வளமும் நலமும் தரும் வராக மூர்த்தி





பூமிப் பிராட்டியை மடி மீது தாங்கி புவனம் முழுதும் காத்தருள்புரிபவர் வராஹப் பெருமாள். கடலுள் மூழ்கிக்கிடந்த பூமியை வெளிக்கொணர்ந்து காத்தவர் இவரே. அது முதலே பூமி செழிக்கத் தொடங்கியதால், இவரே ஆதிவராஹப் பெருமாள் ஆனார்.

திருமாலின் ஹயக்ரீவ அவதாரத்தை தரிசிப்பவர்கள் கல்வியும் ஞானமும் பெறுவர் என்பது ஐதிகம். அவரைப் போலவே கல்விக் கண் திறப்பவர், உயர் கல்விக்கு உறுதுணையாக இருப்பவர், ஞானபிரான் என்றெல்லாம் பக்தர்களால் பிரியமுடன் அழைக்கப்படுபவராக ஆதிவராஹப் பெருமாள் அருட்காட்சி தரும் ஆலயம் ஒன்று திருச்சியில் உள்ளது.

சாலையை விட்டு உள்ளடங்கி ஊரின் நடுநாயகமாக கிழக்கு நோக்கி விளங்குகிறது இந்த அழகிய ஆலயம். சுற்றிலும் திருமதிற் சுவர், முகப்பில் ராஜகோபுரம். உள்ளே நுழைந்ததும் விசாலமான அழகிய மண்டபம்.

கருடகம்பம் என அழைக்கப்படும் நெடிதுயர்ந்த ஸ்தூபி, பலி பீடம், கொடிமரம் இவற்றைக் கடந்ததும் கருடாழ்வாரின் தனிச் சன்னதி உள்ளது. பெரிய திருவடியான கருடாழ்வார், இறைவனின் கருவறையை நோக்கியவராக எம்பிரானின் திருவடிகளையே இடைவிடாது சேவித்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்துள்ள மகாமண்டபத்தின் மேல்புறம் ஆண்டாளின் நின்றநிலை திருமேனி சுதை வடிவில் உள்ளது. வடக்குப்புறம் ஆண்டாளின் தந்தை பெரியாழ்வாரோடு, நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், மணவாளமாமுனிகள் ஆகியோரின் திருமேனிகள் உள்ளன.

வாயிலில் ஜெயனும், விஜயனும் துவார பாலகர்களாக சுதை வடிவில் கம்பீரமாகக் காவல் புரிகின்றனர். அர்த்த மண்டபத்தின் வடதிசையில் கண்ணனின் காளிங்கநர்த்தனத் திருவடிவம் உள்ளது.

கருவறையில் மூலவராக ஆதி வராஹப் பெருமாள் வீற்றிருந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார். நான்கு திருக்கரங்களோடு, வலது மேல் கரத்தில் சக்கரத்தையும் இடது மேல் கரத்தில் சங்கையும் தாங்கி நிற்கும் பெருமாளின் வலது கீழ்க் கரம் இறைவி பூமாதேவியின் பாதத்தைப் பிடித்துக் கொண்டிருக்க, இடது கீழ்க்கரம், தன் மடியில் அமர்ந்திருக்கும் பூதேவியை அணைத்துக் கொண்டிருக்கிறது.

இங்கு வராஹப் பெருமாளுக்கு உற்சவ மூர்த்தி கிடையாது. அதற்கு பதிலாக, ராமபிரானே இங்கு உற்சவ மூர்த்தியாக சேவை சாதிக்கிறார். கருவறை ஆராதனை தவிர மற்ற அனைத்தும், உற்சவ மூர்த்தியான ராமபிரானுக்கே நடைபெறுகின்றன.

ராமபிரான் - சீதாபிராட்டி, லட்சுமணன் மற்றும் அனுமனுடன் உற்சவமூர்த்தமாக மூலவரோடு கருவறையில் இருந்தே அருள்பாலிக்கிறார்.

சுமார் 1300 ஆண்டுகள் பழமையான ஆலயம் இது என பக்தர்கள் கூறுகின்றனர்.

ஆதியில் புற்று வடிவில் சுயம்புவாக எழுந்தருளியிருந்த பெருமாளுக்கு, வெகுகாலத்திற்குப் பின்னரே அர்ச்சா மூர்த்தம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகச் சொல்கின்றனர்.

தினசரி மூன்று கால பூஜைகள் இங்கு நடைபெறுகின்றன. காலை 7.30 முதல் 10.30 மணி வரையிலும் மாலை 5.30 முதல் 8 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

சித்திரை மாதப் பிறப்பன்று மூலவருக்கும் உற்சவமூர்த்தியான ராமபிரானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதுண்டு. சித்திரை மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று காவேரி நதியிலிருந்து புனிதநீர் கொண்டு வந்து பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்கின்றனர். அன்று இரவு ராமபிரான், சீதாதேவி, லக்குமணன் ஆகியோர் வீதி உலா வருவது கண் கொள்ளாக் காட்சி. ராம நவமி அன்று ராமபிரான் தன் தாரம் மற்றும் தம்பியுடன் உலா வருவது வழக்கம்.

அதே மாதம் பௌர்ணமி அன்று கஜேந்திர மோட்சமும், அன்று காலையில் ராமபிரான் சீதையுடன் வீதியுலா வருவதும் வெகு சிறப்பாக நடைபெறும்.

சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆனி சுவாதி, ஆடி பூரம், ஆவணி கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி நவராத்திரி, விஜயதசமி, ஐப்பசி மூலம் மற்றும் தீபாவளி, கார்த்திகை, மார்கழி வைகுண்ட ஏகாதசி, தை சங்கராந்தி, மாசி புனர்பூசம், பங்குனி உத்திரம் என்று இந்த ஆலயத்தில் மாதந்தோறும் ஏதாவதொரு திருவிழா நடைபெறுவதும், ராமபிரானும் சீதாபிராட்டியும் வீதியுலா வருவதும் இங்கு நடைபெறும் சிறப்பான அம்சமாகும்.

நவராத்திரி 10 நாட்களும் ஆலயம் விழாக் கோலம் பூண்டிருக்கும்.

புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் கருட சேவையும், திருவீதியுலாவும் கண்டு ராமபிரான் சேவைசாதிக்கிறார்.

கார்த்திகை மாத கைசிக துவாதசி அன்று கருடகம்பத்திற்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

ஆலயப் பிராகாரத்தின் தென்புறம் சக்கரத்தாழ்வார் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

ஆனி மாத சித்திரை நட்சத்திரத்தன்று இவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

ஆலயத்தின் வடக்குப் பிராகாரத்தில் ஆஞ்சனேயருக்கு தனி சன்னதி உள்ளது. அனுமத் ஜெயந்தி அன்று ஆஞ்சனேயருக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.

கல்விக் கண் திறந்து, கல்வியில் உயர்நிலை அடைய இங்கு சேவை சாதிக்கும் ஆதி வராகப்பெருமாளை வேண்டி வணங்கிட, அவரது அருள் அனைவருக்கும் கிட்டுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

தங்களது கோரிக்கை எதுவானாலும் இங்கு வந்து வேண்டும் பக்தர்கள், அவை நிறைவேறியதும், மூலவரான ஆதிவராகருக்கும் உற்சவரான ராமனுக்கும் அபிஷேக ஆராதனை செய்து பகவானின் பிரசாதத்தை பிற பக்தர்களுக்கு வினியோகமும் செய்கின்றனர்.

கல்வி, ஞானம், செல்வம், மணப்பேறு, மகப்பேறு, ஆரோக்யம், குடும்ப ஒற்றுமை என்று உங்கள் கோரிக்கை எதுவானாலும் சரி.... ஒரே ஒரு முறை இத்தலம் வந்து ஆதி வராகரையும், ராமச்சந்திரனையும் தரிசியுங்கள். உங்கள் வேண்டுதல் நிச்சயம் ஈடேறும்!

வழிபடும் வகைகள்

சூரிய பகவானை நமஸ்காரம் செய்ய வேண்டும். அம்மனை வணங்கு-வதுடன் பிரதட்சணம் செய்ய வேண்டும். மகா விஷ்ணுவை அலங்கரித்து வணங்க வேண்டும். கணபதிக்கு ஹோமம் செய்து வழிபட வேண்டும். மகேஸ்வரனுக்கு அபிஜேகம் செய்து துதித்திட வேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது முக்கியம்.

இந்த முறையில் நாம் மனதார வணங்கி வந்தால் வாழ்வில் உயர்நிலையை அடையலாம்.


Comments