காவிரிக் கரையில் அமைந்துள்ள கோயில்கள்

காவிரி பாயும் கன்னித் தமிழ் நாட்டில், மையமாக உள்ளது கரூர் மாவட்டம். காவிரி, அமராவதி, நங்கங்கை என்ற புனித ஆறுகளின் கரைகளிலெல்லாம் பல சிவாலயங்கள், வைணவத் திருத்தலங்கள் உள்ளன. செந்நெல்லும், கரும்பும் வாழையும் கரூர் மாவட்டத்தின் சிறப்பு. குளித்தலை வடக்கு நோக்கிய சிவாலயத்தை, அபூர்வமாகத்தான் காணமுடியும். அதுதான் இன்று `குளித்தலை' என்று அழைக்கப்படுகிறது. ``காலைக் கடம்பர், மத்தியானச் சொக்கர், அந்தித் திருவேங்கி நாதர்'' என்பது பழமொழி. குளித்தலையில் கடம்பவனநாதரை காலையில் கண்டு, மதியம் சிவாயமலை எனப்படும் ஐயர் மலையில் சொக்கநாதரை தரிசித்து, அந்தியில் ஈங்கோய் மலையில் வேங்கிநாதரை வணங்குவது மரபு. திருச்சி - கோவை நெடுஞ்சாலையில், 33 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருத்தலம் தான் குளித்தலை. காவிரி ஆற்றின் தென்கரையில், கடம்பவனமாக இருந்து, சப்தகன்னியர், கண்ணுவமுனிவர், திருமால், பிரம்மா, அகத்தியர் ஆகியோரால் வழிபட்ட திருத்தலம். திருக்கடம்பர் கோயில், கடம்பை, கடம்பவனம், கடம்பந்துறை, தட்சிணகாசி, குழித்தண்டலை என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் தேவாரத் திருத்தலம். தலவிருட்சம், கடம்பவனம். அருணகிரிநாதர் அருளிச் செய்த திருப்புகழும் கொண்டது. கங்கைக் கரையில் காசி விசுவநாதர் வடக்கு நோக்கியிருப்பது போல, காவிரிக்கரையில் வடக்கு நோக்கி இருக்கும் தலமானதால் `தட்சிணகாசி' எனும் சிறப்பைப் பெற்றுள்ளது. தனது படைப்புத் தொழிலில் சலிப்புற்ற பிரம்மா, அதனிலிருந்து தன்னை விடுவித்து, முக்தி இன்பத்தை அருளுமாறு இறைவனை வேண்டி நின்றார். சிவபெருமானும் பிரம்மதேவனை நோக்கி, ``திருக்கடம்பந்துறையினை அடைந்து, காவிரியில் நீராடி, அப்புனித நதிநீர் கொண்டு எம்மை முக்காலமும் பக்தியோடு அபிஷேகித்து, துதித்து, நிஷ்டையில் அமர்ந்து தவம் செய்வாயாக! உரிய தருணத்தில் உனக்கு அனுக்கிரகிப்போம்'' என்று திருவாய் மலர்ந்தருளினார். பல்லாயிரம் ஆண்டுகள் பிரம்மதேவன் தவமிருந்த பின்னர், எம்பெருமான் ரிஷபாரூடராக, அன்னையுடன் எழுந்தருளி, தரிசனம் தந்ததோடு, முக்திப் பேற்றையும் தந்தருளினார். பிரம்மா நிறுவிய பிரம்மதீர்த்தம், ஆலயத்தின் தென்கிழக்கு மூலையில் இன்றும் உள்ளதைக் காணலாம். தேவர் உலகை சதா துன்புறுத்தி வந்தான், அசுரன் தூம்ரலோசனன். அவனது கொடுமைகளிலிருந்து தம்மைக் காத்திடுமாறு அன்னை பராசக்தியை வேண்டினர் அமரர். அன்னையும் துர்க்கை வடிவம் தாங்கி அவனை அழித்திடப் புறப்பட்டாள். அசுரன் பெற்றிருந்த வரங்களால் போர் கடுமையானது. அரக்கன் கை ஓங்கியது. சப்தகன்னியரும் கடும் சினத்தோடு, துர்க்கையின் சேனையோடு அணிவகுத்தனர். அவர்களை