ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்ய தேசங்களுள், பாண்டிய நாட்டில் 18 திவ்ய தேசங்கள் உள்ளன. அவற்றுள் 4-வது திருத்தலமாக விளங்கும் திருப்புல்லாணி, ராமாயண கதாபாத்திரங்களுடன் தொடர்புடையது. திருமங்கை ஆழ்வா ரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது இந்தக் கோயில்.
திருப்புல்லாணி சேத்திரத்தில், திருமாலின் மூன்று மூலவர் வடிவங்களை நாம் தரிசிக்கலாம். பிரதான மூலவர்- ஆதிஜகந்நாத பெருமாள். இரண்டாமவர்- ஸ்ரீதர்ப்பசயன ராமர். ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதாதேவியை மீட்க எண்ணிய ஸ்ரீராமன் இங்கு வந்து, ஸ்ரீஆதி ஜகந்நாத பெருமாளை தரிசித்தார். தன் அவதார நாயகனான ஸ்ரீராமபிரானுக்கு ஆசி கூறும் விதமாக, அவருக்கு வில்லைக் கொடுத்து அருள் புரிந்தார் ஆதிஜகந்நாத பெருமாள். அதன் பின், கடலில் பாலம் அமைத்து இலங்கை சென்றார் ஸ்ரீராமன் என்பது புராணம்.
மூன்றாவது மூலவர்- ஸ்ரீபட்டாபிஷேக ராமர். ராவணனை அழித்து, சீதாதேவியை மீட்ட ஸ்ரீராமன், புஷ்பக விமானத்தில் அயோத்தி திரும்பினார். வழியில், பக்தர்களது விருப்பத்துக்கு இணங்க, திருப்புல்லாணியில் இறங்கிய ஸ்ரீராமன், பட்டாபிஷேக கோலத்தில் இங்கேயே அமர்ந்தாராம்!
எனவே ஆதிஜகந்நாதர் ஆலயம், ராமாயண காலத்துக்கும் முற்பட்டது என்பதை அறியலாம். எழுபத்திரண்டு சதுர் யுகங்களுக்கு முன்னால் திருப்புல்லாணி ஆலயம் அமைந்ததாக தல புராணம் சொல்கிறது. இங்கு, ஆதிசேஷன் குடையின் கீழ் காட்சி தரும் இந்த சந்தானகோபாலனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து ஆராதித்திருக்கிறார் தசரதர். இதன் பலனாக ஸ்ரீராமனை புத்திரனாக பெற்றார் அவர்.
'திருப்புல்லாணி' என்கிற பெயருக்கு என்ன விளக்கம்? வடமொழியில் இந்தத் தலம் புல்லாரண்யம் (மலர்கள் அடர்ந்த காடு) என்றும், தமிழில் புல்லணை என்றும் அழைக்கப்படுகிறது. திருப்புல் எனப்படும் தர்ப்பைப் புல்லை அணைந்து ஸ்ரீராமபிரான் இங்கு சயனித்திருந்தார் என்பதால் புல்லணை. தவிர, புல்லர் எனப்படும் மகரிஷி இங்கு தவம் இருந்ததால், அவரது பெயரை ஒட்டியும் இந்தப்பெயர் வழங்கப்படுகிறது.
இலங்கைக்குச் செல்ல... வானரர்களது உதவியுடன், ஸ்ரீராமன் பாலம் அமைத்த இடம் ராமசேது, சேதுக்கரை, ஆதிசேது என்றெல்லாம் அழைக்கப்படுகிறது (சேது என்ற வடமொழிச் சொல்லுக்கு பாலம் என்று பொருள்). சேதுக்கரைக்குக் கிழக்கே சற்றுத் தொலைவில், ராமர் கட்டிய அணை என்று கூறப்படும் நீண்ட கல் அரணை இன்றும் காணலாம். இந்த இடம் திருப்புல்லாணியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது. திருப்புல்லாணியில் இருந்து பேருந்து வசதி உண்டு. முன்காலத்தில் பாரத தேசத்தின் எல்லைகளாகக் கூறும்போது, வடக்கே இமாலயத்தையும், தென் எல்லையாக ஆதிசேதுவையும்தான் குறிப்பிட்டுள்ளனர். சேதுக்கரையைத் தரிசிப்பது அவ்வளவு விசேஷம். இங்கு சங்கல்பம் செய்து கொண்டு, சமுத்திரராஜனை வணங்கி ஸ்நானம் செய்வர். தவிர, பித்ரு காரியங்களும் இங்கு செய்யலாம்.
ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்கள் திருப்புல்லாணி ஆலயத்துக்குச் செய்த திருப்பணிகள் ஏராளம்! இவர்களின் மூதாதையர் ஒருவர், ஸ்ரீராமனுக்கு சேவை செய்யும் பாக்கியம் பெற்றாராம். அவரது திருத்தொண்டில் நெகிழ்ந்த ஸ்ரீராமர், 'வீரரே! இங்கே விஸ்தாரமான பட்டணத்தை உருவாக்கி, மாட - மாளிகைகள் கட்டி மகிழ்வோடு வாழ்வீராக! சேதுவின் மூலாதாரமான திருப்புல்லாணி சேத்திரத்தின் மகத்துவத்தைக் காப்பாற்றி வாருங்கள்' என்று கூறி, ஆசிர்வதித்தாராம். அதன்படி சேதுவின் காவலர்களாக இருந்த அந்தப் பரம்பரையினரே, 'சேதுபதி வம்சம்' என அழைக்கப்படலாயினர். தற்போதும், ராமநாதபுர சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்திலும், தமிழக அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் மேற்பார் வையிலும் திருப்புல்லாணி ஆதி ஜகந்நாத பெருமாள் ஆலயம் விளங்குகிறது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்கிற மூன்றிலும் சிறப்புடையது இந்தக் கோயில்.
ராவணனின் தம்பியான விபீஷணன், நியாயத்தின் பக்கம் இருக்க விரும்பி ஸ்ரீராமனை சரணடைந்த தலம்.
பிரமாண்டமான அரச மரம், பெருமாள் சந்நிதியின் மேற்குப் பகுதியில், வெளிப் பிராகாரத்தில் தாயார் சந்நிதிக்குப் பின் புறம், கம்பீரமாகக் காட்சி தருகிறது. தல விருட்சமான இந்த மரத்தின் அடியில்தான் புல்லர், கண்வர், காலவர் ஆகிய மூன்று முனிவர்களும் ஸ்ரீமந் நாராயணனைக் குறித்துக் கடும் தவம் இருந்தார்கள். அப்போது பொன்மயமாகக் திகழ்ந்த இந்த மரத்தடியில், திருமால் இவர்களுக்குக் காட்சி தந்து அருளினாராம். அதனால்தான் இன்றும் இந்த மரம், ஸ்ரீமந் நாராய ணன் திருவுருவாக எண்ணி வழிபடப்பட்டு வருகிறது.
திருப்புல்லாணி என்று இந்தப் பகுதிக்குப் பெயர் வரக் காரணமானவர்- இங்கே வசித்து வந்த புல்லர் என்கிற மகரிஷி. மகாவிஷ்ணுவைக் குறித்துக் கடும் தவம் இருந்தார் இவர். ஆயிரத்து முந்நூறு வருடங்கள் தொடர்ந்தது இவரது தவம்! புல்லர் தவம் இருந்த இடத்தின்
அருகில் பிரமாண்டமான அரச மரம் ஒன்று இருந்தது. பல காலமாக தன்னை துதித்து தவம் இருக்கும் புல்லருக்கு அருள் புரிய விரும்பினார் மகாவிஷ்ணு. எனவே, சதுர் புஜங்களோடும், பஞ்ச ஆயுதங்களோடும் தனக்கு மிகவும் இஷ்டமான அரச மரத்தின் அடியில், தேவியருடன் புல்லருக்குக் காட்சி தந்தார்.
