வரம் பல தரும் வரசித்தி விநாயகர்




அரியும் சிவனும் இணைந்து அருள்பாலிக்கும் ஆனைமுகன் ஆலயம், சென்னை திரு.வி.க. நகரில் அமைந்துள்ளது.

1958-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியன்று, சிறிய அளவில் ஓலைக் குடிசையில் ஏகதந்தனுக்காக ஏற்படுத்தப்பட்ட இவ்வாலயத்தில் நாளடைவில் சைவ - வைணவ பேதமின்றி பல தெய்வங்களின் திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட, இன்று வரசித்தி விநாயகர், சிவ-விஷ்ணு திருக்கோயில் என்ற பெயரில் கம்பீரமாகக் காட்சி தருகிறது.

சாலையோரத்திலிருந்து வடக்கு நோக்கிய நுழைவு முகப்பு வழியாகச் சென்று கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்தை அடைகிறோம். கொடிமரம், பலிபீடம், மூஞ்சுறு வாகனத்தைக் கடந்தால் சுவாமி திருமண மண்டபம்.

இம் மண்டபத்தின் தெற்குப் பகுதியில் தசாவதாரக் காட்சிகளும், வடக்குப் பகுதியில் அறுபடை வீடு, மீனாட்சி திருக்கல்யாணம், கருமாரியம்மன் உருவங்களும் அலங்கரிக்கின்றன. அடுத்துள்ள வள்ளலார் மண்டபத்தில் பாவை விளக்கொன்று மூலவரை நோக்கி பிரகாசிக்கின்றது.

கருவறையில், வரசித்தி விநாயகர் என்னும் திருப்பெயரோடு அருகம்புல் மாலையில் அமர்க்களமாகக் காட்சி தருகிறார் ஆனைமுகன். தன்னை வணங்குபவர்களுக்கு வேண்டும் வரங்களை வழங்கிடும் பெரும் வரப்பிரசாதியாம் இவர். மூலவரான கணபதியை நோக்கியவாறு மூஞ்சுறு வாகனம் உள்ளது.

அர்த்தமண்டபத்தில் அர்த்த நாரீஸ்வரரும், லக்ஷ்மி நாராயணரும் இருபுறமும் அருளாசி வழங்குகின்றனர். அவர்களின் தரிசனம் முடித்து, சுவாமி திருமண மண்டபத்தின் தெற்கேயுள்ள வள்ளி - தேவசேனா சமேத சுப்ரமணியசுவாமி சன்னதிக்கு வருகிறோம்.

அழகனின் தரிசனம் மன அமைதியை அளிக்கிறது. சன்னதிக்கு வெளியே பலிபீடமும், மயில்வாகனமும் உள்ளது. அருகே அரசும் வேம்பும் இணைந்து காணப்பட, அதனடியில் நாகர்கள் அருள்கின்றனர்.

அதையடுத்து ஈசனின் சன்னதி. பரமேஸ்வரர் என்ற திருப்பெயரோடு லிங்கத் திருமேனியராக கிழக்கு நோக்கி ஈசன் அருள்பாலிக்க, அர்த்த மண்டபத்தில் அம்மன் அழகே உருவாக அகிலாண்டேஸ்வரியாக தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

கோயிலின் வடபகுதியில் தெற்கு திசை நோக்கியவாறு தர்ம சாஸ்தாவுக்கு தனிச் சன்னதி உள்ளது. அடுத்துள்ள கோதண்டராமர் சன்னதியில், ராமருக்கு இடப்புறம் சீதையும், வலப்புறம் லக்ஷ்மணரும் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கின்றனர். அவர்களை நோக்கியுள்ள சன்னதியில், சஞ்சீவி மலையைத் தூக்கியவாறு ஆஞ்சநேயர் சேவை புரிகிறார்.

மூலவர் வரசித்தி விநாயகர் சன்னதிக்கு வடபுறம் உற்சவமூர்த்திகளுக்கு தனிச் சன்னதி உள்ளது. விநாயகர், சிவன், பார்வதி, லக்ஷ்மி நாராயணர், வள்ளி-தேவசேனா சமேத சுப்ரமணியர், தர்ம சாஸ்தா, பக்த ஆஞ்சநேயர் ஆகியோர் உற்சவ மூர்த்தங்களாக தெற்கு நோக்கி திவ்ய தரிசனமளிக்கின்றனர். அடுத்து நவகிரக மண்டபம் அமைந்துள்ளது.

