பக்தி

அந்தரத்தில் ஆதாரமற்று நம் பூமிப் பந்து தொங்குகிறதே, அதை விழுந்து விடாமல் பிடித்துக் கொண்டிருப்பது யார்? விரிந்து கிடக்கும் வான வெளியில் கோடானு கோடி விண்மீன்கள் கண் சிமிட்டுகின்றனவே, அவற்றை ஆகர்ஷணக் கயிறு போட்டுக் கட்டி வைத்திருப்பது எது? கோடை, வசந்தம்... என்று பருவங்கள் மாறி மாறி பவனி வருகின்றனவே, அந்த மாற்றங்களை நியதி தவறாமல் நிகழ்த்துவது யார்? ஒரு துளி விந்தில் இத்தனை உறுப்பு கள்... உடலுக்குள் உருவாகக் காரணமான சிருஷ்டிகர்த்தா உறைவது எங்கே?
ஜீவித்தது போதும் என்று... ஒரு நாள், ஒவ்வொருவர் மூச்சுக் காற்றையும் முடித்து வைக்கும் மூல புருஷன், இந்தப் பிரபஞ்சத்தின் எந்த மூலையில் ராஜாங்கம் நடத்துகிறான்? பிறக்கும் உயிர்கள் பிறப்பதற்கு முன்பு என்னவாக இருந்தன? இறந்த பின்பு அவை அனைத்தும் எந்தத் திசை நோக்கிப் பறக்கின்றன?

ஜனனத்தை நிர்ணயிப்பதும் மரணத்துக்கு நாள் குறிப்பதும் எங்கிருந்து, யார் நடத்தும் லீலை? அறுநூறுகோடி மனித முகங்களில், ஒன்றைப் போல் மற்றொன்று இல்லாமல் அச்சில் வடிக்கும் அற்புத ரசவாதம் எங்கே அரங்கேறுகிறது?

மலையும் கடலும் நதியும் நெருப்பும் மலரும் காற்றும் எவரது இயக்கத்துக்கு கட்டுப்பட்டவை? இவையெல்லாம் இயற்கை யின் செயலா? இல்லை, இறைவனின் திரு விளையாடலா? இயற்கை வேறு, இறைவன் வேறா?

இயற்கைதான் இறைவனா? இவற்றில் எந்தக் கேள் விக்கும் நம்மிடம் தெளிவான பதில் இல்லை. பிரபஞ்ச ரகசியம் புரியாத வரை, மரணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படாத வரை, தெய்வ நம்பிக்கையைத் தகர்க்க எந்தத் தத்துவத்தாலும் ஆகாது!


உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு என்ன? மனதுக்கும் ஆன்மாவுக்கும் என்ன சம்பந்தம்? மலருக்கு மணம் வந்து சேர்ந்தது எப்படி? கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவு கொடுப்பது யார்? விஞ்ஞானத்தில் இவற்றுக்கெல்லாம் விடை இல்லை! 'இயற்கையின் ஆற்றல், கடல் போல் என் கண் முன் விரிந்து கிடக்கிறது. நானோ கடற் கரையில் கூழாங்கற்களையும் கிளிஞ்சல்களையும் பொறுக்கிக் கொண்டிருக்கிறேன்' என்றார் நியூட்டன். விஞ்ஞானத் துக்குள் பிடிபடாத ஆற்றலின் இருப்பை ஐன்ஸ்டீனும் மறுக்கவில்லை. மனித சக்திக்கு மீறிய ஒரு பிரபஞ்ச ஆற்றலைத்தேர்ந்து தெளியும் தேடலுக்குப் பெயரே மெய்ஞானம். அதற்குரிய பாதையே மதம்.எல்லாப் பொருள்களுக்கும் மூலமாக- ஆதாரமாக அமைந்து, எங்கும் நிறைந்து, எல்லாம் கடந்து, உட்பொருளாக இருப்பதே, 'கடவுள்' என்கிறது இந்து மதம். 'பூர்ணம்' என்றால் முழுமை என்று பொருள். பிரபஞ்சத்தில் கடவுளே சம்பூர்ணம். அளவில் அடங்காத பிரமாண்டமே பிரம்மம். அழியக் கூடிய படைப்புகளுக்கு இடையே, அழிவற்று என்றும் நிலைத்திருப்பது உண்மை ஒன்றே. அதனால், 'உண்மை'யே கடவுள். 'ஏகம சத் விப்ர: பஹ§தா வதந்தி' என்கிறது வேதம். 'உண்மை என்றும் ஒன்றே. அது, பல பெயர்களில் அழைக்கப்படுகிறது' என்று விளக்குவதன் மூலம், 'கடவுள் ஒருவரே' என்று அது அறிவுறுத்து கிறது. ஒன்று பரம்பொருள். நாம் அதன் மக்கள்.

