உலகின் முதல் கண்ணாடிக் கோயில்









முழுக்க முழுக்க ஜொலிஜொலிக்கும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட கோயிலை இதுவரை கண்டிருக்கிறீர்களா?

அயல்நாட்டில் இந்துக் கோயில் அமைப்பதே கடினம். அதிலும் வேற்று மதத்தவர் நிலம் கொடுத்து உதவியதால் கட்டப்பட்ட கோயில் எது என்று தெரியுமா?

உலகிலேயே முதன் முதலாக கண்ணாடியால் ஆன கோயிலும் அதுதான்.
எங்கே இருக்கிறது அப்படி ஓர் அதிசயக் கோயில்?எந்த தெய்வத்தின் ஆலயம் அது என்றெல்லாம் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்கள்தானே? எல்லாவற்றுக்கும் விடை தெரிய வேண்டுமானால், மேலே படியுங்கள். அதற்கு முன் ஒரு முக்கியமான விஷயம்... அயல் நாட்டில் கோயில் எழுப்புவதே சிரமம். நல்ல மனம் கொண்ட பலர் ஒன்று சேர வேண்டும். தமக்கு வாழ்வளித்த கடவுளுக்கு கோயில் கட்டாமல் விட மாட்டோம் என்னும் தீவிரமும் விடா முயற்சியும் அவர்கள் எல்லோருக்கும் இருக்க வேண்டும். சோர்ந்து போகாமல் நிதி திரட்ட வேண்டும். அந்நாட்டின் அரசு அவர்கள் முயற்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும். இவையெல்லாவற்றையும்விட அப்படி ஒரு கோயில் எழும்பிட கடவுளின் அனுகிரகம் நிறையவே வேண்டும். இப்படிப் பல தடைகளைத் தாண்டித்தான் வெளி நாடுகளில் கோயில்கள் எழும்பியிருக்கின்றன.
இவ்வளவு சிரமங்களுக்கு இடையேயும்,

வித்தியாசமான புதுமையான, உலகிலேயே முதல் முயற்சியாக ஒரு கோயிலை அமைக்க ஆசைப்பட்டு பலரது முயற்சியால் எழுந்த ஒரு கோயிலைத்தான் காணப்போகிறோம். பக்திப் பரவசத்தோடு வியப்பானதோர் வித்தியாசமான அனுபவமும் கிட்டும் இந்தக் கோயிலில்.

எந்தப் பெண் கடவுளின் பெயரைச் சொன்னால் நமக்கு பக்தியோடு பயமும் வரும்?

காளியம்மன்தானே! அவளுக்குத்தான், மலேஷிய நாட்டில் கண்ணாடிக் கோயில் கட்டி புண்ணியம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் மலேஷியத் தமிழர்கள்! தமிழரின் பாலை நில தெய்வமான காளி தேவிக்கு, தமிழர்கள், ஏராளமாகக் குடியிருக்கும் மலேஷியாவில் கோயில் அமைத்தது ஆச்சரியம் ஏதுமில்லை.

மலேஷிய நாட்டில்,ஜோஹோர் பரு என்னும் நகரில் தான் காளியம்மனுக்கு,முழுக்க முழுக்க கண்ணாடிகளாலேயே ஆன திருக்கோயில் அமைக்கப்பட்டு உள்ளது.

ஜோஹோர் என்னும் மாநிலத்தின் தலைநகரமே ஜோஹோர் பரு.

மலேஷியத் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து 4 மணி நேர பஸ் பயணத்தில், ஜோஹோர் பருவை எட்டி விடலாம். ஒரு காலத்தில் சுல்தான்கள் ஆண்டு வந்த பகுதி இது. சரி, கோயிலுக்குள் நுழையும் முன், அம்மன் ஏன் காளி என அழைக்கப்படுகிறாள்?என்பதைத் தெரிந்து கொள்வோம்.

காளியம்மன் என்றதுமே நம் மனக் கண்ணில் படமாக ஓடுவது அவளின் உக்கிர வடிவம்தான். அவள் திருவுருவினை நினைத்தாலே கூட ஒரு வித பயமும் சிலிர்ப்பும் ஏற்படும்.

மயானத்தில் சவம்போல் கிடக்கும் ஈசனின் மார்பில் கால்களை ஊன்றிக் கொண்டு நர்த்தனமாடும் வடிவத்தில் கோப ஆவேசத்தோடு விரித்துப் போட்ட கேசத்துடன் மண்டை ஓடுகளையே ஆடையாகவும் மாலையாகவும் தரித்திருப்பாள் தேவி.ஆனால் இவ்வளவு கோர வடிவினளாக இருந்தாலும், பக்தர்களிடம் பாசம் காட்டும் தாயாகவே விளங்குபவள்.

