கும்பகோணம்- நன்னிலம்- நாகப்பட்டினம் சாலையில் உள்ள அந்தக் கிராமத்தின் பெயர் கூகூர். நல்லகூரூர் என்று அழைக்கப்பட்டு வந்தாலும் தற்போது கூகூர் என்பதே வழக்கில் உள்ளது. பச்சைப்பசேல் என கம்பளம் விரித்தாற் போல் இயற்கை வளத்துடன் காணப்படுகிறது கிராமம். இங்கே சிவாலயம் ஒன்று பிரமாண்டமாகக் காட்சி தருகிறது. புராண முக்கியத்துவமும் பழைமையின் பெருமையும் கொண்ட கூகூர் சிவாலயத்தில் உறையும் ஈஸ்வரனின் திருப்பெயர்- ஆம்பரவனேஸ்வரர்.
'ஆம்பரம்' என்றால் மா மரத்தைக் குறிக்கும். அதாவது, மாமரங்கள் அடர்ந்த வனத்தில் எழுந்தருளி உள்ள ஈஸ்வரன் என்று பொருள். பெயருக்கேற்றாற் போல்... ஆதி காலத்தில், மாமரங்கள் இந்தப் பகுதியில் அடர்ந்து காணப்பட்டதாம். இந்த ஆலயத்தின் தல விருட்சமும் மாமரம்தான். ஆலயத்தின் பிராகாரத்தில் சில மாமரங்கள் காணப்படுகின்றன.
இங்கு உறையும் அம்பாளின் திருநாமம்- ஸ்ரீமங்களாம் பிகை. மங்களங்கள் அருளும் நாயகி.
மகாபாரதம் தொடர்பான இதிகாச நிகழ்வுகள், இந்த ஆலய தல புராணத்துடன் பெரிதும் தொடர்பு கொண்டிருக் கின்றன. இதை மெய்ப்பிக்கும் பொருட்டு துர்வாசர், அர்ஜுனன் ஆகியோரது விக்கிரகங்கள் ஆலயத்தில் காணப்படுகின்றன. தோற்றத்தில் கம்பீரம் தெரிந்தாலும், உண்மையில் கொஞ்சம் தளர்ந்த நிலையில்தான் இருக்கிறது திருக்கோயில்!
புராண முக்கியத்துவமும், சாந்நித்தியமும் வாய்ந்த இந்த ஆலயத்தின் மகத்துவங்கள் பலருக்கும் போய்ச் சேரவில்லை போலும். எனவே, பக்தர்களால் அதிகம் அறியப்படாமல் இருக்கிறார் இந்த ஆம்பரவனேஸ்வரர்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது நாச்சியார்கோவில். இது வைணவ திவ்விய தேசத் தலம். இங்கிருந்து கிழக்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் இருக்கிறது கூகூர். நன்னிலத்தில் இருந்து கூகூருக்கு சுமார் 15 கி.மீ. தொலைவு. பிரதான சாலையை ஒட்டி வடதிசையில் கோயில். நடக்கிற தொலைவுதான். கோயிலுக்கு வடக்கே திருமலைராஜன் ஆறு ஓடுகிறது.
திருஞானசம்பந்தர் தனது சேத்திரக் கோவை பாடலில் இந்தத் தலத்தை, 'நல்லகூரூர்' என்று வணங்கி வழிபட்டிருக்கிறார். முற்கால சோழர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப் பெற்று, பிற்காலச் சோழர்கள் காலத்தில் பல திருப்பணிகள் செய்யப்பட்டுள்ள பழைமையான கோயில் இது. பின்னாளில் தேவகோட்டையைச் சேர்ந்த அ.ராம.அ.லெ.அ. அருணாசலம் செட்டியார் என்பவரது குடும்பத்தினரால், இந்த ஆலயத்துக்குத் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 1946-ஆம் வருடம் கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து 1980-ஆம் வருடத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், இந்த ஆலயத்துக்குக் கும்பாபிஷேகமோ திருப்பணிகளோ எதுவும் நடக்கவில்லை. சுமார் 28 வருடங்கள் ஓடி விட்டன. எனவே, அடுத்த கும்பாபிஷேகத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார் ஸ்ரீஆம்பரவனேஸ்வரர். தற்போது ஆலய நிர்வாகப் பொறுப்புகளை மேற்கொண்டிருப்பவர் ராமநாதன் செட்டியார். இவர், 1946-ல் கும்பாபிஷேகம் செய்த அருணாசலம் செட்டியாரின் கொள்ளுப் பேரன். இவரும் ஆலயப் பணிகளில் ஆர்வம் உள்ள அன்பர்களும் அடுத்த கும்பாபிஷேகத்துக்கான பணிகளைத் துவங்க இருக்கின்றனர்.
எண்ணற்ற ஆண்டுகளைக் கடந்து விட்ட பழைமை காரணமாக, மண்டபங்கள் உள்ளிட்ட சில கட்டடங்களில் விரிசல்கள் விழுந்து விட்டன. பெருமழை பெய்தால் இந்த விரிசல் வழியே நீர் உள்ளே இறங்குகிறது. திருப்பணி வேலைகளைத் துவங்கி, குடமுழுக்கு நடத்த வேண்டியது அவசியம் என்பதை ஆலயத்தின் இன்றைய நிலைமை உணர்த்துகிறது.
பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது, பல தலங்களைத் தரிசித்தனராம். அந்த வகையில், இந்தப் பகுதியில் உள்ள சில கோயில்களையும் பாண்டவர்கள் வருகையோடு தொடர்புபடுத்திக் கூறுவது உண்டு. அதற்கேற்ற சில புராணக் கதைகளும் அத்தகைய ஆலயத்தின் தல புராணங்களில் சொல்லப்படுகின்றன (பஞ்சபாண்டவர்கள், மயிலாடுதுறைக்கு அருகே இலுப்பப்பட்டு எனும் தலத்தில் தங்கி இருந்து அங்குள்ள சிவாலயத்தில் ஆளுக்கொரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாக சக்தி விகடன் 24.07.06 இதழில் 'ஆலயம் தேடுவோம்' பகுதியில் கட்டுரை வெளியாகி இருந்தது. பிரதிஷ்டை செய்தவர்களது பெயரிலேயே அழைக்கப்படும்
இந்த லிங்கங்களை இன்றும் அந்த ஆலயத்தில் தரிசிக்கலாம்). இதே போல் தங்களது வனவாச காலத்தில் பஞ்சபாண்டவர்கள், கூகூருக்கும் வந்து தங்கி, ஸ்ரீஆம்பரவனேஸ்வரரைத் தரிசித்ததாக தல புராணம் தகவல் சொல்கிறது. அந்தக் கதை என்ன என்று பார்ப்போம்.
திரௌபதியோடு சம்பந்தப்பட்ட மாங்கனிக் கதை, பலருக்கும் தெரிந்திருக்கும். அந்தக் கதை, இந்தத் தலத்தில்தான் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. பஞ்சபாண்டவர்கள் ஒரு முறை கூகூரில் தங்கி இருந்தபோது, மாமரத்தில் இருந்த ஒற்றை மாங்கனியைப் பறித்துத் தருமாறு பீமனிடம் கேட்டாளாம் திரௌபதி. ஆசையுடன் அவள் கேட்ட மாங்கனியை, மரத்தில் இருந்து கீழே விழ வைத்து விடலாம் என்பதற்காக பருமனாகக் காணப்பட்ட மரத்தைப் பிடித்து உலுக்கினான் பீமன். பலன் இல்லை. மரம் அசையவே இல்லை. பிறகு, வந்த அர்ஜுனனாலும் இது முடியவில்லை. பின்னர் நகுலன், சகாதேவன் ஆகியோர் வந்தனர். நான்கு பேர் சேர்ந்து மரத்தை உலுக்கியும் பலன் இல்லை. தருமர் வந்தார். ஐவரும் சேர்ந்து அந்த மாங்கனியை மண்ணில் விழ வைத்து, அதை எடுத்து திரௌபதியிடம் தந்தனர்.
அவள் அந்தக் கனியை சாப்பிட முற்பட்டாள். அப்போது அந்த வழியே வந்த துறவி ஒருவர், ''என்ன காரியம் செய்து விட்டாயம்மா... இந்த மரத்தில் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு மாங்கனி மட்டுமே காய்க்கும். தவசீலரான துர்வாசர் வந்து கேட்டுக் கொண்டால் மட்டுமே மாங்கனி அவர் மடியில் விழும். இந்தப் பழத்தை நீ வைத்திருக்கிறாயே! அம்மா... இது, உன் கையில் இருப்பது அழகல்ல... மீண்டும் மரத்தில் இருப்பதே அழகு'' என்று கூறிவிட்டுச் சென்றார்.
பாண்டவர்களும் திரௌபதியும் அதிர்ந்தனர். ''தவறு இழைத்து விட்டோம்! தனிப்பட்ட நம் ஒருவரின் முயற்சிக்கே இந்தக் கனி கிடைக்கவில்லை எனும்போதே நாம் விழிப்பாக இருந்திருக்க வேண் டும். துர்வாசர், கோபக்காரர். அவர் வருவதற்குள் பழம், மரத்தில் இருக்க வேண்டும்'' என்ற தருமர், மாயக் கண்ணனால் மட்டுமே இந்தக் காரியம் பூர்த்தி ஆகும் என்று நினைத்து, அவனைப் பிரார்த்தித்தார்.அடுத்த விநாடி ஸ்ரீகண்ணபிரான் அங்கு இருந்தார். ''என்ன தர்மபுத்திரா? என்ன வேண்டும்?''என்று கேட்டார். தர்மரும் நடந்ததைச் சொன்னார். அதன் பின் கண்ணன், ''ஆக, திரௌபதியின் கையில் இருக்கும் இந்த மாங்கனி, மரத்திலேயே - அதாவது முன்பு இருந்த இடத்திலேயே சேர்ந்து விட வேண்டும்... அப்படித்தானே?'' என்று கேட்டார்.சகோதரர்கள் ஐவரும், திரௌபதியும் சேர்ந்து ஒட்டுமொத்தக் குரலில், ''ஆமாம்'' என்று சொல்ல... அந்தக் கனியை மண்ணிலே வைக்கச் சொன்னான் மாலவன்.
''நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் மனதில் இருந்து உண்மையான ஒரு தகவலைக் கூற வேண்டும். ஒவ்வொருவரும் சொல்லும் உண்மைத் தகவலுக்கு ஏற்ப, இந்தக் கனியானது மெள்ள மெள்ள மேலே ஏறிப் போய், கடைசியில் திரௌபதி முடிக்கும்போது மரத்தில் ஒட்டிக் கொண்டு விடும். பொய் சொன்னால் கனி மரத்தில் ஒட்டிக் கொள்ளாது'' என்றார்.
தருமர் முதலில் ஆரம்பித்தார்: ''என் பெரிய தந்தையின் புத்திரன் துரியோதனன் மற்றும் அவனைச் சார்ந்தவர்கள் நல்ல எண்ணங்களுடன் நலமாக வாழ்ந்தால், அனைவருமே சுகமாக இருப் போம். இதுவே நான் சொல்ல விரும்புவது'' என்று அவர் சொல்ல... தரையில் இருந்த மாங்கனி சற்று உயரே எழும்பியது.
அடுத்தது பீமன், ''பிறரது குடி கெடுத்த துரியோதனன் மற்றும் அவனுடன் இணைந்தவர் களை- நூற்றியோரு மன்னர்களைக் கண்டதுண்டம் ஆக்குவேன். சகுனியைக் கொல்வேன். துச்சாதன னின் உதிரம் குடிப்பேன். திரௌபதியின் கூந்தலை முடிய வைப்பேன்'' என்று ஆவேசத்துடன் சூளுரைக்க... மாங்கனி இன்னும் சற்று மேலே எழும்பியது. இப்படியே அர்ஜுனன், நகுலன், சகாதேவன், திரௌபதி ஆகியோர் தங்கள் மனதில் இருந்த உண்மைக் கருத்தைச் சொல்லச் சொல்ல... கொஞ்சம் கொஞ்சமாக மேலெழும்பிச் சென்ற மாங்கனி, கடைசியில் மரத்தில் ஒட்டிக் கொண்டது. அனை வரும் மகிழ்ந்தனர். 'நல்லவேளை... துர்வாசரின் சாபத்துக்கு ஆளாகாமல் தப்பினோம்' என்று தருமர் நிம்மதி ஆனார். தங்களைக் காப்பாற்றிய ஸ்ரீகண்ணபிரானை அனைவரும் தொழுதனர்.