இறைவன், 'ஓர் உருவம், ஒரு நாமம் ஒன்றும் இல்லாதவன்' என்கிறார் மாணிக்கவாசகர். 'நாம் நெஞ்சில் நிறுத்தி வணங்கும் ஆண்டவன் ஆணும் இல்லை; பெண்ணும் இல்லை; அலியும் இல்லை. உருவம் இல்லாத அவனைக் கண்களால் காண இயலாது. நம்பாதவர்க்கு அவன் இருப்பவன் இல்லை. நம்பியவர்க்கு அவன் இல்லாமல் இல்லை. விரும்பிய வர்க்கு, விரும்பும் வடிவில் காட்சி தருவான். ஈடுபாடற்றவர்க்கு, இல்லாத வனைப் போல் மறைந்து நிற்பான். ஆண்டவனை அனுபவிக்கும் பேரின்பம் பேச்சில் அடங்காதது' என்கிறார் நம்மாழ்வார்.

ஆணல்லன் பெண்ணல்லன் அல்ல அலியுமல்லன்
காணலும் ஆகான் உளனல்லன் இல்லையல்லன்
பேணுங்காற் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்து எம்பெம்மானைக் கூறுதலே

_ ஆண்டவன் குறித்து எவ்வளவு அழகான தத்துவ விளக்கம்! 'ஓர் உருவம், ஒரு நாமம் ஒன்றும் இல்லாத இறைவனுக்கு... பல வடிவம், பல நாமம் ஏன்?' என்ற கேள்வி எழுவது இயற்கை. மனித விருப்பங்களுக்கு ஏற்ப விளைந்ததே இத்தனை வடிவங்களும்; பெயர்களும். சிலையில் கடவுளைக் கண்டு உருகும் ஒவ்வொருவருக்கும், அந்தச் சிலையே கடவுள் இல்லை என்பது நன்றாகவே தெரியும்.

ஒரு முறை சுவாமி விவேகானந்தர் 'ஆல்வார்' சமஸ்தானத்து அரசரைச் சந்தித்தார். ''சுவாமி, எனக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை. மண்ணையும், மரத்தையும், கல்லையும், கட்டை யையும் ஏன் வணங்க வேண்டும்?'' என்று ஏளனக் குரலில் கேட்டார் அரசர். இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல், சுவரில் தொங்கிய ஒரு படத்தை எடுத்து வரும்படி திவானிடம் சொன்னார் விவேகானந்தர்.

படத்தைக் கொண்டு வந்த திவானிடம், ''இது யாருடைய படம்?'' என்றார். ''அரசரின் படம்'' என்றார் திவான். அவரிடம், ''இந்தப் படத்தின் மேல் எச்சில் துப்புங்கள்'' என்றார் சுவாமி. அரசரும், திவானும் அதிர்ந்தனர்!

''இது அரசரின் படம்தானே, அரசர் அல்லவே! எலும்பும், சதையும், ரத்தமும் இல்லாத வெறும் காகிதப் படத்தின்மீது ஏன் காறி உமிழத் தயங்குகிறீர்கள்? இந்தப் படத்தில், அரசரை நீங்கள் தரிசிக்கிறீர்கள். ஆனால், இந்தப் படமே அரசர் இல்லை என்பதை அறிவீர்கள். மக்களும் அப்படித்தான். மண்ணிலும் கல்லிலும் வெவ்வேறு வடிவங்களில் அவர்கள் கடவுளைக் கண்டு வழிபடுகின்றனர்!'' என்று விளக்கினார் விவேகானந்தர்.

'நீ எந்த வடிவத்தில் என்னை வழிபட்டாலும் நான் உனக்கு அருள்புரிவேன்' என்று கீதையில் அருள்கிறார் கண்ணன். 'நிலம், நீர், காற்று, நெருப்பு என்ற நான்கு பூதங்களால் ஆனது நம் உடம்பு. ஆகாயம் என்ற ஒன்று இல்லை. நான்கு பூதங்களின் சேர்க்கையால் அறிவு உருவாகிறது. உடம்பு வளர, அறிவு வளரும். கடவுளும், வினையும், உயிரும் இல்லை. இன்பம் நுகர்வதே வாழ்வின் பயன். கண்ணால் காண்பதையே நம்ப வேண்டும்' என்கிற காட்சி வாதமே நாத்திகம். இதுவே இந்தியத் தத்துவ மரபில், 'சாருவாகம்' எனப்படும்.

'நம்பிக்கையின்மையே நாத்திகம். நம்பிக்கையே ஆத்திகம். விண்ணின் அதிசயங்களை அண்ணாந்து பார்ப்பவனால், கடவுள் இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?'' என்று கேட்டார் ஆபிரஹாம் லிங்கன். நம்பிக்கைதான்... பார்க்க முடியாத விஷயங்களுக்கு ஒரே ஆதாரம். பார்க்க முடியாததை நம்பாவிட்டால், நம்பிக்கைக்கு அர்த்தம் என்ன?

