ஞானம் வருமா?

'நோக்கியே கருதி மெய்தாக் கியே என்னை பக்குவ மாக்கிடுவாய்' என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரனை பிரார்த்திக்கிறார் பகவான் ரமண மகரிஷிகள். குருவிடம் இருந்து ஒரு சீடனுக்கு வர வேண்டியது என்ன? அறிவா? மொழியா? நூற்கல்வியா? அல்ல. இவற்றைக் கற்றுத் தரக் கூடியவர் ஆசான். அதாவது ஆசிரியர்.

'எவரைப் பார்த்தவுடன் பொய்யான உலகை விட்டு, மெய்யான ஞானத்தை அடைய வேண்டும் என்கிற ஆவல் ஒருவனுக்கு உண்டாகிறதோ அவரே குருவாம்.'

அது சரி! அந்த குருவானவர் ஒருவனுக்கு எதன் மூலம், எப்படி அந்த ஆவலை ஏற்படுத்துவாராம்? தனது பார்வையாலும், சீடனைப் பற்றி நினைப்பதாலும், சீடனைத் தொடுவதாலும் அந்த ஆவலை சீடனுக்கு உண்டாக்கி விடுவாராம். ஒரு மீன் ஆனது, நீரில் முட்டைகளை இட்டாலும், அந்த நீரில் அங்கும், இங்கும் அலைந்து கொண்டிருப்பதாலும், அந்த முட்டைகளைப் பார்த்துக் கொண்டிருப்பதாலேயே, அந்த மீனிடம் இருந்து ஒரு சக்தி வெளி வந்து, அந்த முட்டைகளைப் பக்குவப்படுத்தி, குஞ்சுகளை வெளிக்கொண்டு வந்து விடுமாம்.



அதனால்தான் நமது தெய்வங்களுக்கு, மீனாக்ஷி, காமாக்ஷி, நீலாயதாக்ஷி (அக்ஷம் என்றால் கண்) போன்ற பெயர்கள் எல்லாம் கண்களின் பார்வைக்கு முக்கியத்துவம் கொடுத்து வைக்கப்பட்டுள்ளன.

மனிதர்களில் ஒருவருக்கொருவர் விரோதம் ஏற்பட் டால் அதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அப்படி இல்லையாம். புலி, சிங்கம் போன்ற மிருகங்கள், மான் மற்றும் மனிதனை அடிக்கிறது என்றால் அவற்றுக்கு அதுதான் உணவு. பாம்பு, தேள் போன்றவை மனிதனைக் கொட்டுகின்றன என்றால், அது தற்காப்புக்காக! உணவுக்காகவும் இல்லாமல், தற்காப்புக்காகவும் இல்லாமல், எந்தக் காரணமும் இல்லாமல் சண்டை போட்டுக் கொள்வது கீரியும் பாம்பும்தான்.

ஓரளவு பெரிய பாம்பை ஒரு கீரியே சமாளித்துவிடும். ராஜநாகம் என்றால் கீரிகள் சேர்ந்து ராஜ கீரியை அழைத்து வரும். அந்த ராஜ கீரி, இந்தக் கீரிகள் மீது ஏறி அமர்ந்து, தன் எதிரே படம் எடுத்து நிற்கும் ராஜ நாகத்தை ஒரு பார்வை பார்க்கும். அவ்வளவுதான்... அந்தப் பார்வையில் இருந்து வெளிப்படும் ஒரு சக்தியே அந்த ராஜ நாகத்தைக் கொன்றுவிடும். அதுபோல், ஒரு உத்தம ஞானியின் அருள் பார்வை, நம்முடைய 'நான்' என்ற அறியாமையை ஒரு நொடியில் அழித்துவிடுமாம்.

அடுத்ததாக, குரு என்பவர் சீடனைப் பற்றி தன் மனதில் நினைப்பதாலேயே சீடனுக்கு ஞான விழிப்பு ஏற்படுமாம்.

ஆமையானது நீரில் இருந்து நிலத்துக்கு வந்து முட்டையிட்டு விட்டு, மீண்டும் நீருக்குள்ளே சென்று விடும். அப்படிச் சென்றாலும், தான் இட்ட முட்டையைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருக்குமாம். இதேபோல் குருவின் ஆழ்ந்த நினைப்புகூட ஒருவனுக்கு ஞானத்தை உண்டாக்கி விடுமாம்.

மூன்றாவதாக கோழியானது, தான் இட்ட முட்டையை, அதன் மேல் உட்கார்ந்து உட்கார்ந்து அடைகாத்து, அதைப் பக்குவப்படுத்திவிடும்.

அதேபோல், குருவானவர் சீடனை தொடுவதாலேயே அவரை பக்குவப்படுத்தி விடுவாராம்.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம் சரிடம் பல இளைஞர்கள் வருவார்கள். அவர்கள் சிறிது காலம் வராமல் இருந்து விட்டு, பின்னர் வரும்போது, 'இத்தனை நாட்களாக வரவில்லையே...?' என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் அதற்கான காரணம் கேட்பார்.

அதற்கு அந்த இளைஞர்கள், ''நாங்கள் இங்கு வருவதை எங்களது தந்தையார் விரும்பவில்லை. நாங்கள் துறவிகள் ஆகிவிடுவோமோ என்று அவர்கள் பயப்படுகின்றனர்'' என்பர். உடனே பரமஹம்சர் சிரித்தபடி, ''அவர்களை எப்படியாவது என்னி டம் அழைத்து வா'' என்பார்.

அப்படி அந்த இளைஞர்கள் அழைத்து வந்தால், அவர்களுடைய தந்தையை சில முறை தொட்டுத் தொட்டுப் பேசுவார். பிறகு கேட்பானேன்; இளைஞர்களுக்கு முன்பாகவே அவர்கள் வந்து விடுவார்கள்.

பொய்யை விட்டு நிரந்தரமான உண்மையை நோக்கி அடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு தினமும் திருநாளே!

Comments