இலைக் கட்டு வந்த அதிசயம்!


காஞ்சி காமகோடி பீடத்தில் 59-வது பீடாதிபதியாக இருந்தவர் ஸ்ரீபோதேந்திரர். பகவந் நாம சங்கீர்த்தனத்தையே தனது மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர்.

ராம நாம ஜபத்தை உலகெங்கும் பரப்ப வேண் டும் எனும் நோக்கத்தில், தன் சீடர் ஒருவரை 60-வது பீடாதிபதியாக நியமித்து விட்டு, யாத்திரை புறப்பட்டார் ஸ்ரீபோதேந்திரர். பின்னர், ஸ்ரீராம நாமத்திலேயே லயித்து ஸ்ரீராம சிந்தையில் ஐக்கியமான ஸ்ரீபோதேந்திரர், பிரஜோத்பத்தி ஆண்டு (1692) புரட்டாசி மாதம் பௌர்ணமி திதியில் ஸித்தி அடைந்தார். இந்த மகானின் அதிஷ்டானம், கும்பகோணம்- மயிலாடுதுறை வழியில், ஆடுதுறைக்கு அருகே கோவிந்தபுரத்தில் உள்ளது.

இந்த மகானின் மகத்துவத்துக்குச் சான்றாக, பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு சம்பவம்:

ஸ்ரீபோதேந்திரரது பிருந்தாவனத்தில் ஆராதனை முடிந்து, அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்று கட்டுக்கடங்காத பக்தர் வெள்ளம். கூட்டத்தில் பலரும் சாப்பிடக் காத்திருந்த வேளையில், திடீரென வாழையிலை தீர்ந்து விட்டது.

மடத்தில் உள்ளவர்கள் தவித்துப் போனார்கள். இலைக் கட்டுகளை வாங்க வேண்டும் என்றால் கும்பகோணம் அல்லது ஆடுதுறைக்குத்தான் செல்ல வேண்டும். மடத்தைச் சேர்ந்த சிலர் இலைக் கட்டு வாங்க புறப்பட்ட வேளையில், நான்கைந்து இலைக்கட்டுகளுடன் வந்து இறங்கினார் ஒருவர்.


மடத்து ஊழியர்களுக்குக் குழப்பம். ''யார் நீங்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்?'' என்று விசாரித்தனர்.

அதற்கு அவர், ''பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நான். சிறிது நேரத்துக்கு முன்பு சாமியார் ஒருவர் வந்து 'கோவிந்தபுரம் மடத்துக்கு இலை வேண்டும். உடனே கொண்டு போய்க் கொடு. ஜனங்க சாப்பிடக் காத்திருக்காங்க!'னு சொல்லிட்டு மின்னலென மறைஞ்சுட்டாரு. அவர் சொன்னதும் ஏதோ மந்திரத்துக்குக் கட்டுண்டவன் போல, வாழைத் தோப்பில் இருந்து இலைகளை வேக வேகமாக அறுத்துட்டு ஓடி வந்தேன்!'' என்றார் அந்த விவசாயி. அதற்கு ஏற்றாற் போல் அவரது முகம் ஏகத்துக்கும் வியர்த்திருந்தது.

இதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் உணர்ச்சிப் பெருக்கில் ஸ்ரீபோதேந்திரரின் ஜீவ சமாதியை வணங்கினர். பின்னர், இலைக்கட்டுகளைக் கொண்டு வந்து கொடுத்தவருக்கும் உணவு பரிமாறினர்.

அந்த ஆசாமி சாப்பிட்டு முடித்துக் கிளம்பும் வேளையில், மடத்தில் மாட்டியிருந்த ஸ்ரீபோ தேந்திரர் படத்தைப் பார்த்துவிட்டு, ''இதோ... இந்த சாமியார்தான் என்கிட்ட வந்து மடத்துக்கு இலை கொண்டுவரச் சொன்னார். இவரு போட்டோ ஏன் இங்க இருக்கு?'' என்று கேட்டார், ஆச்சரியமாக.

அவர் கூறியது கேட்டுப் பரவசம் அடைந்த மடத்து ஊழியர்கள், கண்ணீர் மல்க, ஸ்ரீபோதேந்திரரை மனதால் வணங்கி நின்றனர். அதோடு, ஸ்ரீபோதேந்திராளின் தரிசனம் கிடைக்கப் பெற்ற அந்த விவசாயியை உரிய மரியாதையுடன் திருப்பி அனுப்பி வைத்தனர்.

_

Comments

Post a Comment