இந்தக் கதை நிகழ்ந்தது கூகூர்தான். வரலாற்றிலும் இடம் பெற்ற திருத்தலம் இது. கி.பி.9-ஆம் நூற்றாண்டு இறுதி; 10-ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில்... இந்த ஆலயம் முதலாம் ஆதித்த சோழனால் கட்டப்பட்டது என்றும் இதன் காரண மாக கூகூர் பகுதி, 'ஆதித்தேசுவரம்' என்றும், இங்குள்ள ஸ்ரீஆம்பரவனேஸ்வரர் 'ஆதித்தேசுவரர்' எனவும் அழைக்கப்பட்டதாகக் கல்வெட்டுகள் தெரிவிக் கின்றன. 'திருநறையூர் (நாச்சியார்கோவில்) நாட்டைச் சேர்ந்த கூரூர்' என்றே இந்தப் பகுதி, சோழர் காலக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரகேசரி வர்மன் இந்தக் கோயிலில் விளக்கு எரிவதற்காக 25 பொற்காசுகள் வழங்கிய செய்தியை ஒரு கல்வெட்டு சொல்கிறது. ஸ்ரீஆம்பரவனேஸ்வரர் ஆலயத்தில் பூஜைகள் தடை இல்லாமல் நடை பெறுவதற்காக, நிலங்களை கொடையாக அளித் தான் உத்தம சோழன். பூஜை வேளைகளில் தேவாரம் ஓதியவர்களுக்கு, நிரந்தரமாக மான்யம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் உற்ஸவம் கோலாகலமாக நடப்பதற்கும் நிலங்கள் ஒதுக்கப்பட்டன.
கோயில் சொத்தைத் திருடியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, தண்டனை அளித்த தகவலை ராஜராஜ சோழன் காலத்திய கல்வெட்டு தெரிவிக்கிறது. ஸ்ரீஆம்பரவனேஸ்வரர் ஆலயத் துக்குப் பலரும் அளித்த கொடை களைச் சரிவர பயன்படுத்தாமல், ஒரு கும்பல் இவற்றை சாப்பிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருந்தது.
இவர்களை அடையாளம் கண்டுகொண்டு, தண்டித்த செய்தியைத்தான் ராஜராஜன் காலத்திய கல்வெட்டு சொல்கிறது. இதன் அடுத்த நடவடிக்கையாக, பலராலும் கோயிலுக்குக் கொடுக்கப்படும் சொத்து கள் பற்றிய தணிக்கையை, முறையாக எப்படிச் செய்ய வேண்டும் என்றும் ராஜராஜ சோழன் காலத்திலேயே தீர்மானிக்கப்பட்டதாம்.
ராஜராஜ சோழன், ஆம்பரவனேஸ்வரர் மேல் அளவு கடந்த அன்பும் பக்தியும் வைத்திருந்தான். ஒரு முறை இவனுக்குத் தீராத வியாதி ஒன்று வந்தது. அரண்மனை வைத்தியர்கள் அளித்த சிகிச்சை கொஞ்சமும் பலன் தரவில்லை. ஒரு கட்டத்தில், சில குருமார்களின் அறிவுரையின் பேரில், கூகூர் தலத்தில் உள்ள பைரவரை வணங்கி நலம் பெறுவதற்காக இங்கு வந்து சேர்ந்தான். ஆலயத்துக்கு அருகில் உள்ள திருமலைராஜன் நதியில் நீராடி, ஸ்ரீஆம்பரவனேஸ்வரரைத் தரிசித்தான். அதன் பின், பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து பூஜித்தான். அவனைப் பாதித்திருந்த நோய் சில நாட்களிலேயே நீங்கியதாம். இந்தத் தகவலையும் கல்வெட்டு ஒன்றில் காணலாம்.
இனி, ஆலயத்தை வழிபடுவோமா?
பிரமாண்டமான இந்த ஆலயம், மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி விளங்குகிறது. பலிபீடம், நந்திதேவர் மண்டபம். நுழைந்ததும் நமக்கு வலப் பக்கம் அம்மன் சந்நிதி, தனிக் கோயிலாகக் காட்சி தருகிறது. அன்னையின் ஆலய மண்டபத்தில், அ.ராம.அ.லெ.அ. அருணாசலம் செட்டியார் மற்றும் அவரின் மனைவி ஆகியோரது சிலா வடிவங்கள் உள்ளன. 1946-ஆம் ஆண்டு கும்பாபிஷேகத்தின்போதுதான் மங்களாம்பிகை சந்நிதியை இப்படி விஸ்தாரமாக எடுத்துக் கட்டிய தாக சொல்லப்படுகிறது.
