சிவபெருமானின் அட்ட வீரட்டான திருத் தலங்களில் (பிரம்மனின் சிரம் கொய்தது, யானைத் தோல் போர்த்தியது உள்ளிட்ட சிவனாரின் வீரச் செயல்கள் நிகழ்ந்த எட்டுத் தலங்களை, அட்ட வீரட்டான தலங்கள் என்பர்) வழுவூர் ஒன்று. மயிலாடுதுறைக்கு அருகே உள்ளது. யானையின் வாய் வழியாக அதன் உடலுக்குள் புகுந்து, அதைப் பிளந்து கொண்டு வெளியே வந்தார் சிவபெருமான். பிறகு, யானையின் தோலை உரித்து, அதைத் தன் மேல் போர்த்திக் கொண்டு காட்சி தந்தார். இது, வழுவூர் தல புராணம்.
வழுவூருக்குத் தென்கிழக்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் பண்டாரவாடை என்கிற சிறு கிராமம் அமைந்துள்ளது. இதன் புராண காலத்துப் பெயர் பர்வதபுரம். வழுவூரில் நிகழ்ந்த வீரட்டான சம்பவத்துடன் தொடர்புடைய தலமாக பண்டாரவாடை இருப்பது குறிப்பிடத் தக்கது. 'சுதபுரமகாத்மியம்' எனப்படும் வழுவூர் வீரட்டம் பற்றிய வடமொழி புராண நூலின் 17-வது அத்தியாயத்தில், பண்டாரவாடை திருத் தலம் பற்றி குறிக்கப்பெற்றுள்ளது. 'பண்டாரவாடை' என்று பொதுவாகச் சொன்னாலும்... அஞ்சல் வசதிக்காக, '96 பண்டாரவாடை' என்றே அனைத் திலும் குறிக்கிறார்கள்.
பண்டாரம் என்ற சொல்லுக்குப் பல பொருள் உண்டு. பொதுவாக, சிவபெருமானைக் குறிக்க வும், துறவிகளைக் குறிக்கவும் இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள இறைவன் திருநாமம் ஸ்ரீகயிலாசநாதர். அதற்கேற்றாற் போல் ஒரு சிறிய மலை மேல் தரிசனம் தருகிறார். இந்த ஸ்ரீகயிலாசநாதரை தரிசித்தால், திருமாலைத் தரிசித்த பலனும் சேர்ந்து கொள்கிறது. எப்படி?
கஜ (யானை) சம்ஹாரம் முடிந்து தாருகாவனத்தில் இருந்து வழுவூருக்கு இறைவனார் திரும்பும்போது, பண்டாரவாடையின் வழியாக பயணம் அமைந்தது. அப்போது, சிவனின் அம்சமாக லிங்க பாணமும், கஜ சம்ஹார நிகழ்ச்சிக்கு மோகினி வடிவில் இறைவனாருடன் துணை வந்த விஷ்ணுவின் அம்சமாக ஆவுடையாரும் இணைந்து இங்கே கயிலாசநாதராக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதை பிரதிஷ்டை செய்தவர் ஈசனே என்று தல புராணம் சொல்கிறது. எனவேதான், இந்த கயிலாசநாதரை தரிசித்தால், சிவனையும் விஷ்ணுவையும் சேர்ந்து தரிசித்த பலன் கிடைக்கிறது. மிகவும் புராதனமான கோயில் இது.
இந்தக் கோயிலில் ஸ்ரீகயிலாசநாதர் குடி கொண்டிருக்கும் கருவறை அமைப்பை, 'மாடக்கோயில்' என்பர். அதாவது இறைவனின் சந்நிதி தரைத் தளத்தோடு இல்லாமல், சற்று உயரே- சுமார் பத்தடி உயரத்தில் அமைந்திருக்கும். படிகள் ஏறிப் போய்த்தான் மூலவரான ஈசனைத் தரிசிக்க முடியும். அதே போல் சில படிகள் ஏறிப் போய்த்தான் பண்டார வாடை ஸ்ரீகயிலாசநாதரைத் தரிசிக்கிறோம்.
கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் இந்த ஆலயத்தைக் கட்டிய பெருமைக்கு உரியவன்- கோச்செங்கட்சோழன். இதே போன்ற மாடக்கோயில் அமைப்பில் மொத்தம் 70 கோயில்களை ஈசனுக்காக இந்த மன்னன் கட்டி னானாம். மாடக்கோயில்களாக இவன் கட்டியதற்கு சுவாரஸ்யமான ஒரு கதை உண்டு.
இந்த மன்னன், தனது முற்பிறவியில் ஒரு சிலந்தி யாக இருந்தான். சிவபக்தி நிரம்பி இருந்ததால், திருவானைக்கா ஜம்புகேஸ்வரரை தினமும் வணங்கி வந்தான் (இந்தப் புண்ணியத்தால்தான் மறு பிறவியில் - மன்னனாக- கோச்செங்கட்சோழனாகப் பிறந்தான்). ஸ்ரீஜம்புகேஸ்வரருக்கு விதானம் அமைப்பதாக எண்ணி, லிங்கத் திருமேனியின் மேல் வலைப் பின்னும் சிலந்தி.
அதே காலகட்டத்தில் யானை ஒன்றும் ஸ்ரீஜம்புகேஸ் வரரை வழிபட்டு வந்தது. சிலந்தி வழிபட்டுச் சென்ற தும் அங்கு வரும் யானை, ஜம்புகேஸ்வரர் அருள் பாலிக்கும் திருவிடத்தை சுத்தம் செய்யும் நோக்கில் சிலந்தி வலையை பிய்த்தெறிந்து விட்டு, முறைப்படி
ஈசனை வழிபட்டுச் செல்லும். இதையறிந்து கோபம் கொண்ட சிலந்தி, ஒரு நாள் யானையின் துதிக்கையில் புகுந்து கடித்துத் துன்புறுத்தியது. வலி பொறுக்காத யானை, துதிக்கையை தரையில் அடித்து துடிதுடித்து இறந்தது. அதன் தாக்குதலால் சிலந்தியும் இறந்தது.
யானையின் தொண்டு 'நோன்பு' ஆதலால் அதற்கு முக்தி அருளினார் சிவனார். சிலந்தியின் தொண்டு 'சீலம்' ஆதலால் அது, மன்னனாகப் பிறக்கும்படி அருளினார். அதன்படி சிலந்தி, கோச்செங்கட் சோழனாகப் பிறவி எடுத்தது. முன்ஜென்ம நினைவால் சிவ பக்தியை மறவாத மன்னன், போன பிறவியில், யானைகள் தனக்கு இழைத்த தீங்கை மனதில் கொண்டு, யானைகள் கருவறைக்குள் நுழைய முடியாதவாறு மாடக் கோயில்களாகக் கட்டினானாம்.
திருமங்கையாழ்வார், கோச்செங்கட்சோழனைப் பற்றிச் சொல்லும்போது, 'ஈசற்கு எழில்மாடம் எழுபது செய்து உலகாண்ட திருக்குலத்து வளச் சோழன்' என்று போற்றுகிறார். இத்தகு பெருமை வாய்ந்த கோச்செங்கட்சோழன் கட்டிய 70 ஆலயங்களுள் ஒன்றுதான், பண்டாரவாடை ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோயில். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று மூன்றிலும் சிறப்பு கொண்டது பண்டாரவாடை. தவிர வரலாறு, புராணம் என்று இரண்டிலும் முக்கியத்துவம் பெற்ற தலம். இங்கு, மலை மேல் குடி கொண்ட ஈசனாக- ஸ்ரீகயிலாசநாதராக அருள் பாலிக்கிறார் இறைவனார். பெருமைகள் மிகுந்த அந்த ஆலயத்தைத் தரிசிப்போம், வாருங்கள்!
அழகிய இளைஞனாக ஸ்ரீபிட்சாடன ரும், எழில் கொஞ்சும் மோகினியாக மகா விஷ்ணுவும் வடிவம் எடுத்து தாருகாவனம் சென்று, அங்கு ஆணவத்துடன் வசித்து வரும் ரிஷிகளுக்கும் அவர்களது பத்தினி களுக்கும் பாடம் புகட்டிய கதை பலருக் கும் தெரிந்திருக்கும். அந்தக் கதையைக் கொஞ்சம் சுருக்கமாகப் பார்ப்போம்.
