அல்லூரில் ஒரு ஆனந்த வைபவம்

பொன்னி நதி என்று பூவுலகம் போற்றும் காவிரி புண்ணிய நதிக்கரையில் தெய்வீகத் திருத்தலமாக விளங்குகிறது அல்லூர் என்னும் அழகிய கிராமம்.

‘‘கங்கையின் புனிதமாய காவிரி’’ என்று ஆழ்வார்களால் பாடல்பெற்ற காவிரி அன்னையின் கருணையினால் நீர்வளமும், நிலவளமும் நிரம்பி வழியும் அல்லூர் ஒரு தெய்வீகத் திருத்தலமும் ஆகும்.

ஆம்! ஒரு காலத்தில் வேதங்களைக் கற்றுயர்ந்து ஆச்சார, அனுஷ்டானங்களில் வைராக்கிய மகாபுருஷர்களாக விளங்கிய பெரியோர்கள் இவ்வூரில் வசித்து வந்ததால், வருடம் முழுவதும் ஏதாவது ஒரு யாகம் அல்லது ஹோமம் நடந்து கொண்டே இருக்கும்! 24 மணி நேரமும் வேத கோஷங்களும், பஜனைப் பாடல்களும் கேட்டுக்கொண்டே இருக்கும். சூரியோதய காலத்தில், ‘‘சோலைகளினூடே பறந்து செல்லும் கிளிகளின் கிள்ளை மொழியில் வேத சப்தத்தைக் கேட்கலாம்’’ என்று பெரியோர்கள் கூறுவதுண்டு.

அதிகாலையிலேயே துயிலெழுந்து, காவிரியில் நீராடி, கிழக்கு நோக்கி, சூரியனுக்கு அல்லூர் பெரியோர்கள், காவிரி நீரை இருகை நிரப்பி அர்க்கியம் விடும் தெய்வீகக் காட்சியைத் தரிசித்தால், பாவங்கள் பறந்தோடும்.

பச்சைப் பசேலென்று,கண்ணிற்குக் குளிர்ச்சியூட்டும் நெற்கதிர்களிலிருந்து வீசும் தென்றல் காற்றில், இறைவனின் கருணைக் கரங்கள் ஆதரவுடன் வருடுவதை உணரலாம்.

‘‘அல்லூர் சென்றால் அல்லல்கள் அகலும்’’ என்று அக்காலத்தில் கூறுவதுண்டு. வான் பொய்ப்பினும், தான் பொய்யாக் காவிரி எனப் பூஜிக்கப்படும் அன்னை காவிரியின் கரையில் திகழும் அல்லூரில் தங்கள் திருவடி ஸ்பரிசத்தைப் பதித்து, ஆசி அருளியுள்ள அவதார புருஷர்கள் ஏராளம்.

அல்லூரில் அக்காலத்தில் வேதம், ஜோதிடம், ஆயுர்வேதம், மந்திர சாஸ்திரம் ஆகியவற்றில் தேர்ந்த பெரியோர்கள் பலர் வசித்து வந்ததால், அவர்களது அறிவுரைகள், ஆசிகள், வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை நாடி ஏராளமானோர் நம்பிக்கையுடன் அல்லூர் நாடி வருவதுண்டு. ‘‘அல்லூர் சென்றால் அல்லல்கள் தீரும்’’ என்ற முதுமொழி ஏற்பட்டது அதனால்தான்.

ஸ்ரீ சீதாராம
சாம்ராஜ்ய
பட்டாபிஷேக
வைபவம்!

இத்தகைய தெய்வீகப் பெருமைபெற்ற அல்லூரில், நம் நாடு, மக்கள் ஆகியோரின் க்ஷேமத்தை முன்னிட்டு, ஸ்ரீ சீதாராம சாம்ராஜ்ய பட்டாபிஷேக வைபவம் 31.12.2011, சனிக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு, மகாபுருஷரான சேங்காலிபுரம் ஸ்ரீஅனந்தராம தீக்ஷிதரின் பரம்பரையில் வந்துள்ள மகான் சேங்காலிபுரம் சோமயாஜி ப்ரும்மஸ்ரீ தாமோதர தீக்ஷிதரின் தலைமையில் சிறப்பாக நடைபெற உள்ளது.

இதற்குப் பூர்வாங்கமாக,ப்ரும்மஸ்ரீ தாமோதர தீஷிதரின் தலைமையில் சுமார் 60 வேத விற்பன்னர்களைக் கொண்டு, 22.12.2011 முதல் தினமும் காலையில் புருஷஸுக்த விதான பூஜையும், ஸ்ரீமத் ராமாயணம் மூல பாராயணமும், நான்கு வேத பாராயணமும், ஸ்ரீ ராம மூலமந்திர ஹோமமும் நடைபெற உள்ளன. மாலையில் ஸ்ரீமத் ராமாயண உபன்யாசமும் நடைபெற உள்ளது.

மஹாத்மாக்களின் அனுக்கிரஹம்!
செய்தற்கரிய இவ்வைபவத்திற்கு காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் பரனூர் மஹாத்மா பூஜ்யஸ்ரீ கிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள், பூஜ்யஸ்ரீ கோவிந்தபுரம் ப்ரும்மஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் ஆகிய மகான்கள் ஆசி வழங்கியுள்ளனர்.

சகல பாவங்களையும் போக்கும் ஸ்ரீ ராமநாமத்தின் மகிமை எல்லையற்றது. பரம பவித்ரமானது. பாவங்கள் அனைத்தையும் கண்ணிமைக்கும் நேரத்தில் போக்கி, பரமானந்த அனுபவத்தை அளிக்கக்கூடியது. திருக்கயிலைபதியான பரமேஸ்வரனின் திருவுள்ளத்திற்கு உகந்த நாமம் ஸ்ரீராம நாமம்.

ஸ்ரீ ராமராஜ்யம்!

சூரிய வம்சத்து திலகமாக பகவான் ஸ்ரீமந் நாராயணனே அவதரித்து, மன்னர் முதல் சாதாரண மக்கள் வரை, எத்தகைய துன்பங்கள் நேரிடினும், தர்மத்தை விட்டு விலகி விடக்கூடாது என்பதைக் காட்டியருளிய ஸ்ரீ ராமபிரான், திரேதாயுகத்தில் பட்டாபிஷேகம் கண்டருளிய திவ்ய காட்சியைக் காண நாம் கொடுத்து வைக்கவில்லை.

அந்தக் குறை இனி வேண்டியதில்லை என்பதற்காகவே அல்லூர் பக்த பெருமக்கள் ஈடிணையற்ற இந்த மாபெரும் ஸ்ரீ சீதாராம சாம்ராஜ்ய பட்டாபிஷேக வைபவத்தை, அரும்பாடுபட்டு ஏற்பாடு செய்துள்ளனர்.
புண்ணியம் நம்மைத் தேடி வருகிறது. ஒருவர் தனது வாழ்க்கையில் பல கும்பாபிஷேகங்களைத் தரிசிக்கலாம். ஆனால், ஒரு ஸ்ரீ சீதாராம சாம்ராஜ்ய பட்டாபிஷேக சேவை கிடைப்பது அரிதினும் அரிது. ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்துடன் - முக்கியமாகக் குழந்தைகளுடன் வந்து, பரமானந்தத்தையும், பரம க்ஷேமத்தையும் தரும் இவ்வைபவத்தில் கலந்துகொண்டு ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் மற்றும் மாதா ஸ்ரீ சீதாதேவி, ஸ்ரீ லட்சுமணன், ஸ்ரீ பரதன், ஸ்ரீ சத்ருக்கனன், ஸ்ரீ ஆஞ்ஜநேய ஸ்வாமி ஆகியோரின் அனுக்ரஹத்தைப் பெற்று மகிழுமாறு வேண்டுகிறோம்.

‘நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
துன்பமும் தீமையும் சிதைந்து தீயுமே
ஜென்மமும் மரணமும் இன்றி தீருமே
இம்மையில் ராமா என்ற இரண்டெழுத்தினால்...’

இந்த ‘ராமா’ என்ற இரண்டு எழுத்துகளின் சக்தி அளவிடற்கரியது. ரிக், யஜுர், சாம, அதர்வ வேதங்கள் என்ற நான்கு வேதங்களாகிய கனிகளைப் பிழிந்தெடுத்த சாரமே ஸ்ரீமத் ராமாயண சரிதமாக வடிந்துள்ளது - ஸ்ரீவால்மீகி மகரிஷியின் தெய்வீகக் கவித்திறனால்!
காசித் திருத்தலத்தில் சரீரத்தை விடும் பாக்கியம் செய்த புண்ணியசாலிகளின் காதுகளில் காசியெம்பெருமானான ஸ்ரீ விஸ்வநாதப் பெருமான், உடலை விட்டு ஆன்மா வெளிவரும் சமயத்தில் ஜீவனின் காதுகளில் உபதேசிக்கும் தாரக மந் திரம் ஸ்ரீ ராம மந்திரம்! வேதங்கள், உபநிஷத்துகள், இதிகாச புராணங்கள் ஆகிய எதுவும் தெரியாத, சிறிதளவும் கல் வியறிவு இல்லாத பாமரர்களுக்குக்கூட மகரிஷிகள் செய்யும் தவத்தின் பலனை மிக எளிதில் அள்ளித்தரும் ராம நாமம், காயத்ரி மகா மந்திரத்திற்கு இணையானது. இத்தகைய தன்னிகரற்ற தாரக மந்திரத்தின் நாயகரான ஸ்ரீ ராமபிரானின் பட் டாபிஷேக மகோத்ஸவத்தை நினைத்தாலும் பாவங்கள் தீரும். இத்தகைய மகத்தான மகோத்ஸவம் அல்லூரில் பரமபக்தியுடன் கொண்டாடப்பட உள்ளது.

குறிப்பு :
அல்லூர், திருச்சி-கரூர் மார்க்கத்தில் 8 கி.மீ. தூரத்தில் உள்ளது. திருச்சியிலிருந்து டவுன் பஸ்கள் உண்டு.
பேருந்து எண்கள் : 8, 10, 77, 97
மேலும் விவரம் வேண்டுவோர் தொடர்பு
கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :
திரு. ஏ.வி. ராமகிருஷ்ணன்,
திரு. ஏ.வி. ஷெயராமன் - 0431 2685262
திரு. ஆர். மணி ஐயர்,
திரு. ஆர். ரவிசங்கர் - 0431 2705360

Comments