காவிரி கரையில் அமைந்துள்ள கோவில்கள் ..... தொடர்ச்சி







சிவபெருமானை `பசுபதி' என்று புகழ்கிறது வேதம். சகல ஜீவராசிகளையுமே பசுக்களாக கருதி, பசுக்களின் தலைவனாக விளங்குவதால் இறைவன் இத்திருநாமத்தை ஏற்றுள்ளான். பசுபதீஸ்வரன் ஆட்சி செய்யும் தலமே கரூர்.

ஊழிக்காலத்தில், உயிரினங்கள் அனைத்தும் ஒடுங்கின. மீண்டும் உயிரினங்களைப் படைத்திட முற்பட்ட பிரம்மதேவனுக்கு, தானே சிருஷ்டிகர்த்தா என்ற ஆணவம் தலைதூக்கியது. அதன் பலன், அவனால் உயிர்களை சிருஷ்டி செய்ய முடியவில்லை. அதே நேரத்தில் உயிரினங்கள் மீண்டும் தோன்றுவது எப்படி? அதனை மேற்கொள்ள காமதேனு முன்வந்தது. நாரதமுனிவரின் வழிகாட்டுதலின்படி, `வஞ்சிவனம்' என்று அழைக்கப்பட்ட பகுதியில், புற்றினுள்ளே புதைந்திருந்த சுயம்புமூர்த்தியின் மீது பாலைப் பொழிந்து வழிபட்டது, காமதேனு. பசுவின் பக்திக்கு வசமானார் பரமேசுவரன்.

இறைவன் புற்றிலிருந்து வெளிப்பட்டு காமதேனுவிற்குக் காட்சிதந்து, படைப்புத் தொழிலை ஏற்று நடத்துமாறு கட்டளையிட்டார். பரமேசுவரன் நினைத்தால் பசுவும் படைப்புக் கடவுளாக முடியும் என்பதை பிரம்மதேவன் உணர்ந்தான். அவனது ஆணவமும் அகன்றது. அதே இடத்தில் ஆநிலையப்பனுக்கு அழகிய கோயில் ஒன்றை அமைத்துத் தானும் ஈசனை வழிபடத் துவங்கினான். படைப்புத் தொழிலும் மீண்டும் அவனையே வந்தடைந்தது. படைப்புத் தொழில் செய்யக் கரு உற்பத்தி செய்த தலமே `கருவூர்' என்றும் பெயர் பெற்றதாக, தலபுராணம் கூறுகிறது. எறிபத்தரை ஆநிலையப்பர் தடுத்தாட் கொண்டதும் இத்தலமே.

எழில்மிகு ஏழுநிலை ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்கிறோம். விசாலமான திறந்தவெளி முற்றத்தின் வடபுறம் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. அடுத்து மகாமண்டபம். அதனை அழகுபடுத்துகிறது இடைநிலை கோபுரம். பெரியகோயில், விசாலமான பிராகாரம். பிராகாரத்தின் நான்கு பக்கங்களிலும், கோடீசுவரர் கைலாசநாதர், கரிய மாலீசுவரர், வஞ்சுளேசுவரர் என்ற திருநாமங்களோடு நான்கு சிவலிங்கத் திருமேனிகள் கம்பீரமாக இடம்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.

மாமரங்கள் அடர்ந்த சோலைகள் வழியே ஓடி வருவது `ஆம்ரவதி' என்ற ஆறு. அதுவே `அமராவதி' ஆகிவிட்டது. இந்த ஆறு, கருவூருக்கு கிழக்கில் `திருமுக்கூடலூர்' எனும் தலத்தில் காவிரியோடு கலக்கிறது. அந்த ஆம்ரவதிக்கரையில்தான் பசுபதீசுவரர் ஆலயம் அமையப் பெற்றுள்ளது.

காமதேனு வழிபட்ட ஆநிலையப்பரை பகலவனும் வழிபட்டிருக்கிறான். இன்றும் பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள், கோபுரவாசல், கொடிமரம், நந்தி எல்லாவற்றையும் கடந்து, ஆதவன் ஆநிலையப்பரைத் தனது ஒளிக்கதிர்களால் தழுவி வழிபடுவதைக் காணலாம். அதனால்தான் கரூருக்கு `பாஸ்கரபுரம்' என்றும் பெயர் வந்தது.

மூலவர் பசுபதீசுவரர் பெரிய சிவலிங்கத் திருமேனி, சுயம்புமூர்த்தி, சற்றே சாய்ந்தநிலையில் உள்ளார். கருவூராருக்காக சுவாமி சாய்ந்து கொடுத்தார் என்பது செவிவழிச் செய்தி. சதுர ஆவுடையார், புகழ்சோழரும், எறிபத்தரும், காமதேனுவும், ஆதித்தனும் காலம்காலமாக வழிபட்ட திருமேனி.

திருவிசைப்பா அருளிச்செய்த கருவூர்த்தேவர் வழிபட்ட திருமேனி! பார்த்துக் கொண்டே இருக்கலாம். கண்களில் நீர் மல்கிட மனமுருகி அவனைப் போற்றிப் பாடிக்கொண்டே இருக்கலாம். அத்தனை அழகு! கம்பீரம்! அவரே ஆநிலையப்பர்!

அந்தணர் குலத்தில் உதித்து, ஞானநூல்களை ஆராய்ந்து, சைவ சமயத்தை விடாப்பிடியாகக் கடைப்பிடித்து, சிவயோக சித்தி பெற்றவரே கருவூர்த்-தேவர். பருவமழை பொய்த்தபோது மழை பெய்விக்கச் செய்து அற்புதம் நிகழ்த்தியவர் அவர். பூட்டிய கோயில் கதவைத் திறக்கச் செய்தவர். ஆற்றில் வெள்ளம் பெருகிடச் செய்தவர். பூதங்களைத் தமக்கு குடைபிடிக்கச் செய்தவர். போகரின் மாணாக்கர்களில் ஒருவர். தஞ்சைக் கோயிலில் அரசன் செய்வித்த சிவலிங்கப் பிரதிஷ்டையில், அஷ்டபந்தன மருந்து பலமுறை இளகிப் போயிற்றாம். அசரீரி சொன்னதற்கிணங்க கருவூர்த்தேவரை வரவழைத்து `அஷ்டபந்தனம்' முறையாகச் செய்விக்கப்பட்டதாம்.

திருவரங்கத்தில், அனைவரும் காணும்படியாக ஆகாயவீதியில் தரிசனம் தந்து, அதன்பின்னர் கருவூரை அடைந்தார். வேதியர் பலர் அவர்பால் பொறாமை கொண்டு அவதூறு கூறிட, கருவூர்த்தேவர் ஆநிலைக் கோயிலை அடைந்து, சிவலிங்கத் திருமேனியைத் தழுவி இறைவனோடு ஒடுங்கினார். வெளிப்பிராகாரத்தில் இவரது சன்னதியையும் காணலாம்.

கிழக்கு நோக்கிய ஈசன் சன்னதியிலிருந்து வடக்கே சென்று தேவியர் இருவரை நாம் தரிசிக்க விருக்கிறோம். ஆதிசக்தியே இங்கு `அலங்காரவல்லி' என்ற திருநாமத்தோடு தனிச் சன்னதி கொண்டுள்ளார். அருகிலேயே தெற்கு நோக்கியபடி காட்சி தருபவள் அழகம்மை என்ற `சௌந்தரவல்லி'. இவ்விருவருமே அன்னையின் வடிவம்தான்.

முதலில் தோன்றியவள் அலங்காரவல்லிதான். சிலையில் கொஞ்சம் பின்னம் ஏற்பட்டுவிட்டதால், அதற்கு பதிலாக புதிய சிலையாக அழகம்மையை உருவாக்கினான் மன்னன். அவனது கனவில் தோன்றிய அலங்காரவல்லி, தன்னை வேறிடத்திற்கு மாற்றக்கூடாது எனக் கட்டளையிட்டாளாம். அதனால், புதிய சிலை தெற்கு நோக்கியபடி நிறுவப்பட்டதாம்.

கருவூருக்கு மேற்கில் உள்ளது அப்பிபாளயம் என்ற ஊர். தற்போது `ஆண்டான் கோயில்' என்று அழைக்கப்படுவதாக இருக்கலாம். வேடுவர் இனத்தில் அங்கே உதித்தாள் `வடிவு'. சிறுமியாக இருந்தபோது சிவமகிமையை மட்டுமே அவளது நா உச்சரித்தது. தனது அழகு மனத்தை ஆநிலையப்பனுக்கே காணிக்கையாக்கியவள்.

சந்தனக் கட்டையினால் ஒரு சிவலிங்கத் திருமேனியை உருவாக்கித் தருமாறு தந்தையிடம் கோரிப் பெற்றாள். அந்தத் திருமேனியையே தனது கணவனாகவும் பாவித்து, அல்லும் பகலும் பூஜையில் திளைத்தாள். பருவம் எய்திய அவளுக்கு மணம் செய்வித்துவிட்டால் பக்தி போய்விடும் என்றெண்ணினர் பெற்றோர். பேயோடு ஆடும் பெருமான் பக்தியை, அவர்கள் பேய் பிடித்துவிட்டது என்று கருதினர். எந்த மந்திரத்துக்கும், கயிறுக்கும் கட்டுப்படவில்லை மடந்தையின் பக்தி!

`பங்குனி உத்திரத் திருவிழாவில், ஏழாம் நாளன்று என்னப்பன் எனது கரம் பிடிப்பான், பார்த்துக்கொண்டே இருங்கள்' என்று கூறினாள் வடிவு. தந்தையின் கனவில் தோன்றினான் தயாநிதி ஆநிலையப்பன். ``ஏழாம் திருநாளன்று உன் புதல்வியை எம்மிடம் அழைத்து வா!'' என்று கூறினான்.

அன்றைய தினம் வடிவுடையாள் இருந்த அறைக்கதவைத் திறந்து பார்த்தபோது, தேவலோக மங்கையாகக் காட்சி தந்தாள் `வடிவு'. சௌந்தரவல்லியாகத் திகழ்ந்த அவளைப் பல்லக்கில் ஏற்றி பசுபதீசுவரம் இட்டுச் சென்றனர். ஆநிலையப்பர் சன்னதி நோக்கி ஓடினாள், அம்மங்கை. ஈசனின் திருவோடு கலந்தாள்.

இன்னும், பங்குனி உத்திரத் திருவிழாவில், ஆறாம் நாள் பசுபதீசர் அப்பிபாளயம் செல்கிறார். ஏழாம் நாள் வடிவுடையாளோடு ஆலயம் திரும்பிவரும் காட்சியை ஐதிகத் திருவிழாவாகக் காண்கிறோம்.

உள் பிராகாரத்தில் கன்னிமூலை கணபதி, முருகப்பெருமான், அறுபத்து மூவர், நடராஜர், மகாலட்சுமி, கரியமால் வரதராஜப் பெருமாள், பைரவர், தண்டாயுதபாணி நவகிரக சன்னதிகள் உள்ளன.

சிவனடியார்களின் சேவையால் கரூவூர் திருக்கோயில் இன்னும் பளிச்சிடுகிறது.

திருமாநிலையூர்

அமராவதி ஆற்றின் தென்கரையில் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளது திருமாநிலையூர். வாலீசுவரர் இங்கே சௌந்தரநாயகியோடு அருள்-பாலிக்கிறார்.

ஆண்டான் கோயில்

அமராவதி ஆற்றின் வடகரையில் உள்ளது ஆண்டான் கோயில். கோவை-கரூர் சாலையின் எல்லையில் உள்ளது. இத்தலத்தில் காசி விஸ்வநாதர்-விசாலாட்சி அருள்பாலிக்கின்றனர்.

வெண்ணெய் மலை

கரூருக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவில் அமராவதி ஆற்றின் வடகரையில் உள்ள தலம். வெண்மையான நிறங்களுடன் கூடிய சிறிய பாறைகளால் அமைந்த குன்று. குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருக்க வேண்டுமல்லவா! அந்த வகையில் பாலசுப்பிரமணியரே இங்கு பிரதான தெய்வம். காசிவிசுவநாதர்-விசாலாட்சியும் அருள்பாலிக்கும் தலம்.

காமதேனுவால் உருவாக்கப்பட்ட தேனு தீர்த்தத்தில் நீராடி குழந்தை வேலனை வழிபடுவது, கயிலையை வலம் வந்த பலனைத் தருமாம். அருணகிரிநாதர் திருப்புகழ் கொண்ட தலம் இது.

வேலாயுதம்பாளையம்

`புஞ்சைப் புகழுர்' என்பதே பழைய பெயர். புகழிமலை, குழுந்தமலை, ஆறுநாட்டவர் மலை என்றும் அழைக்கப்படுவது. சுற்றுவட்டாரத்தில் பதினெட்டுப் பட்டிகளுக்கும் பொதுவான குலதெய்வமாக கருதப்படுபவர் வேலாயுதம் பாளையத்து முருகப்பெருமான்.

ஒரே பாறையாக காணாமல், பற்பல பாறைகளை நீளவாக்கில் அடுக்கி வைத்தது போலக் காணப்படும் குன்று. 280 படிகளை எளிதில் கடந்து செல்லலாம். மலை மேல் மேற்குமுகமாக காட்சி தருபவர் சுந்தரேசுவரர். மீனாட்சியம்மனும் உள்ளாள்.

தனிச் சன்னதியில் கிழக்கு நோக்கியபடி அருள்பாலிப்பவரே பாலசுப்ரமணியர். அருணகிரிநாதர் திருப்புகழ் அருளிய தலம் இது. கரூரிலிருந்து வடக்கே 14 கி.மீ.

நஞ்சைப் புகழுர்

காவிரியாற்றின் தென்கரையில் உள்ளது நஞ்சைப்புகழுர். மேகவாலீசுவரர் பாகவல்லியோடு அருள்பாலிக்கும் தலம். அருகிலேயே சிந்தாமணீசுவரர் சிவகாமியம்மையோடு அருள்-பாலிக்கும் நன்னியூர் உள்ளது.

வாங்கல்

கரூருக்கு வடக்கில் 9 கி.மீ. தொலைவில் உள்ளது வாங்கல். கரூரிலிருந்து அடிக்கடி நகரப் பேருந்துகள் செல்கின்றன. காவிரியாற்றின் தென்கரையில் அமைந்த திருக்கோயிலில், ரவீசுவரர் அருள்பாலிக்கிறார். இமவானின் புத்திரியே `இமயவல்லி'யாகக் காட்சி தருகிறாள்.

புது வாங்கலம்மன்

வாங்கல் கிராமத்தில், நடுநாயகமாக நம்மைக் கவர்ந்திழுப்பது, அங்கே அண்மையில் குடமுழுக்கு கண்ட புதுவாங்கல் அம்மன் கோயிலே ஆகும். சிற்ப சாஸ்திரத்தின் நுணுக்கங்களோடு கலையழகு மிளிரும் வகையில் கல்லிலே கைவண்ணத்தைக் காட்டியுள்ள அற்புதத்தை இங்கே காணமுடிகிறது.

வடக்குப் பார்த்த திருமுகமாக சற்றே தலையைச் சாய்த்தவாறு காட்சி தருகிறாள் அன்னை. கருணையே வடிவானவள். அவள் எதிரில் கம்பீரமாக அமர்ந்துள்ள சிங்கமும், மகாமண்டபத்து சிற்பங்களும், கற்சங்கிலிகளும், இன்றும், நம் தமிழகத்தில், அற்புதமாகப் பணியாற்றும் சிற்பிகள் உள்ளனர் என்பதைப் பறைசாற்றுகின்றன.

வாங்கலுக்கு அருகிலேயே 3 கி.மீ. தொலைவில் உள்ளது மணிமங்கலம். மரகதவல்லி என்ற பச்சை நாயகியோடு அருள்பாலிக்கிறார் மணிகண்டேசுவரர்.

நெரூர் அக்னீசுவரர்

``நெருவை நகர் உறை திருஉரு அழகிய பெருமானே'' என்று திருப்புகழால் அருணகிரிநாதர் போற்றிப் பாடிய திருத்தலம்தான் நெரூர்.

காவிரியாறு உத்தரவாகினியாக வந்து தெற்கில் திரும்பும் திருத்தலம். சூரனை வதம் செய்த தோஷம் நீங்கிட முருகவேள் `அக்னி யாகம்' செய்து தோஷம் நிவர்த்தி ஆன தலமே நெரூர். ஈசன், திருமுருகனுக்கு அருள்செய்யும் வகையில் `அக்னீசுவரர்' என்ற திருநாமங்கொண்டுள்ளார். சுயம்புமூர்த்தியாக நிலை கொண்டுள்ள திருமேனி மனதை ஈர்க்கவல்லது.
அன்னை சௌந்தர்ய நாயகி. ஆறுமுகப்பெருமான், மயில்வாகனராக தனிச் சன்னதி கொண்டுள்ளார். பன்னிரு கரங்களோடு தனித்துக் காட்சி தரும் அழகே அழகு.

மகாஞானியான ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர், இந்தத் தலத்தில் அக்னீசுவரரை வழிபட்டு ஜீவசமாதி அடையும் பேறு பெற்றார். கரூரிலிருந்து வடகிழக்கே 10 கி.மீ. தொலைவில் உள்ளது நெரூர்-வடக்கு.

காவிரியாற்றின் மேற்குக் கரையில் அமைந்த தலம் நெரூர் தெற்கு. சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவசமாதி அமையப்பெற்ற தலம் இது. அருகிலேயே காசிவிசுவநாதர்-விசாலாட்சி அருள்பாலிக்கும் திருக்கோயிலும், மடமும் உள்ளன.

சதாசிவபிரம்மேந்திரர், ஒரே சமயத்தில் மூன்று இடங்களில் சமாதியானார் என்றும் கூறுவர். நெரூரிலுள்ள சதாசிவ பிரம்மேந்திரர் சமாதி, புதுக்கோட்டை அரச குடும்பத்தினராலேயே நிர்வகிக்கப்படுகிறது.

சித்தாந்த கல்பாவளி, அத்வைத ரசமஞ்சரி, பிரம்மசூத்ர விருத்தி துவாதச உபநிஷத் தீபிகா என்ற அரிய நூல்களைப் படைத்த மகான், சதாசிவ பிரம்மேந்திரர். கருவூர் செல்வோர், தவறாது நெரூருக்கும் சென்று இந்த `பிரம்மஞானி'யின் அருளையும் பெற்று வரலாம்!

திருமுக்கூடலூர்

நதிகள் கூடுமிடத்தையே `சங்கமம்' என்றும் `கூடுதுறை' என்றும் அழைப்பார்கள். அந்தத்துறைகள் மிகவும் புனிதமானவை. காவிரியும் அமராவதியும் கூடுமிடத்தில் உள்ளது திருமுக்கூடலூர் ஆகும். கரூருக்கு கிழக்கே 9 கி.மீ.

இங்குள்ள மிகவும் பழமையான கோயிலில் சுயம்புமூர்த்தியாக அகத்தீசுவரர் அருள்பாலிக்-கிறார். மகாமண்டபத்தின் தூண்களில் அழகிய சிற்பங்கள் மேற்கூரையின்றி நிற்கின்றன. கருவறையைச் சுற்றிலும், நுணுக்கமான சிறு சிற்பவடிவங்கள் கண்ணைக் கவருகின்றன.

மயில்வாகனராக ஆறுமுகப்பெருமான், அர்த்தநாரீசுவரர் திருஉருவச் சிலைகள் அர்த்த மண்டபத்தினுள்ளேயே அடைக்கலமாகிவிட்ட நிலை. அகிலாண்டேசுவரி சன்னதி தனித்து உள்ளது. ஒரு கால பூஜையுடன் வழிபாடு நடைபெறுகிறது. புனிதமான கூடுதுறையில் அமைந்துள்ள அருமையான திருத்தலம். திருப்பணிகளை எதிர்பார்த்து நிற்கும் அவலநிலை நெஞ்சை உருக்குகிறது.

பஞ்சமா தேவி

திரும்பவும் கரூரின் எல்லையை அடைகிறோம். கரூருக்கு 3 கி.மீ. தொலைவில் உள்ளது `பஞ்சமாதேவி'. வரலாற்றுச் சிறப்புடைய பெயரோடு விளங்கும் திருத்தலம் இது. பார்வதி அம்மனோடு, பரமேசுவரர் அருள்பாலிக்கும் திருத்தலம்.

கரூருக்கு மேற்கில் நொய்யலாற்றின் கரையில் மரகதாம்பிகையோடு மரகதீசுவரரும், வடமேற்கில் புங்கவல்லியோடு புஷ்பவனநாதரும் அருள்பாலிக்கும் புன்னம் என்ற திருத்தலமும் தரிசிக்கப்பட வேண்டியவையே!

Comments

  1. அருமையான பதிவு.
    மனப்பூர்வ வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. திருமுக்கூடலூர் அகத்தீஸ்வரர் சுயம்பு அல்ல. அகத்தியரால் பிரதிஸ்டை செய்யப்பட்டவர்.

    ReplyDelete

Post a Comment