ஸ்வாமிகளின் மௌனம்!

அது 1932-ஆம் வருடம். காஞ்சி ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், ஆந்திர மாநிலம்- சித்தூரில் உள்ள நகரிக்கு விஜயம் செய்து, அங்குள்ள மக்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டு இருந்தார்.

அந்த நேரத்தில், காஞ்சி ஸ்ரீசங்கர மடத்தின் மானேஜருக்கு கும்பகோணத்தில் இருந்து தந்தி ஒன்று வந்தது. அதில் மகா பெரியவரின் தாயார் மகாலக்ஷ்மி அம்மையார் சிவபதம் அடைந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆங்கிரஸ வருடம், ஆனி மாதம் 1-ஆம் தேதி (14.6.1932) ஜேஷ்ட சுக்ல ஏகாதசி அன்று இந்தச் சம்பவம் நடந்தது. ஆசார்யாரைப் பெற்று வளர்த்த தாயா ருக்கு, ஏகாதசி புண்ய காலத்தில் இறைவனடி சேரும் பாக்கியம் கிடைத்தது.

ஸ்ரீமடத்தில் தந்தி கிடைத்தபோது, நகரியில் முகாமிட்டிருந்த மகா பெரியவர், பண்டிதர்கள் நடுவே அமர்ந்து வேதாந்த விசாரம் செய்து கொண்டிருந்தார். மடத்தின் நிர்வாகி, தந்தியைக் கையில் வைத்தவாறு ஸ்வாமிகளை நெருங்கி பவ்வியமாக நின்று கொண்டிருந்தார்.



''கும்பகோணத்தில் இருந்துதானே தந்தி வந்துள்ளது?'' என்று நிர்வாகியிடம் கேட்டார் ஸ்வாமிகள்.

நிர்வாகி ஆச்சர்யத்துடனும் சோகத்துடனும், ''ஆமாம்'' என்று சொன்னார்.

ஸ்வாமிகள் அடுத்து எதுவும் கேட்கவில்லை. திரும்பிப் போகும்படி அந்த நிர்வாகிக்குக் கட்டளை இட்டார். பின்னர் ஸ்வாமிகள், சில விநாடிகள் மௌனமாக இருந்தார். அங்கு கூடி இருந்த பண்டிதர் களுக்கு தந்தியில் வந்திருந்த தகவல் தெரியவில்லை. எனவே, அதை அறியும் ஆவலில் இருந்தனர். ஆனால் ஸ்வாமிகளின் வாக்கிலிருந்து எந்த வார்த்தையும் வெளிவராததால், மௌனமாகவே இருந்தனர்.

சிறிது நேரம் கழித்து, பண்டிதர்களிடம், ''தாயாரின் வியோகத்தைக் கேட்ட சந்நியாசி, உடனே செய்ய வேண்டியது என்ன?'' என்று கேட்டார் ஸ்வாமிகள்.

தர்ம சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்ற அந்த பண்டி தர்கள், ஒருவாறு ஊகித்து, மன வருத்தத்துடன் மௌனமாகவே இருந்தனர். உடனே ஸ்வாமிகள் எழுந்து, இரண்டு மைல் தொலைவில் உள்ள அருவியை நோக்கிப் புறப்பட்டார்.



'ஸ்வாமிகளின் தாயார் இறைவனடியானார்' என்பதை அறிந்த பண்டிதர்கள், ஸ்வாமிகளைப் பின்தொடர்ந்தனர். அடுத்த பத்து நிமிடங்களில் ஊர் மக்களுக்கும் ஸ்வாமிகளை தரிசிக்க வந்த அன்பர்க ளுக்கும் இந்தச் செய்தி தெரிந்தது. அவர்களும் பகவான் நாமாவை உச்சரித்தபடி ஸ்வாமிகளைப் பின்தொடர்ந்தனர்; வேறு எந்தப் பேச்சும் அப்போது கேட்கவில்லை. அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டனர். ஸ்வாமிகள் மௌனமாக நடந்து சென்றார். அருவியில் ஸ்நானம் செய்தார். தொடர்ந்து, அனைவரும் அமைதியாக ஸ்நானம் செய்தனர். ஸ்ரீமடத்தின் நிர்வாகிகள், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு பொற்காசுகளையும், வெள்ளிக் காசுகளையும் தானமாக அளித்தனர். அம்மையார் இறந்த பத்தாம் நாளில் கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீமடத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் நடந்தது.

'நிர்வாகியின் கையில் இருப்பது தந்திதான் என்றும், அது எத்தகையது என்பதையும் அறிந்த தீர்க்கதரிசி அவர்' என்பதை இப்போது நினைத்தாலும் சிலிர்ப்பாகத்தான் உள்ளது.

Comments

  1. நல்ல பதிவு.
    அரிய செய்தி.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment