குழந்தை வரம் அருளும் ஸ்ரீகுமாரசுப்ரமணியர்!








கேரள மாநிலம், காஸர்கோடு தாலுகாவைச் சேர்ந்த கும்பளாவில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது 'பேள’ பேருந்து நிறுத்தம். அங்கிருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ளது குமாரமங்கலம் திருத்தலம். கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து கும்பளா வழியாகவும் இந்தக் கோயிலை அடையலாம். இங்கு, ஸ்ரீகுமார சுப்ரமணியர் எனும் திருநாமத்துடன் அழகு கொஞ்சக் காட்சி தருகிறார் முருகக் கடவுள்!
10-ஆம் நூற்றாண்டில், கதம்ப வம்சத்தைச் சேர்ந்த சந்திராஸ்கந்தன், வனவாசி எனும் இடத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான். ஒருமுறை, தன் மகள் சுசீலாதேவியுடன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டான் மன்னன். அப்போது கண்வ மகரிஷி தவமிருந்த கும்ப நதிக்கரைக்கு வந்தவர்கள், அங்கு நீராடினார்கள். குளிக்கும் போது மூர்ச்சையான சுசீலா, பிறகு பேய் பிடித்தவள்போல் நடந்து கொண்டாள். இதைக் கண்டு அதிர்ச்சியானான் மன்னன்.

இதையடுத்து, அவளுக்குப் பார்க்காத வைத்தியங்கள் இல்லை. ஆனால், அவள் குணமாகவே இல்லை. அப்போது, அந்தணன் ஒருவன் வந்து, மந்திரங்கள் ஜபித்து, அவளைப் பழைய நிலைக்குக் கொண்டுவந்தான். அவனுக்கே அவளைத் திருமணம் செய்து வைத்தான் மன்னன். பின்னர், பேள எனும் இடத்தில், கும்ப நதிக் கரையில், அழகிய அரண்மனை அமைத்து, ஏராளமான பொன்னும் பொருளும் தந்ததுடன், அந்த அந்தணனுக்கு அதிகாரத்தையும் வழங்கினான். சுசீலாவுக்கு ஆண் குழந்தையும், அடுத்து பெண் குழந்தையும் பிறந்தது. அவர்களுக்கு ராஜசிம்மன், யசோதாதேவி எனப் பெயரிட்டு, சிறப்புடன் வளர்த்தனர்.

இந்த வம்சத்தில் வந்தவன் 3-ஆம் ஜெயசிம்மன் (14-ஆம் நூற்றாண்டு). இவன், தன் சகோதரியின் குடும்ப சகிதம் குமாரதாரா நதிக்கரையில் உள்ள 'குக்கே’ சுப்ரமணியரைத் தரிசித்து, அங்கப் பிரதட்சணம் செய்து பிரார்த்தித்தான், அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. ஒருநாள், ஜெய சிம்மனின் கனவில் வந்த கந்தக் கடவுள், ''பிரம்மஹத்தி தோஷத்தால் பிள்ளை இல்லாது போயிற்று. உன் தங்கை அங்கப் பிரதட்சிணம் செய்யும்போது, மனப்பூர்வமாகச் செய்யவில்லை. வனத்தில், புலியும் பசுவும் தங்களது ஜென்மப் பகையை மறந்து, ஒன்றாக வாழ்வதைப் பார்ப்பாய். அங்கு, ஸ்ரீகுமார சுப்ரமணிய கோலத்தில் எனக்கொரு கோயிலைக் கட்டுவாயாக!’ எனச் சொல்லி மறைந்தார். அதன்படி, கிளிங்காரு எனும் ஊரைச் சேர்ந்த எட்டுப் பேர், புலியும் பசுவும் இணைந்து வாழும் அதிசயத்தைத் தெரிவிக்க, மன்னன் அங்கு சென்று தீர்த்தக் குளம் மற்றும் கோயிலைக் கட்டினான். அத்துடன் அபிஷேகக் கிணற்றையும் வெட்டினான். அதுவே, குமாரமங்கலம் ஸ்ரீகுமார சுப்ரமணியர் திருக்கோயில்.

மன்னனிடம் தகவல் சொன்ன எட்டுப் பேரின் குடும்பத்தாருக்கு, கண்டிகே, மொலையாடு, ஆளக்கே, குத்தகுட்டே, கிளிங்காரு, கொட்டகரே, கடேகஞ்ஜி, ஹொஸமனே ஆகிய பெயர்கள் கொண்ட குடும்பத்தாருக்கு உத்ஸவங்களும் விழாக்களும் தொடர்ந்து நடத்த அதிகாரம் அளித்து, பொறுப்பும் வழங்கினான்.

அபிஷேகக் கிணறு, மத்ஸ்ய தீர்த்தம் என வழங்கப்படு கிறது. இங்கு சுமார் ஒரு மீட்டர் நீளமுள்ள மீன் ஒன்று வசிக்கிறது. இதற்கு 'சுப்பராயா’ எனப் பெயர் சூட்டியுள்ளனர் பக்தர்கள். மகாவிஷ்ணு மச்சாவதாரம் எடுத்ததையும், இந்த மீனையும் இணைத்துச் சொல்வர். 3-ஆம் ஜெயசிம்மனின் சகோதரி, இங்கு நீராடி வழிபட்டு, தோஷங்கள் நீங்கப் பெற்றாளாம். பின்னாளில் அவளுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. எனவே, இந்தத் தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீகுமார சுப்ரமணியருக்கு பூஜை செய்து வழிபட, சந்தான பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்! புலியும் பசுவும் ஒன்றாக இருந்த இடத்தில், கற்சிலை ஒன்று தோன்றியதாம். தீர்த்தக்கரையில், இந்த விக்கிரகத்தை இன்றைக்கும் தரிசிக்கலாம். இதனை 'புலிக்கல்லு’ என்பர். இதை வணங்கினால், பயம் விலகும் என்பது ஐதீகம்!

Comments