‘கால்' என்ற வடமொழி வார்த்தைக்கு நேரம், கறுப்பு நிறம், காலம், இறப்பு என்றெல்லாம் அர்த்தம் உண்டு. சிவபெருமானைக் காலன் என்றும் கால காலன் எனவும் அழைக்கிறோம். அவனில் ஒரு பாகமாகிய ஈஸ்வரியின் ஓர் அம்சமே காளி.

காலத்தின் வடிவமானவளாதலால், காலத்தால் அழிக்கவே முடியாதவளும் காளியே.

தீயவர்க்குத் தீயாகவும் நல்லோர்க்குத் தென்றலாகவும் திகழும் தேவி தன்னை வணங்கிய யாரையும் அவள் கைவிட்டதே இல்லை.

கிராமங்களில் எல்லைத் தெய்வமாக வழிபடப்பட்டாலும் காளியன்னை எல்லைகளை எல்லாம் கடந்து யாதுமாகி நிற்பவள்...எங்கும் நிறைந்தவள்.
தசமகாவித்யா தேவியருள் முதன்மையானவள் காளியே. கபாலங்களை மாலையாக அணிந்திருப்பதால் அவளுக்கு முண்டமாலினி என்றும் பெயர் உண்டு. சம்சாரக் கடலிலிருந்து மீட்டு சாமான்யர்களுக்கு முக்தி தருவதால் பவதாரிணி எனவும் அழைக்கப்படுகிறாள்.

காளியை வணங்கியும் பாடியும் தமக்கு பாக்கியத்தையும் பெருமையையும் சேர்த்துக் கொண்டவர்களுள் பெருமை வாய்ந்தவர்கள் காளிதாசன், ராமகிருஷ்ண பரமஹம்ஸர், மகாகவி பாரதியார் ஆகியோர் மிக மிக முக்கியமானவர்கள். விக்ரமாதித்த மன்னனும் அவன் மதியூக மந்திரியும் காளி வழிபாட்டில்தான் ஈடுபாட்டுடன் இருந்தனராம்.

இதோ... இப்போது மலேஷியாவில் உள்ள ராஜகாளியம்மன் கோயிலுக்கு வந்துவிட்டோம்.

மலேஷியாவின் ஜோஹோர் பரு என்ற நகரத்தில் உள்ளது இந்த ராஜகாளியம்மன் ஆலயம். மலாய் மொழியில் ‘பருÕ என்றால், புதியது. ‘ஜோஹர்Õ என்றால் ஆபரணம்.

மிகவும் தொன்மையான கோயில் இது.1922களில் இருந்தே ராஜகாளியம்மன் மலேஷிய மக்களைக் காத்து அருள்புரிந்து கொண்டிருக்கிறாள். இக்கோயில் ஆரம்பத்தில் சிறிய கூரைக் கொட்டகையாகத்தான் இருந்திருக்கிறது.

ஜோஹோர் நகர சுல்தானாகவும் உலகின் பெரும் பணக்காரர்களுள் ஒருவராகவும் இருந்தவர்தான், சுல்தான் சர் இப்ராஹிம் இஸ்கந்தர் அல் மயுர் இப்னி அல் மர்ஹம் சுல்தான் சர் அபு பக்கர்.

இஸ்லாம் மத மக்கள் நிறைந்து வாழும் மலேஷிய நாட்டில் இவரது நல்லுள்ளத்தாலும்,அவர் தந்து உதவிய நிலத்தாலும் தான் இன்று கோயில் கம்பீரமாக நிற்கிறது.

1989-ல் தான் கோயிலை சீர் செய்யலாம் என முடிவெடுத்திருக்கிறார்கள். அப்போதுதான் கோயிலை கண்ணாடிக் கோயிலாக மாற்றியமைக்கும் எண்ணம் தோன்றி இ ருக்கிறது. யாருக்கு எப்படி எழுந்தது இந்த ஆசை என்பதற்குப் பின்னணியிலும் ஒரு சம்பவம் உண்டு.ஐந்து லட்சம் கண்ணாடித் துண்டுகளை வைத்துக் கட்டப்பட்ட கண்ணாடிக் கோயிலின் பின்னணியில் திருகுரு என அழைக்கப்படும் ஒருவரின் முயற்சி இருக்கிறது.