பண்டாரவாடைக்குக் கிழக்கே சுமார் இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தாருகாவனம். ஆம்! புராண காலத்தில் வழங்கப்பட்ட அதே பெயர்தான் இன்றும் இந்தக் குக்கிராமத்துக்கு வழங்கப்பட்டு வருகி றது. புராண காலத்தில் தாருகாவனத்தில் குடி கொண்ட ரிஷிகள், சிவபெருமானை விட தாங்களே உயர்ந்தவர்கள் என்ற மமதையில் இருந்தனர்! தங்களது இடையறாத தவத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற சில அற்புத சக்திகளால் கர்வம் கொண்டு, மயங்கித் திரிந்தனர்; ஆசார- அனுஷ்டானங்களைத் துறந்தனர். மொத்தத்தில், தங்களது தவ வாழ்வுக்கும், சுக வாழ்வுக்கும் காரணமான வழுவூர் ஈசனை வணங்க மறந்தனர்.
பார்த்தார் வழுவூரார்... ரிஷிகளை நல்வழிப்படுத்தி, அவர்களுக்குப் புத்தி புகட்ட விரும்பினார். ஒரு திருவிளையாடல் அரங்கேறியது. வழுவூர் ஆலயத் தில் இருந்து பிட்சாடனமூர்த்தியாக உருமாறி, தாருகாவனம் நோக்கிப் புறப்பட்டார். இறைவன் எடுத்த இந்த பிட்சாடனர் உருவைப் பார்த்தால், எத்தகைய தேவதையும் சொக்கிப் போவாள். அப்படி ஒரு இளமை ததும்பும் வடிவம் பிட்சாடனருக்கு!
ரிஷிகளின் மனைவியரை மயக்கி, அவர்களைத் திருத்த பிட்சாடனர் தேவை. அதே நேரம், கண் போன போக்கில் திரியும் ரிஷிகளை நல்வழிப்படுத்தி, அவர்களை மீட்டுக் கொண்டு வர- நளினமான ஒரு நங்கை தேவை ஆயிற்றே! மகேஸ்வரரின் மைத்துனரான மகா
விஷ்ணுவும், அழகு ததும்பும் மோகினியாக வடிவம் எடுத்தார்.இருவரும் தாருகாவனத்துக்குள் நுழைந்தனர். மோகினியின் அழகில் மயங்கிய ரிஷிகள், அவள் (மகா விஷ்ணு) பின்னால் சென்றனர். அவர்களது மனைவியர், பிட்சாடனர் (சிவபெருமான்) பின்னால் அலைந்தனர். இரு தரப்பினரிடத்தும் மோகத்தை உருவாக்கி, அவர்களை நிலை குலைய வைத்தனர் பிட்சாட னரும் மோகினியும்!
வெகு நேரம் கழித்தே நடந்த உண்மை ரிஷிகளுக்குப் புரிந்தது. இதுவரை தங்களது தவத்துக்கும் வேள்விக்கும் உதவியாக இருந்த மனைவியர், யாரோ ஒரு ஆடவரின் பின்னால் மோக வெறியுடன் சுற்றுவது தெரிந்து, இதற்கெல்லாம் காரணமான பிட்சாடனர் மீதும், மோகினி மீதும் கடும் கோபம் கொண்டனர். பிட்சாடனரை அழிக்க வேள்வி செய்தனர்.
ஆதி மூலத்தையே அழிக்க வேள்வியா? வெகுண்ட இறைவனார், வேள்வித் தீயில் இருந்து தோன்றிய தீய சக்திகளை நொடிப் பொழுதில் ஒழித்தார். கோபம் அடங்காத ரிஷிகள், தங்கள் தவ சக்தியால் மதம் கொண்ட யானை ஒன்றை உருவாக்கி, பிட்சாடனர் மீது ஏவினர். அப்போது அணுவைப் போன்ற சிறு வடிவம் எடுத்து, மத யானையின் வயிற்றுக்குள் புகுந்த பிட்சாடனர், அதன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தார். அந்த யானையின் தோலைத் தன் மேல் போர்த்திக் கொண்டு, வீரத் தாண்டவம் புரிந்தார். இதுவே, வழுவூர் வீரட்டானத்தின் கதை.
அதன் பிறகு, ரிஷிகளுக்கு தவத்தின் மேன்மையை உணர்த்தி, ''உங்கள் தவ வலிமையால் கிடைத்த அற்ப சக்திகளை நம்பி, அவஸ்தைப் பட்டது போதும்... இனியாவது, விழித்துக் கொண்டு ஆக வேண்டியதைப் பாருங்கள். நிலை இல்லாத உங்களது போக்கைத் திருத்தவே இந்த நாடகம். இனியும், மதி மயங்கித் திரியாதீர்கள்'' என்று அறிவுரையும் ஆசியும் வழங்கி விட்டு, வழுவூரை நோக்கி நடையைக் கட்டினார் பிட்சாடனர். உடன், மோகினியும் பின்தொடர்ந்தாள்.
வழியில், பண்டாரவாடை தலத்துக்கு வந்தபோது, மோகினி உடலின் ஒரு பகுதி ஆவுடையாராகவும், பிட்சாடனர் உடலின் ஒரு பகுதி லிங்க பாணமாகவும் ஆனது. இந்த சிவலிங்கத்தை வழுவூர் ஈசனே இங்கு பிரதிஷ்டை செய்து விட்டு, வழுவூர் சென்றாராம். இத்தகு பெருமைக்குரியதுதான், பண்டாரவாடையில் நாம் தரிசிக்கும் பிரமாண்ட லிங்கத் திருமேனி- ஸ்ரீகயிலாசநாதர்.
கடந்த 1957 மற்றும் 1980-ஆம் ஆண்டுகளில் ஸ்ரீகயிலாசநாதர் ஆலயத்துக்கு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பிறகு இப்போதுதான் கும்பாபிஷேகம் செய்ய இருக்கிறார்கள். ஆலயத்தைத் தரிசனம் செய்வோமா?
பர்வதத்தின் (மலையின்) மேல் காட்சி தரும் இறைவன் என்பதால், பண்டார வாடையை பர்வதபுரம் என்றும், இந்த ஈஸ்வரனை பர்வதலிங்கம் என்றும் சொல்வதுண்டு. கட்டு மலையின் மேல் (கட்டி வைக்கப்பட்ட செயற்கையான மலை) கயிலாச நாதரைத் தரிசிப்பது, கயிலாய மலைக்கே சென்று தரிசிப்பது போன்ற இறை அனுபவத்தைத் தரும் என்கின்றனர், இங்குள்ள அடியார்கள். தரை மட்டத்தில் இருந்து சுமார் பத்தடி உயரத்தில் இறைவன் திருச்சந்நிதி.
ஸ்ரீகயிலாசநாதரின் கருவறைக்கு அர்த்த மண்டபம், மகா மண்டபம் மற்றும் நந்திதேவரும் துவாரபாலகர்களும் உண்டு. பிரமாண்ட லிங்கத் திருமேனி. உயரமான பாணம். கயிலாயநாதரைத் தரிசிக்கும்போது உடலும் உள்ளமும் இளகுகிறது. தாருகாவனத்து ரிஷிகளை நல்வழிப்படுத்திய நாயகன், கலியுக மக்களையும் நல்வழிப்படுத்த வேண் டும். கருவறையை வலம் வர முடியும். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர், விஷ்ணு துர்கை ஆகிய சிலா விக்கிரகங்கள்.
பர்வதத்துக்குக் கீழே அம்பாள்- ஸ்ரீசௌந்தரநாயகி, தெற்கு நோக்கி, நின்ற கோலத்தில் அருள் பாலிக் கிறாள். அட்சமாலை, தாமரை தாங்கிய கோலத்தில், நான்கு திருக்கரங்கள். அகிலம் காக்கும் அன்னையை வணங்குகிறோம். ஸ்ரீகயிலாசநாதரையும், சௌந்தர நாயகியையும் வழிபட்டால், புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்தப் பேறு கிடைக்கும்; திரு மணத் தடை உள்ளவர்களுக்கு, விரைவில் திருமணம் கைகூடும் என்கிறார் ஆலய அர்ச்சகர்.
ஆலயத்தில் ஏராளமான சந்நிதிகள்; சிலா விக்கிரகங்கள். விஷ்ணுவோடு இந்த ஆலயம் சம்பந்தப்பட்டிருப்பதால் பிராகார வலத்தில் ஸ்ரீதேவி- பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாளுக்கும் இங்கே கீழே- ஒரு சந்நிதி உண்டு. இந்தப் பெரு மாளுக்கு பலிபீடம், கருடாழ்வார் உண்டு. தவிர விஷ்வக்சேனர், பட்டாபிஷேகக் கோலத்தில் ஸ்ரீராமர்- சீதை- லட்சுமணர்- ஆஞ்சநேயர், கன்னிமூல கணபதி, வள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமண்யர், சஹஸ்ர லிங்கம், ஸ்ரீமகாலட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகிய திரு மேனிகளுக்கு சந்நிதிகள். சனைச்சரன், கால பைரவர், விஷ்ணு துர்கை (கோஷ்டத்தில் இருப்பது தவிர இன்னொரு வடிவம்), சூரியன், சந்திரன், நாகர், தேவியர்களுடன் நவக்கிரக நாயகர்கள், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதண்டாயுதபாணி போன்ற தெய்வத் திருமேனிகளும் இங்கே காணப்படுகின்றன.
பிராகார வலத்தின் போது தல விருட்சமான வெள்ளெருக்கைத் தரிசிக் கிறோம். ஆலயத்துக்கு எதிரே அமைந்துள்ள திருக்குளத்தை, அனந்த தீர்த்தம் என்றும், கிருதாபஹர தீர்த்தம் என்றும் அழைக் கின்றனர். புனிதம் நிறைந்த இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் தோல் வியாதிகளும், உயிர்க்கொல்லி நோய்களும் குணமாகும் என்பது ஐதீகம்.
இந்தத் தீர்த்தத்தின் சிறப்பை நமக்கு உணர்த்து வதற்காக தல புராணம் ஒரு கதை சொல்கிறது.
காவிரியின் தென்கரையில் ஒரு கிராமத்தில் தர்மவான் என்பவன் வசித்து வந்தான். ஆனால், பெயருக்கேற்றவாறு அவன் வாழ்க்கை இல்லை. பலரிடமும் கைநீட்டி ஏதாவது ஒரு பொருளைத் தானம் வாங்கிக் கொண்டிருப்பான். கடவுள் நம்பிக்கை துளிக்கூட இல்லாதவன். பெற்றோரை மதியாமல் இருந்தான்.
ஒரு ஐப்பசி மாதம் துலா ஸ்நானம் செய்வதற்காக மாயூரம் காவிரிக்கரையில் ஏராளமானோர் கூடி இருந்தனர். தர்மவானும் அன்று அங்கே வந்திருந்தான். அப்போது வேட்டுவ குலத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணைக் கூட்டத்தில் பார்த்தான். அவளிடம் நைச்சியமாகப் பேசி, அவளை மணந்து கொண்டான். திருமணத்துக்குப் பிறகும் அவன் திருந்தவில்லை. உயர் குலத்தில் பிறந்திருந்தும், களியாட்டத்தில் மூழ்கி வாழ்ந்தான் தர்மவான்.
போலியான இன்பம் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்? காலம் அவனுக்கு சரியான தண்டனை கொடுத்தது. வாழ்வில் வறுமை
குடி கொண்டது. உடலில் நோய் குடி கொண்டது. இப்போது விழித்துக் கொண் டான். 'இறை பக்தியில் நாட்களைச் செலவிடவில்லையே... சேத்திராடனம் செய்யவில்லையே... தீய செயல்களில் மூழ்கிக் கிடந்து விட்டேனே...' என்று புலம்பினான் தர்மவான். மனைவியுடன் ஒவ்வொரு தலமாகச் சுற்றினான். தீர்த்தங்களில் நீராடி னான்; சிவ தரிசனம் செய்தான். 'பிழை பொறுத்து என்னை ஆட்கொள்ள வேண்டும்!' என்று இறைவனிடம் பிரார்த்தித்து வந்தான். யாத்திரையின் ஒரு பகுதியாக ஒரு நாள், பண்டாரவாடைக்கு வந்து, கயிலாசநாதரை மனமுருகி வேண்டினான்.
அவனது வேண்டுதலுக்கு செவி சாய்த்து, அம்பிகையுடன் அவனுக்குக் காட்சி தந்தார் சிவபெருமான். 'உனது பாவங்கள் தொலைய, இங்கே இருக்கும் தீர்த்தத்தில் நீராடு' என்றார். சிவபெருமானே தர்மவானுக்குச் சொன்ன அந்தத் தீர்த்தம்தான், கிருதாபஹர தீர்த்தம்.
இறைவனின் திருவுளப்படி, தீர்த்தத்தில் மூழ்கி எழுந்த தர்மவானும் அவனது மனைவியும் பொன்னைப் போல் தகதக வென்று ஜொலித்தனர். பல காலத்துக்குக் கயவனாக இருந்த தர்மவானின் நாவில் இப்போது கலைமகள் குடிகொண்டாள். பண்டாரவாடை ஸ்ரீகயிலாசநாதரைக் குறித்துப் பதிகங்கள் இயற்றினான். இந்த இறைவனைப் பல காலத்துக்கும் வணங்கி வந்தான்.
பிரதோஷம், வைகாசி மற்றும் ஐப்பசி மாதங்களில் அன்னாபிஷேகம், கார்த்திகை தீப வழிபாடு என்று விசேஷ வைபவங்களும் நடந்து வருகின்றன. சிவனும் விஷ்ணுவும் இணைந்து இந்த ஆலயத்துக்கு வந்ததால், தலம் சிறப்பு; மகாவிஷ்ணு உடன் இருக்க... அவர்கள் இருவரது அம்சம் என்பதோடு, சிவபெருமானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தால், மூர்த்தி சிறப்பு; சகல பாவங்களையும் போக்கும் தன்மை கொண்டது என்பதால், கிருதாபஹர தீர்த்தம் சிறப்பு.
இந்த ஆலயத் திருப்பணிகள் பூர்த்தி ஆகி, மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடக்க, ஸ்ரீசௌந்தரநாயகி உடன் உறையும் ஸ்ரீகயிலாச நாதரை பிரார்த்திப்போம்!
தகவல் பலகை
தலம்: பர்வதபுரம் என்கிற பண்டாரவாடை
மூலவர்: ஸ்ரீகயிலாசநாதர், அருள்மிகு சௌந்தரநாயகி.
சிறப்பு: பிட்சாடனமூர்த்தியாக வந்த இறைவனும், மோகினியாக வந்த திருமாலும் இணைந்து இங்கு சிவலிங்க வடிவில் விளங்குகின்றனர்.
எங்கே இருக்கிறது?: மயிலாடுதுறை- திருவாரூர் சாலையில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது சுந்தரப்பன்சாவடி என்கிற ஊர். இங்கு இறங்கிக் கொண்டு, மேற்கே செல்லும் தார்ச் சாலை யில் சுமார் 1 கி.மீ. பயணித்தால் ஆலயத்தை அடையலாம். திருவாரூரில் இருந்து சுந்தரப்பன்சாவடிக்கு சுமார் 25 கி.மீ. தொலைவு.
எப்படிப் போவது?: மயிலாடுதுறை- திருவாரூர் தடத்தில் பேருந்து வசதி அதிகம்.
தொடர்புக்கு:
எஸ். மகாலட்சுமி சுப்பிரமணியன்
3, கீதகோவிந்தம், துளசி அபார்ட்மெண்ட்,
11/6, குப்புசாமி தெரு, தி.நகர்,
சென்னை- 600 017.
போன்: 044- 2815 2533.
மொபைல்: 98400 53289
எஸ். கணபதி உடையார்,
தலைவர், ஸ்ரீகயிலாசநாத ஸ்வாமி நற்பணி மன்றம்,
96, பண்டாரவாடை, வழுவூர் அஞ்சல்- 609 401
எலந்தங்குடி வழி, மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்.
தொலைபேசி : 04364- 220860
மொபைல் : 94437 06665
Comments
Post a Comment