எதிர்த்துப் போரிட முடியாது அசுரன் ஓடினான். புகலிடம் தேடி வனத்துள்ளே ஒளிந்திட எண்ணி, மாமுனிவர் கார்த்தியாயன மகரிஷியின் ஆசிரமத்திற்குள்ளே ஒளிந்துகொண்டான். அவனைத் துரத்தி வந்தனர் சப்தகன்னியர். அசுரனைக் காணுமுன் ஆசிரமத்தில் முனிவரைக் கண்டனர் ஏழு கன்னியரும். அசுரனே மாமுனிவர் வடிவம் தாங்கி நிற்பதாகக் கருதி மகரிஷியையே வதைசெய்துவிட்டனர். விளைவு `பிரம்மஹத்தி' தோஷம் அவர்கள் எழுவரையும் பற்றிக் கொண்டது. பிரம்மஹத்தி தோஷம் எந்தத் தலத்திலும் நீங்காத நிலையில், கடம்பந்துறை வந்து, கடம்பவனநாதரை வழிபட்டு, பாவம் நீங்கப் பெற்றனர். சிவாலயங்களில், வடக்குப் பிராகாரத்தில் பொதுவாகக் காணப்படும் சப்தகன்னியர், இத்தலத்தில் கடம்பவன நாதரின் பின்னே இடம்பெற்றுள்ளனர். ஈசனின் கருவறையில் சப்த கன்னியர்களும் இடம்பெற்றுள்ள தனிச் சிறப்பைப் பெற்றுள்ளது குளித்தலை. கடம்பநாதருக்கு சுந்தரேஸ்வரர், சௌந்தரேசர் என்று வேறு பெயர்களும் உண்டு. கிழக்குப் பார்த்த சன்னதியில் நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறாள் அன்னை பாலகுஜாம்பிகை. `முற்றிலா முலையம்மை' என்பது அழகான தமிழ்ப் பெயர். அரக்கன் முயலகனை, தனது காலால் மிதித்தபடி உள்ள நடராஜர் திருவுருவத்தை தரிசித்துள்ளோம். ஆனால், கடம்பந்துறையில் முயலகன் இல்லாத நடராஜர் திருமேனி ஓர் அதிசயம். அம்மன் சன்னதியின் முன்னே, தனது கரத்தை மேலே உயர்த்தியபடி நிற்கும் காவல்தெய்வம் பரமநாதருடையது. பாசிப்பருப்பு பாயசம் இவருக்குப் பிடித்தமான நைவேத்தியம். சண்டிகேசுவரர் மேற்கு நோக்கியும், பிரம்மா கிழக்கு முகமாகவும் இருக்கின்றனர். நவகிரகங்கள் அருகில் உள்ளது வள்ளி, தேவசேனா சமேத முருகப்பெருமான் சன்னதி. செவ்வாய் தோஷ நிவர்த்திக்காக, பக்தர்களை ஈர்த்து வருகிறார், இந்த முருகப் பெருமான். குளித்தலையின் தனிச் சிறப்பு, தைப்பூசத் திருவிழா ஆகும். அன்றையதினம் காவிரிக்கரையில் குளித்தலையைச் சுற்றியுள்ள பெட்டவாய்த்தலை, சிவாயம், கருப்பத்தூர், ராஜேந்திரம், முசிறி, வெள்ளூர் மற்றும் ஈங்கோய் மலை ஆகிய திருத்தலங்களிலிருந்து சோமாஸ்கந்த மூர்த்தங்கள் ரிஷபவாகனத்தில் எழுந்தருளுவதும், உடன் இத்தல இறைவன், இறைவியும் இணைந்து எட்டு ரிஷாபரூடர்கள் தரிசனம் தர பல ஆயிரம் மக்கள் இங்கு கூடுவதும் எங்கும் காணாத சிறப்பு. குளித்தலையில் தைப்பூசத்தன்று நடைபெறும் `எட்டு ரிஷபவாகன சேவையை வாழ்நாளில் ஒரு முறையாவது கண்டு மகிழ்வது பெரும் பேறாகும். ராஜேந்திரம் குளித்தலைக்கு தென்கிழக்கில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. ராஜேந்திர சோழன் பெயரை நினைவுபடுத்தும் திருத்தலம். தேவநாயகியுடன், மத்யார்ஜுனேசுவரர் அருள்பாலிக்கிறார். `மருதவாணரே' மத்யார்ஜுனர். திருப்பணிகள் இன்னமும் நிறைவுபெறாத நிலையில் உள்ளது கோயில். மருதூர் காவிரி ஆற்றின் தென்கரையிலேயே, மருதவனத்தை தன் பெயராகக் கொண்டது மருதூர். மீனாட்சி சமேதராக சுந்தரேஸ்வரர் எழுந்தருளியுள்ள திருத்தலம். சிதம்பரேஸ்வரர் சிவகாமியம்மையுடன் அருள்பாலிப்பது பொய்யமணி தலத்தில்! இது மருதூரிலிருந்து மேலும் 7 கி.