நான்காவது ரகசியம், அஸ்தேயா. இதன் அர்த்தம், திருடாது இருத்தல்.
தார்மிக உள்ளம் உடைய ஒவ்வொருவருக்கும், திருடுவது ஒரு குற்றம் என்று தெரியும். யாரும் பிறர் பொருளைத் திருடக் கூடாது. இருந்தபோதும் சூட்சுமமாக சில திருட்டுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இதைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை. உங்கள் தேவைக்கு அதிகமாக நீங்கள் எதையும் குவித்து வைத்தால், பிறருடைய முன்னேற்றத்திற்கு நீங்கள் குறுக்கே நிற்கிறீர்கள் என்று அர்த்தம். பிறருக்குக் கிடைக்கக் கூடிய அரிய சந்தர்ப்பங்களை அபகரிக்கிறீர்கள் என்று அர்த்தம். அல்லது நற்பண்பில்லாத வகையில் அல்லது சட்ட விரோதமான வகையில் எதையோ அடைகிறீர்கள் என்று அர்த்தம். இதுவும் திருட்டுக் குற்றமே.
பேராசையும் புலனடக்கம் இல்லாமையுமே திருடும் உணர்வைக் கொண்டு வருகின்றன. ஆகவே அஸ்தேயா குணத்தைப் பெற, புலனடக்கத்தைக் கற்க வேண்டும்.
பேராசை எந்த அளவற்ற ஆசையையும் தீர்த்து விடாது. பேராசை இல்லாத மனத்தை உடையவராக இருந்தால், உலகில் எல்லா செல்வங்களும் உங்களையே வந்தடையும் என்று ராஜயோகம் சொல்கிறது.
ஐந்தாவது ரகசியம், ஷௌச - உடல் தூய்மையும் உள்ளத் தூய்மையும்.
தூய்மை இருவகைப்படும். உடல் ரீதியானது ஒன்று. உள்ளத் தூய்மை என்பது மற்றது. உடலை சுத்தமாகவும் சுகாதாரத்துடனும் பேணுவதை உடல் தூய்மை குறிப்பிடுகிறது. அன்றாடம் குளித்து தூய ஆடை உடுத்துவது உடலைத் தூய்மையாக வைக்கும். ஆரோக்கிய விதிமுறைகளை அனுசரிப்பதும் இதில் அடங்கும். எவ்வளவுதான் தூய உடை அணிந்திருந்தாலும், ஆரோக்கியமில்லாத உணவு வகைகளை உண்டால், உடல் சுத்தமாக இருக்காது. இது ஆரோக்கியத்தை வளர்க்காது.
சாத்வீக உணவையே உட்கொள்ளுவது மிக முக்கியம். நோய்களிலிருந்து உங்களைக் காப்பாற்றும். சக்தியையும் சந்தோஷத்தையும் கொடுக்கும். உடல் சுத்தத்தைப் பேண நினைத்தால், ஒரு முறையான வாழ்க்கையைப் பின்பற்ற வேண்டும். நல்ல உணவு, போதுமான அளவு தேகப் பயிற்சி மற்றும் தேவையான அளவு ஓய்வு போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும்.
எதிர்மறை உணர்வுகள் மேலோங்காது, நேர்மறை எண்ணங்களே உங்கள் மனத்தை நிரப்பட்டும். ஒரு வீட்டை எப்படி ஒவ்வொரு நாளும் சுத்தப்படுத்துவோமோ, அதேபோல் மனத்தையும் சுத்தப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். மனத்தை எப்படி சுத்தப்படுத்துவீர்கள்? சத்சங்கத்தின் உதவியால்தான். அதாவது மேலோர், அறிந்தோர், ஞானிகள் இவர்களுடைய உதவியால் அதைச் செய்ய முடியும். தார்மிக உரைகளை நீங்கள் கேட்கும் பொழுது, அமைதியுடன் முழுமையாக இசைந்து வாழும் பெரியோர்களுடன் உங்களை இணைத்துக் கொண்டு வாழும்பொழுது, ஞானிகள் முனிவர்களின் பேருரைகளைக் கேட்டும், படிக்கவும் செய்யும்பொழுது உங்கள் மனம் தெளிவும் தூய்மையும் அடைகிறது.