பல்வேறு தெய்வங்களை உள்ளடக்கிய இவ்வாலயத்தில் பல்வேறு விழாக்களும் கொண்டாடப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தியன்று காலையில் மூலவர் வரசித்தி விநாயகருக்கு சிறப்பு மகா அபிஷேகமும், மாலையில் சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் சுவாமி புறப்பாடும் உண்டு. அதேபோல் சங்கடஹர சதுர்த்தி நாட்களில் காலையில் மூலவருக்கு அபிஷேகமும், மாலையில் சந்தனக்காப்பும், உற்சவருக்கு மாலையில் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். அன்று உற்சவர் ஆலயத்திற்-குள்ளேயே வலம் வருவார்.

பரமேஸ்வரருக்கு மகாசிவராத்திரியன்று நான்கு கால பூஜையும், ஐப்பசியில் அன்னாபிஷேகமும் சிறப்பிக்கப்படுகிறது. பிரதோஷ தினங்களில் இவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அன்று உற்சவர் ரிஷப வாகனத்தில் ஆலயத்திற்குள் வலம் வருவார்.

தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை மாலையில் சிறப்பு வழிபாடுகளும், துர்க்கைக்கு செவ்வாய்க்கிழமைகளில் ராகுகால பூஜையும், வெள்ளிக்கிழமைகளில் விசேஷ அலங்கார ஆராதனையும் செய்யப்படுகிறது. ஆடி மாதம் முழுவதும் சந்தனக்காப்பு, குங்குமக் காப்பு, மஞ்சள் காப்பு என துர்க்கை அம்மன் விதவிதமான அலங்காரங்களில் ஜொலிப்பாளாம்.

கிருத்திகை நட்சத்திர நாட்களில், காலையில் வள்ளி_தெய்வானை சமேத சுப்ரமணியருக்கு மகா அபிஷேகமும், சந்தனக்காப்பு, விபூதிக்காப்பு அலங்காரமும் செய்யப்படுகிறது. அன்று மாலையில் உற்சவர் மயில் வாகனத்துடன் உட்பிராகாரத்தில் வலம் வருவார்.

ஷ்ரீராம நவமியன்று காலையில் சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு மகா அபிஷேகமும், மாலையில் கோதண்டராமருக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், பஜனையும் நடைபெறுகிறது.

தர்மசாஸ்தாவுக்கு சனிக்கிழமைகளில், மாலை நேரத்தில் வெள்ளிக்கவசம் சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. உத்தர நட்சத்திரத்தன்று உற்சவர் உட்பிராகாரத்தில் உலா வருவார். கார்த்திகை மாதம் முழுவதும் இவருக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

இந்து அறநிலையத்துறையின் ஆட்சிக்கு உட்பட்ட இக்கோயில், காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும். இவ்வாலயத்திற்கு காஞ்சி மகாபெரியவர் விஜயம் செய்து சிறப்பித்துள்ளாராம். இக்கோயிலின் கௌரவத் தலைவராக இருந்து வாரியார் சுவாமிகள் ஆன்மிகப் பணியாற்றியிருப்பது, குறிப்பிடத்தக்கது.

இத்தலத்து தெய்வங்களை மனமுருகி வழிபட்டால் திருமண வரம், குழந்தை வரம், கல்வி வரம் என உங்கள் வேண்டுதல்கள் எதுவானாலும் அதை நிறைவேற்றித் தருவார்கள் என்கிறார்கள் இங்கு வரும் பக்தர்கள். நீங்களும் சென்று வரமும் வளமும் பெற்று வரலாமே!

சென்னை திரு.வி.க. நகரில், பேருந்து நிலையத்திற்கு பக்கத்தில் இவ்வாலயம் உள்ளது. அருகில் மனக்கேஸ்வரி மற்றும் கோமதியம்மன் ஆலயங்களும் உள்ளன.

Comments