முருகன் பற்றிய தகவல்கள்









சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் பிறந்த முருகப் பெருமானைத் `தமிழ்க் கடவுள்' என்றே போற்றுவர். `ஓம்' என்ற பிரணவ மந்திர உட்பொருளைத் தந்தைக்கே உபதேசம் செய்து, `தகப்பன் சாமி' யாக விளங்கும் முருகனின், அருளாடல்கள் கணக்கில் அடங்காதவை.

அவன் புகழ் போற்றும் அற்புதத் தகவல்கள் சில இங்கே...

ஆதிசங்கரர் வகுத்த `கௌமாரம்' என்ற வழிபாட்டு நெறியே முருகப் பெருமான் வழிபாடாகும். ஆதிசங்கரர் காலம் 5000 ஆண்டு பழமைமிக்கது. எனவே `முருகன் வழிபாடு' 5000 ஆண்டுத் தொன்மை மிக்கது.

தமிழும் முருகனும் ஒன்றே.

முருகு+அன்-முருகன்.

`முருகு' என்றால் `அழகு' என்றே பொருள்.

`முருகு' என்ற சொல்லும் மூன்றெழுத்து.

`தமிழ்' என்ற சொல்லும் மூன்றெழுத்து.

தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம் என்ற மூன்று வகை உண்டு.
`தமிழ்' என்ற சொல்லிலேயே இந்த மூவினத்தையும் காணலாம்:

`தமிழ்' என்ற சொல்லில் `த'- வல்லினம். மி -மெல்லினம். `ழ்' -இடையினம்.

அதுபோலவே `முருகு' என்ற சொல்லிலும் `மூவினம்' காணலாம்.

`முருகு' என்ற சொல்லில் மு -மெல்லினம். ரு-இடையினம். `கு' - வல்லினம்.

எனவே தமிழையும் முருகனையும் பிரித்துப் பார்க்க இயலாது. ஆம்! தமிழே முருகன்! முருகனே தமிழ்!

முருகப் பெருமானைக் கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் `கார்த்திகேயன்', `கார்த்திகைபாலன்' என்றும் முருகன் அழைக்கப் பெறுவான்.

என்றென்றும் இளமை குன்றாமல் எழில் மிளிரக் குமரனாகவே காட்சி தருவதால், முருகனைக் `குமரன்' என்றும் அழைப்பர்.

புதுக்கோட்டை மாவட்டம் `குமரமலை' என்ற தலத்தில் குமரன் கோலம் காட்டுகின்றான்.

ஆறுமுகங்களுடன் முருகன் அவதாரம் எடுத்ததால் `ஆறுமுகன்' என்றும் அழைக்கப்பெறுவான் முருகன்.

மயிலை வாகனமாகக் கொண்டதால் `மயில்வாகனன்' என்றும், சேவலைக் கொடியாகக் கொண்டதால் `சேவல் கொடியோன்' என்ற திருப்பெயர்களும் முருகனுக்கு உண்டு.

சரவணப் பொய்கையில் எழிலுற மலர்ந்த முருகனை `சரவணன்' என்றும் போற்றுவர். முருகப்பெருமானை வழிபடுவோர், `ஓம் சரவணபவ' எனப் போற்றுவதும் அறியத்தக்கது.

கையில் வேலேந்திக் காட்சி தருவதால் `வேலன்' `வடிவேலன்' என்றும் போற்றப் பெறுவான் முருகன்.

`கந்து' என்ற சொல்லுக்குப் `பற்றுக்கோடு' என்று பொருள். கந்து+அன்-கந்தன். தம்மை நாடும் பக்தர்களுக்குப் பற்றுக் கோடாகத் திகழ்வதால் முருகனைக் `கந்தன்' என்றும் கந்தவேள் என்றும் போற்றுவதும் பொருத்தம்தானே.

