வேடர் தலைவனான நம்பிராஜனின் மகள் வள்ளியை மணந்து கொண்டார், வேலவன். மருமகனுக்கு சீதனமாக தனது ஆளுகைக்குஉட்பட்ட மலைகளை அளித்தார், நம்பிராஜன். அங்கெல்லாம் முருகப்பெருமான் மனம் விரும்பி குடிகொண்டார். அந்த இடங்கள் `குன்று தோறாடல்' எனப் பெயர் பெற்றன.
அறுபடை வீடுகளில் ஐந்தாவது படைவீடான திருத்தணியை `குன்று தோறாடல்' என்றழைப்பது வழக்கம். அந்தவகையில் ஒன்றுதான் சுருளிமலை. இங்கு முருகப்பெருமான் சுருளி வேலப்பராக அருள்கிறார்.
வானுலகில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த சனி பகவான், ஒரு சமயம் தேவர்களைப் பிடிக்க வேண்டி வந்தது. அதனை முன்கூட்டியே அறிந்த தேவர்கள், சுருளி வேலப்பரிடம் வந்து தங்களைக் காக்குமாறு வேண்டி வழிபட்டனர். முருகன் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தருளினார்.
அப்போது இத்தலம் வந்த சனிபகவான், தான் தேவர்களைப் பிடிக்க அனுமதிக்குமாறு முருகப்பெருமானிடம் வேண்டி நின்றார். ``என்னை நம்பி வந்தவர்களைக் கைவிடுவதில்லை. எனவே தேவர்களை பிடிக்காமல் செல்!'' என்றார் முருகப்பெருமான்.
மறுப்பு சொல்லமுடியாத சனி பகவான், கொஞ்ச நாட்கள் அங்கேயே சஞ்சாரம் செய்துவிட்டு திரும்பினார். இதன் காரணமாக எந்தவகையான சனி தோஷம் உடையவர்களும் சுருளி வேலப்பர் கோயிலுக்கு வந்து முருகனை தரிசித்தால், சனிதோஷம் விலகி சந்தோஷம் நிலைக்கும் என்பது நிச்சயம்.
இந்த மலையில் சுரபி நதி என்னும் தீர்த்தம் அருவியாகக் கொட்டுகிறது. காதுக்கு இனிமையான ஓசையுடன் அருவி வீழ்வதால் `சுரபி' என்றழைக்கப்பட்டது. வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தந்து பாவம் போக்கி அமுதசுரபி போல புண்ணியம் தருவதாலும் இந்த நதி சுரபி நதி என்றழைக்கப்பட்டது என்றும் சொல்வார்கள். பிற்காலத்தில மலையின் பெயரால் மருவி சுருளி நதி எனப் பெயர் பெற்றது. இத்தலத்துக்கு வருபவர்கள் சுருளி அருவியில் நீராடிவிட்டு சுருளி வேலப்பரை தரிசிக்கலாம்.
இத்தலத்தில் முருகன் திக்கற்றவர்களுக்கு உறுதுணையாக நின்று அருள்கிறார். எப்படி என்பதற்கு உதாரணமாக, எத்தனை எத்தனையோ சம்பவங்களைச் சொல்கிறார்கள்.
பல்லாண்டுகளுக்கு முன்னர் இந்தத் தலத்தில் வசித்த முருக பக்தர் ஒருவருக்கு, குழந்தைப் பேறு இல்லை. சுருளி வேலப்பரையே தன் தந்தையாகவும் பிள்ளையாகவும் கருதிய அவர், தினமும் தவறாமல் முருகப்பெருமானை வழிபட்டு வந்தார்.
முருகன் அவருக்கு அருள் செய்யவேண்டிய நேரம் வந்தது. ஒரு நாள் அந்த பக்தர் திருமுருகனின் திருவடியை அடைந்தார். வாரிசு இல்லாத அவருக்கு இறுதிச் சடங்கு எப்படிச் செய்வது என்று ஊர் மக்கள் மத்தியில் வினா எழுந்தது.
அப்போது, பாலகன் ஒருவன் அங்கு வந்தான். கூட்டத்தினர் அவனை வியப்புடன் பார்த்தனர். இவன் இந்தப் பகுதியைச் சேர்ந்தவன் இல்லையே.. என்ற சந்தேகம் ஒவ்வொருவர் முகத்திலும் தென்பட்டது. அந்த சிறுவனிடம், "நீ யாரப்பா?'' எனக் கேட்டனர்.
அதற்கு அந்த சிறுவன், "இறந்து போன இவருக்கு நான் தூரத்து உறவு. அதிலும் மகன் உறவு வேண்டும். உடல் நலம் சரியில்லை என்ற தகவலைக் கேள்விப்பட்டு பார்க்கவந்தேன். ஆனால் அவர் இறந்துவிட்டார் என்பது வருத்தத்தைத் தருகிறது'' என பவ்யமாகச் சொன்னான்.