மீ. தொலைவில் உள்ளது. வடியம் குளித்தலைக்கு மேற்கில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. மல்லிகாம்பிகை-மல்லிகார்ஜுனேசுவரர் எழுந்தருளியுள்ள தலமிது. கருப்பத்தூர் கருப்பத்தூரில் காட்சியளிப்பவர், நரசிம்மருக்கு அருளிய சிம்மபுரீசுவரர். சுகந்த குந்தளாம்பிகை அன்னையின் திருநாமம். குளித்தலைக்கு தென்மேற்கில் 5 கி.மீ. ஐயர் மலை திருவாள்போக்கி, ரத்தினகிரி, மணிகிரி, சிவாய மலை, மாணிக்கமலை என்றெல்லாம் அழைக்கப்படும் ரத்தினகிரிக்குத்தான் நாம் அடுத்துச் செல்கிறோம். மத்தியானச் சொக்கர் குடியிருக்கும் மலைதான் இந்த மாணிக்கமலை. மக்கள் பொதுவாக ஐயர்மலை என்றே அழைக்கிறார்கள். குளித்தலைக்குத் தெற்கே, மணப்பாறை செல்லும் சாலையில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. 1200 அடி உயரம் கொண்ட மாணிக்கமலை, தொலைவிலிருந்தே கம்பீரமாகத் தெரிகிறது. ஓம் என்ற பிரணவ எழுத்தைப்போல் அமைந்ததால் சிவாயமலை என்கிறார்கள். பஞ்சபாண்டவர் மலை, ஐவர் மலை என்றும் கூடக் கூறுவார்கள். ஐவர்மலையே ஐயர்மலை என மருவிவிட்டது போலும்! சமணர் பள்ளியும், ஐந்து படுகைகளும் உள்ளன. இந்திரன், ஆதிசேஷன், சூரியன், அகத்தியர், சப்தகன்னியர், உரோமச முனிவர் ஆகியோர் பணிந்த தலம் இது. மங்கல மாநகர் அரசன் ஆரியராஜனின் மணிமகுடம் காணாமல் போய்விட்டது. புதிய மகுடத்திற்கான ரத்தினக் கற்கள் தேடி இந்தப் பகுதிக்கு வந்தான் அரசன். வழித்துணை நாதர் ஆயிற்றே எம்பெருமான்! அந்தணர் உருவில் எழுந்தருளினான் அரன். அங்கே தொட்டி ஒன்றைக் காட்டி, அதனை காவிரிநீரால் நிரப்பினால், தேவையான ரத்தினங்கள் அனைத்தும் தருவதாகக் கூறினார், அந்தண உருவில் வந்தவர். குடம் குடமாகத் தண்ணீரைக் கொண்டு வந்து தொட்டியில் கொட்டியும், தொட்டி நிறையவில்லை. சினங்கொண்ட ஆரியராஜன், உடைவாளை உருவி வந்தவரது தலையை வெட்ட முயற்சிக்க, அவனது வாளும் மறைந்து, வந்தவரும் மறைந்துவிடக் கண்டு திகைத்தான். வந்தவர் அந்த சர்வேஸ்வரன்தான் என்று புரிந்து, அவர் தாள் பணிந்தான் அரசன். அரசனுக்குத் தேவையான நவரத்தினங்கள் அனைத்தையும் அளித்தார் எம்பெருமான். வாளால் ஏற்பட்ட தழும்பை இறைவன் முடிமேல் இன்றும் காணலாம். அதனால் ஈசனை இங்கே `முடித்தழும்பர்' என்றும் அழைப்பர். மன்னனது வாள் போக்கிய காரணத்தால், `வாள்போக்கி' என்ற பெயரும் வந்தது. நண்பகலில் வந்து குறுமுனி அகத்தியர் மாணிக்க ஈசரை வழிபட்டதால், உச்சிக்கால தரிசனம் இங்கு விசேஷம். அதனாலேயே அவரை `மத்தியான சுந்தரர்' என்றும் அழைக்கிறார்கள். செங்குத்தான மலை. 