இன்றைக்குமுன், சுமார் 475 ஆண்டுகளுக்கு முன்பு!
அதுவரை டில்லி சுல்தான்களின் படையெடுப்பு தென்னகத்திற்கு ஏற்படாமல் பாதுகாத்து வந்த மகத்தான பலம்வாய்ந்த விஜயநகர சாம்ராஜ்ஜியம், தக்கானிய சுல்தான்களின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல், சூழ்ச்சி காரணமாக வீழ்ந்தது. மற்றொரு பலம் வாய்ந்த கோட்டையான தேவகிரியும் தற்போதைய `வாரங்கல்' அலாவுதீன் கில்ஜியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஆறு மாத காலம் போரிட்டுப் பின்பு வீழ்ந்தது.
மடைதிறந்த வெள்ளம் போல் மாலிக்காபூரின் படைகள் தென்னகத்தின்மேல் பாய்ந்தன. அவர்களது முக்கியக் குறிக்கோள்கள் இரண்டு. ஒன்று, இந்து மதத்தின் அஸ்திவாரமான திருக்கோயில்கள் அனைத்தையும் சூறையாடி, பின்பு அடியோடு நிர்மூலமாக்குவது. மற்றொன்று, இந்துக்களை மதம் மாற்றுவது!
அதுவரை காலம் காலமாக, சாதுக்களாக அமைதியாக வாழ்ந்து வந்த தமிழக மக்களுக்கு மூர்க்கத்தனமான இத்தாக்குதல்கள் திகைப்பூட்டின. சற்றும் எதிர்பாராத விளைவு இது! தொட்டில் குழந்தைகள், இளம் பெண்கள், முதியவர்கள் என்று எவரிடமும் கருணை காட்டாமல் பல்லாயிரக்கணக்கில் இந்துக்கள் கொல்லப்பட்டார்கள். ஊர், ஊராக, கிராமம், கிராமமாக, தெருத்தெருவாக கொடூரமான வன்முறைகளால் இந்துக்கள் மத மாற்றம் செய்யப்பட்டார்கள். மதமாற்றத்தை எதிர்த்த தேசபக்தியும், மதப்பற்றும் கொண்ட பெரியவர்கள் இரக்கமின்றிக் கொல்லப்பட்டனர். அறிவுப் பொக்கிஷங்களான கோடிக்கணக்கான விலை மதிப்பற்ற ஓலைச்சுவடிகள் எரிக்கப்பட்டன. இக்கொடூரத்தைத் தாங்க முடியாமல் தமிழகமே நிலை குலைந்தது.
திருக்கோயில்களில் பூஜிக்கப்பட்ட விலைமதிப்பற்ற சிற்பச்செல்வங்களான தெய்வத் திருமேனிச் சிலைகள் மற்றும் ஐம்பொன் விக்கிரகங்கள் அந்த ஆபத்தான நெருக்கடி தருணத்தில் பூமியில் புதைக்கப்பட்டன. இதற்கு அவகாசமில்லாத தருணங்களில், வேறு வழி இல்லாமல் விக்கிரகங்கள் கிணறுகளிலும் ஆறுகளிலும் பத்திரப்படுத்தப்பட்டன.
தமிழக சரித்திரத்தின் மிகக் கொடூரமான இக்காலத்தைக் `கலாப காலம்' என்றும் `இருண்டகாலம்' என்றும் பெரியோர்கள் கூறுவர். இவ்விதம் அடியோடு சிதைக்கப்பட்ட திருக்கோயில்களில் குறிப்பாக, திருவரங்கம் ஸ்ரீ அரங்கனின் திருக்கோயிலையும், பிரசித்திபெற்ற மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலையும், பட்டுக்கோட்டை ஸ்ரீரங்கநாதர் திருக்கோயிலையும், அதே ஊரிலுள்ள ஸ்ரீ சந்திரசேகரர் திருக்கோயிலையும், திருக்கோட்டியூர் ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் திருக்கோயிலையும், திருவெள்ளறை ஸ்ரீபுண்டரீகாட்சர் திருக்கோயிலையும் மற்றும் பல பெரிய திருக்கோயில்களையும் கூறலாம். இத்திருக்கோயில்களின் பாதுகாப்பிற்காக வீரத்துடன் போர் புரிந்து, தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீர இளைஞர்களும், பெண்களும், பெரியோர்களும் ஏராளம், ஏராளம்.
