சங்கரன் கோவிலில் அருளாட்சி செய்யும் கோமதியம்மனின் பெருமை அனைவரும் அறிந்ததே!
அந்த ஆலய வழிக்கோயிலாக சென்னையிலும் ஒரு கோயில் அமைந்திருப்பது உங்களுக்குத் தெரியுமா?
சென்னை பெரம்பூரை அடுத்துள்ள திரு.வி.க. நகரில் சங்கரலிங்கம், சங்கரநாராயணருடன் கோமதியம்மன் கோயில் கொண்டுள்ளாள்.
இவள் இங்கு கோயில் கொண்ட காரணத்தை அறிந்துகொள்ள, சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தைப் பார்த்துவிடலாம்.
சங்கரன் கோவிலைச் சேர்ந்த அந்த தம்பதியினருக்குக் குழந்தை பாக்யம் இல்லை. அதனால் கணவன் வீட்டார், அவருக்கு வேறு ஒரு பெண்ணை மணமுடிக்க ஏற்பாடு செய்து வந்தனர்.
தனக்கு நேரப்போகும் அநீதியை எண்ணிப்பதறித் துடித்த அப்பெண், இவ்விஷயத்தைத் தன் சகோதரனிடம் தெரிவிக்க, `இவ்வுலகத்தில் யாரையும் நம்பிப் பயனில்லை. கோமதியம்மனால் மட்டுமே உனக்கு வழிகாட்ட முடியும். அவள் சன்னதிக்குப் போய் மன்றாடு' என்று கூறினார்.
அப்பெண் தன் கணவரையும் சம்மதிக்கச் செய்து சங்கரன் கோவிலில் உள்ள கோமதியம்மன் சன்னதிக்குச் சென்று பத்து நாள் கடுமையான விரதம் இருந்து மாவிளக்கு நைவேத்யம் செய்தாள்.
மாவிளக்கு என்பது, பச்சரியை மாவாக இடித்து வெல்லம் கலந்து பிசைந்து நெய் தீபமாக ஏற்றும் ஒரு பிரார்த்தனை. கவனமாக அவள் தயார் செய்த மாவினுள் மூன்று மஞ்சள் கிழங்குகள் திடீரெனத் தென்பட, அவர்களுக்கு வியப்பாக இருந்தது. அந்த மூன்று மஞ்சள் கிழங்குகளில் இரண்டு பெரியதாகவும், ஒன்று சிறியதாகவும் இருந்தது.
அந்த மஞ்சள் கிழங்குகளின் மகிமை அந்தக் குடும்பத்தினருக்கு சில ஆண்டுகள் கழிந்த பின்னர்தான் முழுமையாக வெளிப்பட்டது. ஆம்! மலடி என்று தூற்றப்பட்ட அப்பெண்ணிற்கு கோமதியம்மன் அருளால் மூன்று குழந்தைகள் பிறந்தன. பெரிய மஞ்சள்களின் அறிகுறியாக இரண்டு ஆண் குழந்தைகளும், சிறிய மஞ்சளுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தன.
காலமாற்றத்தில், ஆண் குழந்தைகளில் முதலாவதாகப் பிறந்தவரின் வம்சத்தினர் சென்னையில் வசிக்கத் துவங்கினர். ஒருநாள் அந்த வம்சத்தைச் சேர்ந்த ஒருவரின் மனைவியின் கனவில் தோன்றிய கோமதியம்மன், சென்னையிலேயே எனக்கொரு கோயில் கட்டு எனக் கட்டளையிடுகிறாள்.
இவ்விஷயத்தை அப்பெண்மணி தன் கணவரிடம் தெரிவிக்க, அவரும் மனமுவந்து கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார்.
அச்சமயம், பெரியவர் ஒருவர், `உப்புச்சாமியென்று திருச்செந்தூர் முருகனையும், பாம்புச்சாமியென்று கோமதியையும் கூறுகிறார்களே... கோமதி பாம்புச்சாமியென்றால் இங்கு புற்று இருக்கிறதா? புற்று இல்லையேல், எப்படி இங்கு கோயில் கட்டலாம்?' என கேள்வி எழுப்ப, கோயில் கட்ட ஏற்பாடு செய்தவருக்கு தர்மசங்கடமாயிற்றாம்.
அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது!
`நான் பிரத்யட்சமாக இங்கிருந்து உங்களுக்கெல்லாம் அருள்புரியப் போகிறேன்' என்று கோமதித்தாய் கூறுவது போல், அங்கே ஒரு நாகப்பாம்பு படம் எடுத்துக் காட்சி தந்து மறைந்துவிட்டது. அக்காட்சியைக் கண்ட அனைவரும் பக்தி மேலீட்டால் மெய்சிலிர்த்துவிட்டனர். பிறகுதான் வேர்க்கடலை சித்தர் என்பவர் தவம் செய்த இடம் அதுவென்பதும் தெரிய வந்திருக்கிறது.
சரியான இடத்தில்தான் கோயில் உருவாகப் போகிறது என்பது உறுதி செய்யப்பட்டு, 1978-ம் ஆண்டு திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இக்கோயிலுக்கு 1980-ம் வருடம் முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மேற்கு வாயில் வழியாக கோயிலுக்குள் நுழைகிறோம். மூலவர் விமானத்தில் சங்கர நாராயணர் கோயிலின் தலபுராண நிகழ்ச்சிகள் சுதை உருவங்களாக காட்சி தருகின்றன. குறிப்பாக, ஆடித்தபசு காட்சி நம் கண்களுக்கு விருந்தாக அமைகிறது. அதை ரசித்தவாறே இடதுபுறமாகச் சென்று பலிபீடம், நந்திவாகனத்தைக் கடந்து மூலவர் சன்னதி முன் நிற்கின்றோம்.
சன்னதிக்கு இருபுறமும் துவாரபாலகிகள் சுதை உருவில் காட்சி தருகின்றனர். அர்த்தமண்டபத்தில் வலதுபுறம் சங்கரலிங்க சுவாமியும், இடதுபுறம் சங்கரநாராயண சுவாமியும், ஹரியும், சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை விளக்குவது போல் அருளாசி வழங்குகிறார்கள்.
சங்கரன் கோவிலில் சங்கர நாராயணர் சுதை உருவமாக இருப்பதால் அவருக்கு அபிஷேகம் கிடையாது. ஆனால் இங்கு சிலாரூபமாக இருப்பதால், தினமும் இவருக்கு அபிஷேகம் நடக்கிறது.
கருவறையில் கருணையே உருவாக ஐந்தடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் நம்மோடு பேசுவது போல் கோமதியம்மன் காட்சி தருகிறாள். பக்தர்களின் சகலவிதமான கோரிக்கைகளையும் நிறைவேற்றும் அவளது ஆற்றலும், அழகும் அளவிடற்கரியது.
பராசக்தி அவதாரமான கோமதியம்மன், சிவபெருமானும், விஷ்ணுவும் ஒருங்கிணைந்து அருள்கின்ற சங்கர நாராயண அவதாரத்தின் இறைவி அம்சமாகும்.
ஆதிசங்கரர் இயற்றிய கோமதியம்மன் அஷ்டகத்தில், எப்போதும் வணங்க வேண்டிய தெய்வம் கோமதியம்மன் எனக் குறிப்பிட்டுள்ளாராம்.
கோமதியம்மனுக்கு மிகவும் உகந்தது வேர்க்கடலைப் பாயசமாகும். ஆரோக்யம் குன்றியோர், மன அமைதியின்றி வாடுவோர் வியாழன், திருவோணம், திருவாதிரை, பிரதோஷம், மாதசிவராத்திரி நாட்களில் கோமதியம்மனுக்கு வேர்க்கடலை மாலை சாற்றுதல், வேர்க்கடலைப் பாயசம் நிவேதனம் செய்தல் போன்ற வழிபாடுகளைச் செய்வது சிறப்பான பலனைத் தரும் என்கிறார்கள்.
கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மதேவர், துர்க்கை ஆகியோர் அருள்கின்றனர்.
மகாமண்டபத்தில் வலம்புரி விநாயகர், முருகன், யோகநரசிம்மர், தாயாரம்பாள் (லக்ஷ்மி), யோக ஆஞ்சநேயர், காலபைரவர், ஏகவல்லியம்மன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
இவ்வாலயத்தின் தலவிருட்சம் அரசமரம். இம்மரத்தின் அடியில் சர்ப்ப விநாயகர், நாகராஜர்கள், நாகாத்தம்மன் தரிசனம் தருகிறார்கள். ஈசான்ய மூலையில் நவகிரக சன்னதி அமைந்துள்ளது.
இக்கோயிலில் ஆடித் தபசு திருவிழா, சங்கரன் கோவிலில் நடைபெறுவது போலவே பதினொரு நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. அப்போது பக்தர்கள் அம்மனுக்குக் காவடி எடுப்பார்கள். ஆடித்தபசு மற்றும் நவராத்திரி சமயங்களில் சண்டி ஹோமமும் நடைபெறுகிறது.
ஐப்பசி மாதத்தில் கோமதியம்மன் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறுகிறது. அன்று வீதியுலாவும் உண்டு. ஜனவரி முதல் தேதியன்று நடைபெறும் லட்ச கணபதி ஹோமம், இங்கு நடைபெறும் விழாக்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
நீங்களும் கோமதியம்மன் ஆலயம் சென்று, அவளருளை பரிபூரணமாகப் பெற்று, `கொடுக்கின்ற தெய்வம் கோமதியைப் போல் உண்டோ?' என்று உணர்வீர்களாக!
சென்னை திரு.வி.க. நகரில் 19/25, பிரகாசம் தெருவில், திரு.வி.க.நகர் பேருந்து நிலையத்திற்குப் பின்புறம், காய்கறி அங்காடி அருகில் கோமதியம்மன் ஆலயம் உள்ளது.
சென்னை அருகில் ஒரு சங்கரன்கோவில் ஸ்தலம்.
ReplyDeleteநல்ல புதிய, அருமையான அன்மீங்க தகவல்கள்.
வாழ்த்துக்கள்.
உடல் ஆரோக்கியத்திற்கு சங்கரன்கோவில் செல்லும்படி சிலர் ஆலோசனை செய்திருக்கிறார்கள்.போக இயலுமா என்றிருந்த நேரம் இந்த பதிவு வழிகாட்டி விட்டது .தமிழ்விரும்பிக்கு நன்றி
ReplyDelete