1140 படிகளைக் கடந்து செல்ல வேண்டும். அடிவாரத்தில் பிரதான விநாயகரை வழிபட்டு, நம் பயணம் எளிதாகிட வேண்டிக் கொள்வோம். பொன்னிடும் பாறை, அதனைக் கடந்து சென்றால் `சப்தமாதர்' சன்னதி. அதனைக் கடந்து சென்று கோயிலை அடையலாம். வசந்த மண்டபத்தையும், அம்பாள் சன்னதியையும் தாண்டிச் சென்றால், மேற்கு நோக்கிய சன்னதியில் ஈசனை தரிசிக்கலாம். படிகளை ஏறிவந்த சிரமம், திருமுடித்தழும்பரை தரிசித்திடும்போது இமைப்பொழுதில் மறைகிறது. சுயம்புமூர்த்தி. மன்னன் வாளினால் வெட்டப்பட்ட வடுவையும் காணலாம். மேற்குப் பார்த்த சன்னதியாகையால் தோஷநிவர்த்தி தலமும் ஆகிறது. ``ஒப்பிலா மாமணிக்கிரிவாசா'' என்று அருணகிரி நாதர் போற்றிப் பாடிய பேரருளாளன். ராசலிங்கம், சொக்கர், மலைக்கொழுந்தர் என்று வேறு பெயர்கள் அவருக்கு. கிழக்கு நோக்கிய சன்னதியில் கரும்பார் குழலி. `கௌரி தீர்த்தம்', அன்னை உருவாக்கிய புனித தீர்த்தம் ஆகும். ஆதிசேஷனுடன் வாயுதேவன் மோதியபோது, மேருமலையின் ஒரு பகுதி சிதறி, பூமியில் விழுந்ததாம். அதில் மாணிக்கம் விழுந்த தலமே ரத்தினகிரி ஆகும். தினமும், காவிரி ஆற்றிலிருந்தே, திருமஞ்சனத்திற்கான நீரைக் கொண்டு வந்து அபிஷேகம் செய்கிறார்கள். இறைவனின் அபிஷேகத்திற்காகக் கொண்டு வந்த பால்குடத்தை காகம் ஒன்று கவிழ்த்துவிட்டது. இறைவனின் சீற்றத்தால் அந்தக் காகம் எரிந்து சாம்பல் ஆனது. அது முதல் இங்கே காகங்கள் உலவுவதில்லையாம். `காகம் அணுகாமலை' என்றும் கூறுவர். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, இடிமுழக்கத்தால் இந்திரன் இத்தலத்து ஈசனை பூஜை செய்வதாகக் கூறுவர். சிவாயம் ஐயர் மலையைத் தாண்டிச் சென்று, இடதுபுறம் உள்ளே 1 கி.மீ. பயணித்தால், 5 நிலை ராஜகோபுரம், தொலைவிலிருந்தே நம் கவனத்தை ஈர்க்கும். அதுவே சிவாயம் எனும் திருத்தலம். ராஜகோபுரம், பெரிய பிராகாரம், மகாமண்டபம், நெடிய மதில்சுவர் அத்தனை அம்சங்களுடன் கூடிய அழகிய கோயில். ராஜகோபுரத்தின் வழியே உள்ளே நுழைந்ததும் நூற்றுக்கால் மண்டபம், அதன் கடந்தகாலப் பெருமையை வெளிப்படுத்-துகிறது. சுயம்பு மூர்த்தியாக சிவாயபுரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். பெரிய நாயகி தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். தெற்கு பிராகாரத்தில் அறுபத்துமூவர், மேற்கு பிராகாரத்தில் சோமேஸ்வரர், கோஷ்ட தேவதைகள் அலங்கரிக்கின்றனர். சிற்பக்கலை மிகுந்த நூற்றுக்கால் மண்டபம், கண்ணையும் கருத்தையும் கவருவதாக உள்ளது. கலுகூர் கழுகூரைத்தான், இப்போது கலுகூர் என்று