தமிழகத்தில் ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் சில விசேஷ சக்திகள் உள்ளன. ராஜகோபுரத்திலிருந்து கருவறைவரை நாம் காலடி எடுத்துவைக்கும் ஒவ்வோர் இடத்திலும் திருக்கோயில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சக்திகள் நம் உடலையும், உள்ளத்தையும் ஆகர்ஷித்து, பல நல்ல மாறுதல்களை ஏற்படுத்துகின்றன. இதேபோன்று கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மூலவர் மற்றும் பஞ்சலோகத்தில் செய்து மந்திரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள உற்சவமூர்த்திகளுக்கும் அபரிமிதமான மந்திர சக்திகள் உள்ளன.
ஆதலால், மூலவர் சிலை மற்றும் உற்சவ மூர்த்திகள் ஆகியவை சாதாரண சிலைகளோ அல்லது விக்கிரகங்களோ அல்ல; அவை அனைத்தும் சக்தி பொருந்தியவை ஆகும். நாம் எந்த அளவிற்கு இந்தப் பெருமான்களிடம் பக்தியும், பிரேமையும் வைத்திருக்கிறோமோ அந்த அளவிற்கு எம்பெருமானின் அனுக்ரஹமும் நமக்குக் கிட் டுகிறது.
ஸ்ரீ வேதநாராயணபுரம்!
தமிழகத்தின் மிக மிகப் புராதனமானதும், வைணவ மகாபுருஷரான ஸ்ரீ மணவாள மாமுனிகளின் காலத்திற்கும் முந்தைய திருக்கோயில், திருச்சி மாவட்டத்திலுள்ள தொட்டி யம் வட்டத்தில் திகழும் ஸ்ரீவேதநாராயணபுரம் என்றும், திருநாராயணபுரம் என்றும் பூஜிக்கப்படும் திவ்ய க்ஷேத்திரம், பக்தர்கள் எத்தகைய பாசத்தை எம்பெருமான் மீது வைத்திருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக விளங்கி வருகிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ரங்கநாதருக்கு அரையர் சேவை செய்து வந்த பரமபக்தர் ஒருவர் இருந்து வந்தார். வைணவ தி ருத்தலங்களில் நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களைப் பாடி, அவற்றிற்கேற்ப அபிநயம் பிடித்து பகவான் ஸ்ரீமந் நாராயணனின் திருக்கல்யாண குண விசேஷங்களையும், அவதார லீலைகளையும் நடித்துக் காட்டுவது, ஒருகாலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றிருந்த அரையர் சேவை ஆகும். இது கண்டவர், கேட்பவர் ஆகியோரின் உள்ளங்களை மெய்சிலிர்க்க வைக்கும் தெய்வீக காட்சியாகும்.
ஸ்ரீ வைகுண்டத்தில் பகவானின் முன்பு அவனது பெருமைகளைப் பாடி, ஆடி துதித்துப் பேரானந்தம் அடைபவர்கள் நித்யசூரிகள் எனப்படுவர். அந்த நித்யசூரிகளைப் போன்றே இந்த அரையர்கள் நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களை இசைத்து, பெருமானின் பெருமைகளை அனுபவிக்கும் பாக்கியத்தை மக்களுக்குக் கொடுப்பது வழக்கம். அதிலும் முக்கியமாக, வைணவ க்ஷேத்திரங்களில் மார்கழி மாதத்தில் கொண்டாடப்படும் பகல் பத்து, இராபத்து திருநாள் தினங்களில், ஸ்ரீ வைகுண்டத்தைப் போலவே திருமாமணி மண்டபத்தில் சர்வ அலங்கார பூஷிதனாக, ஸ்ரீதேவி, பூதேவி சமேதனாக, பகவானை எழுந்தருளச் செய்து அவன் முன்பு இந்த அரையர் சேவை நடைபெற்று வந்தது.
அன்னியர்களின் படையெடுப்பின்போது அடியோடு நிலைகுலைந்து போன தமிழகம் மீண்டும் சமாளித்து, ஒருவாறு தலையெடுத்தபோது வைணவ திருக்கோயில்களில் நடைபெற்றுவந்த இந்த அரையர் சேவை எனும் அற்புத நிகழ்ச்சி நின்று போயிற்று. தற்போது திருவரங்கத்து இன்னமுதன் திருக்கோயிலிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருக்கோயிலிலும், ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் திருக்கோயிலிலும் மட் டும்தான் அரையர் சேவை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அரையர் சேவை மூலம் எம்பெருமானின் திருக்கல்யாண குணப் பெருமைகளையும், அவரது அவதார லீலை களின் ஆனந்தத்தையும் கேட்டுப் பருகித் திளைக்கும் அனுபவம் நமக்கு இப்போது கிடைக்காமலே போய்விட்டது.
திருநறையூர் அரையரின் உயிர் தியாகம்!
108 வைணவ திருத்தலங்களில் பிரசித்திபெற்றது திருநறையூர் எனப் பூஜிக்கப்படும் நாச்சியார் கோவில். இங்குள்ள கல்கருடனும், ஆண்டுதோறும் நடைபெறும் கல்கருட சேவையும் உலகப் பிரசித்திபெற்றவை. இத்திருச்சந்நிதியின் உள்ளேயே நீண்டநாட்கள் வாழ்ந்து வந்த கருட பட்சிகளின் அடக்கம் திருக்கோயிலின் நந்தவனத்தில் உள்ளது.
இத்தகைய பெருமைவாய்ந்த திருநறையூரில் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனிடம் அளவற்ற பக்தி பூண்ட அரையர் ஒருவர் இருந்து வந்தார். அவருக்குத் திருநாராயண புரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வேதநாராயணப் பெருமானிடம் அளவற்ற பக்தி இருந்தது. இம்மகான் வைணவத்தின் திலகமாகிய அவதார புருஷர் ஸ்ரீ மணவாள மாமுனிகளின் காலத்திற்குச் சற்று முந்தையவர். சமயம் கிடைத்தபோதெல்லாம் தன் மனைவியுடனும், தனது ஆறு குழந்தைகளுடனும் திருநாராயணபுரம் சென்று ஸ்ரீவேத நாராயணப் பெருமானைத் தரிசித்துவிட்டு வருவது வழக்கம்.
பொருள் வசதியின்மையினால் அக்காலத்தில் ஸ்ரீ வேதநாராயணப் பெருமானின் திருக்கோயிலும், கருவறையும் பனை ஓலைகளினால் வேயப்பட்டிருந்தன.
பிள்ளை திருநறையூர் அரையர் தனது மனைவி மற்றும் ஆறு குமாரர்களுடன் ஒருநாள் இந்த வேதநாராயணப் பெருமானைத் தரிசிப்பதற்காக வந்திருந்தபோது பலமான காற்று வீசியது. அப்போது திருக்கோயிலில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த தீபம் ஒன்று தற்செயலாக பனை ஓலைகளில் பட்டு, திருக்கோயில் தீப்பற்றிக்கொண்டது.
இதனைக் கண்ட திருநறையூர் அரையர் உள்ளம் பதறிப்போனார். என்ன செய்வதென்று திகைத்து நின்ற விநாடிகளில் பனை ஓலைகள் மளமளவெனத் தீப்பிடித்துப் பரவியது. ‘‘ஐயோ... எம்பெருமான் தீயில் அகப்பட்டுக்கொண்டு விட்டானே...’’ என்று கதறிய திருநறையூர் அரையர், தன் மனைவி, குழந்தைகளுடன் ஓடிச்சென்று, ஸ்ரீதேவி, பூதேவி சமேதனான எம்பெருமானின் விக்கிரகங்கள்மீது அப்படியே படுத்துக்கொண்டு விட்டனர்.
அந்த எட்டுப் பக்தர்களும் தீயில் கருகி உயிரிழந்தனர். ஆனால், அவர்கள் செய்த பிராணத் தியாகத்தினால் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் எம்பெருமானின் விக்கிரகத் திருமேனிகள் எவ்வித பாதிப்புமின்றிக் காப்பாற்றப்பட்டு விட்டன.
அன்னியர்களின் படையெடுப்பின்போது திருவரங்கத்து எம்பெருமான் ஸ்ரீ அழகிய மணவாளனின் (ஸ்ரீரங்கநாதர்) விக்கிரகத் திருமேனியைத் தன் உயிர் கொடுத்து காப் பாற்றிய வைணவ அவதார புருஷரான ஸ்ரீ பிள்ளை உலகாசிரியரின் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வசனபூஷணம் என்ற தெய்வீக நூலில் (84-ம் சூர்ணிகையில்) ‘‘உடம்பை வெறு த்தானோ பிள்ளை திருநறையூர் அரையனைப் போலவே...’’ என்று போற்றிப் புகழப்பட்டுள்ளது.
இத்தகைய புராதனப் பெருமை வாய்ந்தது திருநாராயணபுரம் எனப் பூஜிக்கப்படும்
ஸ்ரீ வேதநாராயணபுரம் தாயாரின் திருநாமம்
ஸ்ரீ வேதநாயகி. நான்கு வேதங்களையும்
தனது தலையணையாக வைத்துக்கொண்டு சயனித்திருப்பதால் இப்பெருமானுக்கு
ஸ்ரீ வேதநாராயணன் என்ற காரணப் பெயர் ஏற்பட்டது. தாயார், பெருமான் ஆகியோரின் திவ்ய அழகை வர்ணிப்பதற்குப் புலவர்களே ஆனாலும் தகுந்த வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்க வேண்டியிருக்கும். அழகென்றால் அப்படியோர் அழகு! எம்பெருமானைச் சேவிக்கும்போது நம்மையும் அறியாமல் நமது மனம் பல நூற்றாண்டு களுக்கு முன்பு பிள்ளை திருநறையூர் அரையர் செய்த பிராணத் தியாகத்தினால் அல்லவா இன்று நமக்கு அழகிற்கு அழகு செய்யும் இப்பெருமானின் திவ்ய விக்கிரகத் திருமேனி கிடைத்துள்ளது என்ற சிந்தனையும், கண்களில் கண்ணீரும் பெருகுகிறது.
திருக்கோயில்களில் எழுந்தருளியிருப்பவற்றைச் சாதாரண உலோக விக்கிரகங்களாக நினைக்காமல், அவற்றை எம்பெருமானாகவே நினைத்து தங்கள் பக்தியையும், பிரே மையையும் வைத்து உயிரினும் மேலாகக் கருதிய நம் ஆன்றோர்களையும், சான்றோர்களையும் நன்றியுடன் நினைக்கிறோம்.
புனித பூமி!
அகண்ட காவிரியாக பொன்னி பெருக்கெடுத்தோடும் வேதநாராயணபுரத்தில் ஒரு காலத்தில் 24 மணி நேரமும் வேத கோஷம் ஒலித்துக்கொண்டிருந்தது. ஊரைச் சுற்றிலும் சிறிது தூரத்தில், நான்கு திக்குகளிலும் வேத பாடசாலைகள் நிரம்பியிருக்கின்றன. காஞ்சி காமகோடி பீடம் பூஜ்யஸ்ரீ பரமாச்சார்யார் எனப் பூஜிக்கப்படும்
ஸ்ரீ மகா பெரியவாள் வேதம் பயின்ற மகேந்திரமங்கலம் இவ்வூருக்கு அருகிலுள்ளது. கிழக்கே முசிறி மற்றும் குளித்தலை. எதிர்க்கரையில் மகாதானபுரம் என்று இந்த பூமியே புண்ணிய பூமியாகத் திகழ்கிறது.
தற்கால சூழ்நிலைகளினால் வேத தர்மத்தை எப்பாடுபட்டாவது காப்பாற்றியே ஆகவேண்டுமென்று, எவ்வித கைமாறையும் எதிர்பாராமல் பல பெரியோர்கள் இப்பகுதியில் பாடுபட்டு வருகின்றனர். இன்று தமிழகத்தில் மழை பெய்கிறது என்றால் அதற்கு இம்மகாபுருஷர்கள் செய்துவரும் வேத பாராயணங்களே காரணமாகும்.
திருக்கோயில்!
கருவறையில் எம்பெருமான் ஸ்ரீ வேத நாராயணன் ஆதிசேஷன் மீது சயன திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறான். பிரம்மாவிற்கு வேத உபதேசம் செய்யும் ஆச்சார்ய னாக இருப்பதால் பிரம்மாவின் தேவியான சரஸ்வதி தேவியே இத்திருத்தலத்தில் பீடமாகத் தரிசனமளிக்கிறாள். இந்த சரஸ்வதி பீடம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஜாதகத்தில் வித்யா ஸ்தானம் (கல்வியைக் குறிக்கும் ராசி), வித்யாகாரகரான புதன் பலவீனமாகவோ அல்லது பாவக்கிரகங்களினால் பீடிக்கப்பட்டு, அதனால் பலவீனமடைந்திருந்தாலோ சரஸ்வதி பீடத்தைத் தரிசிப்பதால் கல்வி தோஷம் நீங்கும்.
கம்பத்தடி ஸ்ரீ ஆஞ்சநேயர்!
இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள கம்பத்தடி ஸ்ரீ ஆஞ்சநேயர் மகத்தான சக்திவாய்ந்த வரப்பிரசாதியாவார். ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவத்தின்போது எத்தனை மணிக்குத் தேர் வடம் பிடிக்கவேண்டும் என்பதற்கும், இத்தனை மணிக்குத் தேர் நிலைக்கு வந்து சேரும் என்பதற்கும் இந்த ஆஞ்சநேய ஸ்வாமிதான் உத்தரவு கொடுப்பார். அவரது உத்தரவின்படியேதான் தேர் புறப்படுவதும், நிலைவந்து சேர்வதும் நடைபெறுகின்றன.
ஓர் அதிசய நிகழ்ச்சி!
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கம்பத்தடி ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது. அப்போது பக்தர் ஒருவர்
ஸ்ரீ அனுமனின் படமொன்றை அர்ச்சகரிடம் கொடுத்து, அந்தப் படத்தை அர்ச்சனையில் வைத்து ஒரு லட்சம் அர்ச்சனை முடிந்தபின்பு தன்னிடம் திருப்பித் தரும்படி கொடுத்துள்ளார். அந்தப் படத்தை ஜாக்கிரதையாக வைத்து கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அர்ச்சகர் அதனை முதல்நாள் அர்ச்சனை முடிந்தபிறகு தனது வீட் டிற்கு எடுத்துச் சென்றுவிட்டார். அதன்பிறகு அந்த அர்ச்சகர் அந்தப் படத்தை மறந்துவிட்டார்.
லட்சார்ச்சனை முடிந்தபிறகு, படத்தைக் கொடுத்த பக்தர் அதனைக் கேட்க, அப்போதுதான் அர்ச்சகருக்கு அது நினைவிற்கு வந்தது. வீட்டிற்கு ஓடிச்சென்று அந்தப் பட த்தை எடுத்து வந்து பத்து நாட்கள் தான் அதனை லட்சார்ச்சனையில் வைத்திருந்ததாகப் பொய் சொல்லி உரியவரிடம் கொடுத்துவிட்டார். மறுநாள் அந்த பக்தரும், அர்ச்சகரும் இந்த ஸ்ரீ ஆஞ்சநேயரிடம் வந்தபோது இருவரது வஸ்திரங்களும் (வேட்டிகள்) நார் நாராகக் கிழிந்திருந்தன. ‘கட்டும்போது நன்றாகத்தானே இருந்தது? அதுவும் எவ்விதம் இருவர் வேட்டிகளுமே இந்த அளவிற்குக் கிழிந்தன...’ எனத் தெரியாமல் வியந்தனர். அன்றிரவு அர்ச்சகரின் கனவில் தோன்றிய ஸ்ரீ ஆஞ்சநேயர், படத்தை லட்சார்ச்சனையில் வைத்திருந்ததாகப் பொய் சொல்லியதற்காக அர்ச்சகர் மீது மிகுந்த கோபத்துடன் இருப்பதுபோல் தோன்றியது. தன் தவறை உணர்ந்த அந்த அர்ச்சகர் ஓடோடி வந்து, தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரினார். இதுபோன்ற பல நிகழ்ச்சிகள் இந்த ஸ்ரீ கம்பத்தடி ஆஞ்சநேயர் விஷயத்தில் நடந்துள்ளன.
திருமணத்தடைகள், குழந்தைப் பாக்கியமின்மை, கணவர்-மனைவியிடையே ஒற்றுமையின்மை, கடன் தொல்லைகள் போன்ற வேதனைகளை வேரறுக்கின்றன ஸ்ரீ வேதநாராயணனின் தரிசனமும், ஸ்ரீவேதநாயகித் தாயாரின் கருணையும், ஸ்ரீ கம்பத்தடி ஆஞ்சநேயரின் அனுக்கிரஹமும். பல பிறவிகளில் புண்ணியம் செய்திருந்தால் மட் டுமே இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்தலத்தைத் தரிசிக்கும் பாக்கியம் கிட்டும்!
இத்திருக்கோயில் பற்றிய மேலும் விவரங்களுக்குத் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் : 9976611896 / 04326 - 254338.
குறிப்பு : திருச்சியை அடுத்த தொட்டியத்திலிருந்து இத்திருத்தலம் செல்வதற்கு பஸ், கார், ஆட்டோ வசதிகள் உள்ளன.
Comments
Post a Comment