அருணகிரிநாதரின் பிறப்பிடம், மலையே சிவனாகவும், சிவனே மலையாகவும் மலர்ந்த திருவண்ணாமலையே ஆகும். திருவண்ணாமலையில், முருகப் பெருமானால், ஆட்கொள்ளப்பெற்ற அருணகிரிநாதர், இங்குதான் கிளி வடிவம் தாங்கிக் `கந்தர் அனுபூதி பாடினார். திருவண்ணாமலையின் 9 கோபுரங்களில் `கிளிக் கோபுரம்' என்ற பெரிய கோபுரமும் ஒன்று.

முருகப் பெருமானின் பங்குனி உத்திரவிழா, முருகப்பெருமானின் ஆறு படை வீடுகளான திருவாவினன்குடி, (பழம் நீ), திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணிகை, திருஏரகம் எனப்படும் சுவாமிமலை, பழமுதிர் சோலை, குன்று தோராடும் தலங்களான குன்றக்குடி, குன்றத்தூர், மருதமலை, விராலிமலை, தபசு மலை, மலைக்கோவில் (புதுக்கோட்டை மாவட்டம்), கழுகுமலை, வெண்ணெய் மலை, வள்ளி மலை மற்றும் எண் கண், சிக்கல், திருவண்ணாமலை கம்பத்து இளையனார் சன்னதி, முதலான தலங்களில் மிகவும் சிறப்பாக நிகழ்கின்றன.

பங்குனி உத்திரப் பெருவிழாவில், பால்குடங்கள் எடுத்தும், வண்ணக் காவடிகள் எடுத்தும், முருகனைப் பக்தி மேம்பட வழிபாடு செய்வர். முருகப் பெருமான் ஆலயங்கள் மட்டுமல்லாமல், திருமெய்யம் சத்தியமூர்த்தி கோவில், அடையக்குடி ஷ்ரீநிவாசப் பெருமாள் ஆலயம் உள்பட மாலவன் ஆலயங்களிலும் பங்குனி உத்திர விழா சிறப்பாக நிகழ்வதும் அறியத்தக்கது.

முருகனின் சகோதரர்கள் யார்? விநாயகர், ஐயப்பன் இவர்களோடு வீரபாகு தேவர் உள்ளிட்ட நவவீரர்கள்.

சுவாமிமலையில் உள்ள 60 படிகளும் அறுபது தமிழ் ஆண்டுகளைக் குறிக்கும். முருகன் இந்திரனின் ஐராவதம் யானையை அவனிடமிருந்து காணிக்கையாகப் பெற்று தன் வாகனமாக ஏற்றுக்கொண்டு இந்திரனுக்கு அருள் செய்ததும் இந்தத் தலத்தில் தான்.

முருகன் வள்ளியை மணம் புரிந்தது திருத்தணியில்! ஏனைய படை வீடுகளுக்கு இல்லாத பெருமை இத்தலத்திற்கு உண்டு. நான்முகன், திருமால், நாரதர், அகத்தியர் ஆகியோர் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளனர்.

சூரசம்ஹாரத்திற்குப் பிறகு சூரபத்மன் முருகனிடம், தம்மை ஆட்கொண்டு அருள் செய்யும்படி கூறினான். அவ்வாறே தவமிருந்து அசுரன் முருகனுக்கு மயிலாக அமர்ந்து, பிறகு மலையாக மாறினான். அதுவே திண்டிவனத்தை அடுத்துள்ள `மயிலம்' முருகத் தலம்.

சேலம் அம்மாப்பேட்டையில் உள்ளது குமரகிரி முருகன் கோயில். கருப்பண்ணசாமி என்பவர் இந்தக் கோயிலைக் கட்டினார். அவருக்கும் இங்கே தனிச் சன்னதி உள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம் தலத்தில்தான் முருகப் பெருமான் கந்தபுராணம் பாட கச்சியப்ப சிவாச்சாரியருக்கு `திகடச' என்ற அடியை எடுத்துக் கொடுத்தார். கந்தபுராணம் இந்த ஆலயத்தில்தான் அரங்கேற்றப்-பட்டது.

முருகனை மகாவிஷ்ணுவுடன் சம்பந்தப்படுத்திப் பேசுவது அதிகம். `மருகன்', `மருமகன்' என்றும் முருகனைச் சொல்கிறோமே, இது எதனால்? அவர் அம்பாளுக்குச் சகோதரராக இருக்கிற மகாவிஷ்ணுவின் மருமகன் என்பதால்தான் `மால்மருகன்' என்பார்கள். மருமகன் என்றால் மாப்பிள்ளை என்றும் அர்த்தம். `மருமகப் பிள்ளை' என்பார்கள். பூர்வத்தில் வள்ளி - தேவசேனை மகாவிஷ்ணுவின் புத்திரிகள்தான். அதனால் மாமாவான விஷ்ணு இவருக்கு மாமனாராகவும் இருக்கிறார். சிவனுக்கு மகன்-மகாவிஷ்ணுவுக்கு மருமகன் என்ற பெருமை இவருக்கே இருக்கிறது.

வட இந்தியாவில் முருகன் பிரம்மசாரி தெய்வம்தான். சில இடங்களில் சுப்பிரமணியர் கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது கூட இல்லை. வடக்கே அவரை `கார்த்திகேயர்' என்றே சொல்வார்கள்.

வால்மீகி ராமாயணத்தில் பாலகாண்டத்தில் விசுவாமித்திரர் ராம லட்சுமணர்களுக்குச் சொல்கிறார்: ``குமார சம்பவக் கதையைச் சொன்னேன். இது தனத்தையும் கொடுக்கும். புண்ணியத்தையும் கொடுக்கும். இந்த பூலோகத்தில் மட்டும் ஒரு மனிதன் கார்த்திகேயனிடம் பக்தி வைத்துவிட்டால் போதும், தீர்க்காயுள், புத்திர செல்வம், சௌபாக்கியம் எல்லாம் அவனுக்குக் கிடைத்துவிடும். முடிவிலோ ஸ்கந்த லோகத்துக்கே போய் அவருடனேயே நித்திய வாசம் செய்யலாம்.'' இப்படிச் சொல்கிறார், விசுவாமித்திரர்.

தமிழ் மொழிக்கே முருகன் தான் அதிர்ஷ்டமான தெய்வம் என்று கொண்டிருக்கிறார்கள். ஆதி காலம் தொட்டு இங்கே குறிஞ்சி நிலக் கடவுள், அவரே. தொன்மையிலும் தொன்மையான `தொல்காப்பியம்' இதை `சேயோன் மேய மைவரை உலகமும்' என்கிறது. முருகனே சங்கப் புலவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார். மிகப் பழைய `திருமுருகாற்றுப் படை'யில் நக்கீரர் இவர் புகழையே பாடுகிறார். திருமுருகாற்றுப் படையைப் பாராயணம் செய்ய, கடுமையான நோயும் குணமாகிவிடும் என்பது சித்தர்கள் சொல்லியுள்ள உண்மை.

தோகை விரித்து நிற்கும் மயிலின் தோற்றத்தைக் கொண்டது குன்றக்குடி. மலைமேல் ஒன்று, அடிவாரத்தில் ஒன்று என்று இரண்டு முருகன் ஆலயங்கள் இங்குள்ளன.

சென்னை வடபழனி முருகன் கோயில் தெரியும். அதுபோல் வேறொரு வடபழனி திருச்சி-பெரம்பலூர் சாலையில் உள்ளது. இத்தலத்து முருகன் கந்தபெருமான் பழநியில் இருப்பது போல் ஆண்டிக் கோலத்துடன் சிறிய குன்றின் மீது எழுந்தருளியுள்ளார்.

அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியபோது, முருகப்பெருமான் அதைத் தன் மார்பில் செம்பொன் பதக்கமாக எடுத்து அணிந்துகொண்ட தலம் தான் வயலூர். திருச்சியிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ளது.

