கற்க்கம்பதில்காட்சி தந்த கந்தன்

அருணகிரியாரின் சமகாலத்தில் வாழ்ந்த தேவி உபாசகன் சம்பந்தாண்டான். மன்னன் பிரபுடதேவராஜன், அருணகிரியாரிடம் பேரன்பு கொண்டிருந்தார்.

மக்கள் அருணகிரி நாதரைப் பெரிதும் மதித்துப் போற்றினர். அதனால் சம்பந்தாண்டான் அவரிடம் பொறாமை கொண்டான். பிரபுட தேவராஜனைத் தனிமையில் சந்தித்து, அருணகிரி நாதர் குறித்து அவதூறுகளைக் கூறினான். அரசன் அதனைப் பொருட்படுத்தவில்லை. அருணகிரியாருக்கு எதிராகத் திட்டங்களைத் தீட்டினான் சம்பந்தாண்டான்.

அரசரின் அனுமதியோடு சம்பந்தாண்டான் ஒரு போட்டியை அறிவித்தான். தான் வழிபடும் தேவியை நேரில் வரவழைத்துக் காட்சியருளச் செய்வதாகக் கூறினான் சம்பந்தாண்டான். அதே சமயம் அருணகிரி நாதர் முருகனை வரவழைத்துக் காட்டி, அவரது பக்தியை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினான். அருணகிரியார் முருகனின் திருவருளை முழுமையாக நம்பி போட்டியிடத் தயாரானார்.

அண்ணாமலையார் திருக்கோயிலில் போட்டி அரங்கேறியது. ஒரு பக்கத்தில் அம்பிகை அடியார். மறுபக்கத்தில் முருக பக்தர். கடுமையான போட்டி.

பல்வேறு முறைகளையும் கையாண்ட சம்பந்தாண்டான், தேவியை வரவழைத்துக் காட்ட முயன்றான். அவனுடைய முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை.

‘‘அன்னையே! உன் பக்தனாகிய நான் அரசவையில் அவமானப்படலாமா? தாங்கள் வராவிட்டாலும் அருணகிரி நாதர் வேண்டுதலுக்கு இரங்கி, முருகன் அவைக்கு வந்து காட்சியருளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்ÕÕ என்றான் சம்பந்தாண்டான். தேவியும் அவ்வாறே செய்வதாகக் கூறினாள்.

அம்பிகை காட்சி அருளாததற்குப் பல காரணங்கள் உள்ளன என்று கூறிச் சமாளித்த சம்பந்தாண்டான், ‘‘அருணகிரியார் முருகனை வரவழைத்துக் காட்டட்டும்’’ என்றான்.

பிரபுட தேவராஜன், அருணகிரியாரிடம் முருகனை வரவழைக்க வேண்டினான். அருணகிரியார் முருகனைச் சிந்தையில் நினைந்து அவைக்கு எழுந்தருள வேண்டினார். முருகன் வரவில்லை. சற்றே கண்மூடி தியானித்தார்.

கயிலையில் குழந்தை முருகனை மடி மீது அமர்த்தி அம்பிகை கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தாள். முருகனின் செவியில் அருணகிரியாரின் அழைப்பொலி கேட்டது. எனினும் சம்பந்தாண்டானுக்கு வாக்குக் கொடுத்ததால் அம்பிகை முருகனை இறுகப் பிடித்து வைத்துக் கொண்டாள்.

அம்பிகையின் பிடியிலிருந்து முருகனை எப்படி விடுவிக்கலாம் என்று சிந்தித்தார் அருணகிரியார். அப்போது மயில் நினைவுக்கு வந்தது. முருகனின் மயிலைப் புகழ்ந்து பாடினார் அருணகிரி நாதர்.

முருகனை மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்த அம்பிகையின் முன், மயில் அழகாக ஆடியது. அருணகிரி நாதர், ‘அதலசேடணர் ஆட, அகிலமேரு மீதாட’ என்ற பாடலைப் பாடினார். பாடலைக் கேட்டவுடன் தேவியின் பிடி சற்றே தளர்ந்தது. விடுபட்ட முருகன் மயிலின் மீது ஏறினான். மயில் விண்ணைக் கிழித்துக் கொண்டு மண்ணுலகம் வந்தது.

திருவண்ணாமலை திருக்கோயில் கற்கம்பம் ஒன்றிலிருந்து மயில்வாகனனாக முருகன் கண நேரம் அவையோருக்குக் காட்சி அருளினான். அந்த இடமே கம்பத்திளையனார் சன்னதி.

Comments