வட நாட்டிலும் ஒரு கஜேந்திர மோட்ச தலம்!





ஐப்பசி மாத பௌர்ணமி தினம் மகிமை வாய்ந்தது. தென்னிந்திய சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவதும் அன்றுதான். இந்தத் திருநாளையட்டி ராஜஸ்தானில் (பிரம்மனை போற்றி) கொண்டாடப்படும் புஷ்கர் மேளாவும் பீகார்- சோன்பூரில் நடைபெறும் சோன்பூர்மேளாவும் பிரசித்திப் பெற்ற விழாக்கள் ஆகும்.

பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் சரண் ஜில்லாவில் அமைந்துள்ளது சோன்பூர். கங்கை, கண்டகி, கார்கா ஆகிய நதிகள் சூழ அமைந்திருக்கும் சோன்பூர் குறித்து பாகவத புராணம் விவரிக்கிறது. ராமாயணத்துடன் தொடர்பு கொண்ட இந்த தலம், தொன்மை வாய்ந்த விசால திரிகூட பர்வத சேத்திரத்தைச் சார்ந்த பகுதியாக திகழ்ந்ததாம்!

சரித்திரச் சிறப்புகளுடனும் திகழ்கிறது இந்தத் தலம். சோன்பூர் மேளாவை ஒட்டி, இங்கு கூடும் சந்தை பிரசித்திப் பெற்றது. முற்காலத்தில், இந்தத் தலத்துக்கு அருகில் உள்ள ஹாஜிபூர் என்ற இடத்தில்தான் சந்தை கூடியதாம். பிரிட்டிஷார் காலத்தில், சுதந்திரப் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் சந்தையை சோன்பூருக்கு மாற்றி அமைத்தார்களாம்! ஆனாலும், வீர்குன்வர்சிங் என்ற வீரன், மேளாவுக்காக இங்கு கூடும் கோடிக்கணக்கான மக்களை சுதந்திரப் போராட்டத்தின் மீது ஈர்த்தானாம்!

மவுரியப் பேரரசர் சந்திரகுப்தன், இங்கு (ஹாஜிபூர்) நடைபெறும் சந்தைக்கு வந்து தனது படைகளுக்குத் தேவையான யானைகளையும் குதிரைகளையும் வாங்கிச் செல்வாராம்!


இத்தகு பெருமைகள் மிக்க சோன்பூரில், நதிக் கரையில் அழகுற அமைந்துள்ளது ஹரிஹரநாத் ஆலயம். கூம்பு வடிவ கோபுரத்துடன் மிக எளிமையாகத் திகழும் இந்த ஆலயத்தில் பிராகாரங்களோ, அர்த்த மண்டபமோ இல்லை. இறைவனுக்கென்று தனியே கருவறையும் கிடையாது. விசாலமான- வட்ட வடிவ முற்றம் போன்ற ஓர் இடத்தில், உயரமான பீடத்தில்... சிவபெருமானும் மகா விஷ்ணுவும் ஒன்றாக இணைந்து ஹரிஹரனாகக் காட்சி தருகிறார்கள். ஆம், சிலையின் வலப் பாகம்- ஹரியின் தோற்றம்; இடப் பாகம்- ஹரனின் தோற்றம். இந்த ஹரிஹர மூர்த்தத்துக்கு வில்வம் மற்றும் துளசி மாலைகள் சாத்தப்படுகின்றன. இந்த இறைவனை கங்கை நீரால் நாமே அபிஷேகிக்கலாம்!

இந்தக் கோயிலை எழுப்பியது யார் என்பதற்கான சரித்திரச் சான்றுகள் எதுவும் இல்லை. ஆனாலும், முற்காலத் தில் இந்தப் பகுதியில் அடிக்கடி எழும் சைவ- வைணவ தர்க்கங்கள் மற்றும் பிரச்னைகளைப் புறந்தள்ளி, மக்களிடம் ஒற்றுமையை வலியுறுத் துவதற்காக இந்த ஆலயம் எழுப்பப் பட்டதாகக் கூறுவர். விஸ்வாமித் திரருடன் மிதிலை சென்ற ஸ்ரீராம- லட்சுமணர்கள் இந்தக் கோயிலை எழுப்பியதாகவும் கூறுவர்.