ஆற்றுப்படை என்றால் வழிகாட்டுவது என்று பொருள். முருகனின் திருவருளைப் பெற வழிகாட்டும் நூல் திருமுருகாற்றுப்படை.

கந்தபுராணம் முருகன் வரலாற்றைக் கூறுவது. இது பார்வதி திருமணத்-தில் தொடங்கி வள்ளி திருமணத்தில் முடிகிறது.

முருகன், நடராஜர் அம்சமாக யாருக்கு, எங்கு, எப்போது காட்சி அளித்தார்? அருணகிரிநாதருக்கு திருச்செந்துரில் 7-ம் உற்சவத்தில்!

பழனி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குமரன் கோயிலுக்கு திருவாவினன் குடி என்றும், குன்றின் மேலே கோவில் கொண்டுள்ள தலத்திற்குப் பழனி என்றும் பெயர். திருவாவினன் குடிப் பெருமானுக்கு வேலாயுதம் என்றும், மலை மீதுள்ள கோயில் சுவாமிக்கு தண்டாயுத-பாணி என்றும் திருப்பெயர்கள்.

முருகன் தலமான பழமுதிர் சோலை வழியே நூபுரகங்கை தீர்த்தம் என்ற நதி ஓடுகிறது. இதை பக்தர்கள் `சிலம்பாறு' என்றும் கூறுவர். மாபலியிடம் மூன்றடி மண் கேட்ட திருமால் உலகளந்த பெருமாளாகி இரண்டாவது அடியாகத் தனது திருவடியை விண்ணில் பதித்தபோது பிரம்மனது கமண்டல நீரால் திருவடி அபிஷேகம் பெற்றார். அந்தப் புண்ணிய நீரானது வழிந்து, சிலம்பாறாக இத்தலத்தில் ஓடுகிறது என்பது ஐதிகம்.

திருப்பூரை அடுத்துள்ள திருமுருகன் பூண்டி தலத்தில் ஒரு தனிச்சிறப்பு, இங்கு முருகன் முன்புறமாக ஐந்து முகத்துடனும் பின்புறம் ஒரு முகமும் கொண்டு பன்னிரு திருக்கரங்களுடன் உள்ளார்.

செந்துறை என்ற முருகன் தலம் ஜெயங்கொண்ட சோழபுரத்தை அடுத்துள்ளது. ஆனால் இப்பகுதி மக்கள் இத்தலத்தை பழனியாண்டவர் கோயில் என்றும், மடத்துக் கோயில் என்றும்தான் குறிப்பிடுகிறார்கள். மெய்வரத் தம்பிரான் என்ற ஒரு சித்தரின் சமாதி இவ்விடம் உள்ளது.

திருச்சியை அடுத்துள்ள விராலிமலை முருகன் தலத்தில் ஏராளமான மயில்கள் காணப்படுகின்றன. அருந்ததி, வசிஷ்டர், காசிப முனிவர், நாரதர் ஆகியோர் விராலிமலைக்கு வந்து வழிபட்டு தாங்கள் பெற்றிருந்த சாபத் துன்பத்திலிருந்து விடுதலையும் விமோசனமும் பெற்றனர் என்பது ஐதிகம்.

சென்னை தண்டையார் பேட்டை அருட்கோட்டம் முருகன் கோயிலில் புத்தர் சன்னதி ஒன்றும் உள்ளது. 1965ஆம் ஆண்டு பர்மாவிலிருந்து அகதிகளாக வந்த பர்மியத் தமிழர்களில் ஒரு பகுதியினர் தண்டையார்பேட்டை பகுதியிலே குடியமர்த்தப்பட்டனர். அவர்கள் பர்மாவிலிருந்து திரும்பும்போது தங்களுடன் ஒரு புத்தர் சிலையையும் கொண்ட வந்து இங்கு வைத்து வழிபடலாயினர். இந்துக் கோவிலில் புத்தர் சிலை வைத்து வழிபடும் முறை புதுமையானது.

Comments