இங்கே அருளும் ஸ்ரீமங்களாம்பிகை, சக்தி வாய்ந்தவள். தெற்கு நோக்கிய சந்நிதியில், நின்ற கோலத்தில் சாந்தமான முகத்துடன் அருள் புரிகின்றாள். நான்கு திருக்கரங்களுடன் விளங்கும் ஸ்ரீமங்களாம்பிகா, சற்றே முன்பக்கம் சாய்ந்த நிலையில் தரிசனம் தருகிறாள். மனம் குளிர வணங்கி விட்டு, பிரதான ஆலயத்தை நோக்கி நகர்கிறோம்.
ஸ்ரீஆம்பரவனேஸ்வரரைத் தரிசிக்கும் முன் பிராகாரம் மற்றும் இங்குள்ள சிலா திருமேனிகளைத் தரிசித்துவிட லாம். ஒவ்வொரு விக்கிரகமும் சிறப்பான முறையில் கலை நுணுக்கத்தோடு வடிக்கப்பட்டிருக்கின்றன.
ஆலயத்தின் உள்ளே ஸ்ரீவிநாயகர், திருஞானசம்பந்தர், அர்ஜுனன், வள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீமகாலட்சுமி முதலான சிலா வடிவங்களைத் தரிசிக்கிறோம். இந்த ஆலயத்தைப் பற்றிப் பாடியதால் சம்பந்தர் திருமேனி! தல புராணத்தோடு சம்பந்தப்பட்டதால் அர்ஜுனனும், விக்கிரகமாகக் காட்சி தருகிறான்.
பிராகார வலத்தின்போது ஸ்ரீவிநாயகர், ஸ்ரீநடராஜர், காரைக்கால் அம்மையார், பூதகணங்கள், துர்வாச முனிவர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சிதைந்த நிலையில் கோஷ்ட தெய்வங்களான பிரம்மா மற்றும் விஷ்ணு, அஷ்ட தசபுஜ விஷ்ணு துர்கை, சண்டிகேஸ்வரர், கங்காளமூர்த்தி, பெரியாண்டவர், நவக்கிரகம், பைரவர் என்று மனம் நெகிழும் தரிசனம்.
இங்குள்ள பைரவர், மிகுந்த சக்தி வாய்ந்தவர். எத்தகைய நோய் இருந்தாலும், பிரச்னைகள் வந்தாலும் தீர்த்து வைப்பவர். தன்னை மனம் உருக பிரார்த்திக்கும் பக்தர்களை என்றுமே இவர் கைவிடுவது இல்லை.
துவாரபாலகர்களின் அனுமதியுடன் ஸ்ரீஆம்பரவனேஸ்வரரின் கருவறை நோக்கிச் செல்கிறோம். உயரமான பாணத்தோடு காணப் படும் லிங்கத் திருமேனி. ருத்திராட்சப் பந்தலின் கீழே ஏகாந்த மூர்த்தியாகக் காட்சி தருகிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட இந்த ஈஸ்வரர், சிறந்த அருளாளர். பக்தர்கள் கேட் டதை வாரி வழங்குபவராம். முற்காலத்தில் இந்தப் பகுதியில் வணிகம் செய்து வந்த செல்வந்தர்கள் பலர், இவரைப் பெருமளவில் ஆராதித்துள்ளனர்.
இப்படி ஏராளமான சிறப்புகளைப் பெற்றிருக்கும் ஸ்ரீஆம்பரவனேஸ்வரர் ஆலயம், இன்று களை இழந்து காணப்படுகிறது. பிரமாண்டமான விழாக்கள் இல்லை; பிரதோஷம் முதலான சில வைபவங்கள் மட்டுமே தொடர்ந்து நடந்து வருகின்றன. ஸ்ரீஆம்பரவனேஸ்வரரின் மகத்துவத்தையும் மகிமைகளையும் அனைவரும் உணர வேண்டும். அதற்கான முயற்சிதான் விரைவில் தொடங்க இருக்கும் திருப்பணி!
ஆன்மிக அன்பர்களின் அருள் உள்ளத்தோடு, திருப்பணிகள் விரைவில் நிறைவேறி கும்பாபிஷேகம் காண பிரார்த்திப்போம்!
