வள்ளிமலை வடிவேலன்





வள்ளிமலை, முருகன்&வள்ளியின் காதல் நாடகம் நடந்தேறிய இடம் என்பதால், இங்கு திருமணம் செய்து கொள்ள பலரும் விரும்புகின்றனர். அதன் காரணமாகவே, இங்கு பதினேழு திருமண மண்டபங்கள் உள்ளன.

பாலாற்றின் துணை ஆறான பெண்ணை ஆற்றின் மேற்குக் கரையில் உள்ளதே, இந்த வள்ளி மலை.

அருணகிரிநாதரின் திருப்புகழில் வள்ளிமலையின் பெருமை சொல்லப்பட்டுள்ளது.

இம்மலையில் ஏராளமான முனிவர்கள் தவமியற்றி சித்தியும் முத்தியும் பெற்றுள்ளனர். 14-ஆம் நூற்றாண்டில் சமண முனிவர்கள் பலர் தவம் செய்ய இதைத் தேர்ந்தெடுத்துள்ளனர். சேஷாத்திரி சுவாமிகள், சச்சிதானந்த சுவாமிகள், மௌனகுரு சுவாமிகள் ஆகியோராலும் இது போற்றப்பட்டுள்ளது.

இன்றும் இரவு வேளைகளில் ‘ஓம்’ என்ற ஒலி கேட்பதாகவும், சாம்பிராணி நறுமணத்தை உணர்ந்ததாகவும் இங்குள்ள சந் நியாசிகள் கூறுகின்றனர்.

மலை மேலே முருகன் எழுந்தருளியுள்ள கோயிலுக்குச் செல்லும் படிகளில் 272-வது படியில் உள்ள நான்காவது மண்டபத்தை சுமார் 60 ஆண்டுகள் முன்பு செப்பனிட முயன்ற போது ‘குபுகுபு’ வென வெண்புகை வெளிப்பட்டதாம். சில முனிவர்கள், பாதாளத்துள் தவம் செய்யும் காட்சியும் தெரிந்ததாம்.

உடனே பதற்றம் கொண்டு, மூடிவிட்டார்கள். அன்று முதல் இன்று வரை அந்த மண்டபம் பழுது பார்க்கப்படாமலேயே உள் ளது.
முருகப் பெருமானை மணக்கும் முன், குறப் பெண்ணான வள்ளி இம்மலை மீதுதான், கூடை முறங்கட்டி, கோணல் கொண் டையிட்டு, மலை இன மகளாக வளர்ந்தாள்.

வள்ளியின் கதை தெரியுமோ?

ஒரு முறை சிவபெருமானை எண்ணி, திருமால் தவம் செய்தார். அச்சமயம் திருமகள் மான் வடிவில் அவர் முன்பு உலவு கிறாள். முனிவர் ரூபத்தில் இருந்த திருமாலுக்கு மனம் சஞ்சலப்பட்டது. மானின் மீது மோகப் பார்வையை வீசினார். விளைவு -லட்சுமி கர்ப்பமானாள்.

கருவுற்ற மான் அலைந்து திரிந்து, வள்ளிக் கிழங்கு தோண்டி எடுக்கப்பட்ட ஒரு குழியில், மகவை ஈன்றது. பிறந்தது மான்கு ட்டியாக அல்லாமல், மனிதக் குழந்தையாக இருக்கக் கண்டு, மான் ஓடிவிட்டது.

குழந்தைப் பேறு இன்றி வருத்தத்தில் இருந்த அரசன் நம்பி என்பவன், அந்தக் குழந்தையை எடுத்து அன்புடன் வளர்த்தான். வள்ளிக் கிழங்கு அகழ்ந்த குழியில் கிடைத்த குழந்தைக்கு ‘வள்ளி’ என்று பெயரிட்டான்.
மலைமேல் உள்ளது குடைவரைக் கோயில். பாறையைக் குடைந்து கி.பி. 856-917 காலத்தில் கட்டப்பட்டதாம். கோயில் வெளிச்சுற்று, முன் மண்டபம் மற்றும் மூன்று கட்டுகளைக் கொண்டது.

வெளிச்சுற்றுக்கு முன்புறம் சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த நான்கு தூண்களைக் கொண்ட நுழைவு மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் இடப் பக்கம்தான், வள்ளி தினைப் புனம் காக்க, கவண் கொண்டு ஆயல் ஓட்டும் பெண்ணாக நின்றாளாம். அங்குள்ள ஒரு பாறைச் சிற்பம் இதைச் சித்திரிக்கிறது.

மலையின் மன்னன் நம்பிராஜன் வளர்த்த மகள், கால்கள் நோக மலையெல்லாம் திரிந்து, இறுதியில் வேடன் முருகப்பிரானை சந்திக்கிறாள். வள்ளி மேல் காதல் பிறந்தது கந்தனுக்கு! அவள் கையால் தேனும் தினைமாவும் உண்டார். விக்கல் வந்தது. சுனை நீர் அருந்தி தாகம் தீர்த்தார். பிறகு, மோகம் தீர்க்க வழி? அண்ணன் விநாயகரின் ஆதரவை நாடினார். நம்பியின் மகளைத் தன் தம்பி மணக்க, விநாயகர் யானை உருக்கொண்டு வள்ளியை பயமுறுத்தினார். துரத்துவது ஆண் யானை. வள்ளிக்கு பயம் வராதா?

ஓடினாள்; ஓடினாள்; மலை முகட்டு உச்சிக்கே ஓடினாள்.

குமரக் கடவுள் குறுக்கே பாய்ந்து அவளைத் தடுத்து நிறுத்தி, காப்பாற்றி, கையகப்படுத்தினார்.

பின், காதல் கனிந்து, கல்யாணத்தில் முடிந்தது, நமக்குத் தெரிந்ததே!

பொதுவாக, சைவ ஆலயங்களில் பக்தர்களுக்கு சடாரி வைக்கப்படும் வழக்கம் இல்லை. இந்த வள்ளிமலை முருகன் கோயிலில் பக்தர்களுக்கு சடாரி வைக்கப்படுகிறது.

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் வள்ளிமலை உள்ளது.

வள்ளிக் கிழங்கில் பிறந்தவளாம் & அவள்
வள்ளி என்ற பெயரினளாம்
கள்ளச் சிரிப்புக் கந்தனிடம் & பெருங்
காதல் கொண்டு நின்றவளாம்!
குன்றும் கடலின் கரை மீதும் & நீலக்
கோல மயிலின் மீதிலுமே
என்றும் பிரியா இணையாகி & அவள்
இனிதே அருகில் இருந்தவளாம்!
நன்மான் உலவும் கானகத்தே & ஒரு
நம்பி யரசன் கண்டெடுத்த
பொன் மான் ஈன்ற பெண்மானாம் & அவள்
பூமான் முருகப் பெருமானாம்!
தமிழில் பிறந்த தையலவள் & அமுதத்
தமிழில் தவழ்ந்த தையலவள்
தமிழில் கலந்த தினைமாவை & தேனில்
தந்தே முருகனை வென்றவளாம்!
நீல மயிலின் மீதமர்ந்தே & ஒரு
நீண்ட நெடுவேல் கையேந்தி
ஞால முழுதும் ஒளிவீசும் & எங்கள்
ஞான குருபரன் காதலியாம்!
தினையைக் காக்கச் சென்றவளாம் & அங்கே
தெய்வக் காதல் புரிந்தவளாம்!
வினையைக் காக்க வந்தவளாம் & நம்
விதியைக் காவல் செய்பவளாம்!
கவலை கொள்ளச் சம்மதியாள் & நம்
கண்கள் கலங்க அனுமதியாள்
திவலை அளவு நினைத்தாலும் & அவள்
திருவருள் மழையாய்ப் பொழிந்திடுவாள்!
புள்ளி மயில்மேல் முருகனுடன் & அவள்
புறப்பட்ட டிங்ஙனே வந்திடுவாள்
வள்ளிக் குறமகள் வந்திடுவாள் & நம்
வாழ்வில் ஒளியினைத் தந்திடுவாள்!

Comments