பயிர் காக்கும் பரமன்

பசுபதியாக விளங்கும் பரமனே, உயிர்கள் தழைத்திட உதவுவதற்காகப் பயிர்களைச் செழித்திடச் செய்கிறான் என்கின்றன பலப்பல புராணங்கள்.

அது மெய்தான் என்பதை விளக்குவது போல் அமைந்திருக்கிறது புத்தமங்கலம் கிராமம்.

நஞ்சை, புஞ்சை நிலங்கள் நான்கு புறமும் சூழ்ந்து பச்சைக் கம்பளம் விரித்திருக்க; கரும்புச் சோலைகள் காற்றிலே தலையாட்டி வரவேற்க; தூசும் மாசும் இல்லாத சுத்தமான காற்றை சுவாசித்தபடி, சுத்தமான நீர் சலசலத்து ஓடுவதை ரசித்தவாறே அந்த கிராமத்துக்குள் நுழைகிறோம்.

சிறிது தொலைவு நடக்கும்போதே பயிர் மணத்தோடு அங்கே பக்தி மணமும் வீசுவதை உணர்கிறோம்.

ஊரின் நடுவே அருள்மணம்கமழ அமைந்திருக்கிறது, கிருபாலநாத சுவாமியின் ஆலயம். இவரே இப்பகுதியின் பசுமையான சூழலுக்குக் காரணம். பசுபதியின் கருணையை வியந்தபடி, கிழக்கு திசை நோக்கியுள்ள ஆலயத்துள் நுழைகிறோம்.

உள்ளே நுழைந்ததும், மகாமண்டபம். மகாமண்டபத்தின் வலதுபுறம் அன்னை அபிராம சுந்தரி நின்ற திருக்கோலத்தில் புன்னகை தவழ, தென்முகம் நோக்கி அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு முன்னுரிமை என்பதுபோல் கோயிலுக்குள் நுழைந்ததும் கிட்டும் கோலாகல தரிசனத்தைப் பெற்ற நிறைவோடு தொடர்கிறோம்.

நந்தியும் பலிபீடமும் நடுவில் இருக்க, அர்த்த மண்டபத்தின் நுழை வாயிலின் வலதுபுறம் சனி பகவான் அருள்பாலிக்கிறார்.

அர்த்த மண்டபத்தைத் தொடர்ந்து உள்ள கருவறையில், இறைவன் கிருபாலநாத சுவாமிலிங்கத் திருமேனியராக காட்சியளிக்கிறார். பக்தர்கள் தாங்கள் பயிர் செய்யும் பயிர்கள் நன்றாக விளைந்து, தழைக்க வேண்டுமென இவரை வேண்டிக் கொள்கின்றனர். இவரது அருள்மழையில் அப்பகுதி முழுதுமே நனைவதை அங்குள்ள செழுமையே உணர்த்துகிறது.

கருவறையின் தென்புறம், தட்சிணாமூர்த்தியின் திருமேனி உள்ளது. பிராகாரத்தின் மேற்குப்பகுதியில் பிள்ளையார், முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

வடக்குப் பிராகாரத்தில் சண்டீசுவரரின் சன்னதி உள்ளது. இந்த ஆலயத்தில் நவகிரகங்களோ, துர்க்கையோ கிடையாது. இறைவனும் இறைவியும் நவகிரகங்களைக் கட்டுப்படுத்துவதாலும், அன்னை அபிராமசுந்தரியின் அம்சமே துர்க்கை என்பதாலும், இப்படிப்பட்ட அமைப்பு என்கிறார்கள்.

ஆலயம் காலை 10 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும். தினமும் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது.

கார்த்திகை கடைசி சோமவாரத்தில் இறைவனுக்கு ஆயிரத்தெட்டு சங்காபிஷேகம் நடைபெறுகிறது. திரளான பக்தர்கள் இங்கு பக்தியுடன் தரிசிக்க வருகின்றனர்.

பிரதோஷம், சித்திரை மாதப் பிறப்பு, தீபாவளி, பொங்கல், கார்த்திகை, ஆடி வெள்ளி, தை வெள்ளி நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. உற்சவமூர்த்திகள் கிடையாது என்பதால், சுவாமியும் அம்மனும் வீதியுலா வருவது கிடையாது. இருக்கும் இடத்தில் இருந்தே அருள்பாலித்தாலும் இத்தலம் முழுதும் அவர்களின் அருள்பார்வை படாத இடமே இல்லை என்றும், பயிர்களோடு இப்பகுதியில் உள்ள உயிர்களுக்கும் கிருபால நாதரே காவலாக இருப்பதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.

ஐப்பசி மாதம் பௌர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. ஆலயத்தின் அருகே திருக்குளம் உள்ளது.

இந்த ஊருக்கு சதுர்வேத மங்கலம் என்ற பெயரும் உண்டு. இந்த சிவாலயத்தைச் சுற்றி அனைத்து தெய்வங்களும் கோவில் கொண்டு அருள்பாலிப்பது சிறப்பான அம்சமாகும்.

ஆலயத்தின் வடக்கே மாரியம்மன்; கிழக்கே அய்யனார்; தெற்கே கன்னியம்மன்; மேற்கே வரதராஜப் பெருமாள் மற்றும் மன்மதன்; முகப்பில் ஆஞ்னேயர் ஆலயங்கள் உள்ளன.

அன்னபூரணியாக விளங்கி அம்பிகை அருள்கிறாள் என்றால், பரமன் பயிர்கள் செழித்திட வரம் தந்து, மண்ணுயிர் காத்து நிற்கிறான் இத்தலத்தில்.

சீர்காழி - திருப்பனந்தாள் பேருந்து தடத்தில் உள்ள மணல் மேட்டிற்கு தெற்கே 1 கி.மீ. தொலைவில் உள்ளது. புத்தமங்கலம் ஆலயம்.

Comments

  1. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment