நற்பண்புகள் நிறைந்த வாழ்க்கை வாழ பத்து ரகசிய வழிகள்




தர்மம் என்று நாம் வழக்கமாக உபயோகிக்கும் சொல்லானது, புண்ணியம், நற்பண்பு அல்லது தார்மிக ஒழுங்கு என்று வியாக்கியானம் செய்யப்படலாம். அதற்கு பலப் பல அர்த்தங்கள் உண்டு. அது, இந்து கலாசாரத்தில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்துமதத் தத்துவங்களில் அதற்கு உயர்ந்த இடம் உண்டு.

`யதோ தர்மஸ்ய ததோ ஜெய' என்று நம் வேதங்கள் பறைசாற்றுகின்றன. எங்கெல்லாம் தர்மம் கொடிகட்டிப் பறக்கிறதோ அங்கெல்லாம் வெற்றி கொடி கட்டிப் பறக்கும்.

பண்டைய காலத்து மாமுனிவர் மனு, தர்மத்தின் 10 அம்சங்களை மனு ஸ்மிருதியில் விவரித்திருக்கிறார். மனு ஸ்மிருதி என்பது இந்து மத வேதங்களில் ஒன்றாகும். இந்த 10 அம்சங்களையும் தர்ம லட்சணங்கள் என்று சொல்லலாம். உண்மையில் சொல்லப் போனால், நற்பண்புகளுக்கு இவையே அடித்தளமாகும். இது எல்லா மதங்களுக்கும் பொருந்தக்கூடிய உண்மை. இந்த குணங்களை அடிப்படையாக வைத்து எவரும் தியானிக்க வேண்டும். அப்படிச் செய்து அவற்றை உங்களுக்குள் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

முதல் ரகசியம் திருதி...

திருதி என்பது மன உறுதிப்பாடு அல்லது விடாமுயற்சியாகும். ஏதோ ஒன்றை செய்து முடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்துக் கொண்டுவிட்டால், அதற்கு என்ன எதிர்ப்பு வந்தாலும் முன்னின்று சமாளிக்க வேண்டும். கையில் எடுத்த காரியம் வெற்றி பெறும் வரை முனைய வேண்டும்.

சுவையான கதை ஒன்றை இப்பொழுது உங்களுக்குச் சொல்கிறேன். அது திருதியின் வலிமையைக் குறிக்கும்.

சம்ஸ்கிருத இலக்கியத்தில் காளிதாஸ் ஒரு பெரும் மேதை. ஆனால் அவருடைய இளமைக் காலங்கள் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. அவர் இளைஞராக இருந்தபொழுது, அவர் வாழ்ந்த நாட்டில் மிக அழகிய அரசகுமாரி ஒருத்தி இருந்தாள். அவளுக்கு வேதத்திலும் இலக்கியத்திலும் ஆழ்ந்த புலமை இருந்தது. அவள் திருமணம் செய்து கொள்ள வேண்டிய பருவத்தை அடைந்ததும், அவளை மணக்க விரும்பி ஏராளமான இளைஞர்கள் - அறிவில் சிறந்தவர்கள் திரண்டனர். அவர்கள் எல்லோரையும் தன் அறிவுக் கூர்மையால் அந்த இளவரசி வென்றுவிட்டாள். தத்துவ விவாதங்களில் தோற்கடித்துவிட்டாள். தோல்வியினால் தலை குனிய வேண்டி இருந்த சில அறிவாளிகள், அவளுக்கு எப்படியாவது பாடம் கற்பிக்க எண்ணினார்கள். சர்வ முட்டாள் ஒருவனை எப்படியாவது அந்த இளவரசியை மணக்கச் செய்வது என்ற தந்திரத்தைச் செயல்படுத்த நினைத்தனர்.

அவர்களுடைய தேடலில், ஓர் இளைஞன் ஒரு மரத்தின் கிளையில் உட்கார்ந்து கொண்டு அதே கிளையை கீழ்ப்பாகத்தில் வெட்டிக் கொண்டிருந்தான். அவனைவிட ஒரு பெரிய முட்டாளைப் பார்க்க முடியாது என்ற முடிவுக்கு வந்தனர் அவர்கள். அவனை கீழே அழைத்தனர். அவனுக்கு அந்த இளவரசியைத் திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று கேட்டனர். அந்த யோசனை அவனை சந்தோஷத்தால் சிலிர்க்க வைத்தது. அவன் அமைதி காத்து பொறுமையாக இருந்து அவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அவன் யாரிடமும் ஒரு வார்த்தையும் பேசக்கூடாது என்றும் சைகைகளால் மட்டுமே, எந்த ஓர் உணர்வையும் காட்டலாம் என்று சொல்லிவிட்டனர்.

அந்த முட்டாளை அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். தலைசிறந்த தத்துவ ஞானி அவன் என்று அறிமுகம் செய்து வைத்தனர். எந்தவித சொற்களையும் சொல்லாமல், வெறும் கையசைவுகளாலேயே அவன் உயர்ந்த தத்துவங்களை வியாக்கியானம் செய்ய முடியும் என்றனர். அன்றைய காலத்து தலைசிறந்த ஞானி அவனே ஆவான் என்றனர்.

