கி.பி. எட்டாம் நூற்றாண்டின் அரிய குடைவரைக் கோயில்களையும் கல்வெட்டுகளையும் கொண்டது நாமக்கல். அத்தனை கல்வெட்டுகளும் `கிரந்த'லிபியில் உள்ளன. சோழர்காலக் கட்டடக் கலையின் சின்னமாக, மலைமீதும் ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது. கீழே குடைவரைக் கோயில்கள் இரண்டு உள்ளன. கார்க்கோடகன் வழிபட்டதாக தலபுராணம் வர்ணிக்கிறது.
நாமக்கல்
``திருவாரைக்கல் திருப்பதியில் திருமலைமேல் அருளாள விண்ணகரம்'' என்றுதான் பழம்பெரும் கல்வெட்டுகள் கூறுகின்றன. `ஆரைக்கல்' என்று முற்காலத்தில் வழங்கப்பட்டிருக்கலாம். `ஆர்' என்றால் ஆத்திமரத்தைக் குறிக்கும். ஆத்திமரங்கள் நிறைந்த பகுதியின் நடுவில் அமைந்த பாறையைக் குறிப்பிடும் வகையில், `ஆரைக்கல்' என்று, பழந்தமிழர் இத்தலத்தை அழைத்திருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் வாதம்.
`ஏழூர் நாட்டிற்கு உட்பட்ட பகுதியாக ஆரைக்கல் இருந்து வந்துள்ளது. நாமக்கல் நாளடைவில் வளம் பெற்று, `ஏழூர்' பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது. வடமேற்கில் 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவார வைப்புத் தலம் `ஏழூர்' இதனை உறுதிப்படுத்துகிறது.
வாதாபி, மாமல்லபுரம் ஆகியவற்றிற்கு இணையான குடைவரைக் கோயில்கள் நாமக்கல்லுக்குப் பெருமை சேர்ப்பவை ஆகும். மலையின் கிழக்கிலும் மேற்கிலும், இரண்டு கோயில்கள் உள்ளன. சோழர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் கோயில் தான் கோட்டையில் உள்ள `விண்ணகரான எதிரிலிப் பெருமாள் கோயில் ஆகும். அவர்தான் வரதராஜப் பெருமாள். 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
முதலில் நாம் குடைவரைக் கோயில்களுக்குச் செல்வோமே! நகரின் பிரதான கடைத்தெருவிலேயே, செப்புத்தகடிட்ட கொடிமரம், நமக்கு கோயில் இருக்குமிடத்தை அடையாளம் காட்டுகிறது. படிகள் மேலேறி, பள்ளிகொண்ட பெருமாளை சேவிக்க வேண்டும். படிகள் அதிகம் இல்லாததால் களைப்பு தோன்றுவதில்லை.
தெற்கில் தலைவைத்தபடி, வடக்கே திருவடிகளை நீட்டியபடி ஆதிசேடன் மீது சயனித்துள்ளார் ரங்கநாதர். முன்மண்டபத்தோடு கூடிய குடைவரைக் கோயில். மகேந்திர வர்ம பல்லவன் கட்டிய கோயில்களில் இதுவும் ஒன்று. கிழக்குநோக்கி அமைந்தது.
ஐந்தலை அரவின் மீது அரிதுயில்கொள்ளும் அண்ணலை சாயாகிருஹத்தில் ஆனந்தமாக சேவிக்கிறோம். அவரைச் சுற்றித்தான் எத்தனை எத்தனை தெய்வங்கள். அத்தனையும் கண்களுக்கு விருந்து, பக்தி உணர்வுக்குப் பேரானந்தத்தைத்தருபவை ஆகும். அவர்கள் யார் யார் என்பதையும் பட்டியலிட்டு, கல்வெட்டிலேயே காணலாம்.
சங்கரநாராயணரோடு, உலகளந்த பெருமாளையும், சிற்ப வடிவில் சேவிக்கிறோம். ரங்கநாயகித் தாயார் சந்நதி, பிற்காலத்தில் உருவானது. ``ஆதியேந்திர விட்ணு கிருகம்'' என்று, கல்வெட்டுகள் குறிப்பிடுவது ரங்கநாதப் பெருமாள் கோயிலைத்தான்.
நாமக்கல் நரசிம்மர்
நாமக்கல் மலையின் மேற்குப் பகுதியில் அமைந்ததே நரசிம்மர் கோயிலும், அவரை எதிர்நோக்கியபடி கரங்கூப்பி நிற்கும் பதினெட்டு அடி உயர ஆஞ்சநேயர் கோயிலும் ஆகும்.
`நாமக்கல்' உருவானதன் பின்னணி, ஆஞ்சநேயருடன் தொடர்பு கொண்டதாகும்.
ராம, ராவணப் போரின்போது, இந்திரஜித் ஏவிய பிரம்மாஸ்திரம் அனைவரையும் வீழ்த்திவிட, அருமருந்தான சஞ்சீவினியைத் தேடி வாயு புத்திரன் அனுமான், காடுமலைகள் பல கடந்து வடபுலம் செல்கிறான். சஞ்சீவினியைக் கண்டறிந்ததும் அவற்றைப் பறிப்பதில் காலதாமதமாகும் என்பதால், அந்த மலையையே பெயர்த்தெடுத்து, வானில் பறந்து வருகிறான். சஞ்சீவி மலையின் குளிர்காற்று தென்புலமெங்கும் வீசியதோடு, மலையின் துகள்கள், அங்குமிங்குமாக சிதறிக் கீழே விழுந்தன. அதில் ஒன்றுதான் நாமக்கல் என்று கூறுவோரும் உண்டு.
சாளக்கிராமமே நாமக்கல்
இரணியனை அழித்து பிரகலாதனுக்கு முடிசூட்டிய நரசிம்மர், பிரகலாதனின் வேண்டுகோளை ஏற்று, அங்கேயே சாளக்கிராம மலையாக நிலைகொண்டார். அனுமன் சஞ்சீவி மலையைத் திரும்ப அதனிடத்தில் வைத்துவிட்டுத் திரும்புகையில், கண்டகி நதியோரம், சாளக்கிராம உருவில் இந்த மலையைக் கண்டு வியந்தான். மிகவும் அரிதான சாளக்கிராமமாகக் கிடைத்த திருஉருவை எடுத்து வருகையில், வழியில் `கமலதீர்த்தம்' அவனது கருத்தைக் கவர்ந்தது. அங்கு சென்று நீராடி வர எண்ணி கீழே இறங்கிட, அங்கே திருமகள் தவக்கோலத்தில் அமர்ந்திருப்பதையும் கண்டு வியந்தான். நீராடிவிட்டு வந்து பெற்றுக்கொள்வதாகக் கூறிவிட்டு, நீராடச் சென்ற அனுமன், குறித்த நேரத்தில் வரவில்லை. திருமகள், காத்திருக்காமல் சாளக்கிராமத்தைத் தரையிலேயே வைக்க, அது அங்கேயே நிலைத்துவிட்டதாம்.
வாலினால் சாளக்கிராமத்தைக் கட்டியிழுக்க முயன்ற அனுமன் தோல்வி கண்டான். சாளக்கிராமத்தின் உருவம் பெரிதாகிக் கொண்டே சென்று, ஒரு மலையாகவே மாறியது. நரசிங்கப் பெருமான் அங்கே தோன்றி, இனி, அந்த மலையிலேயே லட்சுமி நரசிம்மராகதான் சேவை சாதிக்கப் போவதாகக் கூறி, பக்தர்களுக்கு வரம் தரும் வள்ளலாக, மங்களம் அருளும் மாருதியாக, தன் எதிரே நிலை கொள்ளுமாறு அனுமனுக்கு உத்தரவிட்டார்.
இந்த மலையைக் கார்க்கோடகன் வழிபட்டதால் `நாகவனம்' என்றும் பெயர் பெற்றது. மலைமீது அரவம் ஊர்ந்து சென்ற பாதையே, கரிய நிறங் கொண்ட வளைகோடுகள் என்றும் கூறுவர்.
குடைவரை நரசிம்மர்
``அளந்து இட்ட தூணை அவன் தட்ட, ஆங்கே வளர்ந்திட்டு, வாள் உகிர்ச்சிங்கமாய் உளந்தொட்டு, இரணியன் ஒண் மார்பு அகலம் பிளந்திட்ட பெருமாள்'' அல்லவா அந்த நரசிங்கம்!
இன்றும் இரணியனின் குருதியால் நனைந்த அவரது கரங்கள் செந்நிறமாகவே காணும் அற்புதத்தையும் நாம் காண்கிறோம். அந்தக் கூரிய நகங்கள்தான், எத்தனை ஆழமாகச் சென்று இரணியனின் உடலைக் கிழித்துள்ளன? சூரிய, சந்திரர்கள், சனகர், சனாதனர், பிரம்மா ஆகியோர் உடன் இருப்பதையும் காண்கிறோம். நரசிம்மரின் திருமார்பில் மகாலட்சுமி வீற்றிருக்கிறாள். அந்த வீர நரசிம்மன், இங்கே உக்ர நரசிம்மராக காட்சி தருகிறார்.
குடவரை புடைப்புச் சிற்பமாக அமைந்ததால், மூலவருக்குத் திருமஞ்சனம் கிடையாது. உற்சவர், ஸ்ரீதேவி பூதேவி சமேதராகவே லட்சுமி நரசிம்மராக சேவை சாதிக்க எழுந்தருளியுள்ளார்.
கிழக்கு நோக்கியபடி தனிச்சன்னதி கொண்டுள்ளாள் நாமகிரித் தாயார். இவளை வணங்குபவர் கணிதத்தில் தேர்ச்சி பெறலாமாம். கணிதமேதை ராமானுஜம், நாமகிரித் தாயாரின் அருள் பெற்றவராம்! மலையடிவாரத்தில் நரசிம்ம புஷ்கரணி, சக்ரதீர்த்தம் உள்ளன.
குடவரைக் கோயிலின் பக்கச் சுவர்களில், மணியான ஐந்து சிற்பங்கள் உள்ளன. அந்தத் தெய்வத் திருஉருவங்களையும் வணங்குவோம்.
18அடி உயர ஆஞ்சநேயர்
பக்தர்களின் விருப்பங்களை வாரிவழங்கிடும் வள்ளலாக வாயுபுத்திரன், அஞ்சலி ஹஸ்தராக, நின்றகோலத்தில் எழுந்தருளியுள்ளார். நரசிம்மப்பெருமாள் கோயிலின் எதிரே, தனிச்சன்னதி கொண்டுள்ளார்.
பதினெட்டு அடி உயரம், கம்பீரமான தோற்றம். அதே நேரத்தில் பெருமாளை நோக்கியபடி பவ்யமாக, இருகரங்களையும் கூப்பியபடி நின்றகோலம். கரங்களில் ஜபமாலை, அனுமன் ராமநாமத்தை ஜபித்தபடி நிற்பதைக் காட்டுகிறது. இடுப்பிலே கத்தி, வீர ஆஞ்சநேயராக காட்சி தருவதைக் குறிப்பிடுகிறது.
சந்தனக் காப்பு, வெண்ணெய்க் காப்பு, வடைமாலை, புஷ்பங்கி என்றெல்லாம் வகை வகையான பிரார்த்தனைகள். எந்த நாளும் இங்கே திருநாள் தான்! பங்குனி மாதத்தில் பத்துநாள் திருவிழா. உத்திரத்தன்று, நாமகிரித் தாயாருடன் எழுந்தருளும் காட்சி அற்புதம்! தேர்த் திருவிழா அதனைத் தொடரும்.
ஏழூர்
கொங்கு மண்டலத்தில், கட்டியண்ணன் என்ற மன்னன் ஆட்சி செய்தபோது, ஏழு ஊர்களுக்குத் தலைமையாக இருந்தது ஏழூர் என்ற தேவார வைப்புத்தலம்.
`அகரம் ஏளூர்' என்றும் அழைக்கப்படும் இத்திருத்தலம் நாமக்கல் - சேலம் சாலையில், புதன் சந்தை என்ற இடத்தில் பிரியும் பாதையில், 15 கி.மீ. தொலைவில் உள்ளது. திருநாவுக்கரசரின் திருத்தாண்டகத்தில், இத்தலம் இடம் பெற்றுள்ளது. `எழுமூர், ஏழூர், தோழுர்' என்று வரிசைப்படுத்தப்பட்ட தலம். கோயிலின் முன்னே கல்லாலான துவஜஸ்தம்பம் உள்ளது. மூலவர் கைலாசநாதர் சுயம்புமூர்த்தி. ஏக நாயகராக அருள்பாலிக்கிறார் மூலவர் திருமேனி மிகப் பெரியது ஆகும்.
வள்ளிபுரம்
நாமக்கல்லுக்கு மேற்கில், பரமத்தி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது வள்ளிபுரம். இங்கு கொலுவிருக்கும் அன்னை வள்ளியம்மை என்றே பெயர் கொண்டுள்ளாள். மூலவர் சுயம்புமூர்த்தியாக, தான்தோன்றீசுவரர் என்ற திருநாமம் கொண்டுள்ளார்.
தோழூர்
நாமக்கல் - மோகனூர் சாலையில், நாமக்கல்லுக்கு தெற்கே 9 கி.மீ. தொலைவில் உள்ளது. அணியாபுரம் என்ற ஊருக்கு அருகில் அமைந்தது.
பழைமையான சிவாலயம். கருங்கல் கட்டுமானம். சோளீசுவரர் - சுயம்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். அன்னை விசாலாட்சி தனி சன்னதி கொண்டுள்ளாள். அருகில் பத்ரகாளி அம்மன் கோயில் ஒன்றும் உள்ளது.
மோகனூர்
`கொங்கு குமரித்துறை' எனப்படும் மோகனூருக்கு வில்வவனம், வாழவந்தி நாடு, குமரி கொங்கு என்றும் வேறு பெயர்களும் உண்டு. காவிரி ஆற்றின் வடகரையில், ஆற்றோரம் அமைந்துள்ள பெரிய கோயில் இது. அகண்ட காவிரியை, கோயிலின் வாயிலில் நின்றபடி ரசித்திடலாம். மகவனூர் என்று வழங்கப்பட்டதாக கொங்கு மண்டல சதகம் கூறுகிறது. அதற்குக் காரணமும் கூறப்பட்டுள்ளது. மாங்கனி தனக்கு கிடைக்கவில்லை என்று, அம்மையப்பரிடம் சினங்கொண்டு, வெளியேறிய முருகனை அவர்கள் தேடி வந்தபோது, இங்கே செல்வகுமரனைக் கண்டனராம். அதனால் மகனூர் என்று அழைக்கப்பட்டு, பின்பு மோகனூர் ஆயிற்று என்பர். அதற்கேற்ப, ஈசனுக்கு இங்கே குமரீசுவரர் என்றும் பெயர் உண்டு.
மூலவர் சுயம்புலிங்கமாக அசல தீபேசுவரர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார். மேற்கு நோக்கிய சன்னதி. நேர் எதிரில் அகண்ட காவிரி, காவிரிக்கரையில் `நாகதோஷ' நிவர்த்திக்காக பிரதிஷ்டை செய்யப்பட்ட நாகர்கள் ஏராளம். `அசையா விளக்கு' தான் `அசல தீபம்'. எத்தனை காற்றடித்தாலும் கருவறையில் உள்ள தீபம் அசையாமல் இருப்பது விந்தையிலும் விந்தையே.
முன்மண்டபத்தில் கிழக்கு நோக்கியபடி `மதுகர வேணி' என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறாள் அன்னை.
கோஷ்ட தேவதைகள், அறுபத்துமூவர், காளி, நடராஜர் சன்னதிகள் உள்ளன. பஞ்சலிங்கங்கள், கால பைரவரும் உண்டு.
மோகனூர் அருகில் உள்ள சிற்றூர்தான் குமரிப்பாளையம். அங்கு வாழும் மக்களே, மோகனூர் திருத்தலத்தின் கட்டளைதாரர்களாக உள்ளனர். அதற்கும் ஒரு பின்னணி உள்ளது. அங்கே தயிர் விற்றுப் பிழைத்துவந்த தேனாயி என்ற பெண்ணுக்கு மகப்பேறு அளித்ததால், ஈசனுக்கு குமரீசுவரர் என்ற பெயரும், திருத்தலத்துக்கு மகவு - ஊர் - மகவனூர் என்ற பெயரும் நிலைத்ததாகவும் கொங்கு மண்டல சதகம் குறிப்பிடுகிறது. ஒரு திருத்தலத்தின் பெயருக்கு ஒரு பின்னணி வேண்டுமல்லவா?
ஆடிப்பெருக்கு , ஆருத்ரா தரிசனம், கார்த்திகை தீபம் சிறப்பு வழிபாடு நாட்கள். முளைப்பாரியைத் தலையில் தாங்கியபடி, பச்சரிசி, தேங்காய், வெல்லம், பழம் ஆகியவற்றுடன் காவிரி அன்னைக்குப் படைத்து, நீராடி, குமரீசுவரரை வணங்குவது பெரும் திருவிழா ஆகும். அருகிலேயே பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயமும் உள்ளது.
ஓரவந்தூர்
காவிரி ஆற்றின் வடகரையிலேயே, மோகனூரிலிருந்து தென்மேற்கில் 4 கி.மீ. பயணித்து, அழகியதோர் தலத்தை அடைகிறோம். திரிசூல நாதர் இங்கே `வஜ்ரபாணீசுவரர்' என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். அன்னையின் திருநாமம் பாலாம்பிகை.
இடவை
`நஞ்சை இடையாறு' தான் இடவை என்று அழைக்கப்பட்ட திருத்தலம். மோகனூருக்கு வடமேற்கில் பரமத்தி செல்லும் பாதையில், காவிரிக் கரையிலேயே உள்ளது. திருமால் வழிபட்ட மகேசுவரன் இங்கே அருள்பாலிக்கிறார். திருமாலீசுவரர் இவரது திருநாமம்.
வேலூர்
கரூர் மாவட்டத்தையும், நாமக்கல் மாவட்டத்தையும் இணைக்கும் முக்கியமான சந்திப்பு. கரூர் நகரிலிருந்து நகரப் பேருந்துகள் உள்ளன. காவிரியாற்றின் வடகரையிலேயே, அழகிய ராஜகோபுரத்துடன் கூடிய பெரிய கோயில். காசி விசுவநாதர் - விசாலாட்சியுடன் அருள்பாலிக்கிறார். சற்று தொலைவில் போத்தனூர் உள்ளது. போற்றீசுவரர் எழுந்தருளியுள்ள திருத்தலம் அது.
பாண்டமங்கலம்
பாண்டவர் வந்து தங்கி, பாண்டவர் மங்கலமாக பெயர் வந்ததோ என்று தெரியவில்லை. அரசுக் குறிப்புகளில் சர்க்கார் பாண்டமங்கலம் என்று கூறப்பட்டுள்ளது. விசுவநாதர் - விசாலாட்சி திருக்கோயிலும், அழகிய பெருமாள் கோயிலும் உள்ளன.
பாண்டமங்கலத்திற்குத் தெற்கில் நீலகண்டேசுவரர் அருள்பாலிக்கும் `வேங்கரை' திருத்தலம் உள்ளது. சர்ப்பதோஷ பரிகாரத்தலம் இது.
அகர பொம்மபாளையம்
காவிரியாற்றின் கரையோரமாகவே மேற்கில் 4 கி.மீ. பயணித்தால், மகாதேவர் எழுந்தருளியுள்ள அகரபொம்மபாளையம் சென்றடையலாம். நோய் தீர்க்கும் விடதாரியான வைத்தீசுவரருக்கும் அருகிலேயே கோயில் உள்ளது. அப்படியே வடக்கே ஆற்றின் கரையில் சென்று, ஆத்தூர் சொக்கநாதர் - மீனாட்சியை தரிசிப்போம்.
அடுத்து `இளம்பிள்ளை' - இதுவும் ஒரு திருத்தலத்தின் பெயரே. உமாமகேசுவரர் அருள்பாலிக்கும் தலம் இது.
பரமத்தி
கரூர் மாவட்டத்தில் உள்ளது போலவே, நாமக்கல் மாவட்டத்திலும் `பரமத்தி' என்ற திருத்தலம் உள்ளது. ஊரின் பெயர், பரமனுடையதாயிற்று. அதனால் தான் பரமேசுவரர்-பார்வதி சமேதராக எழுந்தருளியுள்ளார்.
Comments
Post a Comment