்கியது. அங்கு தென்பட்ட நிலப் பரப்பை தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டார் (இந்தப் பகுதியே இன்றைய கேரளம்). பரசுராமர் உருவாக்கியதால் இதை ஸ்ரீபரசுராம «க்ஷத்திரம் என்பர். இங்கு, ஸ்ரீபரசுராமர் அமைத்த சிவாலயங்களை 'ஸ்ரீபரசுராமப் பிரதிஷ்டைகள்' என்பர். பரசுராமர் இந்த இடத்தை விட்டு நீங்காது, சிவபூஜை செய்வதாக ஐதீகம்.

'அரசர்களைக் கொன்ற தனது பாவம் தீர ஸ்ரீபரசுராமர், மகேந்திர மலையில் தவம் புரிந்து சிவனருள் பெற்றார்!' என்கிறது சிவமகா புராணம். ஸ்ரீபரசுராமர் இன்னும் பல இடங்களில் சிவலிங்கம் அமைத்து பூஜித்ததாக புராணங்கள் கூறும். அவை, 'பரசுராமேஸ்வரங்கள்' எனப்படுகின்றன. அவற்றுள் சில:

பழுவூர்: இந்தத் தலம் அரியலூருக்கு தெற்கில் அமைந்துள்ளது. இங்குள்ள ஈசனின் திருநாமம் ஆலந்துறையீசர்; இறைவி- அருந்தவநாயகி.

ஒரு முறை தன் தந்தையின் கட்டளைப்படி, தாய் ரேணுகாதேவியின் தலையைக் கொய்தார் பரசுராமர். இந்த பாவத்தைப் போக்க எண்ணிய ஸ்ரீபரசுராமர், பழுவூர் வந்து, இங்கு ஆலமரம் ஒன்றின் கீழ் அதன் இலைகளைப் பரப்பி, அவற்றின் மீது படுத்த நிலை யில் தவமியற்றி, பாவம் நீங்கப் பெற்றதாக கூறப் படுகிறது. இந்த ஆலயத்தில், மூலஸ்தானத்துக்கு முன்னே நிலைக்கல் ஒன்றில் சயனக்கோலத்தில் உள்ள ஸ்ரீபரசுராமரின் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது.



வேகாமங்கலம்: காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள தலம் இது. இங்குள்ள இறைவன்- ஸ்ரீபரசுராமேஸ்வரர். இவரை வழிபட்ட பரசுராமர், மழுவாயுதம் பெற்று, அரசர்களைக் கொன்று, தன் தந்தைக்கு இறுதிக்கடன் செய்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது.

திரைலோக்கி: கும்பகோணத்துக்கு அருகே உள்ள இந்த ஊரை, 'திரை லோக்கிய மகா தேவி சதுர்வேத மங்கலம்' எனக் கல்வெட்டுகள் சில குறிப்பிடுகின்றன. இங்கு, நந்திதேவர் மீது, அழகிய பிரபைக்குள் ஸ்ரீஉமா மகேஸ்வரர் வீற்றிருக்கும் காட்சி அற்புதம்!

திருநின்றியூர்: மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள இந்தத் தலம் தேவாரப் பாடல் பெற்றது. ஸ்ரீபரசுராமர் இங்கு வழிபட்டு, ஈசனின் திருவடி தரிசனம் பெற்றார் என்பர். இதையே தமது திருநின்றியூர் பதிகத்தில்,

மொய்த்தசீர் முந்நூற்றறுபது வேலி
மூன்றுநூறு வேதியரோடு நுனக்கு
ஒத்த பொன்மணிக் கலசங்கள் ஏந்தி
ஓங்கு நின்றியூர் என்று உமக் களிப்ப
பத்தி செய்த அப்பரசுராமர்க்குப்
பாதங்காட்டிய நீதிகண்டடைந்தேன்

_ என்று குறிப்பிடுகிறார் சுந்தரர்.

Comments