புனர்நிர்மாண முயற்சிகள்!
பெரியோர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதால், எந்தெந்த சிலைகளையும் விக்கிரகங்களையும் எங்கெங்கு புதைத்து, மறைத்து வைத்தனர் என்று பிற்கால சந்ததியினருக்குத் தெரியாமலேயே போய்விட்டன. ஆதலால்தான் கட்டடங்கள் கட்டுவதற்காக பூமியைத் தோண்டும்போது விலையுயர்ந்த தெய்வத் திருமேனிகள் நமக்குக் கிடைத்து வருகின்றன இன்றும்!
``கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்'' என்ற மூதுரையின்படி தமிழக மக்கள் வாழ்ந்து வந்ததால், ஒவ்வொரு சிறு கிராமத்திலும் கூட அழகான திருக்கோயில் ஒன்று அக்காலத்தில் அமைந்திருந்தது.
நமது திருக்கோயில்களில் கொள்ளையிடப்பட்ட ஏராளமான தங்கம், வெள்ளியினால் ஆன பூஜை பாத்திரங்கள், ஆராதனைப் பொருட்கள், சிற்பச் செல்வங்களான விக்கிரகங்கள் ஆகியவை குதிரைகள், மாடுகள், ஒட்டகங்கள் பூட்டிய வண்டிகளில் டில்லி மாநகருக்கு எடுத்துச் செல்லப்பட்டன. ஏராளமான இந்து இளம்பெண்கள் வண்டிகளில் ஏற்றப்பட்டு டில்லி சுல்தான்களின் அந்தப்புரங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
ஆதாரம் : ‘‘The Struggle for Indian Empire’’
- By Prof. Majumdar.
இவ்விதம் இடிக்கப்பட்ட அழகான மிகப்பெரிய திருக்கோயில்களில் ஒன்றுதான் தஞ்சை மாவட்டத்தில் திகழும் பட்டுக்கோட்டை என்னும் ஊரிலுள்ள ஸ்ரீரங்கநாத ஸ்வாமி திருக்கோயிலாகும்.
டில்லி சுல்தானின் படையெடுப்புகளுக்கு முன்பு நான்கு வேதங்களில் சிறந்த ஆசார சீலர்களான பெரியோர்களின் நானூறு குடும்பங்கள் இவ்வூரில் இருந்ததால் சதுர்வேத மங்கலம் என்ற சிறப்புப் பெயருடன், நீர்வளம், நிலவளம், செல்வச்செழிப்பு ஆகியவற்றுடன் விளங்கியது பட்டுக்கோட்டை. அதற்கும் முன்பு சோழப் பேரரசர்கள் ஆட்சி புரிந்தபோது இவ்வூர் `சோழமண்டலத்து இராஜ இராஜ வளநாட்டு பரண்டையூர் நாட்டு செல்லூர்' என்ற பெயரில் புகழ்பெற்று விளங்கியதைச் சோழர்கால கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. மூன்றாம் குலோத்துங்க சோழன் பாண்டிய மன்னனைப் போரில் தோற்கடித்து வெற்றி கொண்டதன் நினைவாக இவ்வூரைப் `பாண்டியனை வெண்கொண்ட சோழ சதுர்வேத மங்கலம்' எனப் பெயர் மாற்றம் செய்தான்.
இத்தகைய பழைமை வாய்ந்த இவ்வூர் நாயக்கர் காலத்தில் `பட்டு மழவராயர்' என்பவர் இப்பகுதியின் சிற்றரசராகத் திகழ்ந்து தனக்கென பலம்வாய்ந்த கோட்டை ஒன்றைக் கட்டிக் கொண்டதால், அன்றைய காலத்திலிருந்து இவ்வூருக்குப் பட்டுக்கோட்டை என்ற பெயர் ஏற்பட்டு, அதுவே நிலைத்தும் விட்டது.
அரங்கனுக்கென்று தமிழகத்தில் பல திருக்கோயில்கள் இருந்தாலும், பட்டுக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி திருக்கோயிலுக்கென்று தனிச்சிறப்பும் ஒன்று உண்டு.
பொதுவாகவே, பெரும்பான்மையான அரங்கன் திருச்சந்நிதிகளில், பெருமான் சயன திருக்கோலத்தில்தான் (ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டபடி) சேவை சாதிப்பதைக் காண்கிறோம். ஆனால், பட்டுக்கோட்டை திருக்கோயிலில் ஸ்ரீ ரங்கநாதன், நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிப்பதைக் காணலாம்.
தான் திருப்பள்ளி கொண்ட நிலையிலிருந்து எழுந்து, காப்பாற்றுவதற்குள், தன் பக்தர்களுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்துவிடுமோ - அல்லது துன்பம் நேரிட்டுவிடுமோ என்ற கவலையினால், பக்தர்களை உடனுக்குடன் காப்பாற்றி அருளவே, நின்ற திருக்கோலத்தில் இங்கு எழுந்தருளியிருப்பது பட்டுக்கோட்டைக்கே உரித்தான விசேஷ சிறப்பாகும்!
இத்திருக்கோயிலின் இன்றைய சோகநிலை பற்றியும், அதற்காக பட்டுக்கோட்டை ஊர் மக்கள் இரவு பகல் பாராது பாடுபட்டு வருவது பற்றியும் 22.2.2008 தேதியிட்ட ``குமுதம் ஜோதிடம்'' இதழில் வெளியிட்டிருந்தோம். இதனைக் கண்ட எமது வாசக அன்பர்களும் மற்றும் பல பக்தர்களும் அன்புடன் நன்கொடைகளை அளித்து உதவியதன் பலனாக உள் பிராகாரம், தாயார் சந்நிதி, பெருமாள் சந்நிதி, ஆண்டாள் சந்நிதி ஆகியவை சீரமைக்கப்பட்டு விட்டன. சென்ற சில நாட்களுக்கு முன்பு இத்திருக்கோயிலுக்குச் சென்று தரிசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. தமிழக மக்களின் பக்தியையும், பெருந்தன்மையையும் நினைத்து நினைத்து என் நெஞ்சம் பெருமிதம் அடைந்தது. பிறருக்குச் சிறிதளவு தீங்கும் நினையாத தூய உள்ளம் கொண்ட தமிழக மக்களின் உள்ளத்தில் நிறைந்துள்ள திருக்கோயில்களுக்கு இத்தகைய விபரீத சோதனைகள் ஏற்பட்டதை நினைத்து நினைத்துக் கண்ணீர் வடித்தேன்.
இந்நிலையில், பணப் பற்றாக்குறையினால் திருப்பணிகள் பாதியிலேயே நின்றுவிட்டன. வெளிப் பிராகாரம், நான்குபுற பெரிய மதில் சுவர்கள், ராஜகோபுரம், தரைக் கற்கள் பதித்தல், ஸ்ரீயோக நரசிம்மர் சந்நிதி, ஷ்ரீசக்கரத்தாழ்வார் சந்நிதி ஆகிய திருப்பணிகள் நின்றுவிட்டன. இவற்றை முடித்தால்தான் மகா கும்பாபிஷேகத்தை நடத்த முடியும். இதற்குச் சுமார்
82 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது.