'நம்மால் அறியக்கூடிய எதுவும் கடவுளைப் பற்றிய விளக்கமோ, உவமையோ ஆகாது. அதற்காக, கடவுளின் இருப்பு குறித்து ஐயப்பட
வேண்டியது இல்லை. நாம் இருப்பது உண்மையா னால், நம்மைப் பெற்றோரும் நம் மூதாதையரும் உண்மையானால், பிரபஞ்சத்தைப் பெற்றவனும் உண்மை' என்கிறார் மகாத்மா காந்தி.

சரி. கடவுளைப் பக்தி செய்வது எப்படி?

'நீ எனக்கு ஓர் இலையோ, பூவோ, பழமோ கொடு. இவை எதுவும் இல்லையென்றால், கொஞ்சம் தண்ணீர் கொடு. எதைக் கொடுத்தாலும் பக்தியோடு கொடு. சுத்த சித்தம் உள்ளவன் எதைக் கொடுத்தாலும் ஏற்பேன்' என்று பகவத் கீதையில் கூறுகிறார் பகவான். 'சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை' என்கிறது திருவாசகம். ஆண்டவன் மீது அன்பு வைப்பதும், ஆண்டவன் குடியிருக்கும் அனைத்து உயிர்களின் மீதும் அன்பு செய்வதும்தான் பக்தியின் நல் அடையாளம். எல்லா உயிர்களிலும் ஆண்டவனைக் காண்பதே ஆன்மிகம்.

ஞானத்தின் வடிவமான குரு ஒருவர் வலம் வந்தார். அவரது திருவோட்டில் ஒருவர் சோறிட்டார். அந்தச் சோற்றில் ஒரு நாய் வாய் வைத்து உண்டது. நாயின் முதுகில் ஞானி அமர்ந்தார். பாரம் தாங்காமல் நாய் திணறியது. இந்த அதிசயத்தை ஊர் கூடிப் பார்த்தது. வெளியில் சென்றிருந்த சீடன் திரும்பினான் குருவின் செய்கை அவனுக்குத் திகைப்பைத் தந்தது!

''என்ன இது குருவே?'' என்றான் அவன். ''பிரம்மத்தில் ஒரு பிரம்மம், பிரம்மத்தை இட்டது. அதை ஒரு பிரம்மம் உண்டது. அந்த பிரம்மத்தின் மேல் இந்த பிரம்மம் அமர்ந்திருப்பதை, இத்தனை பிரம்மங்கள் கூடிப் பார்க்க, 'என்ன இது?' என்கிறது ஒரு பிரம்மம்!'' என்று சிரித்தபடி சொன்னார் ஞானி. திருவோடும் பிரம்மம்; சோறும் பிரம்மம்; நாயும் பிரம்மம்; பார்த்த மக்கள் பிரம்மம்; கேட்ட சீடன் பிரம்மம்; தானும் பிரம்மம் என்ற ஞானியின் பார்வைதான் ஞானத்தின் உச்சம்.

ஸ்ரீராமானுஜரைத் தேடி வந்த ஒருவன், ''ஆண்ட வனை அடையும் வழி என்ன?'' என்றான். ''மனிதர் கள் மீது அன்பு வைப்பதுதான் ஒரே வழி'' என்றார் அந்த மகான்.

'கடவுள் இல்லை' என்று காலமெல்லாம் வாதித்த அமெரிக்க அறிஞர் இங்கர்சால், 'கடவுள் இருந்தால் மன்னிக்கட்டும்' என்று தனது நூலில் எழுதினார். 'உலகம் முழுவதும் கடவுள் இல்லை என்று சொன் னாலும், எனக்குக் கடவுள் என்றும் உண்டு' என்றார் அண்ணல் காந்தி.

சக மனிதர்களிடம் இறக்கி வைக்க முடியாத இதயத்தின் பாரத்தை, ஒருவன் மேல் நம்பிக்கையோடு நாம் இறக்கி வைப்போம். அந்த நம்பிக்கைக்கு உரிய வன் ஆண்டவனே. பாரம் இறங்கினால் சுமை குறையும். சுமை குறைந்தால் மனம் லேசாகும். மனம் லேசானால் வாழ்வின் ருசி வளரும். எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண்போம். அவற்றின் மீது அன்பு செய்வதே உண்மையான பக்தி வழிபாடு என்று உணர்ந்து கொள்வோம்.

'பக்தி செய்து பிழைக்கச் சொன்னான்; பயன் கருதாமல் உழைக்கச் சொன்னான்' என்ற பாரதி பாடலின் பொருள் உணர்ந்து நாளும் நல்ல வண்ணம் வாழ்வோம்.



Comments