மாலவனைக் கண்டு பூரித்துப் போனார் புல்லர். தர்ப்பங்களால் ஆன உயரிய ஆசனம் ஒன்றை பெருமாளுக்கு சமர்ப்பித்து, ''எம்பெருமானது திருக்காட்சியை தரிசித்ததால், எனது கருமங்கள் விலகி விட்டன. துன்பம் எனும் கடலைத் தாண்டி, இன்பம் எனும் கரையை அடைந்து விட்டேன். இதை விட வேறு என்ன பேறு வேண்டும்? இந்த இடத்தில், அரச மரத்தடியில் எனக்குக் காட்சி தந்தது போல், பூலோகத்தில் இருக்கும் அனைவருக்கும் தாங்கள் காட்சி தந்தருள வேண்டும்'' என்று புல்லர்பிரார்த்திக்க... தேவியருடன் அங்கே நிரந்தரமாகக் குடிகொண்டார் ஆதி ஜகந்நாத பெருமாள்.
தேவலர் என்கிற மகரிஷியும் திருப்புல்லாணி அருகே, அழகிய சோலையின் மையத்தில் ஓர் ஆசிரமம் அமைத்து தனியே தவம் செய்து வந்தார். ஒருநாள், அந்த சோலைக்குள் புன்னகையே வடிவான ஏழு கன்னியர் புகுந்தனர். இது ஒரு தவசீலரின் ஆசிரமம் என்பதை அறியாமல், அங்கு இருக்கும் குளத்தில் நீராடினர். இந்த நேரத்தில் அங்கு வந்த தேவலர், கன்னியரைக் கண்டு கோபம் கொண்டார். தனது தவத்துக்கும், தனிமைக்கும் கேடு விளைவித்த காரணத்தால், தாசிகளாக ஆகும்படி அவர்களை சபித்தார். அதன் பின் தேவலரின் திருவடிகளில் வீழ்ந்த கன்னியர், ''அறியாமல் தவறு செய்து விட்டோம். சாபத்தில் இருந்து எங்களைக் காத்தருள வேண்டும்'' என்றனர் கண்ணீருடன்.
''வருந்தாதீர்கள் கன்னியரே... ஸ்ரீவைகுண்டத்துக்கு நிகரான பெருமைகள் கொண்ட புல்லாரண்யம் எனும் தலத்தில் புல்லர் என்கிற விஷ்ணு பக்தர் ஒருவர் வசிக்கிறார். அவரை, நீங்கள் தரிசிக்கும் காலத்தில் உங்களுக்கு சாப விமோசனம் கிடைக்கும்'' என்றார் தேவலர். இதன் பின், ஏழு கன்னியரும் புல்லர் தவம் இருக்கும் புல்லாரண்யத்தை அடைந்தனர். தேவலர் அருளியபடி புல்லரை வழிபட்டனர். 'தேவ குமாரிகளே... தசரதனின் குமாரனாக ஸ்ரீராமன் இங்கே எழுந்தருளப் போகிறார். அவரைத் தரிசித் ததும், தங்களின் இந்த நிலை மாறி, முன்பிருந்த நிலையை அடைவீர்கள். அந்த அவதார புருஷன் வரும் வரை இந்த ஆதி ஜகந்நாத பெருமாளை பூஜியுங்கள்!' என்று கட்டளை இட்டு விட்டு, பெருமாளை பூஜிக்கும் வழிமுறை களையும் விளக்கிச் சொன்னார். சிறிது காலத்துக்குப் பின், புல்லர் பரமபதம் அடைந்தார். புல்லரின் சிஷ்யைகளாக இருந்த கன்னியர் எழுவரும், அவர் இட்ட கட்டளைப்படி ஆதி ஜகந்நாத பெருமாளைத் தினமும் ஆராதித்து, ஸ்ரீராம அவதாரம் எப்போது நிகழும் என்று காத்திருந்தனர்.
இதே காலத்தில் புல்லாரண்யத்துக்கு வடக்கே கண்வ ரிஷி என்பவர், ஆசிரமம் அமைத்து தவம் இருந்து வந்தார். ஸ்ரீவாசு தேவனை குறித்து 1000 வருடங்கள் தொடர்ந்த அவ ரது தவத்துக்கு பலன் கிடைத்தது. இதை உறுதி செய்யும் வகையில் ஓர் அசரீரி வாக்கு: 'ஏ ரிஷியே...தசரத குமாரனாகிய ஸ்ரீராமன் இங்கு எழுந்தருளப் போகிறான். சக்கர தீர்த்தக் கரைக்குச் சென்று அங்கு, உங்களது தவத்தை தொடருங்கள். உங்கள் மனதில் உள்ளது நிறைவேறும்.' என்றது. மிகவும் மகிழ்ந்த கண்வர், ஸ்ரீராமனின் அவதாரத்தை எதிர்நோக்கி, சக்கர தீர்த்தக் கரைக்குப் புறப்பட்டார்.
இந்த நிலையில், இலங்கையை ஆண்டு வந்த ராவணன் மற்றும் அவனது கூட்டத்தாரது அட்டூழியத்தால் தேவர்களும் இன்ன பிறரும் மிகுந்த தொல்லைகளை அனுபவித்தனர். அவர்களது பிரார்த்தனைக்கு இணங்கியும், தசரதரின் அருந்தவப் பயன் காரணமாகவும், அவரின் குமாரனாக அவதரித்தார் ஸ்ரீராமன். அயோத்தியில் பிறந்தது, விஸ்வாமித்திரரின் யாகத்தைக் காத்தது, மிதிலை மாநகரில் வில்லை முறித்தது, சீதாதேவியை மணந்தது, கானகம் சென்றது, சீதையை ராவணன் கவர்ந்து சென்று சிறைப்படுத்தியது, அனுமன் முதலான வானர வீரர்களை நட்பாகப் பெற்றது, இலங்கைக்குச் சென்று சீதை அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டிருப் பதை அனுமன் வந்து சொன்னது... முதலான சம்பவங்களை ராமாயணத்தில் அறிவோம். இந்த நிலையில், 'கடலுக்கு அப்பால் உள்ள இலங்கையில் இருந்து சீதாதேவியை எப்படி மீட்டு வருவது?' என்று ஆலோசிப்பதற்காக ஸ்ரீராமபிரான் இந்தத் தலத்தை அடைந்தான். 'ஸ்ரீராமனின் பத்தினி சீதாதேவியை இங்கே சிறை வைப்பது கொடுஞ்செயல்' என்று இலங்கையில் ராவணனுக்கு அறிவுறுத்திய விபீஷணன், எதிரியாகக் கருதப்பட்டான். இனியும் அங்கே இருக்கக் கூடாது என்று எண்ணிய விபீஷணன் தன் சிநேகிதர்கள் நால்வருடன், புல்லாரண்ய தலத்தை அடைந்து, ஸ்ரீராமனிடம் சரணாகதி ஆனான். பெருமானும் அவனை ஆரத் தழுவி, இலங்கை அரசனாக அவனுக்கு முடிசூட்டி வைப்பதாக உறுதி அளித்தார்.
பின்னர், ஆதி ஜகந்நாதரை வணங்கிய ஸ்ரீராமன், ராவணனை அழிக்கும் பொருட்டு, அந்தப் பெருமாளிடம் இருந்து அழகிய வில்லைக் கேட்டு நமஸ்கரித்தாராம். புன்னகை ததும்பிய கோலத் துடன் ஸ்ரீராமபிரானுக்குக் காட்சி அளித்த ஆதி ஜகந்நாதர், ''ரகுவீரரே! இந்தாருங்கள். இந்த வில்லால்தான் ராவணனைக் கொல்லப் போகிறீர்கள்''என்று வில்லை ராமபிரானிடம் கொடுத்ததாகப் புராணம் சொல்கிறது. பெருமாளா கிய ஸ்ரீராமனால் வணங்கப் பெற்ற காரணத்தால், திருப்புல்லாணி மூலவரான ஆதி ஜகந்நாதர், 'பெரிய பெருமாள்' என அழைக்கப்பட்டார்.
