தீர்க்க சுமங்கலியா இரு..!
கல்யாணமான எல்லாப் பெண்களுமே ஆசைப்படக்கூடிய ஆசிர்வாதம் இது.
பெற்றவங்க, பெரியவங்க ஆசிர்வதிச்சா மட்டும் போதுமா? அந்த ஆண்டவனோட ஆசியும் சேர்ந்து கிடைச்சா, தாலிபாக்யம் நிச்சயம் நீடிக்கும் இல்லையா..!?
அப்படி இறைவனோட அருள் கிடைச்சு, மாங்கல்ய பலம் பெற எளிய வழியா, பலப்பல விரதங்கள் புராணங்கள்ல சொல்லப்பட்டிருக்கு.
அந்த விரதங்கள்ல முக்கியமானதும், முப்பெரும்தேவியர், முனிபத்-தினிகள், தேவலோகப் பெண்கள், உத்தமமான பத்தினிகள்னு பலரும் கடைப்பிடிச்சு பலன் பெற்ற விரதங்கள் சிலவற்றோட எளிய விவரங்களைச் சொல்றேன். அவரவரால இயன்ற விரதத்தைக் கடைப்பிடியுங்க. மாங்கல்ய பலத்தோடு, எல்லா மங்களங்களும் பெற்று மகிழ்வோடு வாழுங்க.
காரடையான் நோன்பு: மாங்கல்ய பாக்யம்னு சொன்னதுமே எல்லோருக்கும் சட்டுன்னு நினைவுக்கு வர்றது, மாசி மாசத்துல வரக்கூடிய இந்த விரதம்தான். அன்னை காமாட்சி, மகேசன் கரம்பிடிக்க தவம் செஞ்சப்போ, காஞ்சியில கடைப்பிடிச்ச விரதம் இது. இழந்த சத்யவானை, சாவித்திரி மீண்டும் பெறக்கூடிய பாக்யத்தைக் குடுத்ததும் இந்த விரதம்தான்.
காரடையான் நோன்பு அன்னிக்கு, காலைல எழுந்து மஞ்சள்பூசி நீராடிட்டு, நெற்றியில குங்குமப் பொட்டு வெச்சுக்கணும். பூஜையறையில விளக்கேற்றிவைச்சு, காமாட்சியம்மன் படத்துக்குப் பொட்டு வைச்சு பூப்போட்டு, தூப தீபம் காட்டி, நைவேத்யம் செய்யுங்க.
இந்த விரத தினத்துல கலசம் வைச்சு பூஜை பண்றது, காரஅடை, வெல்ல அடை செஞ்சு நிவேதனம் செய்யறதுங்கற வழக்கங்களும் உண்டு. உங்க வழக்கப்படி அதெல்லாம் தெரிஞ்சிருந்தா செய்யுங்க.
அப்படி இல்லாதவங்க, கவலைப்பட வேண்டாம். எளிய பூஜையானாலும் முழுமையான பக்திதான் முக்கியம். காமாட்சியம்மன் துதி, மற்ற தெய்வத்துதிகள்ல உங்களுக்குத் தெரிஞ்சதைச் சொல்லுங்க. பூஜையில நோன்புச் சரடை வைச்சு அந்த மஞ்சள் சரடைக் கழுத்துல கட்டிக்கறது (அதாவது, மெல்லிய நூல்ல மஞ்சள் தடவி, அது நடுவுல ஒரு பூவையும் கட்டினா, அதுதான் சரடு) அவசியம்.
`மாசிக் கயிறு பாசிபடியும்'னு சொல்வாங்க. அதனால, இந்த நோன்பு அன்னிக்கு, தாலிக்கயிறை புதுப்பிச்சுக்கறது விசேஷம். மாங்கல்யம் பலம் தரக்கூடிய சக்தி வாய்ந்த விரத தினம்கறதால இந்த நாள்ல திருமாங்கல்யச் சரடை மாத்திக்கறது நல்லது.
அப்புறம் முக்கியமான விஷயம், பூஜை முடிஞ்சதும் அக்கம் பக்கத்து வீட்டுப்பெண்கள், உறவுக்காரப் பெண்களுக்கு மங்களப் பொருட்களைத் தர்றதும், மறுநாள் பசுமாட்டை வழிபடறதும்.
மங்களவார விரதம்: இது, செவ்வாய்க்கிழமைகள்ல, துர்க்கையம்மனை வேண்டி, ராகுகாலத்துல கடைப்பிடிக்க வேண்டிய விரதம். இந்த விரதம் இருக்கறதால, திருமண பாக்யம் கிடைக்கும்னு பலருக்கும் தெரிஞ்சிருக்கும். அதேசமயம், இந்த விரதம் மாங்கல்ய பாக்யத்தை நிலைக்கச் செய்யற விரதமும் கூடங்கறதை நீங்க தெரிஞ்சுக்கணும். முனிபத்தினிகள் பலர் கடைப்பிடிச்ச விரதம் இது.
செவ்வாய்க்கிழமையன்னிக்கு, அதிகாலைல எழுந்து நீராடிட்டு, உங்க வீட்டுல இருக்கற அம்மன் படத்துக்கு முன்னால விளக்கேற்றி வையுங்க. சிவப்பு நிறப் பூக்களை அம்மனுக்குப் போடுங்க. தெரிஞ்ச துர்க்கைத் துதிகளைச் சொல்லுங்க. புத்தகத்தைப் பார்த்துப் படிக்கறது, ஒலி வடிவுல கேட்கறது எல்லாமே ஓ.கே.தான்.
அன்றைக்கு ராகு காலத்துல அதாவது மாலை 3 மணியிலேர்ந்து 4.30 மணிக்குள்ள பக்கத்துக் கோயில்ல துர்க்கை சன்னதி முன்னால நெய்தீபம் ஏற்றிவைச்சு வேண்டிக்குங்க. எலுமிச்சை தீபம் ஏற்றும் வழக்கம் இருந்தா அதையும் செய்யலாம். கோயிலுக்குப் போக இயலாதவங்க வீட்டுலயே துர்க்கை அல்லது அம்மன் படம் வைச்சு கும்பிடலாம்.
அவல், பசும்பால், சர்க்கரைப்பொங்கல்னு முடிஞ்ச நிவேதனம் செய்யுங்க. இப்படிப் பதினொரு வாரம் செய்யறது, கன்னியர்க்கு மாங்கல்யப்பேறும், கல்யாணமானவர்களுக்கு மாங்கல்ய பலமும் தரும்.
திருவாதிரை விரதம்: சிவமகாபுராணத்துல சொல்லப்பட்டிருக்கற சிறப்பான விரதம் இது. ஈசன், நடேசனாகக் காட்சி தரக் கூடிய நாள், மார்கழி மாசத்துல வர்ற திருவாதிரை நட்சத்திர தினம். அன்னிக்கு `களி' நைவேத்யம் செஞ்சு, கங்காதரனைக் கும்பிடறது, கல்யாண பாக்யமும், மாங்கல்யமும் (தீர்க்க சுமங்கலித்துவம்) தரும்கறது ஐதிகம்.
வழக்கம்போல அதிகாலைல எழுந்து நீராடிட்டு, நாள் முழுக்க சிவதுதி சொல்றது, கேட்கறதும்; மாலை நேரத்துல சிவாலயத்துல நடராஜரை தரிசனம் பண்றதும் உயர்வான பலனைத் தரும்னு புராணங்கள் சொல்லுது. அதுமட்டுமல்லாம, அன்றைய தினம் இனிப்பான களியை நைவேத்யம் செய்து பிரசாதமா பிறருக்குத் தந்து நீங்களும் சாப்பிடறது திருமண பாக்யமும், தீர்க்கசுமங்கலித்துவமும் தந்து வாழ்க்கையை தித்திக்க வைக்கும். முக்கியமான விஷயம்... இது, திருஞானசம்பந்தராலேயே போற்றப்பட்ட விரதம்.
