குழந்தை வரம் அருளும் துர்வாச முனிவர்!







'குந்திதேவி செய்த பணிவிடைகளால் மகிழ்ந்த துர்வாச முனிவர், அவளுக்கு மகிமை மிக்க ஒரு மந்திரத்தை உபதேசித்தார். குந்தி தேவி, இந்த மந்திரத்தை... சூரியன், இந்திரன், வாயு, தர்மதேவன் மற்றும் அஸ்வினி குமாரர்கள் ஆகியோரை தியானித்து ஜபித்து, கர்ணனையும் பாண்டவர்களையும் பெற்றெடுத் தாள்!' என்கிறது மகாபாரதம்.



பாரதக் கதை நிகழ்ந்த துவாபர யுகத்தில் மட்டு மல்ல, இந்த கலி யுகத்திலும்... குழந்தை வரம் வேண்டி தம்மை வழிபடுவோருக்கு அந்த பாக்கியத்தைத் தந்தருள்கிறார் துர்வாசர்!

கிருஷ்ணகிரியில் இருந்து மேற்கே சுமார் 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊர் ராயக்கோட்டை. இங்கு, ஓங்கி உயர்ந்து நிற்கும் சிவதுர்வாச மலையில் தான் துர்வாசர் தவம் செய்த குகை உள்ளது.


அடிக்கடி தம்மை தரிசிக்க வரும் அன்பர்களால் தனது தவத்துக்கு இடையூறு ஏற்படுவதாகக் கருதிய துர்வாசர், குகையின் வாயிலை அடைத்துக் கொண்டு விட்டாராம்! இன்றும் இந்தக் குகையில் அவரது அருட்கடாட்சம் நிறைந்திருப்பதாக இந்தப் பகுதி மக்கள் நம்புகிறார்கள்! புரட்டாசி மாத சனிக் கிழமைகளில் இந்தக் குகை வாயிலில் சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதில், புது மணத் தம்பதிகளும் குழந்தை பாக்கியம் வேண்டுவோரும் கலந்து கொண் டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சிவதுர்வாச மலையில் மட்டுமல்ல,இந்த ஊரில் உள்ள ஸ்ரீசோமநாதேஸ் வரர் கோயிலிலும் துர்வாசரை தரிசிக்கலாம்.ஒரு காலத்தில், 'ஜகதேவ ராயக் கோட்டாள்' என்று வழங்கப்பட்ட இந்தப் பகுதியை, ஜகதேவ ராயர் எனும் சிற்றரசர் ஆட்சி செய்தார். இவர் சிறந்த சிவபக்தர். துர்வாச முனிவரின் பெருமையையும் அவர் வழிபட்ட சுயம்பு லிங்கத்தின் மகிமையையும் அறிந்த இந்தமன்னர், இங்கு ஒரு சிவாலயம் அமைக்க விரும்பினார். அப்படி (கி.பி. 13-ஆம் நூற்றாண்டில்), உருவானதே ஸ்ரீகாமாட்சியம்மன் சமேத ஸ்ரீசோமநாதேஸ்வரர் ஆலயம்.

மூன்று நிலை ராஜ கோபுரம் மற்றும் விஸ்தாரமான பிராகாரத்துடன் அழகுற அமைந்திருக்கிறது திருக் கோயில். உள்ளே கருவறையில் சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார் ஸ்ரீசோமநாதேஸ்வரர். துர்வாச முனிவரால் வழிபடப்பட்ட ஸ்வாமி இவர் என்பதற்கு சாட்சியாக கருவறையிலேயே துர்வாசரின் தரிசனம்.

ஆம்... ஸ்ரீசோமநாதேஸ்வரரை, துர்வாசர் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவது போன்றதொரு சிற்பத்தை கருவறையில் காணலாம். இங்கு, துர்வாசருக்கு தனிச் சந்நிதியும் உண்டு. ஸ்ரீகாமாட்சி அம்பாள் நான்கு கரங்களுடன், அழகே உருவாக தரிசனம் தருகிறாள் இந்த அம்பிகை.

இந்தக் கோயிலின் சிறப்பம்சம்- பிராகாரத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் பஞ்சலிங்க சந்நிதிகள். தனித்தனியே அமைந்திருக்கும் இந்தச் சந்நிதிகளில் பஞ்ச பூதங்களைக் குறிக்கும் வகையில் காட்சி தரும் பஞ்ச லிங்கேஸ்வரர் களை தரிசிக்கலாம்.

தவிர ஸ்ரீவீரபத்திரர், ஸ்ரீஸ்வர்ண பைரவர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் மற்றும் நவக்கிரக சந்நிதிகளும் இங்கு உண்டு. மேலும் ஸ்ரீநர்த்தன கணபதி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீலிங்கோத்பவர், ஸ்ரீபிரம்மா மற்றும் ஸ்ரீதுர்கை ஆகியோர் கோஷ்ட மூர்த்திகளாக அருள் புரிகின்றனர். ஸ்தல விருட்சம் பாரிஜாத மரம்.

இந்தக் கோயிலின் மற்றுமொரு சிறப்பம்சம் திருக் கயிலாய வாகனம் (ஸ்வாமியையும் அம்பாளையும் கயிலாயமலையோடு சேர்த்து ராவணன் சுமப்பது போன்ற அமைப்பே திருக்கயிலாய வாகனம்). சுமார் 10 அடி அகலம்; 7 அடி உயரத்துடன் திகழும் இந்த வாகனத்தில் இடம் பெற்றிருக்கும் ராவணன் சிலை ஒரே மரத்தால் ஆனதாம்!

ஆலயத்தின் தென்கிழக்குப் பகுதியில் (கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை) உள்ளது வஜ்ஜிரநாதேஸ்வரர் தீர்த்தம்.தன்னுடைய சகோதரர்களது தாகத்தைத் தணிப்பதற்காக, அர்ஜுனன் தனது வஜ்ராயுத்தை பூமியில் கீறியதால் உண் டான ஊற்று இது என்கிறார்கள். இந்த தீர்த்தத்தில் நீராடி விட்டு, பூஜைகள் செய்து வந்தாராம் துர்வாசர். இந்த புண் ணிய தீர்த்தத்தில், மூதாதையர்களுக்கு பிண்டம் வைத்து வழிபட்டால், இறந்த முன்னோர்கள் மோட்சம் அடைவர் என்பது நம்பிக்கை.

கார்த்திகை, மார்கழி, தை-1 (உத்திரா யன புண்ய காலம்), ஆருத்ரா தரிசனம் முதலான நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

சித்ரா பௌர்ணமி அன்று, ஏராளமான பக்தர்கள் சிவ துர்வாசமலையை கிரிவலம் வருவர். அப்போது, சோமஸ்கந்தர், பிள்ளையார், ஸ்ரீதேவி-பூதேவி சமேத ஸ்ரீநாராயணர், துர்வாசர், மாரியம்மன், செல்லாபுரி அம்மன் மற்றும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட உற்சவர்கள், வலம் வருவது கண் கொள்ளாக் காட்சி!

Comments