தேவலரால் சபிக்கப்பட்ட ஏழு கன்னியர்களும் ஸ்ரீராமனைத் துதித்து, சாபம் நீங்கப் பெற்றனர். இதேபோல் கண்வ மகரிஷியும் ராமனைப் போற்றி, பரமபதம் அடைந்தார்.
விபீஷணனது ஆலோசனையின் பேரில், கடலில் அணை கட்டி கடந்து சென்று, சீதையை மீட்டு வரலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. அதற்கு முன், கடலரசனின் அனுமதியை பெற வேண்டுமே! இதற்காக, லட்சுமணனால் ஏற்படுத்தப்பட்ட தர்ப்பைப் படுக்கையில் சயனித்து, சமுத்திர ராஜனைப் பிரார்த்தித்து வந்தார் ஸ்ரீராமர். ஏழு நாட்கள் தொடர்ந்து தர்ப்பசயனத்தின் மேல் இருந்தும், சமுத்திர ராஜன் பிரசன்னமாகவில்லை. கோபமானார் ஸ்ரீராமன். சமுத்திர ராஜனுக்குத் தனது பராக்கிரமத்தைக் காட்ட எண்ணி, லட்சு மணன் கையில் இருந்து வில்லை வாங்கித் தொடுத் தார். நெருப்பைக் கக்கிக் கொண்டு சென்ற அந்த அம்பு, சமுத்திரத்தை வற்றச் செய்தது. வானரப் படையினரும் ஏனையோரும் நடந்தே இலங்கைக்குச் செல்லலாம் என்று கிளம்ப இருந்த நேரத்தில், தன் தேவியருடன் ஸ்ரீராமனை சரண் அடைந்து, பிழை பொறுக்க வேண்டினான் சமுத்திர ராஜன். பிறகு, அவனுக்கு ராமர் அருள் புரிய, கடலில் முன்பு போல் நீர் சூழ்ந்தது. ராமனின் கட்டளையினா லும், சமுத்திரராஜனின் இசைவினாலும் நளன் போன்றோரது முயற்சியாலும் கடலில் பாலம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து இலங்கைப் பயணம் அமைந்து, யுத்தம் நடந்து, சீதாதேவியும் மீட்கப்பட்டார்.
வேதவியாசரால் எழுதப்பட்ட ஆக்னேய புராணம், வால்மீகி ராமாயணம், கம்பராமாயணம் முதலான பல நூல்களிலும் திருப்புல்லாணித் தலத்தின் மகிமை சொல்லப்பட்டுள்ளது. பழங்கால அமைப்பில் விளங்கும் கற்கோயில். உள்ளே பிரமாண்ட தூண்களில், சேதுபதி மன்னர்கள் சிலைகளாகக் காட்சி தருகின்றனர்.
ஆலய தரிசனம் செய்வோமா?
ராஜகோபுரம். தேரோடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்கள் கொண்ட விஸ்தாரமான ஆலயம். பலிபீடம், கொடிமரம் கடந்து பிரதான மூலவர் ஸ்ரீஆதி ஜகந்நாத பெருமாளைத் தரிசிப்போம், வாருங்கள். பெருமாள் சந்நிதிக்கு எதிரே பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வார் சந்நிதி. பெருமாளைத் தரிசிக்கச் செல்லும் முன் ஜயன்- விஜயன் எனும் துவார பாலகர்களை வணங்குகிறோம்.
மூலவர் ஆதி ஜகந்நாத பெருமாள் கருவறை முன் நிற்கிறோம். ஸ்ரீபூமி, நீளை என்கிற தேவியருடன் வீற்றிருந்த கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் கம்பீரமாக சேவை சாதிக்கிறார் பெருமாள். ராமாயண நாயகன் ஸ்ரீராமனுக்கு அருளிய பெருமாள், கலி யுகத்திலும் பக்தர்களைக் காத்து வருகிறார். உற்சவர் திருநாமம்- கல்யாண ஜகந்நாதர். முதலாம் பிராகாரத்தில் நரசிம்மரும் விஷ்வக்சேனரும் தரிசனம் தருகிறார்கள். முதலாம் பிராகாரத்தை வலம் வந்து உள்ளே சென்றால், தர்ப்பசயன ராமரின் அர்த்த மண்டபம் தென்படும்.
வீர சயனக் கோலத்தில் பட்டாக்கத்தியுடன் தரிசனம் தருகிறார் தர்ப்பசயன ராமர். தர்ப்பைப் புல்லைப் படுக்கையாகக் கொண்டு சயனித்திருக்கிறார். ஸ்ரீராமன், ஏழு நாட்கள் விரதம் இருந்து கடலரசனை வேண்டி தர்ப்பைப் புல்லில் படுத்திருந்த இடம் இது.
மிடுக்கான கோலத்துடன் திகழும் சயன ராமரின் நாபிக் கமலத்தில் இருந்து மேல் நோக்கிச் செல்கிறது, மூன்று தண்டுகள் கொண்ட கல் தாமரை. நடுவில், பிரம்மதேவன். மற்ற இரண்டில் தலையணியுடன் கூடிய சந்திர- சூரியர்கள், மது- கைடபர்கள், கௌஸ்துபம், லட்சுமிதேவி மற்றும் தேவர்களும் காட்சி தருகின்றனர் கீழே பெருமாளின் திருமுடிக்குப் பக்கத்தில் கருடனும் மார்க்கண்டனும் சிலை வடிவில் அமர்ந்துள்ளனர்.
திருவடிக்கு அருகிலேயே சுகன், சாரணன் மற்றும் பிருகு முனிவர் ஆகியோர் அமர்ந்துள் ளனர். அதே திருவடியின் பக்கத்தில் சற்று ஒதுங்கி, பெருமாளின் திருவடி அழகை ரசிக்கும் நிலையில் வீர ஹனுமான்! இங்குள்ள உற்ஸவர்- ஸ்ரீகோதண்டராமர். சீதை, லட்சு மணன் மற்றும் விநய ஆஞ்சநேயருடன் தரிசிக்கிறோம்.
தர்ப்பசயன ராமர் சந்நிதிக்கு முன்பக்கம் பலிபீடம், கொடிமரத்துடன் அமைந்துள்ளது ஸ்ரீபட்டாபிராமர் சந்நிதி. அர்த்த மண்டபத் தில் துவாரபாலகர்கள் காவல் இருக்க... கருவறையில் கோலாகலமாகக் காட்சி தருகிறார் பட்டாபிராமர். நின்ற திருக்கோலம். அருகே சீதாதேவியும், லட்சுமணனும்! ஸ்ரீராமன், அயோத்தி திரும்பும்போது இங்கே எழுந்தருளிய திருக்கோலம் இது.
தர்ப்பசயன ராமர் சந்நிதிக்கு வடபுறம் வெளி மண்டபத்தில் சந்தானகோபாலன் எழுந்தருளி உள்ளார். எட்டு யானைகள், எட்டு நாகங்களுடன், ஆமையை ஆசனமாகக் கொண்ட ஆதிசேஷன் மீது ஸ்ரீகண்ணபிரான் பெரிய மூலவர் வடிவாக அருள் பாலிக்கிறார்.
பித்ருக்களின் மகிழ்ச்சிக்காகவும், புத்திர பாக்கியத்துக்காகவும் இந்த சந்தானகோபாலன் விக்கிரகத்தை தசரதன் பிரதிஷ்டை செய்தார் என்கிறது தல புராணம். இந்த மூலவரை வேண்டிக் கொண்டு நாகப் பிரதிஷ்டை செய்தால், புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல புத்திரர்கள் பிறப்பார் களாம். குழந்தை பாக்கியம் வேண்டுவோர்களுக்கு இங்கே அர்ச்சிக்கப்பட்ட குங்குமத்தை பிரசாதமாக பெண்களுக்குக் கொடுத்து, தினமும் இட்டுக் கொள்ளச் சொல்கிறார்கள்.
2-ஆம் பிராகாரத்தில், ஆழ்வார்கள், பிரதான தாயாரான ஸ்ரீபத்மாஸனித் தாயார், ஆண்டாள் நாச்சியார் ஆகியோருக்கு சந்நிதிகள் இருக்கின்றன. பத்மாஸனித் தாயார், சிறந்த வரப்ரசாதி. திருமணப் பேறுக்கும், குழந்தை பாக்கியத்துக்கும் தாயாரிடம் பிரார்த்தித்துச் செல்கிறார்கள். ஒவ்வொரு வெள்ளியன்றும் ஊஞ்சல் உற்ஸவம் நடைபெறுமாம்.
3-ஆம் பிராகாரத்தில் உற்ஸவாதி மண்டபங்களும், சிற்பத் தூண்களும், தேவஸ்தான அலுவலகமும் அமைந் துள்ளன. ஆதி ஜகந்நாத பெருமாளுக்குப் பங்குனியில் பிரம்மோற்ஸவமும், ஸ்ரீபட்டாபிராமருக்கு சித்திரையில் பிரம்மோற்ஸவமும் பிரமாண்டமாக நடைபெறும். தவிர, மற்ற உற்ஸவங்களும் நிறைவாகவே நடந்து வருகின்றன. ஆலயத்துக்கு ஏராளமான தீர்த்தங்கள் பெருமை சேர்க்கின்றன. அவற்றுள் பிரதானமானவை: சக்ர தீர்த்தம், ஹம்ஸ தீர்த்தம், வருண தீர்த்தம், ஆதிசேது போன்றவை.
ராமாயண காவியத்தில் நிகழ்ந்த அற்புத நிகழ்வுகளை, நம் கண்களின் முன்னே கதையாகச் சொல்லும் சாட்சியாக இன்றும் விளங்கி அருள் பாலித்து வரும் திருப்புல்லாணி சேத்திரத்தைத் தரிசித்து, ஸ்ரீராமபிரானின் ஆசிகளைப் பெறுவோம்!
படங்கள்: சு. குமரேசன், எம்.என். ஸ்ரீநிவாசன்
தகவல் பலகை
தலம் : திருப்புல்லாணி, தர்ப்பசயனம்
மூலவர் : மூன்று மூலவர்கள்: ஆதி ஜகந்நாத பெருமாள், தெய்வச் சிலையார் (கிழக்கு நோக்கிய அமர்ந்த திருக்கோலம்); தர்ப்ப சயன ராமர் (தர்ப்பைப் புல் மீது சயனித்து கிழக்கு நோக்கிய திருக்கோலம்); ஸ்ரீபட்டாபிராமன். கல்யாணவல்லி, பத்மாஸனி என்று இரு தாயார்கள்.
எங்கே இருக்கிறது?: ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து தெற்குத் திசையில் சுமார் 9 கி.மீ. தொலைவு. ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 65 கி.மீ. தொலைவு.
எப்படிப் போவது?: ராமநாதபுரத்தில் இருந்து நகரப் பேருந்து வசதி அடிக்கடி உண்டு. தென் தமிழகத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் ராமநாதபுரத்தை அடைவது சுலபம்.
தொடர்புக்கு:
ஆலய அலுவலகம்: 04567-254527
ஜெயராம பட்டர்
தெற்குரத வீதி
திருப்புல்லாணி- 623 532
ராமநாதபுரம் மாவட்டம்
மொபைல்: 94439 20136
Comments
Post a Comment