


சோழநாட்டின் கொங்கு மண்டலத்தில் காவிரியின் வடகரையில் திகழும் புனிதமான திருத்தலம் மோனூரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணப் பெரு மாள் திருத்தலமாகும். மேற்கிலிருந்து கிழக்காகப் பாயும் காவிரி நதி, எம்பெருமான் அருளால் தன் புனிதத் தன்மையை மேலும் புலப்படுத்த சற்றே தடம் மாறி வடக்கு திசையிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்வது இத்திருத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
தன் அருள்பார்வையால் தவழ்ந்துவரும் காவிரியின் அழகை இத்திருத்தலத்தில் மோகனப் புன்னகையுடன் ரசித்துக் கொண்டிருக்கின்றார் ஸ்ரீ கல்யாண பிரசன்ன வெங்கட் ரமணப் பெருமாள். கோடி சூரியப் பிரகாசனாக குளிர் நிலவின் அமைதி தவழும் திருமுக மண்டலத்தோடு காட்சி தருகின்றார் எம்பெருமான் இங்கு.
வில்வாரண்ய க்ஷேத்திரம்!
புராண காலத்தில் ‘வில்வாரண்ய க்ஷேத்திரம்’ என வழங்கப்பட்டு, இன்று ‘மோகனூர்’ என்று பக்தர்களால் பூஜிக்கப்படும் இத்திருத்தலம் சைவ - வைணவ ஒற்றுமைக்கும், பெருமைக்கும் ஈடிணையற்ற ஓர் உதாரணமாகத் திகழ்ந்து வருகின்றது. காவிரியும், பிரம்ம தேவரும் நெல்லி மரமாக இருந்து நானிலத்தோர்க்கு நலம் தரும் நாயகனான ஸ்ரீமந் நாராயணனுக்கு நிழலைத் தந்து பூஜிக்கும் இப்பெருமானின் திருவருளைப் பெற்ற திருத்தலம் இது. இத்தலத்தில் திருக்கயிலைநாதனான ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு எம்பெருமான் ‘மோகன அவதார தரிசனம்’ தந்ததால் ‘மோகனபுரி’ என்ற திருநாமம் ஏற்பட்டு, தற்போது ‘மோகனூர்’ என்று பக்தியுடன் பூஜிக்கப்பட்டு வருகின்றது.
மண்மகள் மடியிலிருந்து கிடைத்த மணிவண்ணனின் தரிசனம்!
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மோகனூரில் பரம பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அந்தமாய், ஆதியாய், ஆதிக்கும் ஆதியாய், ஆயனாய் நின்ற பெருமானை ஒவ்வொரு வருடமும் திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது தரிசித்து மகிழ்வதைத் தன் பிறவிப் பயனாகக் கொண்டு கடைப்பிடித்து வந்தார் அப்பெரியவர். வயோதிகத்தினால் அவருக்கு ஒருசமயம் வாதநோய் ஏற்பட்டு அலர்மேல்மங்கை உறைமார்பனைத் தரிசிக்கத் திருமலைக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.
மனம் தளர்ந்த நிலையில், ‘வேதம் போற்றும் விமலனை, பச்சை மாமலர் மேனியனை, பாரதப் போர் முடித்த பரமனை, என் ஐயன் கோவிந்தனைக் காணாத வாழ்க்கை இனி வேண்டுமோ?’ என்ற எண்ணத்தில் தன் உயிரை மாய்த்துக்கொள்ளத் துணிந்தார். மெல்ல, மெல்ல நகர்ந்து கரை புரண்டோடும் காவிரியில் விழுந்து உயிர்த் தியாகம் செய்ய முயன்றபோதுதான் அந்த அதிசயம் நடந்தது. மிகப்பெரிய நாக சர்ப்பமொன்று அவரது எதிரில் தோன்றி, அவரை மிரட்டி, விரட்ட ஆரம்பித்தது. நாகத்தினைப் பார்த்து பயந்த பக்தர், தரையில் தவழ்ந்து ஊர்ந்து கொண்டு தான் வந்த வழியே திரும்பிச் செல்ல ஆரம்பித்தார். அந்தப் பக்தரின் இல்லம்வரை விரட்டிச் சென்ற நாகம், அவர் வீட்டிற்குச் சென்றவுடன் மறைந்துவிட்டது.
தன் நிலை கருதி வருத்தமடைந்த பக்தர், அயர்வினால் தன்னை மறந்து தூங்கிவிட்டார். அப்போது அவரது கனவில் திருமலையப்பன் தரிசனம் தந்தருளினான். ‘‘அன்பனே! உன்னால் திருமலைக்கு வரமுடியாததால், நானே உன்னைத் தேடி இங்கு வந்துவிட்டேன். அருகில் உள்ள புற்றில் நான் எழுந்தருளியிருக்கின்றேன். உனக்குத் தரி சனமளிப்பதற்காகவே திருமலையிலிருந்து இங்கு வந்து, எழுந்தருளியிருக்கிறேன். என்னைத் தரிசித்து மனநிறைவு பெறுவாய்’’ என்று திருவாய் மலர்ந்தருளினான். நாகத்தின் வடிவில் தன்னை விரட்டியது அரங்கன் துயிலும் ஆதிசேஷனே என்பதை உணர்ந்த பக்தர், தனக்குக் கிடைத்த பேறினை எண்ணி எண்ணி மகிழ்ந்தார். தேவாதி தேவர்களுக்கும், சனகாதி முனிவர்களுக்கும் எளிதில் கிடைக்காத எம்பெருமான் தன் கனவில் தோன்றியதை ஊர்ப் பெரியவர்களிடம் அந்த பக்தர் கூற, பாம்புப் புற்றிற்குச் சென்று பார்த்தனர்.
அங்குப் பேரானந்தத்துடன், உதடுகளில் புன்னகை மலர, மோகன அவதார ரூபலாவண்யத்தில், ஈரேழு பதினான்கு உலகத்தினரையும் மயக்கும் பேரழகுடன் தரிசனமளித் தான் ஸ்ரீ கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணப் பெருமான்.
பெறற்கரிய இப்பெருமான், அன்றிலிருந்து மோகனூரில் தன்னை நாடிவந்து தரிசனம் பெறும் பக்தர்களின் குறைகளைத் தீர்த்தருள்வதில் எல்லையற்ற கருணையோடு வரப் பிரசாதியாக விளங்குகின்றான் பிரபு! இன்றும் சந்நிதியில் தானாகவே உருவாகி காணப்படும் புற்று மண்ணை பக்தர்கள் நோய் தீர்க்கும் ஔஷதமாக உபயோகிக்கின்றார்கள்.
மாணவச் செல்வங்களுக்கு மகத்தான மாமருந்து!
இடைவிடாத போட்டிகளினாலும், தங்கள் பிள்ளைகள் வகுப்பில் முதலிடம் பெறவேண்டுமே என்று கருதும் பெற்றோர்களின் வற்புறுத்தல்களினாலும் மாணவ சமுதாயமே இன்று செய்வதறியாது கலங்கி நின்று மனதை ஒருமுகப்படுத்த முடியாமல் தவிக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் நம் மாணவச் செல்வங்களுக்குப் படிப்பில் கிரகிப்புத்திற ன், நினைவாற்றல், தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுதல், சகவாச தோஷத்தைத் தவிர்த்தல் ஆகிய மனோசக்தியை அள்ளித்தரும் ஒரு மாபெரும் சக்தியாக மோகனூர் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவ மூர்த்தி விளங்குகின்றார்.
பிரம்மதேவரின் பத்தினியான ஸ்ரீசரஸ்வதி தேவிக்கு அனைத்து வேதங்களையும், கலைகளையும், சாஸ்திர சூட்சுமங்களையும் அருளியவர் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அம்சமான ஸ்ரீஹயக்ரீவர். ஆதலால், மோகனூரில் எழுந்தருளியிருக்கும் மகத்தான சக்தி வாய்ந்த ஸ்ரீலட்சுமிஹயக்ரீவருக்கு நேர் எதிரில் ஹம்சவாகனத்தில் ஸ்ரீ சரஸ்வதிக்குச் சற்று கீழே ‘‘வித்யாவான் குணீ அதி சாதுர!’’ என்று அனுமன் சாலீஸாவில் துளசிதாசர் நெஞ்சம் நெகிழ்ந்த ஸ்ரீபாலமாருதி அழகான சிறு குழந்தையாகக் கைகூப்பிய வண்ணம் எழுந்தருளியிருப்பது மேலும் இச்சந்நிதியின் விசேஷ சிறப்பிற்கு மெருகூட்டுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஆச்சார அனுஷ்டானங்களில் மிகவும் உயர்ந்த வேதோத்தமர்களைக் கொண்டு ஸ்ரீசரஸ்வதி தேவிக்கு ஸ்ரீஹயக்ரீவர் உபதேசித்த ‘ஸ்ரீ வித்யா மேதா மஹா யக்ஞம்’ மோகனூர் திருக்கோயிலில் சிறப்பாக நடைபெறுகின்றது.
தாம்பத்திய தோஷம் போக்கும் ஸ்ரீ சம்மோஹன கோபாலன்!
அன்னியோன்ய தாம்பத்தியத்திற்கு ஜாதகத்தில் 2, 5, 7, 8-ம் இடப் பொருத்தங்கள் எத்தனை அவசியமானவை என்பதை ஜோதிட சாஸ்திரங்கள் விவரித்துள்ளன. தாம்பத் திய சுகம், மனரீதியில் பரஸ்பர ஈடுபாடு ஆகியவற்றின் அவசியத்தைக் கிரகநிலைகளின் அடிப்படையில் ஜோதிட சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறியுள்ளன.
எம்பெருமானான ஸ்ரீமந் நாராயணன் ஸ்ரீ கண்ணனாகவும், ஸ்ரீமகாலட்சுமி அம்சமாக ஸ்ரீராதையாகவும் அவதரித்து ஓர் ஈடிணையற்ற அன்னியோன்ய பாவத்தைக் குறிக்கும் ‘சம்மோஹன கோபாலனாக’ ஆயர்பாடி மங்கையர்க்குத் தரிசனமளித்தருளினான். இதனை மகரிஷிகள் ‘ஏக ஸ்வரூபம்’ (இருவரும் ஒன்றே) என்பதைக் குறிக்கும் திருக்கோலம் என்று பக்தியுடன் பூஜித் தனர். திருமகளுடன் சேர்ந்து இருப்பதே ஸ்ரீமந் நாராயணனுக்குப் பெருமை என்பதை ‘‘அகிலகில்லேன் இறையும் என்று அலர்மேல்மங்கை உறைமார்பா’’ என்று ஆழ்வாராதிகளும் போற்றியுள்ளனர். வேதம் நாராயணனை விவரித்த இடங்களிலெல்லாம் லட்சுமியையும் சேர்த்தே விவரித்து, பகவான் அவதரித்தபோது திருமகளும் அவதரித்தாள் என்பதை ‘‘ராகவத்வே பவத் சீதா, ருக்மிணி கிருஷ்ண ஜன்மநி’’ என்று விஷ்ணு புராணம் குறிப்பிடுகின்றது.
ஜாதகத்தில் பூர்வ புண்ணியம், சயனம், புத்திரம், அஷ்டமம் மற்றும் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ஸ்ரீசம்மோஹன கோபாலனைப் பூஜித்து தோஷ நிவர்த்தியை நிச்சயமாய் பெறமுடியும். தற்போது திருக்கோயிலில தியான ஸ்லோகத்துடன் கூடிய திருப்படம் பக்தர்களுக்குக் கிடைக்கிறது.
ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணனுக்கு விரைவில் அழகான தனிச்சந்நிதியும் அமைய உள்ளது, இத்திருக்கோயிலில்!
நோய் தீர்க்கும் ஸ்ரீ தன்வந்திரி பகவான்!
எத்தகைய கொடிய நோயானாலும் அதனை நிவர்த்திக்கும் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு இங்கு தனிச்சந்நிதி உள்ளது. முற்பிறவிகளில் செய்த பாவங்களினால் நவக்கிரகங்கள் ‘ரோகம்’ என்ற தோஷத்தை ஏற்படுத்துகின்றன. இத்தகைய தோஷங்களுக்கு தன்வந்திரி பகவானைப் பூஜிப்பது உகந்த பரிகாரமாகும். இந்த உண்மையை உணர்த்துவதற்காக ஸ்ரீதன்வந்திரி சந்நிதியின் முகமண்டப மேற்கூரையில் நவக்கிரக மூர்த்திகள் அனைவரும் அந்தந்தக் கிரகங்களின் மூலிகை விருட்சங்களினால் வடிவமைக்கப்பட்டிருப்பது இத்திருத்தலத்தில் மட்டுமே காணக்கூடிய அதிசயமாகும்.
பகலவன் பணியும் பரமன்!
ஈடிணையற்ற இத்தகைய தெய்வீக சக்திகள் வாய்ந்த இத்திருக்கோயிலில் உறையும் உத்தமனை புரட்டாசி மாதத்திலும், மாசி மாதத்திலும், அமாவாசையை அடுத்த மூன்று தினங்களிலும் ஆதவன் தன் கதிர்களால் ஆராதிப்பது பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும் நிகழ்வாகும்.
திருமலையில் ஒருநாள்!
நவராத்திரியின்போது வரும் ஞாயிற்றுக்கிழமையில் ‘‘திருமலையில் ஒருநாள்’’ என்னும் அரிய வைபவம் இத்திருக்கோயிலில் நடைபெறுகின்றது. அன்று அமரற்கரிய ஆதிபிரானாகிய அச்சுதன் சேவை சாதிக்கும் திருமலையில் நடைபெறும் சுப்ரபாத சேவையிலிருந்து இரவு ஏகாந்த சேவை செய்வதை அதே அலங்காரங்களுடன் இவ்விழா சிறப்பாக இத்திருத்தலத்திலும் நடைபெற்று வருகின்றது.
மேலும் இத்திருக்கோயிலில் சோடச புஜங்களுடன் (16 திருக்கரங்களுடன்) சக்கரத்தாழ்வார் அக்னிபாத ஸ்தான மூர்த்தியாக எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றார். க்ஷீராபிஷேகத்தின்போது (பால்) சுதர்சன மூர்த்தியின் திருமேனி நீலநிறமாகத் தெரிவதைக் காணக் கண்கோடி வேண்டும். பக்தர்கள் தங்களது நியாயமான பிரார்த்தனை, ஸ்ரீ சுதர்ஸனரிடம் சமர்ப்பித்து நெய்தீபம் ஏற்றி வழிபட நினைத்தது நடந்து கைகூடுவது உறுதியாகும். ஏவல், பில்லி, சூனியம் மற்றும் எதிரிகளின் தொல்லைகள் நீங்க இந்த மஹா சுதர்ஸன மூர்த்தியை வழிபடுவது சிறப்பாகும்.
ஸ்ரீ சத்யநாராயண பூஜை!
ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திர தினத்தன்று பெருமாளுக்கு திருமஞ்சனமும், மாலையில் சத்யநாராயண பூஜையும், கருட சேவையும் சிறப்பாக நடைபெறுகின்றது. ஸ்ரீசத்யநாராயண பூஜையில் மட்டைத் தேங்காய் வைத்து பூஜித்து, பின் அத்தேங்காயைப் பூஜையில் வைத்த பக்தருக்குத் திரும்பக் கொடுக்கப்படுகிறது. அத்தேங்காயை பக்தர்கள் தங்களது வீட்டின் பூஜையறையில் வைத்து ஸ்ரீ சத்யநாராயண ஸ்வாமியை மனதில் வைத்து பூஜித்து வழிபட்டு வரவேண்டும். தங்களது பிரார்த்தனை மூன்று மாத காலத்திற்குள் நிறைவேறிவிட்டது என்பதைத் தங்களது அனுபவத்தில் கண்ட பக்தர்கள், பின்னர் இத்தேங்காயை சத்யநாராயண பூஜையில் சமர்ப்பிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இராஜகோபுர திருப்பணி!
தமிழகத்தில் ஆழ்வார்களால் ஆராதிக்கப்பட்டு மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய திருத்தலங்களுக்கு ஈடான சக்தியுடன் பெருமை பெற்று விளங்கும் இத்திருத்தலம் இராஜகோபுரம் இன்றி இருப்பதைக் கண்டு வருந்திய ஏராளமான அன்பர்களும், பாகவதோத்தமர்களும், அடியவர்களும், பெருமைபெற்ற இத்திருக்கோயிலுக்கு இராஜகோபுரமும் திருச்சுற்றுப் பிராகாரமும் அமைத்திட முடிவு செய்து, அதற்கான பூமிபூஜையைக் கடந்த 17.4.2011 ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பாக நடத்தி முடித்தார்கள். ஆகம, சிற்ப சாஸ்திரங்களின்படி, ராஜகோபுரத்திற்கும், கருவறையில் எழுந்தருளியுள்ள பகவானுக்கும் மந்திர சக்தியால் தொடர்பும், சக்தியும் உண்டு. ஆதலால், மந்திரப் பிரதிஷ்டை செய்யப்பெற்ற ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் சிறு அளவிலாவது இராஜகோபுரம் இருப்பது மந்திரபூர்வமாக மிகவும் அவசியமாகும். இந்த இராஜகோபுரத் திரு ப்பணிக்காகவும், திருக்கோயிலின் சுற்றுப் பிராகாரம் அமைக்கும் பணிக்காகவும் சுமார் ரூ. 90.00 லட்சம் தேவைப்படுகின்றது. நிதிப் பற்றாக்குறையினால் திருப்பணிகள் நின்று போயுள்ளன.
தமிழகத்தில் மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளிலுமுள்ள அன்பர்களும் திருப்பணிக்கான தங்களின் பங்களிப்பினைத் தக்க தருணமான இச்சமயத்தில் அளித்து உதவ வேண்டுகிறோம். தாங்கள் அளிக்கும் சிறு தொகையும் ‘சிறு துளி பெருவெள்ளம்’ என்பது போல திருப்பணியை விரைவில் முடிக்கக் காரணமாக அமையும். திரு ப்பணிகளுக்கான நன்கொடைகளை காசோலை, வரைவோலை (டி.டி.) மற்றும் மணியார்டர் மூலமாக ‘Thirumal Vazhipattu mandram’ என்ற பெயரில் எடுத்து, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Thirumal VAZHIPATTU MANDRAM,
nO.24, AGRAHARAM, MOHANUR & POST,
NAMAKKAL dISTRICT 637 015.
வங்கிக் கணக்கு எண் : Current A/c No. 31803343128
State Bank of India, Mohanur Branch,
IFSC : SBINOO14956
மேலும் தொடர்புக்கு : 9442957143 , 04286255252
குறிப்பு : நாமக்கல்லில் இருந்து 17 கி.மீ. தொலைவில் பரம பவித்திரமான காவிரி நதிக்கரையில் உள்ளது மோகனூர் திருத்தலம்.
Comments
Post a Comment