ஊரார் அவனிடம், அவரது இறுதிச்சடங்கைச் செய்ய இயலுமா? என்று கேட்டனர். சிறுவன் சற்றும் தாமதிக்காமல், "அதற்காகக்தான் நான் வந்திருக்கிறேன். தாராளமாக இறுதிச் சடங்கை செய்கிறேன். இது என் கடமையும் கூட!'' என்றான்.
இறுதிச் சடங்குகள் அனைத்தும் குறையின்றி நடந்தேறின. பின்னர் சிறுவனிடம் அவன் யார் என்ற விவரங்களைக் கேட்க எண்ணி அருகே அழைத்தனர். ஆனால் அந்த சிறுவனோ கடகடவெனச் சிரித்து அங்கிருந்து மறைந்தான்.
திகைத்துப் போன மக்கள், முருகனே பாலகனாக வந்ததை அறிந்தனர். திக்கற்ற பக்தரின் மகனாக சுருளி வேலப்பர் வந்து அருளியதால் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் அதிக அளவில் இங்கு வந்து செல்கிறார்கள்.
இனி, கோயிலை தரிசிப்போம்...
மேற்குத் தொடர்ச்சி மலையின் ஓர் அங்கமாக பசுமைப் போர்வை போர்த்திய மலைமகளாகக் காட்சி தருகிறது சுருளிமலை. இந்த மலையின் மத்தியில் சிறு குன்று ஒன்றில் முருகப்பெருமான் வீற்றிருக்கிறார்.
இந்தக் குன்றுக்குக் கீழே ஒரு குகை உள்ளது. தரையில் தவழ்ந்து உடலை வளைத்து குகைக்குள் நுழைந்தால், பிருங்கி முனிவர் பூஜித்த சிவன் அங்கு கைலாசநாதராகக் காட்சி தருகிறார். அதாவது கீழே அப்பனும் மேலே மகனுமாக அமைந்த கோயில்.
சன்னதியில் முருகனுக்கு அருகிலேயே விநாயகர் இருக்கிறார். ஒரே இடத்தில் அண்ணன், தம்பி தரிசனம் கிடைக்கிறது. இந்த சன்னதிக்குப் பின்புறத்தில் ஊற்று ஒன்று ஓடையாகப் பாய்கிறது. மூலிகை குணங்கள் கொண்ட இந்த நீரிலேயே சுவாமிக்கு அபிஷேகங்கள் நடக்கின்றன. இதன் அருகிலேயே விபூதிக்குகை உள்ளது. இந்த குகையின் பாறைத் துகள்களே விபூதியாக மாறுகிறது. இதையே பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருகிறார்கள்.
சுருளித்தீர்த்தம் பஸ் ஸ்டாண்டில் இருந்து சுமார் இருபது நிமிட நடையில் வனங்களுக்கு மத்தியில் சென்றால் இத்தல முருகனை தரிசிக்கலாம். பக்தர்கள் சென்று வர வசதியாகப் பாதையும் இருக்கிறது.
சுருளி ஆண்டவரை தரிசிக்கும் முன்னதாக சுரபி நதிக்கரையில் உள்ள பூதநாராயணப் பெருமாளை தரிசிக்கலாம். இக்கோயிலில் மகாவிஷ்ணு பூதாகர வடிவம் எடுத்த மூர்த்தியாகக் காட்சி தருகிறார்.
கோயிலுக்கு நடந்து செல்லும் போது சுருளி அருவியின் நீர் நம் வலப்பக்கத்தில் சலசலவென ஓடையாகச் செல்வதைக் காணமுடியும். மூலிகைக் காற்று நம் நாசியை வருடிச் செல்வதை உணரமுடியும். வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும். அதே நேரத்தில் தனி ஆளாகச் செல்வது சற்று சிரமம். இரண்டு மூன்று பேர் ஒரு குழுவாகச் செல்வது நல்லது.
சுருளித்தீர்த்தம் செல்பவர்கள், அருமையான மூலிகைத் தண்ணீர் பெருக்கெடுக்கும் அருவிக்குளியலுடன் மகாவிஷ்ணு, சிவன், விநாயகர், முருகன் என அனைவரையும் ஒரு சேர தரிசித்து விட்டு வரலாம்.
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து சுமார் எட்டு கி.மீ. தூரத்தில் இருக்கிறது சுருளித்தீர்த்தம். சுருளி தீர்த்தம் பஸ்ஸ்டாப்பில் இருந்து சுமார் ஒரு கி.மீ. நடந்து சென்றால் சுருளி வேலப்பர் கோயில் உள்ளது. பஸ் வசதி கிடையாது. நடந்துதான் போகவேண்டும்.
Comments
Post a Comment