இளமையே இனிமை

குள்ள நரி ஒன்று, விபத்தில் சிக்கி தனது வாலை இழந்தது. இதனால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை, அதன் உள்ளத்தை வாட்டியது. தனது மனக் குறையைப் போக்க ஓர் உபாயம் செய்தது.

வழியில் தென்பட்ட மற்றொரு குள்ள நரியிடம், ''நேற்று வரை நான் பட்ட கஷ்டம் இன்றோடு தொலைந்தது. நெருக்கடியான வேளையில் வேகமாக ஓட முடியாமல் தொல்லை தந்தது எனது வால். அதைத் துண்டித்த பிறகுதான் வேகமாக ஓட முடிகிறது. நீயும் முயற்சித்துப் பார்; தற்காப்புக்கு உதவும்!'' என்றது. இப்படியே, தான் சந்தித்த எல்லா நரிகளுக்கும் ஆலோசனை தந்தது குள்ள நரி. இதை நம்பி அத்தனை நரிகளும் தங்களது வாலைத் துண்டித் துக் கொண்டன என்றொரு கதை உண்டு.

மற்றொரு கதை: சுற்றுலா பயணிகள் சிலர், பாழடைந்த பிள்ளையார் கோயில் ஒன்றைப் பார்க்கச் சென்றார்கள். அவர்களில் ஒருவன் அங்கிருந்த பிள்ளையார் சிலையையும் அவரின் தொப்பையையும் தடவிப் பார்த்தான். தொப்புள் குழி ஆழமாக இருக்கவே அதனுள் விரலை விட் டுப் பார்த்தான். உள்ளே இருந்த தேள் ஒன்று அவன் விரலைப் பதம் பார்த்தது. சட்டென்று விரலை வெளியே எடுத்தவன் தனது வலியை வெளிக்காட்டாமல், விரலை மூக்கருகில் வைத்து, 'ஆகா... என்னவொரு நறுமணம்!' என்றான். சுற்றி இருந்தவர்களுக்கு ஆர்வம் தொற்றிக் கொள்ள... நறுமணத்தை நுகர முண்டியடித்தனர்!

ஒவ்வொருவராக பிள்ளையாரின் தொப்புள் குழியில் விரலை நுழைத்து, தேளிடம் கடி பட்டனர். எனினும் தங்களது வலியை எவரும் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. முன்னவனைப் போன்றே, 'ஆகா, என்ன வாசனை... என்ன வாசனை!'' என்றே சிலாகித்தனர்.

குரங்கு கதை ஒன்றும் உண்டு!



கடும் குளிர்காலம். குரங்கு ஒன்று மரக்கிளையில் அமர்ந்திருந்தது. குளிர் தாங்காமல் உடம்பெல்லாம் நடுங்கின; பற்கள் வீணை வாசித்தன!

அதே கிளையில் குளிருக்கு அடக்கமாக, கூட்டில் வசித்த சிட்டுக்குருவி ஒன்று குரங்கின் நிலை கண்டு பரிதாபப்பட்டது. அது, குரங்கிடம் மெள்ளப் பேச்சுக் கொடுத்தது: ''நாங்கள் பறவை இனம். உன்னைப் போன்ற உடலுறுப்புகள் எங்களுக்குக் கிடையாது. இருந்தும், குளிர்-மழையில் இருந்து தப்பிக்க வசதியாக, கூடு கட்டி வாழ்கிறோம். ஆனால், நீ ஏன் சிந்திக்கவில்லை? எங்களைப் பார்த்தாவது கற்றுக் கொள்ளலாமே... தங்குவதற்கு ஓர் இடம் வேண்டாமா?''

சிட்டுக்குருவியின் இந்த அறிவுரை யால் ஆத்திரம் அடைந்த குரங்கு, கிளை யில் இருந்த கூட்டை அழித்ததுடன் குருவியையும் அங்கிருந்து விரட்டியடித்தது. அறிவுரை, அழிவைச் சந்திக்க வைத்தது!

அடுத்து, கொக்கு ஒன்றின் கதை...!