உங்களுக்கு சொந்தமாக வீடு ஒன்று இருக்கலாம். எழிலான தோட்டமும் இருக்கலாம். எல்லாமே வெகு சுத்தமாக இருக்கலாம். இருந்தும் உங்கள் மனத்திற்குள், சுயநலமும் வேஷதாரித்தனமும் பொங்கி வழிந்து கொண்டிருந்தால், மனம் சுத்தமாக இருக்கப் போவதில்லை.
ஆகவே தூய்மை உடல்ரீதியாகவும் சரி, உள்ள ரீதியாகவும் சரி, பின்பற்றப்படல் வேண்டும். உள்ளத்துள் தூய்மை இருந்தால், மன அமைதியும், இசைந்து வாழும் பண்பும், கலகலப்பான தன்மையும் பெருகும். உங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் நடுவே ஒரு சூட்சுமமான உறவு இருக்கிறது. ஒரு எதிர்மறை உணர்வு உங்கள் மனத்திற்குள் ஊடுருவும் பொழுது, உடலின் அடிப்படை சக்திகளில் ஓர் இசைபடாத அதிர்வலைகளை உருவாக்குகிறது. இந்த அடிப்படை சக்திகள் இசைவுபடாது நிற்கும் பொழுது, நீங்கள் உண்ட உணவே செரிமானம் ஆகாது. உடலுக்கு ஆரோக்கியம் தரவேண்டிய சக்திகள் நிலை கெடுகின்றன. உடலின் ஒரு பாகத்திற்கு அதிக சக்தியும் பிற பாகத்திற்கு சக்தியில்லாமையும் கூடுகிறது. ஒட்டுமொத்தமான ஆரோக்கியம் கெடாவிட்டாலும், திடீரென்று உங்கள் கணையம் வேலை செய்யாது; உங்கள் இதயம் வலுவிழக்கும். இறுதியில் உங்கள் உடல் முழுவதும், வலுவிழந்து மன அழுத்தங்களும் படபடப்புமே மிஞ்சும்.
உங்கள் மனம் உடல்நலத்தின் மீது பாதிப்புகளைக் கொண்டு வருவதோடு மட்டும் நில்லாமல், கர்மாக்களையும் உண்டாக்குகிறது. அந்தக் கர்ம வினைகளின் மூலம் சூழ்நிலைகளையும் சந்தர்ப்பங்களையும் - நல்லவையோ அல்லது கெட்டவையோ -
உங்கள் பால் ஈர்க்கிறீர்கள். ஆகவே, மனத்தை சுத்தப்படுத்திக் கொள்வது, கோபதாபங்கள் இல்லாமல் இருப்பது, வெறுப்பு, பேராசை மற்றும் இதர வேண்டப்படாத உணர்வுகளைத் தவிர்ப்பது வாழ்க்கைக்கு முக்கியம்.
ஆறாவது ரகசியம், ஆத்ம வினிக்ரஹம் - மனத்தைக் கட்டுப்படுத்துதல்.
அலாவுதீன் விளக்கை விட ஆச்சரியமானது மனித உள்ளம். மனோசக்திகளின் மூலமே நீங்கள் அரிய பெரிய காரியங்களைச் செய்கிறீர்கள். இருந்தும், மனத்தை அவ்வப்பொழுது நீங்கள் கவனித்து வர வேண்டும். உங்கள் பார்வையில் வைக்க வேண்டும். அதன் அளப்பரிய சக்திகளைப் பெறுவதற்கு அதை ஒழுங்குநிலைக்குக் கொண்டு வர வேண்டும்.
பெரும்பாலோர் மனோசக்திகளை வீணடிக்கிறார்கள். கவனத்தை இங்கும் அங்கும் சிதறடித்து வீணடிக்கிறார்கள். உங்கள் மனத்தை நீங்கள் கூர்ந்து கவனித்து வந்தால், ஒரு விஷயத்தின்மீது அல்லது ஒரு பொருளின் மீது மூன்று நான்கு நிமிடங்களுக்கு மேல் ஒருமுக கவனத்தைக் கொள்ள முடியாது என்பது விளங்கும்.
