சிவ விஷ்ணு கோவில்

மலையடிப்பட்டி என்னும் ஊரில் சிவபெருமானுக்கும், விஷ்ணுவுக்கும் ஒரே குன்றின்மீது தனித்தனியே எழுப்பப்பட்டுள்ள இரு குகைக் கோயில்கள் உள்ளன.

கல்வெட்டுகளில் இவ்வூர் திருவாலத்தூர் மலை என்று காணப்படுகிறது. இங்குள்ள சிவன் கோயில், திருமால் கோயிலை விடக் காலத்தால் முற்பட்டது. இந்தக் கோவிலில் நந்திவர்ம பல்லவன் காலத்துக் கல்வெட்டு (கி.பி.775-826) இருக்கிறது. அக்கல்வெட்டில் கி.பி.730இல் `குவான்சாத்தன்' என்பவர் சிவனுக்குக் கோயில் எடுத்து ஈசனுக்கு `சத்ய வாகீஸ்வரர்' என்று பெயரிட்டதாகக் காணப்படுகிறது.

கருவறையை அடுத்து உள்ள அர்த்தமண்டபத்தின் சுவரில் சப்தமாதர்கள், கணேசர், வீரபத்திரர், சிவன், விஷ்ணு ஆகியோரது சிற்பங்கள் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளன. எருமையின் முகமும், மனித உடலும் கொண்ட மகிஷாசுரனுடன் சிங்கத்தின் மீதமர்ந்து மகிஷமர்த்தினி சமர் புரியும் காட்சி, வெகு அழகாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.

குகையை ஒட்டி முன்னால் உள்ள மண்டபம், விஜயநகர காலக் கலைப் பாணி உடையது. பல்லவர் கால பாணியை ஒட்டி துவாரபாலகருக்கு இரு கைகள் மட்டும் உள்ளன. (வேறு பாணிக் கோயில்களில் நான்கு திருக்கரங்களோடு துவாரபாலகர்கள் காட்சியளிப்பார்கள்).

மலையடிப்பட்டி திருமாலின் கோயில், கருவறையையும், முன்னால் ஒரு மண்டபத்தையும் கொண்டது. அனந்த சயன மூர்த்தியாகக் காட்சியளிக்கும் விஷ்ணு கோயில், திருப்பதிக்கு நிகரானது என்று சொல்கிறார்கள். இங்குள்ள தூண்கள் மிக அழகானவை. தூணின் அடிப்பக்கம் சிங்கம் நிமிர்ந்து உட்கார்ந்திருப்பது போன்றும், அதற்கு மேல் தூண் உயர்ந்திருப்பதையும் காண்கிறோம். இது பல்லவமாமல்லன் காலத்துக் கலைப் பாணியைக் கொண்டது எனலாம்.

மண்டபத்தின் சுவரில் நரசிம்மர், வராக மூர்த்தி, தேவியருடன் திருமால் ஆகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கருவறையில் திருமால் அனந்த சயன மூர்த்தியாகக் காட்சியளிக்கின்றார். ஆதிசேஷனின் ஐந்து தலைகளும் குடை போன்று விரிந்து திருமாலின் தலைக்கு நிழலளித்துக் கொண்டிருக்கின்றன. திருமாலின் நாபியிலிருந்து பிரம்மா தோன்றிக் காட்சியளிக்கின்றார்.

கருவறையின் பின் சுவரில் அரக்கர்களும், தேவர்களும் சித்திரிக்கப்பட்டுள்ளனர். அனந்த சயன மூர்த்தியின் கலை அமைப்பு மிகவும் சிறப்புடையதாகும்.

அம்பாளின் சன்னதி காலத்தால் மிகவும் பிற்பட்டதாகும். அம்பாள் பொன் அழகு அம்மை கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தந்து அருள்பாலிக்கின்றாள். பிரதி செவ்வாய்க்கிழமை இந்த அம்மனுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்படுகிறது. அன்று பக்தர்களின் கூட்டம் மிக அதிகமாகக் காணப்படும்.

மலையடிப்பட்டி வாகீஸ்வரர் மற்றும் பள்ளி கொண்ட பெருமாள் கோவில்கள் தினசரி காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

மலையடிப்பட்டி குகைக் கோயில்களுக்கு மிக அருகில் காளியாப்பட்டி, விசலூர் போன்ற இடங்களில் வேறு சில பழங்காலக் குகைக் கோயில்களும் உள்ளன. புராதனச் சின்னமாக இவை இருப்பதனால் இந்தியத் தொல்பொருள் துறையின் பராமரிப்பின் கீழ் இருக்கின்றன.

புதுக்கோட்டையிலிருந்து சுமார் 33 கி.மீட்டர் தொலைவில், கீரனூர்-கிள்ளுக்கோட்டை பேருந்துச்சாலையில் மலையடிப்பட்டி இருக்கிறது.

Comments

  1. நல்ல பதிவு.
    அரிய தகவல்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment