பொங்கல் விழா

ஆண்டு முழுதும் எத்தனையோ பண்டிகைகள் வந்தாலும் அனைத்தையும்விட உயர்வானதாகச் சொல்லப்படுவது, பொங்கல் பண்டிகை.

ஆயுளும் ஆரோக்யமும் அளித்து ஆனந்த வாழ்வு பெற அருளும் ஆதித்யனை வழிபடும் இந்தத் திருநாளின் ஆரம்பம் எது தெரியுமா?

கோவர்த்தன கிரிதாங்கி நின்று கோபர்களை இந்திரனின் கோபமான மழையில் இருந்து காத்தான். கோபாலன். தேவராஜனை அன்று வரை வழிபட்ட அனைவரையும், பகலவனைப் பணியச் சொன்னான் பரந்தாமன். இது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அதற்கு முன் ராம அவதாரத்திலேயே சூரிய வழிபாட்டைத் தொடங்கிவிட்டான் சுதர்சனதாரி.

ஆமாம். ராம, ராவண யுத்தத்தின்போது, ராமச்சந்திரனுக்குத் தளர்ச்சியும் சோர்வும் ஏற்படாமல் இருக்க, கதிரோனை வழிபடச் சொன்னார் அகத்திய மாமுனி. ஆதித்ய ஹ்ருதயம் எனும் அற்புத மந்திரமும் உபதேசித்தார். அப்படியே செய்து ராவணனை வென்றார் ராமபிரான்.

கிருஷ்ண அவதாரத்தில் இன்னொரு சமயத்திலும் சூரிய வழிபாடு சூழ்வினை போக்கும் என சுட்டிக்காட்டியிருக்கிறான் கோவிந்தன். தன் ப்ரியத்துக்கு உரிய நாரதரை, தன் மகன் சாம்பன் (ஜாம்பவதிக்கும் கிருஷ்ணருக்கும் பிறந்தவன்) கேலி செய்ததால் கோபம் கொண்டு, பெருநோய் பீடிக்க சாபமிட்டான் சக்ரதாரி. சாபவிமோசனமாக, நதிக்கரையில் பொங்கல் இடும்போது அந்த அடுப்பின் புகைபட்டு நோய் நீங்கும் என்றார்.

இவை அனைத்தையும் விட மேலாக இறைவனும் இறைவியும் தங்களின் பார்வையால் பார் முழுதுக்கும் படியளந்து பசி தீர்ப்பதாகச் சொல்கின்றன புராணங்கள். இறைவனின் விழிகள் சூரிய, சந்திரன் என்றும் கூறுகின்றன. அதாவது, வெப்பமும் தட்பமும் இணைந்த இயற்கை சூழலால் இவ்வுலகில் பயிர்கள் செழித்து, உயிர்களின் பசி நீங்க பகவான் அருள்கிறார் என்பது அர்த்தம்.

தென்திசையில் பயணிக்கும் பகலவன், வடதிசைக்கு மாறும் தைமாத முதல் நாளை உத்தராயன புண்யகாலம் என்கின்றன வேதங்கள். அந்தநாளில் சூரியனை வழிபடுவது, சூழ்வினைகளை சுட்டெரித்து வாழ்வினை வளமும் நலமும் நிறைந்ததாக ஆக்கும் என்பது ஐதிகம்.

எப்படிச் செய்வது சூரிய பூஜை?

முன்பெல்லாம் வீட்டின் முற்றத்தில் அடுப்பு வைத்துப் பொங்கலிடுவர். அல்லது வீட்டின் வாசலில் குடும்பத்தினர் எல்லோரும் கூடிநின்று குலவையிட்டுப் பொங்கல் படைப்பார்கள். ஆனால் இக்காலத்தில் அது இயலாது என்பதால், அவரவர் வீட்டு வழக்கப்படி அடுப்படியைத் தூய்மை செய்து கோலமிடுங்கள்.

அடுப்பிற்கு மஞ்சள் குங்குமம் இடுங்கள். புதிய பானை அல்லது நீங்கள் வழக்கமாகப் பொங்கல் வைக்கும் பானையில் அவரவர் வழக்கப்படி பொட்டு வையுங்கள். பானையின் கழுத்தில் மஞ்சள் கொத்தினைக் கட்டுங்கள். பின்னர் சுபமான நேரத்தில் பொங்கல் பானையை அடுப்பில் ஏற்றி பொங்கல் செய்யுங்கள்.

பானையில் இருந்து பால் பொங்கிடும்போது உங்கள் வீட்டுச் சுட்டிகள் மட்டுமல்லாமல் நீங்களும் ஒன்றாகச் சேர்ந்து உரக்கச் சொல்லுங்கள். `பொங்கலோ பொங்கல்' இது ஆண்டு முழுதும் உங்கள் வீட்டில் ஆனந்தம் பொங்கச் செய்யும் வழிபாடு என்பதால் கூச்சப்படாமல் குரல் எழுப்புங்கள்.

பொங்கல் தயார் ஆனதும் அவரவர் வழக்கப்படி குலதெய்வத்தின் முன்போ, இஷ்ட தெய்வத்தின் முன்போ அல்லது சூரியனின் ஒளிவிழும் இடத்திலோ வைத்து, விளக்கேற்றி, பொட்டிட்டு, பூப்போட்டு, தூப, தீபம் காட்டி பிறகு பொங்கலை நிவேதனம் செய்யுங்கள்.

இது நன்றி தெரிவிக்கும் திருநாள் என்பதால், உங்கள் வாழ்வில் உங்களின் முன்னேற்றத்திற்கு உதவிய உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்று மனதார வேண்டுங்கள்.

நன்மைகள் நாளும் சூழ்ந்திருக்க சூரியனை வேண்டுங்கள்!

மனம் இனிக்கப் பொங்கல், மனை சிறக்க மஞ்சள், நலம் சிறக்க கரும்பு, நாளும் கோளும் நன்மைகள் செய்ய நல்வாழ்த்துக்கள் என எல்லாமே இனிமையாய் அமைந்த பொங்கல் திருநாளில் இல்லாதவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். எந்நாளும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும் அது நீங்காது தங்கும்.

Comments