கோயிலுக்கு அருகில் உள்ளது 'கோன்ஹரா' படித்துறை(கோன்ஹரா என்றால் 'தோல்வி யுற்றது யார்?' என்று அர்த்தம்). இங்குதான் கஜேந்திர மோட்சம் நடந்தேறியதாம் (கஜேந்திர மோட்சம் நடந்த இடம் என்று பல தலங்களையும் குறிப்பிடுவர்)! சண்டையில் தோற்றது யானையா, முதலையா? வாதத்தில் தோல்வி யுற்றது சைவமா, வைணவமா என்ற கேள்வி எழுந்த இடத்துக்கு கோன்ஹரா என்ற பெயர் எவ்வளவு பொருத்தம், பாருங்கள்!

ஐப்பசி பௌர்ணமி அன்று, இங்குள்ள கங்கை யில் நீராடி, ஹரிஹரனை கங்கா தீர்த்தத்தால் அபிஷேகித்த பின்னரே சந்தை கூடுகிறது. இந்தப் படித்துறையில் நீராடிய யானைகள், வரிசையாக கோயிலை வலம் வந்து இறைவனை தரிசிக்கும் அழகே அழகு! பின்னர், இந்தத்
தீர்த்தக் கட்டத்தில் பக்தர்கள் தீபமேற்றி வழிபடுகிறார் கள். இந்தத் திருநாளன்று துவங்கும் சோன்பூர் சந்தை, சுமார் 21 அல்லது 25 நாட்கள் வரை நடைபெறுகிறது. இந்த சந்தையில், குண்டூசி முதல் யானை வரை சகலமும் கிடைக்குமாம்!

கோயில் விழா, கோன்ஹரா படித்துறை, சான்பூர் சந்தை - இந்த மூன்றுக்கும் என்ன உறவு? இது குறித்த கதையைப் பார்ப்போமா?

திரிகூட பர்வதத்தின் நடுவே இருந்த நீர் நிலையில், தனது ஆசை நாயகிகளுடன் ஜலக்கிரீடையில் இருந்தான் கந்தர்வத் தலைவன் ஹூஹூ.

அப்போது, ஒரு முனிவரும் அங்கு நீராடிக் கொண்டிருந்தார். மகிழ்ச்சியில் திளைத்திருந்த ஹுஹு, நீருக்குள் மூழ்கிச் சென்று, முனிவரது கால்களை வாரி விட்டான். இதனால் கோபம் கொண்ட முனிவர், 'ஹுஹு'வை முதலையாகும்படி சபித்தார். தன் தவறு உணர்ந்து அவன் மன்னிப்பு கேட்க, 'பரந்தாமனின் அருளால் விமோசனம் பெறுவாய்' என்று கூறிச் சென்றார் முனிவர்.

அதே வேளையில், விஷ்ணு பக்தனான இந்திரயுத்யும் னன், ஆழ்ந்த தியானத்தில் இருந்தான். அப்போது, அங்கு வந்த அகத்திய முனிவரை அவன் வரவேற்கத் தவறி னான். இதனால் கோபமுற்ற அகத்தியர், யானையாக மாறும்படி அந்த மன்னனை சபித்தார். அவன் சாப விமோசனம் வேண்டவே, 'பரந்தாமன் அருளால் விமோசனம் கிடைக்கும்!' என்று அருளிச் சென்றார் அகத்தியர்.

இதன்பின்னரே, படித்துறையில் யானை- முதலை சண்டையும் கஜேந்திர மோட்சமும் நிகழ்ந்ததாக இங்கே சொல்கிறார்கள்.

ஸ்ரீசக்கரத்தால் அறுபட்ட முதலை, கந்தர் வனாக உருப்பெற்று சொர்க்கம் சென்றது. கஜேந்திரனுக்கு சாபவிமோசனம் அளித்த பரந்தாமன், மன்னனை வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்றார்! சிவபெருமான் மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அவர்களுக்குத் தரிசனம் அளித்தார்கள்.

இதையட்டியே ஹரிஹர்நாத்ஆலயமும், அதைச் சுற்றியுள்ள சிறு கோயில்களும் தோன்றியதாகச் சொல்வர். கஜேந்திர மோட்சத்தை பறைசாற்றும் சிலை ஒன்றை, படித் துறைக்குச் செல்லும் வழியில் காணலாம். ஐப்பசி பௌர்ணமியன்று, 'கோன்ஹரா' தீர்த்தக்கட்டம் அருகில் நடைபெறும் கஜேந்திர வழிபாடு, ஹரிஹர் நாத் திருவிழா மற்றும் சோன்பூர் மேளா ஆகிய விழாக்களைக் காணக் கண் கோடி வேண்டும்!

Comments