அழகான, மிகப்பெரிய இத்திருக்கோயிலின் புனர்நிர்மாணப் பொறுப்பை ஏற்றிருப்பது அரங்கனிடம் மாறாத பக்தியும், தீராத காதலும் கொண்ட, ஆச்சார, அனுஷ்டானசீலரான திரு.ஆர். நரசிம்மாச்சாரியார் ஸ்வாமி ஆவார். இப்பெரியவர்தான், `குமுதம் ஜோதிடம்' வாசக அன்பர்களின் இதயத்தில் நித்யவாசம் புரியும் திருவள்ளூரை அடுத்த நரசிம்மபுரம் திருக்கோயிலைப் புனர்நிர்மாணம் செய்தவர். அடியோடு சிதைக்கப்பட்டிருந்த இத்திருக்கோயிலை இவர் சீரமைத்த பக்தியையும், திறனையும் கண்டு பிரமித்துப் பாராட்டாதவர் இல்லையெனக் கூறலாம்.
நம் வேத நெறிமுறை அழியாமல் காப்பாற்றப்பட வேண்டுமானால், யுகம் யுகமாக நம்மையும், நம் குடும்பங்களையும் பாதுகாத்து வரும் வாழ்க்கை நெறிமுறை காக்கப்பட வேண்டுமானால், பெறற்கரிய இத்தகைய திருக்கோயில்களை எப்பாடுபட்டாவது புனர்நிர்மாணம் செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.
திருக்கோயிலின் விசேஷ சக்தி!
இந்த ஆலயத்தின் பெருமை கணக்கிலடங்கா. காலம்காலமாக இப்பகுதியில் உள்ள சுமார் 150 ஊர்களைச் சேர்ந்த ஊர் மக்கள் தங்கள் குடும்பத் திருமணங்களை இத்திருக்கோயிலில்தான் செய்வது என்ற பழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தனர். சொந்தமாக வசதியான மிகப்பெரிய வீடுகள் உள்ள செல்வந்தர்கள்கூட தங்கள் பிள்ளைக்கோ அல்லது பெண்ணுக்கோ திருமணம் என்றால் இத்திருக்கோயிலில் தான் செய்வது வழக்கம்.
திருமணத் தடங்கல்களை நீக்குவதுடன், திருமண தம்பதியினருக்கு மகிழ்வையும், மனநிறைவையும் தரும் இல்லற வாழ்க்கையையும் தவறாது அளிப்பதால், ஊர்மக்கள் இத்தகைய வழக்கத்தைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்து வந்தனர். திருமணத் தடங்கல்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதது ஆகிய தோஷங்களைப் போக்குவதில் சக்திவாய்ந்த திருத்தலம் இது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ யோகநரசிம்மர், செய்வினை மற்றும் திருஷ்டி தோஷங்களைப் போக்கி அருளுவதில் தன்னிகரற்ற சக்திவாய்ந்த பெருமாள் ஆவார்.
புனர்நிர்மாணப் பணிகளுக்காக, பாலாலயத்தில் அமர்ந்துள்ள பெருமானை நீண்ட காலம் பாலாலயத்தில் வைத்திருக்கக்கூடாது என்பது மகரிஷிகள் வாக்கு. ஆதலால் வாசக அன்பர்கள், பெரியோர்கள் ஆகியோர் தங்கள் வசதிக்குட்பட்டு தங்களால் இயன்ற உதவியை அளித்து இத்தெய்வீகப் பணி விரைவில் முடிந்து மகா கும்பாபிஷேகம் நடைபெறச் செய்ய வேண்டுகிறோம்.
அது மட்டுமன்றி, நீங்கள் அனைவரும் மகா கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்து, அதனைச் சிறப்பாக நடத்தி வைத்து அரங்கனின் திருவருளைப் பெற்று மகிழும்படியும் வேண்டுகிறோம். உதவிகளை அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட அமைப்பிற்குக் காசோலையாகவோ (அ) வரைவோலையாகவோ அனுப்பி அஸ்வமேத யாகப் பலனைப் பெறும்படி கேட்டுக் கொள்கிறோம்.
ஸ்ரீரங்கநாதஸ்வாமி சேவா சபா டிரஸ்ட்,
ஸ்ரீரங்கநாதஸ்வாமி ஆலயம்,
பெருமாள் கோயில் தெரு,
அறந்தாங்கி ரோடு,
பட்டுக்கோட்டை-
614 601
தமிழ்நாடு
போன் : 9787199545
Comments
Post a Comment