மாங்கல்யம் காக்கும் வனதுர்க்கை

அசுரர்கள் பெண்ணாசையால் அழிந்த புராண வரலாறுகள் பல உண்டு. அதில் மகிஷனின் கதையும் ஒன்று!. யார் இந்த மகிஷன்? அசுரன் அத்துடன் சிவ பக்தனும் கூட!

அவன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்தான். அவனது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், அவன் முன் தோன்றினார்.

``மகிஷா! உன் தவத்தைக் கண்டு மெச்சினோம். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?'' என்றார் சிவபெருமான்.

``சுவாமி! யாரைக் கண்டதும் எனக்கு மோகம் தலைக்கு ஏறுகிறதோ, அவளால் மட்டுமே எனக்கு மரணம் ஏற்பட வேண்டும்.''

``அப்படியே ஆகட்டும்!''

இறைவன் மறைந்தார். மகிஷன் அதன் பின் தேவர்களுக்கு அளவில்லா துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தான். அவனை அழிப்பதற்காக தேவி, திரிகுணா என்ற பெயரில் தோன்றினாள்.

இந்த துர்க்கா தேவிக்கு சிவபெருமான் சூலத்தையும், திருமால் சக்கரத்தையும், பிரம்மா கமண்டலத்தையும், இந்திரன் வஜ்ராயுதத்தையும், அக்னியும், வருணனும் சக்தியையும், வாயு வில்லையும், ஐராவதம் மணியையும், எமன் தண்டத்தையும், நிருதி பாசத்தையும் கொடுத்தார்கள். தவிர, காலன் கத்தி, கேடயத்தையும், சமுத்திரம் தாமரை மலரையும், குபேரன் பான பாத்திரத்தையும், சூரியன் ஒளிக்கதிர்களையும் அளித்தார்கள். ஹிமவான் சிம்ம வாகனமானான்.

தேவி தன்னுடைய பதினெட்டுக்கரங்களிலும் ஆயுதங்களை ஏந்தி சிம்ம வாகனத்தில் மகிஷன் முன்தோன்றினாள். அவளது பேரழகைக் கண்ட மகிஷன் அவள் மேல் காதல் கொண்டான். தேவி உடனே அவனை அழித்தாள். துர்க்கை, நவ துர்க்கையாகப் போற்றப்படுகிறாள். அதில் ஒரு வடிவமே வனதுர்க்கை. இந்த வனதுர்க்கைக்கு குறுக்கையில் ஓர் ஆலயம் உள்ளது.

சுமார் 1500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் அழகான மகாமண்டபம், எதிரே சூலம், பலிபீடம், நந்தி உள்ளன. அடுத்து உள்ள அர்த்த மண்டப நுழைவாயிலின் இடதுபுறம் இந்திரன், இந்திராணி திருமேனிகள் உள்ளன. வலதுபுறம் அக்னி தேவன், ராகு, கேது திருமேனிகள் உள்ளன.

அடுத்துள்ள கருவறையில் அன்னை வனதுர்க்கை எட்டுக்கரங்களுடன் நாகம் படம் எடுத்தது போன்ற தோற்றத்துடன் அமைதியே உருவாக, புன்னகை தவழும் முகத்துடன் காட்சி தருகிறாள்.

தேவி தன் கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, கேடயம், அபயம், ஹஸ்தம் ஆகியவை தாங்கி, ஒரு கரத்தை தொடையில் பதித்தபடி உள்ளாள். தேவியின் முகம் வலது புறம் சற்றே சாய்ந்த தோற்றத்தில் உள்ளது.

நின்ற கோலத்தில், தனது வலது காலை மகிஷன் மேலும், இடது காலை சற்றே தூக்கிய கோலத்திலும் காணப்படுகிறாள், பராசக்தி.

மகிஷனை வதம் செய்த பாவம் தீர சிவபெருமானை நோக்கி பல நூற்றாண்டுகள் தேவி இங்கும் தவம் செய்தாள். இறைவன் மனமிரங்கி தேவியின் முன் தோன்றினார்.

இத்தலத்திற்கு அருகே உள்ள திருவேள்விகுடியில் யாகம் வளர்க்கப்பட்டு, எதிர்கொள்வாடியில் வரவேற்பு தரப்பட்டு, திருமணஞ்சேரியில் இறைவிக்கும் இறைவனுக்கும் திருமணம் நடந்ததாக தல வரலாறு கூறுகிறது.

குழந்தைப்பேறு, திருமணம் கைகூடுதல் ஆகியவை அன்னைக்கு ராகு காலத்தில் விளக்கு போடுவதன் மூலம் நடந்தேறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

தங்களது மாங்கல்ய தோஷம் நீங்க அன்னைக்கு மாங்கல்யம் வாங்கி அணிவித்து தோஷ நிவர்த்தி பெறுகின்றனர். ஆலயத்தின் தல விருட்சம் கடுக்காய் மரம்.

ராகு தோஷம் உள்ளவர்கள் தங்களது தோஷம் விலக 21 எலுமிச்சை விளக்கு போட்டு பிரார்த்தனை செய்ய, தோஷத்தின் வீரியம் குறைகிறதாம். தினசரி ஒரு கால பூஜை மட்டுமே நடக்கும் இந்த ஆலயம் காலை 10 முதல் 11 வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

திருப்பனந்தாள் - சீர்காழி பேருந்து தடத்தில் மணல்மேட்டிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது குறுக்கை என்ற இத்தலம்.

Comments