திரௌபதி அம்மன் ஆலயம்
பாண்டவர்கள் மற்றும் திரௌபதி ஆகியோரோடு கூகூர் சம்பந்தப்பட்டிருப்பதால், இந்த ஊரில் திரௌபதிக்கு தனியே விசேஷமான திருக்கோயில் உண்டு. பூசாரிகள் இங்கு பூஜை செய்து வருகிறார்கள். 1983 வரை குடிசையில் குடி கொண்டிருந்த திரௌபதி அம்மன், 1995-ல் கல் கட்டடத்துக்கு மாறினாள். கடந்த மே மாதம் இந்த ஆலயத்துக்குக் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த ஊர்க்காரரும் ஸ்ரீதிரௌபதி அம்மனைக் குலதெய்வமாகக் கொண்டவருமான ஜெயராமன் நம்மிடம், ''நான் சார்ந்திருக்கிற சமையல் தொழில்ல இன்னிக்கு இந்த அளவுக்கு வளர்ந்திருக்கேன்னா, அதுக்குக் காரணம் இந்த திரௌபதி அம்மன்தான்.
இந்த ஆலயத்தில் நடைபெறும் எந்த ஒரு விழாவையும் தவற விட மாட்டேன். சென்னையில் இருந்து கிளம்பி வந்து விடுவேன். இந்த ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்களில் கலந்து கொள்வது என்றாலே தனி மகிழ்ச்சிதான்'' என்றார்.
கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முன் மண்டபம், பிராகாரம், பரிவார தேவதைகள் என திரௌபதி ஆலயம் அழகாக அமைந்துள்ளது. சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் நடந்துள்ளதால், புதுப் பொலிவுடன் திகழ்கிறது ஆலயம். முத்தால ராவுத்தர், அரவான், காளி ஆகியோருக்கு சுதையால் ஆன திருவுருவம் காணப்படுகிறது. சுதையால் ஆன பஞ்ச பாண்டவர்களின் வடிவங்கள் ஆலய முகப்பில் வடிக்கப்பட்டுள்ளது. குலதெய்வக்காரர்கள் மற்றும் கூகூர், வடகரை, மங்கராயன்படுகை ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பு, இந்த ஆலயத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறதாம்.
ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் நடக் கும் பால் குட உற்ஸவம், சித்திரை மாதம் நடைபெறும் தீமிதி உற்ஸவம் முதலானவை திரௌபதி அம்மன் ஆலயத்தில் சிறப்பு.
தகவல் பலகை
தலம் : நல்லகூரூர் என்கிற கூகூர்
மூலவர் : ஸ்ரீஆம்பரவனேஸ்வரர் மற்றும் ஸ்ரீமங்களாம்பிகை.
எங்கே இருக்கிறது?: தஞ்சை மாவட்டத்தில் இருக்கிறது கும்பகோணம். இங்கிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது நாச்சியார்கோவில். இங்கிருந்து கிழக்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் இருக்கிறது கூகூர். கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் வழியாக நாகப்பட்டினம் செல்லும் பாதையில் பயணித்தால் நாச்சியார்கோவிலை அடுத்து, கூகூர். கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவு. நன்னிலத்தில் இருந்து கூகூருக்கு சுமார் 15 கி.மீ. தொலைவு. கும்பகோணத்துக்கும் நன்னிலத்துக்கும் மையமாக இருக்கிறது கூகூர். சாலையை ஒட்டி வெகு அருகே வடதிசையில் கோயில்.
எப்படிப் போவது?: கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் வழியாக நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் கூகூர் வழியாகச் செல்லும். கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்துகள் எண் 28, 39 ஆகியன கூகூர் வழியாகச் செல்லும்.
தொடர்புக்கு:
அரு. ராமநாதன் செட்டியார்
ஆம்பரவனேஸ்வரர் சந்நிதி,
கூகூர் அஞ்சல் - 612 602.
(வழி) நாச்சியார்கோவில்
கும்பகோணம் தாலுகா.
போன் : 0435- 294 1752
மொபைல் : 97901 16062
எஸ். நடேச குருக்கள்
ஆலய அர்ச்சகர்,
கூகூர் அஞ்சல் - 612 602.
(வழி) நாச்சியார்கோவில்
கும்பகோணம் தாலுகா.
போன் : 0435- 246 7919
Comments
Post a Comment