மேலைநாடுகளின் நாகரிக கவர்ச்சியில் மூழ்கி, தனது புராதன தெய்வீகப் பொலிவைச் சிறுகச் சிறுக இழந்து வரும் சென்னை மாநகரம் ஒரு மகத்தான புண்ணியபூமி என் பது நம் குழந்தைகளுக்கும், பேரன்கள், பேத்திகள் ஆகியோருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை.
விநாடிக்கு விநாடி வேலை தேடிவரும் மக்களால் பெருகிவரும் மக்கட் தொகை, மேலைநாடுகளுடன் போட்டி போட்டுக் கொண்டு வானுயரத்திற்கு எழும்பி வரும் ‘மால்’கள் (விகிலிலி), நிமிட நேரமும் நிற்பதற்கு இயலாமல் ஓடிக்கொண்டே இருக்கும் பேருந்துகள், ஆட்டோக்கள், ஒரு காலத்தில் அமைதிப் பூங்காவாக இருந்த சென்னையை இ ன்று எவ்விதம் மாற்றியுள்ளன என்பதைப் பார்க்கும்போது ஒருபுறம் வியப்பாகவும், மற்றொருபுறம் வேதனையாகவும் உள்ளது.
புண்ணிய பூமி!
சென்னையை நமது ஆன்றோர்களும், சான்றோர்களும் ‘தர்மமிகு சென்னை’ என்று பாராட்டிப் போற்றியுள்ளனர்.
கிழக்குக் கடற்கரையைக் கொஞ்சிக் குலவி முத்தமிடும் சோலைகளினூடே, ஆழ்வார்களினால் மங்களா சாசனம் செய்யப் பெற்ற திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலும், திருமயிலையில் கற்பகத்தரு எனத் தன் குழந்தைகளிடம் குறைவில்லாத கருணையை அள்ளித் தரும் ஸ்ரீ கபாலீஸ்வரர் - கற்பகாம்பிகை தி ருச்சந்நிதியும், கம்ப நாட்டாழ்வாரின் ஸ்ரீமத் ராமாயணம் மகாகாவியத்தை எழுத கைவிளக்கு ஏந்தி அருள்புரிந்த திருவொற்றியூர் ஸ்ரீ வடிவுடை அம்மன் திருக்கோயிலும், தமிழகத்தின் ஆன்மிகத்திற்கே பெருமை சேர்த்த பட்டினத்தடிகள் சமாதியும், சத்ரபதி சிவாஜி, மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து தேடி வந்து தரிசித்த ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோயிலும், மற்ற ஏராளமான திருக்கோயில்களும் அருளாளர்களின் திருவடி ஸ்பரிசத்தைப் பெற்றுப் புனிதமடைந்த புனித பூமி இந்தச் சென்னை.
இவற்றின் மாபெரும் தெய்வீகச் சக்தியினால்தான் இன்றும் சென்னை மாநகர மக்களில் பெரும்பாலோர் நவநாகரிகச் சூழ்நிலையிலும் தடம் புரளாது, தெய்வ பக்தி, ஒழுக்கம், அமைதி, பண்பு ஆகியவற்றுடன் எளிமையாக வாழ்ந்து வருகின்றனர்.
இத்தகைய ஆன்மிகச் சிறப்புப் பெற்ற சென்னையைச் சுற்றிலும் பல தெய்வீக திருக்கோயில்கள் விளங்குவது ஒரு சிலருக்கு மட்டும்தான் தெரியும். அத்தகைய திருக்கோயி ல்களில் ஒன்றுதான் சென்னையை அடுத்த முக்கிய நகரமான சேலையூர் என்ற இடத்தில் ஒளிவீசிப் பிரகாசிக்கும் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமம் திருக்கோயிலாகும்.
இதில் எழுந்தருளியிருக்கும் தெய்வத் திருமேனிகளின் அழகு தரிசிக்க, தரிசிக்க திகட்டாத பேரானந்த அனுபவமாகும். இத்திருக்கோயிலை நிர்மாணித்த மகான் புதுக்கோட்டை ஸ்ரீபுவனேஸ்வரி பீடம் ஸ்ரீசத்குரு சாந்தானந்த சரஸ்வதி அவதூத பிரம்மேந்திர ஸ்வாமிகள்.
இம்மகானின் குரு ஸ்ரீமத் ஸ்வயம் ப்ரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத ஸ்வாமிகள். பூஜ்யஸ்ரீ சாந்தானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் பரமகுரு (குருவின் குரு) ஸ்ரீ ஜட்ஜ் ஸ்வாமிகள் எனப் பிரசித்திபெற்ற ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத ஸ்வாமிகள்.
நீதிக்காகப் பதவியைத் துறந்த நீதிபதி!
ஸ்ரீ ஜட்ஜ் ஸ்வாமிகள் என அக்காலத்தில் போற்றப்பட்ட இம்மகான், ஆந்திர மாநிலத் தின் புண்ணிய நதியான கோதாவரிக் கரையிலுள்ள தவளேஸ்வரம் என்ற சிற்றூரில் ஆச்சார, அனுஷ்டானங்கள், தெய்வ பக்தி ஆகியவற்றில் திளைத்த அந்தணர் குடும்பத்தில் பிறந்தவர். சட்டக்கல்வியில் முன்னணி மாணவராகத் திகழ்ந்தார். ஆங்கிலத்தில் விசேஷத் தேர்ச்சியும் பெற்றதால், பிரபல வழக்கறிஞர்களிடம் சேர்ந்து தன்னிகரற்ற சட்ட வல்லுனராகத் திகழ்ந்தார். இதனைக் கண்ட ஆங்கிலேய அரசாங்கம், அவருக்கு நீதிபதி பதவியை அளித்து கௌரவித்தது. ஒரு குறிப்பிட்ட வழக்கில் அவரது மனசாட்சிக்கு மாறாக, சந்தர்ப்பமும், சாட்சியமும் ஒருவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்க வேண்டிய சூழ்நிலை உருவானபோது, உலக வாழ்விலேயே மனம் வெறுத்து, தன் நீதிபதி பதவியையும், இல்லறத்தையும் அந்த விநாடியிலேயே துரும்பாகக் கருதி, சந்நி யாசம் ஏற்றார்.
அவதூதர் ஆனார்!
ஸ்ரீ ஜட்ஜ் ஸ்வாமிகள் என மக்களால் போற்றப்பட்ட அம்மகான், பரம வைராக்கியத்துடன் உலக வாழ்க்கையைத் துறந்து, அவதூதராகத் துறவறம் பூண்டார். மகான்கள் உடலை மறைத்திருக்கும் ஆடையைக் கூடத் துறப்பதற்குக் காரணம், அந்த ஆடையைக் காப்பாற்றுவதற்கும், அதன் மீது அபிமானம் ஏற்படுவதற்குக்கூட மனதில் இடம் கொடுக்கக் கூடாது என்பதே ஆகும். தேகத்தை மட்டுமின்றி, அதனை மறைந்திருக்கும் ஆடையை மட்டுமின்றி, உலகின் அனைத்தையுமே துறக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில்தான் இத்தகைய மகான்கள் ஆடைகள்கூட இன்றி நிர்வாணமாக இருப்பதற்கு, உலக வாழ்க்கையின் தொடர்பிலிருந்து தங்களை அடியோடு விடுவித்துக் கொள்ளவேண்டும் என்பதே ஆகும்.
இத்தகைய ஜட்ஜ் ஸ்வாமிகள் அதிஷ்டானம் (ஜீவபிருந்தாவனம்) புதுக்கோட்டையில் ராஜாகுளம் கீழ்க்கரையில் உள்ளது.
சேலையூர் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமம்!
ஸ்ரீஜட்ஜ் ஸ்வாமிகளைத் தனது பரமகுருவாகவும், ஸ்ரீ சுயம்பிரகாச அவதூத ஸ்வாமிகளை குருவாகவும் அடையும் பேறுபெற்ற ஸ்ரீசாந்தானந்த ஸ்வாமிகள், அவரது 13-வது வயதில் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்று ஆங்கிலேயர்களினால் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டபின்பு, கல்வியைத் தொடர்ந்தார் ஸ்ரீசாந்தானந்த ஸ்வாமிகள். இருப்பினும் அவர் மனம் ஆன்மிகத்திலேயே சென்றது. ஓய்வு கிடைத் தபோதெல்லாம் அன்னை மதுரை ஸ்ரீமீனாட்சியின் அருள் ஆலயமே அவரது அன்றாட தியானத்திற்கு இடமாக விளங்கியது.
பிறகு அவரது பெற்றோர் அவரை காரைக்குடி நாகநாதபுரம் வேதபாடச்சாலையில் சேர்த்தனர். வேதத்தை நன்கு கற்றுத் தேர்ந்தார் ஸ்ரீ சாந்தானந்தர். அவரது பூர்வாசிரம திருநாமம் சுப்பிரமண்யம் என்பதாகும். வீர சத்ரபதி சிவாஜியின் தேசபக்தியும், ஸ்வாமி பூஜ்யஸ்ரீ விவேகானந்தரின் மதபக்தியும் அவர் உள்ளத்தைக் கவர்ந்தன.
சுதந்திரப் போரின்போது சிறையில் அடைக்கப்பட்ட இம்மகான், சிறைச்சாலையைத் தவச்சாலையாக மாற்றினார். தேசபக்தர்கள் விடுதலை செய்யப்பட்டபோது சுப்பிரமண்யம் வெளிவந்தார்.
வெளிவந்த ஸ்வாமிகள் எதிலும் ஆசையின்றி திருப்பதி, பழநி, கொல்லிமலை, குற்றால மலை முதலான வனாந்திரங்களில் சஞ்சரித்து அலைந்து திரிந்தார். செல்லும் வழிகளில் பலர் அவரைப் ‘பைத்தியம்...’, ‘பிள்ளை பிடிப்பவன்...’ என்றெல்லாம் கூறி இகழ்ந்து, அடித்து அல்லல்படுத்தினர். ஆனால், எதையும் பொருட்படுத்தாது கன்னியா குமரியிலிருந்து புறப்பட்டு பதரி, கேதார்நாத், நேபாளம், ரிஷிகேசம் முதலிய இடங்களுக்குச் சென்று அரும்தவம் புரிந்தார். மகத்தான புண்ணிய க்ஷேத்திரமான ரிஷிகேஷ் திருத்தலத்தில் ஸ்வாமி சிவானந்தா ஆசிரமத்தில் தங்கி அம்மகானுக்குக் கைங்கர்யம் செய்யும் பேறு பெற்றார்.
பின்பு தமிழகம் திரும்பி, மூன்று ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமங்களை நிர்மாணித்தார். அவற்றில் ஒன்றுதான், புகழ்பெற்ற சேலையூர் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமம். பிரம்மாண்டமான முறையில், கண்டவுடனேயே உள்ளத்தைக் கவரும் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய இறை திருமேனிகளை இந்த ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் தரிசிக்க முடியும். ஒரே திருக்கோயிலில் பகவானின் அனைத்துத் திருமேனி திருக்கோலங்களையும் சேலையூர் ஸ்ரீஸ்கந்தாஸ்ரமத்தில் நம்மால் தரிசிக்க முடிகிறது.
மாதா ஸ்ரீ புவனேஸ்வரி, ஸ்ரீ பஞ்சமுக ஹேரம்ப கணபதி, ஸ்ரீ உக்ர பிரத்யங்கராதேவி, ஸ்ரீ சூலினிதுர்க்கா, ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர், ஸ்ரீ லட்சுமிநரசிம்மர், ஸ்ரீ தத் தாத்ரேயர், ஸ்ரீசனீஸ்வர பகவான், ஸ்ரீ முருகப்பெருமான், ஸ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகள் ஆகிய அனைத்துச் சந்நிதிகளும் இத்திருக்கோயிலில் திவ்யதரிசனம் தந்தருள்கின்றன. இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 18 அடி உயர ஸ்ரீ சுதர்சன சக்கரம் அற்புத சக்தி வாய்ந்தது. பின்புறம் ஸ்ரீ யோகநரசிம்மர் அமர்ந்திருக்கிறார்.
அரிய பூஜைகள்!
இத்திருக்கோயிலில் நடைபெறும் தின ஆராதனைகள், விசேஷ அபிஷேகங்கள், பூஜைகள், அலங்காரங்கள், ஹோமங்கள் ஆகியவை கற்பனைகளையும் மீறிய அற்புத தெய்வீக அனுபவங்களாகும். ஆச்சார, அனுஷ்டானங்கள், பக்தி ஆகியவற்றில் சிறந்த உத்தம பெரியோர்களால் நிர்வகிக்கப்பட்டு வருவதால், அதன் ஈர்ப்பு சக்தியை ஒவ்வொரு சந்நிதியிலும் உணர முடிகிறது.
காலையில் 7.15 மணிக்கு கோபூஜையுடன் திருக்கோயில் திறக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் காலை 9.00 மணிக்கு ஸ்ரீ பிரத்யங்கரா, ஸ்ரீ சரபேஸ்வரர், ஸ்ரீ சூரணி ஆகியோருக்குக் கோடி ஹோமம் நடைபெறுகிறது. பில்லி, சூன்யம் மற்றும் செய்வினை தோஷங்கள் ஆகியவற்றிற்குப் பரிகாரமாக இந்தச் சக்தி வாய்ந்த ஹோமம் விள ங்குகிறது. ஒவ்வொரு ஞாயிறன்றும் மாலை 4.30 முதல் 6.00 வரை ராகு காலத்தில் விசேஷ சரபேஸ்வர ராகு கால அபிஷேகமும், ஹோமமும் நடைபெறுகின்றன. மகத் தான மந்திர சக்தி பெற்ற ஹோமங்கள் இவை.
சனிபகவானின் துலாம் ராசிப் பிரவேச பூஜை!
சேலையூர் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் எழுந்தருளியிருக்கும் சனிபகவானின் பேரழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. சிரித்த திருமுகத்துடன் தரிசனமளிக்கும் ஸ்ரீ சனீஸ்வர, பகவான், ஒரு திருவடியை, தனது வாகனமாகிய காகத்தின்மீது வைத்து, மந்தகாச வதனத்துடன் சேவை சாதிக்கும் அழகு நெஞ்சை கொள்ளை கொண்டுவிடுகிறது. சனீஸ்வரருக்கு எதிரில் ஸ்ரீ பஞ்சமுக அனுமன் சேவை சாதிக்கிறார். சனிதோஷ பரிகார சந்நிதியாக விளங்குகிறது இத்திருச்சந்நிதி. சனிபகவானின் துலாம் ராசிப் பிரவேச வைபவத்தை முன்னிட்டு சேலையூர் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் கீழ்க்கண்ட பூஜைகள் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
21.12.2011 காலை 9.00 மணி : சனிபெயர்ச்சி விசேஷ ஹோமம்.
21.12.2011 காலை 10.30 மணி : சனிபகவானுக்கு விசேஷ அலங்காரம்.
21.12.2011 மாலை 6.00 மணி : சந்தன அலங்காரம்.
அவசியம் தரிசிக்க வேண்டிய அற்புத க்ஷேத்திரமான இந்த ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமம் தன்னிகரற்று ஒளிவீசிப் பிரகாசிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு,
திரு. பி. சந்தானம், மேலாளர்,
ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமம்,
கேம்ப் ரோடு, சேலையூர், தாம்பரம்,
தொலைபேசி எண்கள் : 9444629570 /
044 - 22290134
044 - 22291647
Comments
Post a Comment