இளவரசி சைகை மொழியில் அவனோடு பேச சம்மதித்தாள். இருவரும் இருக்கையில் அமர்ந்தனர். அந்த விசித்திரமான விவாதத்தைத் துவக்கினர். இளவரசி ஆரம்பித்தாள். ``ஒரே ஒரு கடவுள், ஒருவனே பரமன் என்ற வாதத்தை நீங்கள் மறுப்பீர்களா?'' என்று சைகையால் கேட்டாள்.

உயர்ந்த கையையும் தன்னை நோக்கி நீண்ட விரலையும் பார்த்து, அந்த முட்டாள், இளவரசி தன் கண்களைக் குத்த வருகிறாள் என்று நினைத்தான். உடனே, தான் ஏன் அவளுடைய இரண்டு கண்களையும் குத்திக் காயப்படுத்தக் கூடாது என்று நினைத்து, தன் இரண்டு விரல்களை உயர்த்தினான்.

இந்த விபரீத திட்டத்திற்கு ஆசானாக அமர்ந்திருந்த சுற்றியுள்ள ஞானிகள், ``நமது இளைய ஞானி சிநேகிதர் உங்களைவிட அறிவாளி. பிருமன் ஒருவனே ஆனாலும், ஒருவனே இந்த உலகத்தை உருவாக்கி காக்க முடியாது. அந்த பிரமனுக்கு மாயை எனும் சக்தி வேண்டும்'' என்று வியாக்கியானம் செய்து, அந்த இரு விரல்கள் அதைத் தான் காண்பிக்கின்றன என்றனர். இளவரசி அந்த வியாக்கியானத்தில் மெய்சிலிர்த்தாள். தன் தோல்வியை ஒப்புக் கொண்டாள்.

இப்படி அவனது முட்டாள்தனமான பிரச்னைகளுக்கும் மற்றவர்களே வியாக்கியானம் செய்தனர். ``பார்த்தீர்களா அவருடைய மேதாவிலாசத்தை'' என்று சொன்னார்கள். இளவரசி தன் தோல்வியை ஒப்புக் கொண்டாள்.

இறுதியில் இளவரசி முட்டாள் இளைஞனை மணக்க வேண்டி வந்தது. அவன் அடி முட்டாள் என்பதைக் கண்டு கொள்ள இளவரசிக்கு வெகு நாட்கள் பிடிக்கவில்லை. உண்மை தெரிந்த கணத்தில் அவனை வெளியேற்றி, தன்னைக் கரம்பற்ற உரிய அருகதையும் தருணமும் வரும் வரையில் அரண்மனைக்குள் வரவேண்டாம் என்று பணித்துவிட்டாள்.

தீவிரமான சோகத்தோடும் ஏமாற்றத்தோடும் திரும்பினான் இளைஞன். ``அறிவில் மிகவும் சோர்ந்திருக்கும் நான் எப்படி ஓர் இளவரசியின் கைகளைப் பற்ற முடியும்?'' என்று சொல்லி நொந்து போனான். ``இது நடக்கவே நடக்காது'' என்றான். தாக்கப்பட்ட மனத்தோடு நடந்து கொண்டே வந்தவன் அருகே ஒரு கிணறு இருப்பதைப் பார்த்தான். கிணற்றிற்குள் விழுந்து ஏன் தற்கொலை செய்துகொள்ளக் கூடாது என்று நினைத்தான்.

கிணற்றிற்குள் எட்டிப் பார்த்தான். மக்கள் ஒவ்வொரு முறையும் தண்ணீர் இறைக்கும்பொழுது கயிறு மேலும் கீழும் சென்று வரிகளை சுவற்றில் ஏற்றியிருந்ததைப் பார்த்தான். ``அடிக்கடி ஏற்படும் உராய்வால் ஒரு காரைச் சுவற்றிலே கீறல்கள் விழுகின்றனவே. நானும் கடும் முயற்சிகளை மேற்கொண்டால் என்ன தவறு? நான் ஓர் அறிஞனாக ஆக விரும்புகிறேன். நாகரிகம் மிக்கவனாகவும் அறிவுசார்ந்த ஒரு விவேகியாகவும் ஆக விரும்புகிறேன். நான் ஏன் அப்படி மாறக்கூடாது?'' என்று சூளுரைத்துக் கொண்டான். அந்த தீர்மானத்தோடு காளி தேவியின் பக்தனானான். தளராத பொறுமையுடன் முயன்று ஒரு பெரும் கல்விமானிடம் கல்வி கற்க ஆரம்பித்தான். இறுதியில் காளிதாசனாக ஆகிவிட்டான். உலகம் கண்ட பெரும் கவிஞனாக உருவானான். பெரும் எழுத்தாளனாகவும் நாடக ஆசிரியனாகவும் உருவானான். சம்ஸ்கிருத மொழியில் பெரும் விற்பன்னனானான்.








இந்த மன உறுதியைத் தான் திருதி என்கிறோம். உங்கள் மனத்தை ஓர் இலக்கின் மீது உறுதியாக நிலைநிறுத்தி விட்டீர்களானால், எந்த ஒரு தடங்கலும் உங்களை அதைரியப்படுத்த முடியாமல் போய்விட்டால், நிச்சயம் நீங்கள் வெற்றியே அடைவீர்கள். உங்களுக்குள் உறையும் பிரும்ம சக்தி, ஆற்றலில் அளப்பரியது. உங்களால் முடியாதது ஒன்றுமில்லை.

திருதி எனும் இந்த உணர்வைக் கொண்டு கடுமையான இரும்பு உள்ளத்தை உண்டாக்கிக் கொண்டு விடுவீர்கள். இலக்குகளை எளிதாக அடைவீர்கள். என்ன தடங்கல்கள் வந்தாலும் சரி, எதிர்த்து நிற்பீர்கள். வெற்றி அடைவதை யாராலும் தடுக்க முடியாது. நிலைமைகள் நீங்கள் எதிர்பார்த்த வகையில் முன்னேறவில்லையானால், கவலையே வேண்டாம். பொறுமையாக முயற்சியை மேற்கொள்ளுங்கள். இறுதியில் வெற்றி உங்களுடையதே!

இந்த திருதி எனும் உணர்வின் மற்றொரு பதிப்பு இருக்கிறது. அது ஒரு தனிப்பட்ட வகையான உறுதியைக் காண்பிப்பது. தன் மூலம் வெறும் கொள்கையளவில் உள்ள அறிவு, நடைமுறை சாத்தியமான அறிவைக் கொடுக்கிறது. இந்த வகையான திருதி உங்களுக்கு இல்லையானால், ஒரு காதில் விழும் அறிவுச் சொற்களை மற்றொரு காதின் வழியாக வெளியே விட்டு விடுவீர்கள். உள்ளத்தில் எதுவும் தங்காது.

முன்று மண்டை ஓடுகள்

ஒரு தத்துவ ஞானி மட்டும் மூன்று மண்டை ஓடுகளைக் கையிலேந்தி ஒருவன் அரசனுக்கு முன் கொண்டு வந்து வைத்தான். வைத்துவிட்டு, ஒரு புதிரையும் போட்டான். அந்த மூன்றில் எது ஒன்று, உயிரோடு இருந்த ஒரு பெரிய விவேகியினுடையது என்று கேட்டான். அரசவையில் இருந்த ஞானிகள், அறிவாளிகள் எல்லோரும் விழித்தனர்.

மூன்று வைக்கோல் புற்களை எடுத்து முதல் ஓட்டின் காதின் வழியாக ஒன்றைப் பாய்ச்சினார். மற்றொரு காதின் வழியே அது வெளிவந்தது. ``இவர் கேட்டவற்றை எல்லாம் ஒரு காதின் வழியே கேட்டு மறு காது வழியே விட்டு விட்டார். எனவே மந்தபுத்திக்காரர்'' என்றார்.

இரண்டாவது புல்லை இரண்டாவது மண்டை ஓட்டின் காதின் வழியே விட்டார். அது வாயின் வழியே வெளியே வர எடுத்தார். ``இந்த ஆளுக்கு நடுத்தர அளவுள்ள ஞானமே இருந்திருக்க வேண்டும்; தான் கேட்டதை பற்றி அளவில்லாமல் பேசிக்கொண்டே இருந்தாரே ஒழிய வாழ்க்கையில் பயன்படுத்தவில்லை'' என்றார்.

மூன்றாவது வைக்கோலை கடைசி மண்டை ஓட்டின் காதின் வழியே நுழைத்தார். அது உள்ளே வயிற்றுக்குள் சென்றது. ``இவரே புத்திமானாக இருந்திருக்க வேண்டும். தான் கற்றவற்றை எல்லாம் ஜீரணித்துக் காட்டியவர் இவரே'' என்றார் அந்த ஞானி.

இந்தக் கதை என்ன சொல்கிறது? உங்களுக்கு திருதி எனும் குணம் வந்துவிட்டால், உங்கள் மனம் எதையும் கவனித்து, தங்க வைத்துக் கொண்டு ஜீரணித்துக் கொள்கிறது என்பதுதான் அர்த்தம். திருதி என்பது சத்வ குணத்தை உடையதாக இருக்க வேண்டும். அதாவது, அதில் தூய்மை இருக்க வேண்டும். உங்களுக்கு திருதி எனும் குணம் இருந்தால், வாழ்க்கையில் கற்பவை எல்லாவற்றையும் பயன் தருமாறு ஆக்கிக் கொள்வீர்கள். அத்தகைய திருதி இல்லாவிட்டால், வெறும் தேற்றங்களாகவே கற்றவை நிற்கும், வாழ்க்கைக்குப் பயன்படாது

அடுத்த ரகசியம், க்ஷமா....

(ரகசியங்கள் தொடர்கின்றன)
(நன்றி: கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்ட, `இளைஞர்களுக்கு ஒரு வார்த்தை', 23, கண்ணதாசன் சாலை, சென்னை-17)

Comments