இந்தக் கோயில் கட்டுரையைப் படிப்பதற்கு முன்... நீங்கள் உங்கள் மனதைக் கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கான காரணங்கள்....
1. இப்படி ஒரு கோயில் நம் ஊரில் இல்லையே என்ற ஏக்கம் உங்களுக்கு நிச்சயம் வரும்.
2. ஓர் ஆலயத்தில் இப்படியெல்லாம்கூட நடக்குமா? என்ற ஆச்சரியம் கட்டாயம் ஏற்படும்.
3. நம் ஊர்க் கோயில்களிலும் இப்படி பக்தர் கூட்டம் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற எண்ணம் உங்களுக்குள் எழும்.
காரணங்களை மேலும் பட்டியல் இடுவதைவிட இதோ நேரடியாக கோயிலுக்கே போய்விடுவோம்.படித்து முடித்ததும் உங்கள் மனமே மற்றதையெல்லாம் உணர்ந்துவிடும்.
‘மகா வல்லப கணபதி ஆலயம்!’ நிச்சயம் இது உங்களுக்குப் பரிச்சயமான பெயராகத்தான் இருக்கும். ஏனென்றால் ஆற்றங்கரை, அரச மரத்தடி என எங்கெங்கும் இருக்கும் பிள்ளையார் வல்லப கணபதி என்ற பெயரில் இருக்கும் கோயில் கண்டிப்பாக ஒரு நூறாவது இருக்கும்! வல்லப கணபதி என்ற பெயர் பிள்ளையாருக்கு வரக்காரணம், ஒரு புராணக்கதை.
மரீசி முனிவரின் மகள் வல்லபை. அவள், கல்யாணம் செய்து கொண்டால் பிள்ளையாரைத்தான் செய்து கொள்வேன் என்று அடம் பிடித்தாள். பிள்ளையாரோ ஏற்கெனவே சித்தி, புத்தி என்று இருவரை திருமணம் செய்து கொண்டாகிவிட்டது. மூன்றாவதாக ஒருத்தி வேண்டாம் என்றார்.
அவ்வளவுதான் வல்லபைக்கு கோபம் பொங்கியது. பிள்ளையாருடன் சண்டைக்கே போகத் தயாராகிவிட்டாள். அவளை அமைதிப்படுத்த மரீசி முனிவர் சொன்னார்... ‘‘கோபப்படாதே... அறுகு அர்ச்சனை செய்து ஆனைமுகனை வழிபடு. நிச்சயம் பலன் கிடைக்கும்!’’ அப்படியே செய்தாள் வல்லபை. எப்படி வரம் தருவது என பிள்ளையார் யோசித்தபோது, ‘‘சித்தி, புத்தியோடு ஞானமும் உனக்கு உரியது விநாயகா! அந்த ஞானத்தின் வடிவமே வல்லபை... அவளையும் ஏற்றிடு...!’’ நாரதர் ஆலோசனை சொன்னார். வல்லபைக்கு வரம் தந்தார் பிள்ளையார். அவளைத் தன் மடிமீது அமர்த்திக்கொண்டு வல்லப விநாயகராக காட்சி தந்தார்.
வல்லபை, மகாலட்சுமியின் அம்சம். லட்சுமி அம்சம் இணைந்தவரே வல்லப கணபதி என்றும் சொல்வர்.
சரி... நாம் இப்போது வந்திருக்கும் கோயிலின் தலவரலாறு என்ன என்பதைப் பார்ப்போம்....
ஒரு முக்கியமான விஷயம்... இப்போது நீங்கள் பாஸ்போர்ட்... விசா... என எதுவுமே இல்லாமல் அமெரிக்காவுக்கு வந்திருக்கிறீர்கள்... ஆமாம். அங்கேதான் நியூயார்க்கில் இருக்கிறது ஸ்ரீ மகா வல்லப கணபதி கோயில்.
1970 வரையில் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்த இந்தியர்கள் வீட்டோடு பஜனைகளும் சத்சங்குகளும் மட்டுமே நடத்தி வந்தனர். ஆனால் கோயில் என்பது இந்திய மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிய சமாச்சாரமாயிற்றே... சும்மா இருப்பார்களா நம்ம மக்கள்! மஹா பெரியவரின் அருளாசியோடு முயற்சிகளைத் தொடங்கினார்கள்.
சி.வி. நரசிம்மன், அழகப்பா அழகப்பன், உமா மைசூர்கர் மற்றும் நூற்றுக்கணக்கான இந்திய மக்களின் உதவியோடு நியூயார்க் மாகாணத்தின் குயின்ஸ் கௌன்டியில் இருக்கும் ஃப்லஷிங்க் என்ற சிறிய ஊரில் கொஞ்சம் இடம் வாங்கி கோயில் கட்டுமானப் பணியும் தொடங்கப்பட்டது. இன்று கணபதி திருக்கோயில் இருக்கும் இடத்தில் முன்னர் என்ன இருந்தது தெரியுமா?
ரஷ்ய மக்கள் வழிபட்ட ஒரு சர்ச். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? சர்ச் இருந்த இடத்தை விலைக்கு வாங்கிக் கட்டப்பட்டதே இந்த நியூயார்க் பிள்ளையார் கோயில்.
சுமார் 5 - 6 வருடங்கள் பக்தர்களின் கடும் முயற்சியோடு படிப்படியாக எழும்பிய இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் 1977 ஜூலை 4இல் நடந்தது.
ஸ்ரீ ல ஸ்ரீபதின் மலை ஸ்வாமிகளால் சுமார் 5 வருடம் சென்னையில் தினப்படி பூஜை செய்த 26 யந்திரங்களை ஸ்தாபித்து, விதிப்படி கும்பாபிஷேகம் செய்யப்பட்டு ஜம்மென்று அமர்ந்து கணபதி அமெரிக்க மக்களுக்கு அருள் புரிய ஆரம்பித்தார்.
வழு வழு மார்பிள் தரையோடு இருக்கும் இக்கோயிலில் உள்ள கணபதி பார்க்கப் பார்க்க கொள்ளை அழகு.
வல்லப கணபதி என்று பெயர் இருக்கிறதே என்று வல்லபையைத் தேடினால்... பிள்ளையார் மட்டுமே தரிசனம் தருவார். சித்தி, புத்தி, ஞானம் என யாவும் இவருக்குள் ஐக்கியமாக இருப்பதால், வல்லபைக்கு இங்கே தனி வடிவம் இல்லை. உற்சவரில் வல்லபை தனியே உண்டு.
வற்றாத வரம் தருபவர் என விளக்குவது போல் துதிக்கை வலம் சுழித்திருக்க; மோதகம் ஒரு கையும், தந்தம் ஒரு கையும் தாங்கி, சித்தியும் ஞானமும் தருவேன் என்று சொல்லாமல் சொல்ல; அங்குச பாசம் ஏந்தும் கரங்கள் புலனடக்கமும் புத்தியும் தருவேன் என உணர்த்த அழகுத் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார் வல்லப கணபதி.
வருடத்துக்கு ஒருமுறை இங்கே தேர்த்திருவிழாவும் உண்டு. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் போலவே ஒன்பது நாட்கள் நடக்கும் விசேஷ பூஜைகளுக்குப் பின் பத்தாம் நாள் பிரமாண்டமான தேரில் நியூயார்க் வீதிகளில் உலா வருவார் இந்த கணபதி. அன்றைய தினம் இந்நகரின் மிகப்பெரும் அலுவலர்கள் கூட இவருக்குப் பின்னால் ஆடியும் பாடியும் பணிந்தபடி வருவது பரவசமூட்டும் காட்சி.
கோயிலில் மூலவர் சந்நதி தவிர சிவன், பார்வதி, வெங்கடேசப் பெருமாள், சண்முகருடன் கூடிய வள்ளி தேவசேனா, மஹாலட்சுமி மற்றும் நவகிரகங்களுக்கும் தனித் தனி சந்நதிகள் உண்டு.
இந்து மதத்தை அமெரிக்காவில் பரப்பிய முக்கியக் காரணமும் பெருமையும் பெற்ற கோயில் இது. பல அமெரிக்க இந்துக் கோயில்களுக்கு முன்னோடி இந்த கணபதி. நிறைய இந்து ஆலயங்கள் அமெரிக்கா முழுவதும் ஆங்காங்கே முளைத்தது இந்த வல்லப கணபதிக்குப் பிறகுதான். இந்துக்கள் மட்டுமல்லாது, கிருத்துவ, இஸ்லாம், ஹீப்ரு மதத்தினரும் வந்து வழிபடும் பிரசித்தி பெற்ற தலம் இக்கோயில்.
சரி... எல்லா தெய்வங்களையும் கும்பிட்டு ஆத்மபசியும் ஆறியாயிற்று. அடுத்து? கொஞ்சம் வித்தியாசமான இடத்துக்குப் போவோம்....
அது, கோயிலுக்குள் இருக்கும் கேன்டீன். என்னது கோயிலுக்குள் உணவகமா? என்று நீங்கள் வியப்பது புரிகிறது. ஹோட்டலுக்குள் இருக்கும் இந்திய முகங்களையும் உள்ளே ஒலிக்கும் இந்தியப் பாடல்களையும் பார்த்தால், நாம் நியூயார்க்கில் தான் இருக்கிறோமா இல்லை, தமிழ்நாட்டிலா? என்று தோன்றும். இட்லி, ஊத்தப்பம், பன்னீர் மசாலா தோசை என்று உணவு வகைகள் அனைத்தும் சுவையோ சுவை. விலையும் மற்ற அமெரிக்க ஹோட்டல்களோடு ஒப்பிட்டால் மிகவும் மலிவுதான். மாங்கோ லஸ்ஸியும் மைசூர்பாக்கும் சூப்பர் டேஸ்ட்!
உணவகம் மட்டுமல்ல, குழந்தைகளுக்கு யோகா, நாட்டியம், வாய்ப்பாட்டுக்கும் இக்கோயில் வளாகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
திருமணம் நடத்த கோயிலுக்குள்ளேயே இரண்டு ஹால் உண்டு.
நாமகரணம், உபநயனம், அன்னப் பிராசனம், கணபதி ஹோமம், சத்தியநாராயண பூஜை, ஏன் புது வாகனத்துக்கு பூஜை எல்லாமே நம்மூரைப் போலவே. ஒவ்வொன்றுக்கும் தனிக் கட்டணம்!
இந்திய ஸ்தபதிகளால் ஆகம சாஸ்திர விதிகளின்படி கட்டப்பட்ட இந்தக் கோயிலுக்கு வார நாட்களில் சுமார் 500 பக்தர்களும், வார இறுதி நாட்களில் 3000 பக்தர்களும் வந்து செல்கின்றனர்.
கோயில் நேரம்: வார நாட்களில் காலை 8 முதல் இரவு 9 மணிவரை/ சனி, ஞாயிறு காலை 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை/ வருடம்தோறும் பிள்ளையார் சதுர்த்தி விழா பத்து நாட்களும் களைகட்டும்.
2009-ல் ஏக தடபுடலாக இரண்டுவேளை அன்னதானத்தோடு கும்பாபிஷேகம் நடந்தது.
அன்றைய தினம் அமெரிக்க டி.வி.யின் முக்கிய நியூஸ் கவரேஜ் இந்த விழாதான். யானை, பசு என்று கொண்டு வந்து ஏகப்பட்ட கெடுபிடிகளுக்கு மத்தியிலும் நடந்த கும்பாபிஷேகத்தைப் பார்த்து ஆச்சரியப்படாத அமெரிக்கர்களே இல்லை எனலாம்.
நவராத்திரி நாட்களில் விசேஷ பூஜையும் கொலுவும் கோயில் வளாகத்தில் அருமையாக நடக்கும்.
உங்கள் சொந்த காரிலோ அல்லது வாடகை காரிலோ மான்ஹெட்டன் மற்றும் லாங் ஐலேண்டு வழியே ட்ரைவ் ஈசி. இல்லாவிட்டால் பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு குறைச்சலே இல்லை.ஸப் ஸ்டேஷன் ரயில் நிலையத்திலிருந்து நீங்கள் யூத் என்றால் 15 நிமிட நடையில் செல்லலாம். கோயில் வரை சென்று பக்கத்தில் இருக்கும் குயின்ஸ் பொட்டானிக்கல் கார்டன் மற்றும் குயின்ஸ் மியூசியம் ஆகியவையும் பார்க்க வேண்டிய இடங்கள்.
என்ன, அமெரிக்கா வரை சென்று வல்லப கணபதியை தரிசனம் செய்ய முடியவில்லையே என்று ஏக்கமாக இருக்கிறதா?
சென்னை பெசன்ட் நகர் பீச் ஓரத்தில் உள்ள அறுபடை முருகன் கோயிலுக்குச் செல்லுங்கள். அங்கும் இதே நியூயார்க் கணபதி தனது தம்பிகளுடன் அருள்பாலிக்கிறார். அந்த அறுபடை வீடு கோயிலைக் கட்டிய அதே அழகப்ப அழகப்பன் இந்த நியூயார்க் கோயிலைக் கட்டிய முக்கியமான நபர்களில் ஒருவர்.
Comments
Post a Comment