கொக்கு ஒன்று ஏரிக்கரையில் நின்றபடி, தன்னருகே நீரில் நீந்தி வரும் மீன்களை மட்டும் கொத்தித் தின்று, சிரமம் இல்லாமல் வாழ்ந்து வந்தது. காலப்போக்கில் மிகவும் தளர்ந்து போன கொக்கு, அருகில் வரும் மீன்களை, தன் அலகால் பிடிக்கக்கூட முடியாமல் சிரமப்பட்டது.

எதிர்பாராமல் அதன் அருகில் வரும் மீன்கள், 'நன்றாக மாட்டிக் கொண்டோம்!' என்று கணப் பொழுது அதிர்ச்சி அடைந் தாலும், கொக்கின் செயல்படாத நிலை கண்டு ஆச்சரியம் அடைந்தன. அவற்றில் சில மீன்கள், ''மிகவும் சோர்வாக இருக் கிறீர்களே... என்ன காரணம்?'' என்று கேட்டன.

''இன்னும் சில நாட்களில் இந்த ஏரி வற்றப் போகிறது. அதனால் நீங்கள் எல்லோரும் மடிந்து போவீர்களே... உங்களது நிலையை எண்ணிப் பார்த்தேன். சொல்லொணாத் துயரம் என்னை ஆட்கொண்டு விட்டது. அதுவே எனது சோர்வுக்குக் காரணம்!'' என்று பதிலளித்த கொக்கு, தொடர்ந்தது...

''உங்களைக் காப்பாற்ற ஒரு வழி இருக்கிறது. இங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள ஓர் ஏரியில் நீர் வற்றுவதே இல்லை. நீங்கள் சம்மதித் தால், உங்களை அங்கு கொண்டு போய்ச் சேர்க்கிறேன்; ஆபத்தில் இருந்து விடுபடலாம்!'' என்றது.

இதை நம்பிய மீன்கள் தங்களை அந்த ஏரியில் சேர்ப்பிக்கும்படி வேண்டின. அந்த மீன்களை, ஒவ் வொன்றாகத் தனது அலகால் கவ்வி சுமந்து வந்த கொக்கு, அவற்றை சேமித்து, நிரந்தர உணவுக்கு ஏற்பாடு செய்து கொண்டது.

அசுர குல சகோதரர்கள் இருவர் தவத்தில் ஆழ்ந்தனர். இதனால் மகிழ்ந்த கடவுள், அவர்கள் முன் தோன்றினார். அவரிடம், அழியா வரம் தரும்படி வேண்டினர் சகோதரர்கள்.

'அது, எனது அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது. வரம்புக்கு உட்பட்டதைக் கேளுங்கள், தருகிறேன்' என்றார் கடவுள். 'அப்படியானால், அண்ணனால் தம்பிக்கும், தம்பியால் அண்ணனுக்கும் அழிவு ஏற்படலாமே தவிர, மற்றவர்களால் அழிவு நேரக் கூடாது!' என்று வரத்தை மாற்றிக் கேட்டனர். அதன்படியே வரம் தந்தார் இறைவன். 'எங்களுக் குள் நெருங்கிய நட்பும், பாசமும் உண்டு. எல்லாவற் றிலும் ஒற்றுமையாகவே இருப்போம். எனவே, எங்களுக்குள் எப்போதும் பகை முளைக்காது. குறுக்கு வழியில் கடவுளைச் சிக்க வைத்து, விரும்பி யதைப் பெற்று விட்டோம்!' என்று இருவரும் அகமகிழ்ந்தனர்.

அகங்காரம் உள்ளவர்களுக்கு, 'தான் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்!' என்பது தெரியாது.

'இப்படி இருவருக்கும் வரம் அளித்து விட்டீர்களே... இது உலகத்தை துயரத்தில் ஆழ்த்துமே, அசுரர்களது இறுமாப்பு, நல்லவர்களது வாழ்க்கையை நாசமாக்குமே!' என்று கடவுளிடம் முறையிட்டனர் தேவர்கள். 'கவலைப் படாதீர்கள். எல்லாம் நன்மையில் முடிவடையும்' என்று அவர்களை ஆறுதல்படுத்தினார் கடவுள்.

ஒரு முறை, அந்த அசுரர்களின் முன் ரம்பையை தோன்ற வைத்தார் கடவுள். அவள் அழகில் மயங்கிய இருவரும், தங்களது ஆசையைப் பூர்த்தி செய்யும்படி அவளிடம் கூறினர். 'இருவரை மணப்பதற்கு, அறம் இடம் அளிக்காது. தங்களில் ஒருவரை மணந்து கொள்கிறேன். மணமகன் யார் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்!' என்றாள் ரம்பை.

'மூத்தவன் நான், எனக்கே முதலிடம்.' என்றான் அண்ணன். 'நான் தம்பி, எனது விருப்பத்தை ஏற்பதே அண்ணனுக்கு அழகு!' என்றான் தம்பி. அவர்களது வாய்ச் சண்டை, முடிவில் கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு இருவரும் மாண்டு போனார்கள். இது கற்பனை அல்ல; உண்மைக் கதை.

குள்ள நரி ஒன்றுக்கு கரும்பைச் சுவைக்க ஆசை. ஆனால் அதற்கு, அருகில் உள்ள ஆற்றைக் கடந்து மறு கரையை அடைய வேண்டும். அங்குதான் கரும்புத் தோட்டம் இருக்கிறது.

ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. உள்ளே இறங்குவது ஆபத்து. யோசனையில் ஆழ்ந்தது குள்ள நரி. அப்போது யானை ஒன்று அங்கு வந்தது. அதனிடம், ''ஆற்றுக்கு அக்கரையில் கரும்புத் தோட்டம் ஒன்று உள்ளது. அங்கு, உனக்குத் தேவையான அளவு கரும்பு கிடைக்கும். நான் உன் முதுகில் ஏறிக் கொள்கிறேன். ஆற்றைக் கடக்க நீ உதவினால், கரும்புத் தோட்டம் இருக்கும் இடத்தை நான் காட்டுகிறேன்!' என்றது நரி.

யானை அதை வரவேற்றது. இருவரும் அக்கரையை அடைந்து கரும்பை சுவைத்தனர். சிறிதளவு சாப்பிட் டதும் குள்ள நரிக்கு வயிறு நிரம்பியது. அந்த உற் சாகத்தில் ஊளையிட ஆரம்பித்தது. ஊளைச் சத்தம் கேட்டு தோட்டக்காரன் ஓடி வந்தான். அவனைப் பார்த்ததும் நரி ஒரே பாய்ச்சலில் ஓடி ஒளிந்தது. ஆனால், யானை ஓட முடியாமல் மாட்டிக் கொண்டது. இதுவும் ஒரு கதை.



செல்வச் சீமான் ஒருவன் இருந்தான். அவனுக்குக் குழந்தை இல்லை. அவன் மனைவிக்குக் குழந்தை பிறக்காது என்று மருத்துவர் கூறி விட்டார். குழந்தை இல்லாத குறை அவனை வாட்டியது. அவனது கவலையைப் போக்க நினைத்த அவன் மனைவி, குழந்தைக்காக வேறு ஒருத்தியை அவனுக்குத் திருமணம் செய்து வைத்தாள்.

இரண்டாவது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதை வளர்க்கும் பொறுப்பை முதல் மனைவி ஏற்றுக் கொண்டாள். மூத்தவளின் ஆசையைப் பார்த்து, இளையவளும் விட்டுக் கொடுத்தாள். குழந்தையும் மூத்தவளையே, 'அம்மா' என்று அழைத்தது. இருவருக்கும் பாசப் பிணைப்பு வலுத்தது.

சீமான் அகால மரணம் அடைந்தான். காலப் போக்கில் சக்களத்திச் சண்டை முளைத்தது. சீமா னின் சொத்து, குழந்தைக்குச் சொந்தமாகும் என்று அறிந்த மூத்தவள், 'இந்தக் குழந்தை நான் பெற்றது!' என்று சொல்ல ஆரம்பித்தாள். விஷயம் நீதி மன்றத் துக்கு வந்தது. இருவரும் குழந்தையை உரிமை கொண்டாடினர். குழந்தை, மூத்தவளையே 'அம்மா' என்று அழைப்பதைப் பார்த்து அவளுக்கே உரிமை என்று நீதிபதி எண்ணினார். இளையவளின் துயரத்தைக் கண்டவருக்கு, 'குழந்தை அவளின் வாரிசாக இருக்குமோ!' என்ற சந்தேகமும் எழுந்தது.

சிந்தனையில் ஆழ்ந்தார். முடிவில், 'இருவரும் சொந்தம் கொண்டாடுவதால், குழந்தையை இரு கூறாக்கி, ஆளுக்குப் பாதியாகக் கொடுக்கவும்!' என்று தீர்ப்பளித்தார். மூத்தவள் தீர்ப்பை ஆமோதித்தாள். ஆனால் இளையவள் இடைமறித்து, 'குழந்தையைக் கூறு போட வேண்டாம். அவளிடமே ஒப்படையுங்கள். குழந்தை உயிரோடு இருந்தால் போதும்!' என்று கதறி அழுதாள். நீதிபதி, உண்மையான தாயைக் கண்டுபிடித்தார். இளையவளிடம் குழந்தையை ஒப்படைத்தார்.

_ இந்தக் கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் மன இயல்புகள் தற்கால மனிதர்களிலும் தென் பட லாம்; திருமணத் தேர்வில் கலந்து கொள்ளும் இருவரிலும் தோன்றலாம். அப்போது இணையின் இயல்பு எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ள 'இயல்பை படம் பிடிக்கும் கருவி'யைத் தேடி அலைய வேண்டாம்! தர்ம சாஸ்திரமே போதும். அது, உள்ளதை உள்ளபடி படம் பிடித்துக் காட்டும். கையில் வெண்ணெய் இருக்க, நெய்க்கு அலைய வேண்டுமா?

அனுபவத்தின் பற்றாக்குறையை, அறத்தின் அறிவுரை நிறைவு செய்யும். இணைப்பைத் துண்டித் தால், அது தண்டித்து விடும். 'அக மகிழ்ச்சியை அகற்றி விடும், அதர்மம்!' என்கிறது சாஸ்திரம்.

'பஞ்ச தந்திரம்' எனும் சிறுகதைத் தொகுப்பை நேரம் கிடைக்கும்போது படிக்கலாம். இந்த நூல், உளவியல் அறிவை ஒட்டுமொத்தமாகப் புகட்டும். பரண் மீது தூசி படிந்து கிடந்த பதஞ்சலி முனிவரின், 'யோக சாஸ்திரம்' இன்று பாரெல்லாம் பரவி, பவனி வருவதைப் பார்க்கிறோம். கட்டுக்குள் முடங்கிக் கிடந்த வீட்டு வைத்தியமும், நாட்டு வைத்தியமும் மீண்டும் தலையெடுத்திருப்பதாக சின்னத்திரை தகவல் அளிக்கிறது. வளர்ச்சியில் இமயத்தைத் தொட்டு விட்ட வெளி நாட்டு வைத்தியங்களும், நமது நாட்டுவைத்திய முறைகளை மாற்று வைத்தியமாகச் சேர்த்துக் கொள்ளும் அதிசயத்தையும் காண்கிறோம்.

தருணத்துக்கு ஏற்ப சிந்தனைகள் தடுமாறும். சிந்தித்த செயல்பாடு, சந்தி சிரிக்க வைக்காது. இளை ஞர்கள் எச்சரிக்கையாக செயல்பட்டு ஏற்றம் அடைய வேண்டும். ரயில் வண்டி தண்டவாளம் மாறினாலும் ரயில் நிலைய நடைமேடையை அடைந்து விடும். ஆனால், வாழ்க்கை ரயில், தண்டவாளம் மாறினால், தடம் புரண்டு விடும்!

Comments