இவர்தான் இக்கோயிலை உருவாக்கி தற்சமயம் நிர்வகிக்கும் மகத்தான தொண்டாற்றிக் கொண்டிருப்பவர். ஆன்மிக குருவாக அனைவராலும் போற்றப்படும் இவர், காளியம்மன் கோயிலை மிகப் பெரிய புனிதத் தலமாகக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கிறார்.

இவர் வரைந்த அமைப்பிலேயே கோயில் கட்டப்பட்டிருக்கிறது. சிறு வயதிலிருந்தே அம்மனைப் பாடியும் பூஜித்தும் வந்திருக்கிறார், இவர். ஒரு சமயம் பாங்காக் சென்றி ருந்தபோது ஒரு புத்தர் கோயிலின் கதவில் மட்டுமே இருந்த கண்ணாடி வேலைப்பாடுகள் வெகு தொலைவில் இருந்து பார்த்த திருகுருவை கவர்ந்திருக்கின்றன.‘முழுக்க முழுக்க கண்ணாடிகளாலேயே ஒரு கோயில் அமைத்தால் எப்படி இருக்கும்!’ என அவருக்குள் எழுந்த ஆர்வமே,உலகிலேயே முதலாவது கண்ணாடிக் கோயில் அமையக் காரணமாகியிருக்கிறது.

பல நிறங்களில் கண்ணாடித் துண்டுகள் தாய்லாந்து, பெல்ஜியம், ஜப்பான் நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. திருகுருவின் மேற்பார்வையில் மியான்மார் கட்டட வல்லுனர்களின் உதவியோடு இக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

கண்ணாடிக் கோயில் கட்டத் துவங்கியதுமே ஒரு பெருந்தொகையைக் கொடுத்து உதவியிருக்கிறது மலேஷிய நாட்டு அரசு.

ஆரம்பத்தில் (2000-ம் வருடத்தில்)அம்மன் சன்னதியில் மட்டுமே கண்ணாடி வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. பினனர், 2007-ல் கோபுரம் உட்பட எல்லா இடங்களிலும் கண்ணாடி வேலைப்பாடு செய்ய ஆரம்பித்து 2009-ல் கும்பாபிஷேகம் நடந்தேறியிருக்கிறது.

மலேஷிய இந்துக்களும் தாராள நன்கொடை தந்து உதவியதில் இக்கோயில் கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய் செலவில் கம்பீரமாக எழுந்துள்ளது.
2009-ல் கண்ணாடிக் கோயிலாகத் திறக்கப்பட்டதிலிருந்து மலேஷியாவின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகவும் இக்கோயில் ஆகிவிட்டது..

இதோ 95 சதவிகிதம் கண்ணாடிகளாலேயே ஆன கோயிலுக்குள் பக்தியுடனும் ஆர்வத்துடனும் நுழைகிறோம். திரும்பிய இடமெல்லாம் வண்ணமயமான கண்ணாடி வேலைப்பாடுகள் கண்ணைக் கவர்ந்து கருத்தில் நிறைகின்றன.இறைவனின் அருள் எங்கும் பரவி நம்மீது பிரதிபலிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

தமிழ் பக்தர்கள் மட்டுமன்றி ஏராளமான சீன, மலாய் மக்களையும் கோயிலில் காண முடிகிறது.

கருவறையில் மூலமூர்த்தியான ராஜகாளியம்மன் மலேஷிய நாயகியாக மங்கள ரூபிணியாய் அருட்காட்சி அளிக்கிறாள்.

தங்க முலாம் பூசப்பட்ட கவசம் அணிந்து காட்சி தரும் அவள் திருக்கோலம், சிலிர்க்க வைக்கிறது.

செம்பட்டுடுத்தி சிவபெருமானின் மேல் நின்ற கோலத்தில் இருக்கிறாள் அம்மன்.

அம்மனுக்கு தங்கக் கொலுசு சாத்தியிருக்கிறார்கள். கண்ணாடிகளின் பிரதிபலிப்பையும் தாண்டி மின்னுகிறது, கொலுசு. ஒரு கை ‘நான் இருக்க உனக்கு என்ன பயம்’ எனக் கூறுவது போல் அபயஹஸ்தம் காட்டுகிறது. மறு கையின் வர ஹஸ்தம், ‘வேண்டுவனவெல்லாம் அளிப்பேன். கவலை
வேண்டாம்’ என அம்மனே கூறுவது போல் உணர்த்துகிறது.

மஞ்சள்,குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு அன்னையவளின் மதிமுகத்தைப் பார்த்தவாறே அவ்விடம் விட்டு நீங்க மனமில்லாமல் நகர்கிறோம்.

