வடம் பிடிக்க வாய்ப்பளித்த வடிவேலன்


திருக்குற்றாலத்திலிருந்து வடக்கே சுமார் பத்து கி.மீ. தொலைவில் உள்ளது பண்பொழி (பைம்பொழில்). இங்குள்ள சிறு குன்றின்மேல் திருமலைக் குமாரசாமி கோயில் உள்ளது.

இக்கோயில் கட்டும் பணியை பக்தை ஒருவர் இருநூறு ஆண்டுகளுக்கு முன் மேற்கொண்டிருந்தார்.

ஐந்நூறு அடி உயரமுள்ள மலை உச்சிக்கு கல்தூண்களையும், உத்திரங்களையும் கொண்டு செல்லவேண்டியிருந்தது. இதற்கு சில யானைகளும், வேலையாட்களும் பயன்படுத்தப்பட்டனர். உத்திரங்களைக் கட்ட பனை நாரினால் வடம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே பனை நாரினை சேகரிக்க அவர் திருச்செந்தூர் புறப்பட்டார்.

திருச்செந்தூரில் மாசி மகத்தையொட்டி தேரோட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. எளிய காவி உடையில் தேர்முன் முருகனை வணங்க நின்றுகொண்டிருந்தார். கோயில் சேவகர் அந்த அம்மையாரை அடிக்காத குறையாக, தேருக்குப் பின்புறம் பிடித்துத் தள்ளிவிட்டார். முருகனின் அலங்கார தரிசனம் பெறமுடியாத வருத்தத்துடன் அம்மையார் தேரின் பின்னால் நின்று கொண்டிருந்தார்.

இந்த அம்மையாரைத் தள்ளிவிட்ட மறுவிநாடியே அதுவரை ஆடி அசைந்து வந்த தேர் அப்படியே நின்றுவிட்டது. பலபேர் ஒன்று சேர்ந்து இழுத்தும் தேர் இம்மிகூட அசையவில்லை. தேரில் வீற்றிருந்த சிவாசாரியாருக்கு அருள் வந்தது. அவர், `தேருக்குப் பின்புறம் தள்ளிவிடப்பட்ட வயதான அம்மையார் தேரின் வடம் பிடித்து இழுத்தாலன்றி தேர் இவ்விடம் விட்டு நகராது' என்று கூறினார்.

உடனே வயதான அம்மையாரைத் தேடிக் கண்டுபிடித்து, மன்னிப்புக் கேட்டு அவரை தேருக்கு முன் அழைத்துச் சென்று வடம் பிடிக்கச் சொன்னார்கள்.

பக்தர்களின் வேண்டுகோள்படி திருத்தேரின் வடத்தை அந்த அம்மையார் தொட்டு இழுத்ததும், தேர் அசைந்து புறப்பட்டது. அப்பகுதி மக்கள், இவரது தவ வலிமை தெரிந்து இவர் பால் பக்தி செலுத்தினர். மேலும் இவரது தேவை அறிந்து, சுற்றுவட்டார கிராம மக்கள் வண்டி வண்டியாய் பனை நாரினை அவர்கள் பொறுப்பில் பண்பொழி திருமலை கோயிலுக்குக் கொண்டுவந்து சேர்த்தனர்.

அதன்பின், திருச்செந்தூர் முருகனின் அருளால், திருமலைக்கோயில் திருப்பணிகள் துரிதமாக நடந்தன.










மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் காடுகளில் வாழ்ந்தனர். பிறகு ஒரு வருட அஞ்ஞாத வாசத்தை மேற்கொள்ள தகுந்த இடத்தைத் தேடினர். கடைசியாக மத்தியப் பிரதேசத்தில் உள்ள விந்தியாச்சல் மலைத் தொடருக்கும் சாத்புரா மலைத் தொடருக்கும் இடையில் கொடிய மிருகங்கள் வாழும் மலைகள் சூழ்ந்த அடர்ந்த காட்டுப் பகுதியை கண்டுபிடித்தான் பீமன்.

பிரமாண்டமான அந்த மலைகளைக் குடைந்து குகையாக ஆக்கி அதில் தங்குவதற்கு வேண்டிய வசதிகள் செய்து, அன்னியர்கள் யாரும் பார்த்துவிட முடியாதபடி பாதுகாப்பும் செய்தான் பீமன். ஒரு வருட கால அஞ்ஞாத வாசத்தை பாண்டவர்கள் இந்தக் குகைகளில் கழித்தனர். இந்த மலைக் குகைகளை பீமன் கண்டுபிடித்ததால் அவன் பெயராலேயே பீம் பேட்கா (பீமன் குகை) என்று தற்போது கூறப்படுகிறது.

இந்த பாண்டவர் குகை மலைப் பாறைகளில் பச்சிலை சாறுகளைக்கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் இன்றும் காணப்படுகிறது. ஒரு குகையிலிருந்து மற்றொரு குகைக்கு எப்படிச் செல்வது, குகைகளிலிருந்து எப்படி வெளியேறுவது என்பதையெல்லாம் விளக்கும் வரைபடங்கள் பாறைகளில் காணப்படுகின்றன.

இந்த பீம் பேட்கா மலைப்பகுதியில், பூமி மட்டத்தில் ஒரு சிறிய பாண்டவர் கோயில் உள்ளது. இக் கோயிலுக்கு முன் நீர் நிறைந்த பெரிய தண்ணீர்த் தொட்டியுள்ளது. காட்டு மிருகங்கள் தண்ணீர் குடிக்க இங்கு வரும் என்று, பாண்டவர் கோயில் பூசாரி கூறுகிறார். அஞ்ஞாத வாசத்தை பாண்டவர்கள் விராட நாட்டில் மாறு வேடத்தில் கழித்தனர் என்றும் சொல்கிறார்கள்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலிலிருந்து
48 கி.மீ. தூரத்தில் இந்த பீம்பேட்கா உள்ளது.

Comments