அழைக்கிறார்கள். மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருள்பாலிக்கும் தலம் இது. தோகைமலை சாலையின் இடதுபுறம், ஐயர் மலையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் நூறடி உயரக் குன்றும், குன்றின்மீது இரண்டு கோயில்களும் தென்படுகின்றன. ஒன்று குமரன் கோயில். அதனால்தான் குன்றிற்கும் தோகைமலை என்று பெயர் வந்ததோ என்னவோ. மற்றொன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில். குறுகலான தெருக்கள் வழியே சென்று குன்றின் அடிவாரத்தை அடையலாம். படிகள் கொஞ்சம்தான். ஒரு கால பூஜை திட்டம். எனவே, கோயில் திறந்திருக்கும் காலை வேளையிலேயே சென்று தரிசித்திட வேண்டும். பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்விக்கப்பட்ட திருக்கோயில்கள். மகாதானபுரம் காவிரிக்கரையில் பல ஊர்களில் மகாதானத் தெரு என்ற பெயரில் வீதிகள் அமைந்துள்ளன. தானத்தில் சிறந்தது அன்னதானம். ஊரைக் கூட்டி அன்னதானம் செய்த பெருமை படைத்தவை அவை. குளித்தலைக்கு மேற்கில் 11 கி.மீ. தொலைவில், மகாதானபுரம் என்ற பெயரில் அமைந்த தலம் தனிச் சிறப்பு பெற்றது. யஜுர்வேதத்தை போதிக்கும் பாடசாலை ஒன்றும் இத்தலத்திற்குப் புகழ் கூட்டுகிறது. காசிவிஸ்வநாதர்-விசாலாட்சி திருக்கோயில் உள்ள தலம். கிருஷ்ணராயபுரம் குளித்தலைக்கு மேற்கில் 14 கி.மீ. தொலைவில் அமைந்திருப்பது கிருஷ்ணராயபுரம். நெடுஞ்சாலையின் வலதுபுறம் அமைந்துள்ளது, அழகிய சிவாலயம். நேத்ரபதீசுவரரான ஈசன், திருக்கண்மாலீசுவரர் என்ற அழகு தமிழ்ப்பெயரோடு, கண்ணொளி தரும் கண்கண்ட தெய்வமாக அருள்பாலிக்கிறார். சில தலங்களில் `முக்கண்மாலீசுவரர்' என்றும் `முக்கண்ணீசுவரர்' என்றும் அவர் திருநாமம் கொண்டுள்ளதை நினைவு கூரவேண்டும். அன்னை மதுக்கர வேணியம்மை. அருகிலேயே சித்தலவாய் என்ற கிராமம் உள்ளது. ஆற்றில் மூழ்கியிருந்த `நரசிம்மர்' திருவுருவம், ஆலயம் கண்டு ஆராதிக்கப்படுகிறது. நிறைய சேவார்த்திகள், நேர்த்திக்கடன் செலுத்திட வரும் தலம். மணவாசி கரூரின் எல்லையை நெருங்கும்போது, மணவாசி என்ற தலம் எதிர்ப்படுகிறது. கோமளாம்பிகை சமேதராக மத்யபுரீஸ்வரர் அருள்பாலிக்கும் தலம் இது. `சுயம்புலிங்கம்' ஆனதால் தனிச்சிறப்பு வாய்ந்த தலம். புலியூர் வியாக்ரபாதர் என்ற புலிக்கால் முனிவர் வழிபட்ட தலங்கள் எல்லாம் `புலியூர்' என்ற பெயர் கொண்டிருக்கும். விடியலுக்கு முன்னதாக, மலர்ந்த பூக்களைப் பறித்திட மரமேறுவதற்காக, புலிக்கால்கள் வேண்டுமென்று கோரிக்கை வைத்த மாமுனிவர், தில்லையில் சபேசனின் நடனத்தை அனுதினமும் கண்டு ஆனந்திக்கும் பேறு படைத்தவர். அவர் வணங்கிய ஈசனே இங்கு வியாக்ரபுரீசுவரராக அருள்பாலிக்கிறார். அன்னை, கருணாகரவல்லி.

Comments

Post a Comment