சுக்கிர வார விரதம்: சுக்கிரன்தான் கல்யாணகாரகன்னு சொல்வாங்க. அந்த சுக்கிரனுக்கு உரியதான வெள்ளிக்கிழமையில, மகாலக்ஷ்மியை வேண்டி கடைப்பிடிக்கக் கூடிய விரதம்தான், சுக்கிர வார விரதம். இந்த விரதத்தோட மகிமை என்ன தெரியுமா? `மாங்கல்யம் நிலைக்கும், மங்களங்கள் பெருகும்' அப்படின்னு சொல்லி மகாலக்ஷ்மியே தன் பக்தைக்கு சொல்லிக் குடுத்த விரதம் இது.
மகாலக்ஷ்மிக்கு, தூய்மைதான் ரொம்பப் பிடிக்கும். அதனால வியாழக்கிழமையன்னிக்கே வீட்டை தூய்மைப்படுத்திடுங்க. வெள்ளிக்கிழமை அன்னிக்கு, வழக்கமான விரதங்களைப் போலவே விடியற்காலை நீராடிட்டு, மகாவிஷ்ணுவோட சேர்ந்து இருக்கற மகாலக்ஷ்மி அதாவது லட்சுமி நாராயணன் படத்து முன்னால விளக்கேற்றி வைக்க, பொட்டு வைக்க, பூப்போட்டு தூப, தீப, நைவேத்யம் எல்லாம் செய்யறாங்க. இதை அப்படியே சிவசக்தி படத்து முன்னாலும் செய்யலாம். அவரவர் வழக்கப்படி செய்யறதுல தப்பில்லை.
மனதார தெய்வீகப்பாடல்களைப் பாடுங்க. மாலை நேரத்துல சுமங்கலிகளுக்கு மங்களப் பொருள்களைக் குடுங்க. பதினொரு வாரம் இப்படி விரதம் இருந்து, பதினோராவது வாரத்துல ஏழைப் பெண்களுக்கு அன்னதானம் செய்யுங்க.
மனம் போல மாங்கல்யம் அமையும்; சர்வ மங்களங்களும் நிலைக்கும்.
இந்த விரதங்கள் மாதிரியே, சம்பத் சுக்ரவார கௌரி விரதம்; கேதார கௌரி விரதம், அச்வத்த விவாகம் (அரசமர விவாகம்) துளசிபூஜை இப்படி இன்னும் பலப்பல விரதங்கள் மாங்கல்ய பலம் பெருக அனுசரிக்கப்பட வேண்டிய விரதங்களாக புராணங்கள்ல கூறப்பட்டிருக்கு.
என்ன நைவேத்யம் செய்யறது? எப்படி பூஜிக்கிறது? எந்தத்துதி சொல்றது? இதெல்லாம் சரியா இருக்கா? அதெல்லாம் அவசியமா? உபவாசம் இருந்தால்தான் விரதம் பலன் தருமா? இப்படியெல்லாம் யோசிக்கறதை விட, எளிமையான அவங்க அவங்களுக்குத் தெரிஞ்ச வழிமுறைப்படி விரதத்தைக் கடைப்பிடிச்சாலே போதும்.
ஒரே ஒரு விஷயம் மனப்பூர்வமான பக்தி மட்டுமே முக்கியம். அதுமட்டும் இருந்தாலே போதும்; ஆண்டவனோட ஆசி கிட்டும்.
எளிய விரதங்களைக் கடைப்பிடியுங்க. மங்களங்கள் நிறைஞ்சு, மாங்கல்ய பலம் பெருகி, தீர்க்க சுமங்கலியா வாழுங்க!
Comments
Post a Comment