ஒருமுக கவனம் எனும் கலையை நீங்கள் கற்றால், உங்கள் மனத்தின் உள்ளார்ந்த சக்திகள் யாவும் தெரிய வரும். அந்த ஒருமுக கவனத்தின் மூலம் மன அழுத்தத்தைக் கொண்டுவரும் அனைத்தையும் எளிதாக வெல்லலாம். உங்கள் ஞாபக சக்தி பெருகும். உங்கள் வேலைகளை ஒழுங்குறச் செய்யலாம். நிரம்ப நேரம் மிச்சமாகும். உங்கள் படிப்பில் ஆழமான கவனம் செல்லும். நீங்கள் படிக்கும் பாடங்களிலிருந்து கிடைக்கும் உண்மைகளை மேலும் மேலும் எளிதாக அறிய ஆரம்பிப்பீர்கள்.
கவனம் சிதறடிக்கப்பட்ட மனங்களில் இருவகையான எதிரெதிர் உணர்வுகள் வேலை செய்யும். ஒன்று உங்களை இப்பக்கம் இழுக்கும். மற்றது எதிர்ப்பக்கம் போகவைக்கும். எப்பொழுதும் மனம் அலை பாயும். உள்ளார்ந்த மனோசக்தியை அனுபவிக்க விடாது செய்து கொண்டிருக்கும். இதை விளக்க கதை ஒன்று சொல்லுகிறேன்.
ஆச்சரியமான பாய்
முன்பொரு காலத்தில் ஒரு கஞ்சன் இருந்தான். அவன் அடிக்கடி தியானத்தைக் கைக்கொண்டு வாழ்ந்தான். இதன் பயனாக, ஒரு நாள் அவன்முன் கடவுள் தோன்றி அதிசயமான பாய் ஒன்றைக் கொடுத்தார். அந்தப் பாயின் மீது உட்கார்ந்து கொண்டு எதைப் பற்றிச் சிந்தித்தாலும் அது பலித்து விடும்.
அந்த மனிதன் பாய்மீது அமர்ந்து மிகவும் ருசியான உணவைப் பற்றிச் சிந்தித்தான். உடனே உணவு வந்தது.
``ஓர் அழகான அரண்மனை இருந்தால் எப்படி இருக்கும்?'' என்று எண்ணினான். உடனே ஓர் அரண்மனை அங்கே எழுந்தது.
தொடர்ந்து தன்னைச் சுற்றி ஊழியர் கூட்டமும் இதர சேவகர்களும் இருக்க வேண்டுமென நினைத்தான். அந்த ஆசையும் நிறைவேறியது.
திடீரென்று ஒரு விபரீதமான ஆசை அவன் மனத்தில் எழுந்தது. ``ஒரு பூகம்பம் வந்தால் இந்த அரண்மனை என்னவாகும்?'' என்று. எண்ணிய சில வினாடிகளில் ஒரு பெரும் பூகம்பம் வந்து அரண்மனை இடிந்து அவன் மீதே விழுந்தது.
உங்கள் மனம் அந்தப் பாயைப் போன்றதுதான். உங்கள் நல்லெண்ணங்களின் வாயிலாக நீங்கள் நன்மைகளையே பெறுகிறீர்கள். ஆனால் உங்கள் ஆழ்மனத்திலிருந்து, பயமும் உறுதுணையற்ற உணர்வும் எழுந்து நீங்கள் அடைந்ததையெல்லாம் தவிடுபொடியாக்குகின்றன. உங்கள் மனோசக்திகளின் முழுப் பயனையும் நீங்கள் அடைவதே இல்லை.
உங்கள் மனோசக்தியை ஒரே கோணத்தில் படர வைக்க, ஜப, தபங்கள் மேற்கொள்ள வேண்டும். தபம் என்பது கடவுள் நாமத்தைத் திரும்பத் திரும்ப ஜபிப்பதே. இந்தப் பழக்கம் மேலும் மேலும் உங்கள் மனோசக்தியினை அதிகரிக்க வைக்கிறது
அடுத்த ரகசியம், தீ!
(ரகசியங்கள் தொடர்கின்றன)
(நன்றி: கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்ட, `இளைஞர்களுக்கு ஒரு வார்த்தை', 23, கண்ணதாசன் சாலை, சென்னை-17)
Comments
Post a Comment