இரண்டாவது ரகசியம், க்ஷமா!
க்ஷமா என்றால் மன்னிக்கும் சுபாவம் அல்லது பொறுத்தருளுதல் என்பது பொருள்.
உங்கள் கோபத்தை வெகுவாகத் தூண்டக்கூடிய ஒரு சம்பவம் நடந்துவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த சமயத்தில் மன அமைதியைக் கைவிட வேண்டாம். உங்களைத் தூண்டியவர்கள் மீது வெறுப்பு காட்ட வேண்டாம்.
உதாரணத்திற்கு, டாக்டர் ஒருவர் நோயாளியை அணுகுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். நோயின் வலி பொறுக்க முடியாமல் பின்னவர் டாக்டரைப் பார்த்து என்னென்னவோ சொல்கிறார். மனத்தில் சமநிலை பிறழ்ந்த நிலையில் என்னென்னவோ பேசுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். டாக்டரோ அவருடைய வார்த்தைகளைக் காதில் வாங்கவே இல்லை. நோயாளி நோயுற்றிருப்பதால், அவர் அப்படித்தான் செய்வார் - கத்துவார், கதறுவார், அமைதி இழப்பார் என்பது அவருக்குத் தெரியும். இதெல்லாம் அந்த நோய் செய்யும் பாடு. ஆகவே நோயாளியின் மனநிலை எப்படி இருந்தாலும் சரி, டாக்டர் அவருக்குக் கட்டாயம் உதவி செய்ய முற்படுகிறார். நீங்கள் பிறரிடம் நடந்து கொள்ளும் முறையிலும் அந்த டாக்டரின் பக்குவம் பளிச்சிட வேண்டும். என்ன வந்தாலும் சரி, நிலை பிறழாத பொறுமையைக் கையாள வேண்டும்.
இந்த உலகத்தில் விதவிதமான தனித்தன்மை பெற்றவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். உங்கள் சக்தியால் பிறரைக் கணித்துக் கொண்டே இருக்காதீர்கள். அவர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்றெல்லாம் நீங்கள் நினைத்துக் கொண்டே இருக்காதீர்கள். உங்களுக்கு உள்ளேயே கவனத்தைப் படரவிட்டு, ஆத்ம பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
``எங்கு தர்மம் நிலவுகிறதோ எங்கே நற்பண்பு சூழ்ந்திருக்கிறதோ அங்கெல்லாம் வெற்றியே கிட்டும்'' என்றார், பகவான். உங்களுக்குப் பொறுமை இருந்தால், உங்களைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் நிச்சயம் நல்லவர்களாக ஆகி விடுவார்கள். இந்த மாற்றம் நிலைத்து நிற்கும்.
நீங்கள் பெரியவராக இருக்க விரும்பினால், அதற்கு இரண்டு வகையான வலிமை குணங்கள் வேண்டும். உடல் வலிமை என்பது ஒன்று. மற்றொன்று தார்மிக வலிமை.
குரங்குகளும் எருமையும்
புத்தர் பல அவதாரங்களை எடுத்தார். ஓர் அவதாரத்தில் அவர் காட்டு எருமையாக இருந்தார். உருவத்தில் எருமையாக இருந்தபொழுதும், அவருக்கு சத்வ குணமே மிகுந்திருந்தது.
ஒரு நாள், குரங்குக் கூட்டம் ஒன்று அவரைச் சீண்ட ஆரம்பித்தது. எருமை முதலில் அவற்றை அழிக்க நினைத்தது. ஆனால் சில கணங்களுக்குப் பிறகு, ஆழமாகச் சிந்தித்து, ``இந்தக் குரங்குகளின் சீண்டுதல்களினால் நான் இறந்துவிடப் போவதில்லை. நான் பழிக்குப் பழி வாங்கினால் இவை எல்லாமே காயப்பட்டு விடும். கோபத்தை அடக்கிக் கொள்வது பழிவாங்குவதை விட நல்லதல்லவா?'' என்று யோசித்து குரங்கு சேஷ்டைகளைக் காணாது வாளாவிருந்து விட்டது.
அதே தருணத்தில் அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்த சில தேவதைகள், எருமையின் பொறுமையைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். எருமையிடம் கேட்டனர். ``இந்தக் குரங்குகள் என் ஆத்ம பலத்தைப் பரிசோதித்து என்னுள் உறையும் வலிமையை எடுத்துக் காண்பித்து விட்டன. நான் இதற்காக குரங்குகளுக்கு கடமைப்பட்டவனாகி விட்டேன்'' என்றது எருமை.
இந்தக் கதையின் நீதி என்ன? தார்மிக வலிமைக்கு எதிராக உடல் வலிமை என்பது ஒன்றுமில்லை. நற்பண்புக்கு எதிராக உடல் வலிமை ஒன்றுமில்லை. தார்மிக வலிமை கூடக் கூட, கோபம், வெறுப்பு மற்றும் பழிவாங்கும் தன்மை இவற்றை நீங்கள் கட்டுப்படுத்துகிறீர்கள்.
யாராவது உங்களை துச்சமாக நடத்தினால், பழிவாங்குவதை விட, அவர்மீது உள்ள நல்லெண்ணத்தைக் கைவிடாதீர்கள். அவரோடு பேசி அவருக்குப் புரியவையுங்கள். அது ஒரு லட்சியகரமான செயலாகி விடும். அவருக்கு உங்களால் புரிய வைக்க முடியவில்லையானால், அவர் வாழ்க்கை செவ்வனே நடைபெற கடவுளைப் பிரார்த்தியுங்கள். என்னதான் வரட்டும்! பொறுமை எனும் கலையைக் கற்றுக் கொள்ளுங்கள். மனதிற்குள் எந்த வெறுப்பையும் வைத்துக் கொள்ள வேண்டாம்.
பழிக்குப் பழி என்பது என்றைக்கும் நிற்கப் போவதில்லை. அது ஒரு தொடரும் கொடுமை. முடிவில்லாத துயரமே சூழும்.
3. தமா - புலன்களின்மீது கட்டுப்பாடு
புலன்களின் மீது உள்ள கட்டுப்பாடே தமா என்பதாகும். அதாவது உங்கள் அறிவால் புலன்களைக் கட்டுப்படுத்துவதுதான் தமா என்பதாகும். கட்டுப்படுத்துவது என்பது, புலன்கள் நிரந்தரமாக ஒடுக்கப்படுவது என்பதல்ல. அவை ஆரோக்கிய வழிகளிலேயே செயல்பட வேண்டும் என்பதுதான்.
புலன்களை அடக்கி நல்ல வழிகளில் செயல்படுத்துதலும் ஒழுங்குபடுத்துதலும் தமா என்ற சொல்லில் அடங்கும்.
நீங்கள் ஒழுங்கற்றவராக இருந்தால், உங்கள் புலன்கள் உங்களை எங்கெல்லாமோ இழுத்துச் செல்லும். அவையே உங்கள் எதிரிகளாகும். உங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டு விட்டீர்கள் என்றால், நீங்கள் நிதானமாக எண்ணற்ற காரியங்களைச் செவ்வனே செய்து முடிப்பீர்கள். ஒழுங்கு, இசைந்து வாழ்தல் போன்றவை வெற்றிக்குப் பின் உள்ள ரகசியங்கள். உங்கள் மனம் முன்னேறும் பொழுது கிடைக்கும் மகிழ்ச்சி என்பது புலன்களினால் பெறும் சந்தோஷங்களை விட பெரியது.
திருப்தி அடைந்த ஓர் ஆட்டைத் தேடி
முழுவதும் திருப்தி அடைந்த ஓர் ஆட்டை எந்த ஒரு குடியானவனாவது தன் முன் கொண்டு வந்து நிறுத்தினால் அதற்குப் பரிசு தருவதாக ஓர் அரசன் அறிவித்தான்.
குறிப்பிட்ட நாளன்று ஆடுகள் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன. அவை திருப்தியுடன் இருக்கின்றனவா என்பது சோதிக்கப்பட்டது. அவற்றின் மூக்குக்கு நேரே பச்சைப் பசேல் என்றிருந்த புல்கட்டு காண்பிக்கப்பட்டது. நன்றாக உண்டு கொழுத்திருந்தாலும், வலிமையோடு இருந்த போதிலும், புல்லைக் கண்டவுடன் ஏதோ காணாததைக் கண்டது போல, இதுவரை உணவே உண்ணாதது போல பாய்ந்து பாய்ந்து புல்லைத் தின்று ஒவ்வொரு ஆடும் சோதனையில் தோற்றது.
இறுதியில் ஒரு குடியானவர் நோஞ்சானாகத் தெரிந்த ஓர் ஆட்டைக் கொண்டு வந்தார். அவர் எங்கு வெற்றி பெறப் போகிறார் என்று மற்றவர்கள் நினைத்தனர். அவரது ஆடும் வெகு ஆவலுடன் புல்லை நோக்கிச் சென்றது. ஆனால் தன் எஜமானர் பழக்கி இருந்ததைப் போல, தன் எஜமானனைப் பார்த்தது. ஆட்டிடையர் தன் கழியை மெதுவாக உயர்த்தினார். உயர்ந்துவிட்ட கழியைப் பார்த்தவுடன் ஆடு புல்லை விட்டு வேறு பக்கம் சென்று விட்டது. அதைத் தின்னவில்லை. ஆடு சோதனையில் வென்றது.
உங்கள் புலன்களும் ஆடுகளைப் போலத்தான் இயங்குகின்றன. நீங்கள் எவ்வளவுதான் உங்கள் புலன்களை திருப்திப்படுத்தினாலும் புலன்கள் என்றும் முழுமையாகத் திருப்தி அடைவதில்லை.
அந்த சமயத்தில் ஆட்டிடையன் கையில் இருந்த கழியைப் போல, உங்கள் பகுத்தறிவை உபயோகிக்க வேண்டும். உங்களை நீங்களே ஒழுங்கு-படுத்திக் கொள்ள ஆரம்பிக்கும் பொழுது, உங்களிடம் சிறப்பான தனித்தன்மை உருவாவதை நீங்கள் உணரலாம்.
உங்கள் புலன்களைக் கட்டுப்படுத்திக் கொள்வது உங்கள் கையில்தான் இருக்கிறது. ஓர் இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனத்தில் ஒரு தீர்மானம் எழ வேண்டும். ``இதைத்தான் நான் செய்ய நினைக்கிறேன். இதை நான் செய்து முடிப்பேன்'' என்ற உறுதியான தீர்மானம் எழ வேண்டும்.
ஒரு பரீட்சைக்கு தயார் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இன்னமும் ஒரே ஒரு வாரம்தான் இருக்கிறது என்றால், உங்களிடம் உள்ள கால அவகாசத்தை முறையாகத் திட்டமிட்டு ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம், எதற்காக செலவழிக்க வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அந்தத் திட்டத்தை தளராத உறுதியுடன் பின்பற்றுங்கள். ``ஓ! நான் என்ன செய்வது? நான் நன்றாகத்தான் படித்தேன். பரீட்சை இன்னமும் சில நாட்களிலேயே நடக்கப் போகிறது'' என்று உணர்ச்சிவசப்பட்டு நிற்காதீர்கள். அப்படி உணர்ச்சிவசப்பட்டால், படித்தது எல்லாம் மறந்து போகும்.
புலன்களை அடக்கி ஆள்வது என்பது வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொள்வதுதான். அப்படிச் செய்யும் பொழுது வாழ்க்கையை ஒரு திட்டத்துடன் தொடருவீர்கள். புலன்கள் அடக்கப்படா விட்டால், உங்கள் மனம் இங்கும் அங்கும் இலக்கை விட்டு வேறு எங்கோ அலை பாய்ந்து கொண்டிருக்கும். வாழ்க்கையில் குறிப்பிடுவது போல எதையும் செய்து முடிக்க மாட்டீர்கள்.
உங்கள் மனமும் புலன்களும் சூரிய வெளிச்சத்தைப் போல. சூரிய ஒளி பரவாத இடமில்லை. எங்கும் பரவி நிற்பது அது. ஆனால் நீங்கள் சூரிய ஒளியை லென்ஸ் மூலம் ஒருமுகப்படுத்தினால் ஒளி குவியும் இடத்தில் ஒரு காகிதத்தை வைத்தால் நெருப்பு பற்றிக் கொள்ளும். அதே போல், உங்கள் மனத்திற்குள் சக்தி அளவிலாத வகையில் பரவி நிற்கிறது. அந்த சக்தியை ஒருமுகமாக, புலனடக்கத்தால் ஒரே புள்ளியில் குவிய வைத்தீர்களானால், அளப்பரிய சக்தியைப் பெற்றவர்களாக ஆகிவிடுவீர்கள். நீங்கள் அடைய முடியாத சாதனையே இருக்காது.
அடுத்தது, அஸ்தேயா!
(ரகசியங்கள் தொடர்கின்றன)
(நன்றி: கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்ட, `இளைஞர்களுக்கு ஒரு வார்த்தை', 23, கண்ணதாசன் சாலை, சென்னை-17)
Comments
Post a Comment