எங்கு நோக்கினும் கண்ணாடிக் கற்களின் ஜொலிஜொலிப்பு!பக்தி அனுபவத்தோடு ஒரு வித்தியாசமான ஆச்சரிய அனுபவத்தையும்தான் தருகிறது. கோயில் உண்டியலைக் கூட கண்ணாடி வேலைப்பாடுகளுடன் அமைத்திருக்கிறார்கள்.கிரானைட் கல்லினால் ஆன தரையில் கண்ணாடிகள் பிரதிபலிக்கும் ஒளி பட்டுத் தெறிக்கிறது. கண் ணாடிகளின் ஒளியும் கோயிலில் ஒலிக்கும் பக்திப் பாடல்களின் சத்தமும் சேர்ந்து ஒளியும் ஒலியும் இணைந்த வடிவே இறைவடிவம் எனக் கூறுவதுபோல் சிலிர்ப்பான அனுபவத்தை மேலும் சிறக்கச் செய்கிறது.

தகதகவென்று என்று ஜொலிக்கும் கண்ணாடிக் கோயிலை வலம் வருகிறோம். சிவன், விஷ்ணு, பெரியாச்சி ஆகிய கடவுளருக்கு தனித்தனி சன்னதிகள் இருக்கின்றன. மு ருகன், விநாயகர், அம்பாள் ஆகிய தெய்வங்களைக் கடந்து வந்தால் ஷீரடி சாய்பாபா, புட்டபர்த்தி சாய்பாபா, ராமகிருஷ்ண பரமஹம்ஸர், புத்தர், ராகவேந்திரர், ராமலிங்க அடிகளார் ஆகிய மஹாபுருஷர்களுக்கும் மார்பிள் கல்லில் சிலைகள் நிறுவியிருப்பதைக் காணலாம். இயேசு கிறிஸ்துவுக்கும் சிலை இருப்பது வித்தியாசமான அமைப்பு.

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தவே இச் சிலைகளை இங்கு வைத்துள்ளோம் எனக் கூறுகிறார்கள் கோயில் நிர்வாகத்தினர்.

சிவன் சன்னதியில் ஓர் ஆச்சரியம் காத்திருக்கிறது. அது மூன்று லட்சம் ருத்திராட்சங்களால் வடிவமைக்கப்பட்டு இருப்பதுதான்.

பக்தர்கள் பன்னீர் கொண்டுவந்து தாமே பக்தியுடனும் பணிவுடனும் சிவனுக்கு அபிஷேகம் செய்கின்றனர்.

மூன்று தளங்களாக இருக்கும் கோயிலில் குழந்தைகளுக்கான வகுப்புகள், இல்ல விழாக்கள் நடத்த மண்டபம், கேன்டீன் என சகலமும் உண்டு.
வாழ்வில் தடைகளையும் துயரங்களையும் சந்திக்கும் பக்தர்கள் இங்கு வந்து காளிதேவியை தரிசித்தபிறகு நிம்மதி பெற்றதாகச் சொல்கிறார்கள்.
மலேஷியாவின் ஜோஹோர் பருவில் உலக மகா சக்தியாக இருந்து பக்தர்களை வழிநடத்தும் ராஜகாளியம்மனின் மலரடியினை மனதால் நினைத்துப் பணிவோம். காளிதேவி நம் கஷ்டங்கள் அனைத்தையும் போக்குவாள்.வாழ்க்கை ஜோராக இருக்கும் எனச் சொல்லத்தான் வேண்டுமா என்ன?


கோயில் நேரம் : தினமும் காலை ஏழு மணி முதல் இரவு பத்து மணி வரை கோயில் திறந்திருக்கும். சுற்றுலாப் பயணிகள் மதியம் ஒரு மணியிலிருந்து ஐந்து மணிக்குள் சென்றால், கோயிலைக் கூட்டம் இல்லாமல் சுற்றிப் பார்க்கவும் வேலைப்பாடுகளை நிதானமாக ரசித்துப் பார்க்கவும் செய்யலாம்.

எப்படிப் போகலாம் ராஜகாளியம்மனை தரிசிக்க?

சிங்கப்பூருக்கு மிக அருகில் உள்ள மலேஷியாவின் ஜோஹேர் பரு நகரத்திற்கு சிங்கப்பூர் நாட்டிலிருந்து வருவதானால் ரயில் வசதி உண்டு. ஜலான் டெப்ராவ் என்னும் இடத்தில் உள்ள இக்கோயிலுக்கு ஜோஹோர் பரு நகர பஸ்களிலும் செல்லலாம்.

Comments

  1. அருமை யான பதிவு.
    புதிய, அரிய செய்திகள்.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment