கலியுக வரதன், கண்கண்ட தெய்வம்!




பிரம்மன் செய்த யாக முடிவில், தேவர்களுக்கு அவரவர் கேட்ட வரங்களைத் தட்டாமல் அப்படியே அருளியதாலேயே, திருமால் வரதராஜரானார். நிறைவாக பிரம்மனிடம், ‘‘உன் விருப்பம் என்ன?’’ என்று வினவினார்.‘‘பெருமாளே, தாங்கள் இதே ரூபத்தில் இதே தலத்தில் கோயில் கொண்டருள வேண்டும்; தங்களை வணங்கும் அனைத்து பக்தர்களுக்கும் தாங்கள் தட்டாமல் வரம் தந்து அருள வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார் பிரம்மன்.
திருமாலும் யாகத்தை அழிக்க வந்த அக்கினி ஜ்வாலையைத் தான் ஏற்றுக் கொண்டதால் ஏற்பட்ட முக வடுக்களுடன் அப்படியே அர்ச்சாவதாரம் கொண்டார். இந்த முக அழகு தியாகம் மட்டுமல்லாமல், ராமானுஜர் என்ற விசுவாச பக்தனை ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பி, ரங்கநாதருக்கு சேவை செய்யப் பணித்ததாலும் இந்தக் கோயில் தியாக மண்டபம் எனப்பட்டது. இந்திரனின் ஐராவதம் என்ற வெள்ளை யானை தானே ஒரு மலைபோலக் கிடந்து வரதரைத் தன் முதுகில் தாங்கிக் கொண்டதால், இந்தத் தலம் அத்திகிரி என்று அழைக்கப்பட்டது.

ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே காலடி எடுத்து வைத்தால், ‘ஹோ...’வென்று விரிந்து பரந்த வெளி எதிர்கொள்கிறது. வெயில் சுட்டெரித்தாலும் இடது பக்கத்துப் பொய்கையிலிருந்து லேசான குளிர்த் தென்றல் இதம் தர முயற்சிக்கிறது. அனந்தஸரஸ் என்ற அந்த தீர்த்தத்தின் இந்தப் பரிவுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. அது, இந்த தீர்த்தத்தினுள் அத்திவரதர், அனந்த சயனராக ஆனந்த யோகம் கொண்டிருப்பதுதான். கோயிலில் நுழைந்ததுமே அத்திவரதர் தரிசனமா? இல்லை, இவருடைய தரிசனத்துக்கு நாம் இன்னும் சுமார் 8 வருடங்கள் காத்திருக்க வேண்டும். ஆமாம், நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இந்த அத்தி வரதர் அந்தத் திருக்குளத்தை விட்டு வெளியே வந்து தரிசனம் தருகிறார். இந்த கணக்குப்படி அடுத்த தரிசனம் 2019ம் ஆண்டில்தான். அப்போது 10 நாட்களுக்கு உற்சவ, விழா, கொண்டாட்டங்களோடு அவரைக் குளிரக் குளிர தரிசிக்கலாம். பிறகு மறுபடி நீருக்குள் சயனம் கொள்ள ஆரம்பித்து விடுவார், 40 ஆண்டுகளுக்கு! பிரம்மனின் யாகத்தைத் தடுக்க சரஸ்வதி மேற்கொண்ட முயற்சிகளை முறியடிக்க, திருமால் தீபபிரகாசராக, அஷ்டபுயத்தோனாக காட்சி தந்ததைப் போல வேகவதி நதியாக அவள் கரை புரண்டு ஓடி வந்தபோது, அனந்தசயனனாகக் கிடந்தாரே, அந்தக் கோலம்தான் இந்த சயன அத்திவரதர் என்கிறார்கள். ஆற்று நீரைத் தடுத்த மாயவன், அதனாலேயே குளத்து நீரில் மூழ்கியிருக்கிறான் என்றும் சொல்கிறார்கள்.

கற்சிற்ப காலத்துக்கு முன்னால் அத்தி மரத்தாலேயே இறை திருவுருவங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கும் அத்திமரம், எத்தனை வருடம் நீரில் ஊறினாலும் கெட்டுப் போகாது என்பதற்கும் சாட்சியாக இந்த அத்திவரதர் விளங்குகிறாராம்.
சேஷ தீர்த்தம், வராஹ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்றெல்லாமும் அழைக்கப்படும் இந்தப் பொய்கையின் மேற்குக் கரையில் லட்சுமி வராகரும், கிழக்குக் கரையில் சக்கரத்தாழ்வாரும் அருள் பாலிக்கிறார்கள். பார்வையை கிழக்கு நோக்கித் திரும்பினால் நாலுகால் மண்டபம் ஒன்று நெடிதுயர்ந்து நிற்கிறது. வரதனைக் காணவரும் பக்தர்களை, ஆதவன் வெப்பத்திலிருந்து ஆறுதல்படுத்த சிறிதளவாவது நிழல் தருகிறது. வரதனின் கொடையை நுழையும்போதே உணர, மெய் சிலிர்க்கிறது. அதனையடுத்து தீபஸ்தம்பம், அடுத்து துவஜஸ்தம்பம்.

முன் மண்டபத்துள் நுழையும் போதே துளசி மணம் நெஞ்சை இதமாக வருடுகிறது. ஆங்காங்கே தெலுங்கில் சில அறிவிப்புப் பலகைகள். இன்னும் உள்ளே போனால், சில படிகள் நம்மை உயர்த்துகின்றன. இந்தப் படிகள் அமைந்திருக்கும் மலைக்கட்டு, வாரணகிரி என்றழைக்கப்படுகிறது. அதன் உச்சியில் நரசிம்மர் கோயில் கொண்டிருக்கிறார். யோக நிலையில் அமர்ந்த திருக்கோலம். தன்னை தரிசிப்போரின் மனதைச் சூழ்ந்திருக்கும் கவலை, வேதனை, கோபம், பொறாமை, இயலாமை எல்லாவற்றையும் துடைத்து, பளிங்குத் தூய்மையாக மாற்றும் தீட்சண்யமான பார்வை. மனசு அப்படியே லேசாகிப் போவதை அனுபவித்துதான் உணர முடியும். குளிர்ந்த மனதுடன் படியிறங்கி, நரசிம்ம சந்நதியை வலம் வந்து பின்னால் போனால், பெருந்தேவி தாயார் கருணை பொங்க வரவேற்கிறாள். தாய் வீட்டுக்குப் போகும் கல்யாணமான பெண்போல பளிச்சென்று உவகை பொங்குகிறது. பார்வையிலேயே அரவணைத்து ஆறுதலளிக்கும் தாயாரை நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். தாயார் உற்சவர் விக்ரகமும் பேரழகு. நாம் சொல்லாமலேயே, ஏன் நினைக்காமலேயேகூட நம் குறைகளை அறிந்து அவற்றைக் களையும் தயாமூர்த்தி இந்தத் தாயார்.

தாயாரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, இந்தத் தல நாயகரை தரிசிக்கச் செல்லலாம். வரதராஜர் கோயில் கொண்டிருப்பது அத்திகிரி எனப்படும் இன்னொரு மலைக்கட்டில். நாற்பது படிகள் கொண்ட சிம்மாசனத்தில் வீற்றிருப்பது போலத் தோன்றுகிறார் வரதர். நெடிதுயர்ந்த நின்ற கோலம். பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தி, முன் வலது கரம் அபய மளிக்க, இடது கரம், நம் துர்வினைகளை அழிக்கவல்ல கதையைப் பற்றியிருக்கிறது. விழாக் காலங்களில் இவருடைய அலங்காரத்தில் மகர கண்டிகை முக்கியமாக இடம்பெறும். இது, கழுத்தில் அணியக்கூடிய, மீன் (மகரம்) வடிவிலான ஓர் அணிகலன். இதற்கு ஏன் தனி முக்கியத்துவம்? இது, ஆங்கிலேயர் ஆட்சியின்போது, சென்னையில் உயரதிகாரியாகப் பணியாற்றிய ராபர்ட் க்ளைவ், தன் பக்திக் காணிக்கையாக செலுத்திய ஆபரணம்! புன்னகை தவழும் பேரெழில் முகத்துடன், இன்னருள் பாலிக்கிறார் வரதர். தேவர்கள் கேட்ட வரமெல்லாம் மனமுவந்து வழங்கிய பேரருளாளன். முகத்தில் அக்னித் தழும்புகளோடு உற்சவரைப் பார்க்கும்போது, யாகம் செய்த பிரம்மனுக்காக, தன் முக அழகையும் தியாகம் செய்த கருணையை நினைத்து நெஞ்சம் விம்முகிறது. தன் பக்தனைக் காக்க, அவன் நோக்கம் நிறைவேற தான் குறை கொண்டாலும் பரவாயில்லை என்ற அந்தப் பெருந்தன்மைக்குதான் இணை ஏது?

ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி அன்று இரவு 12 மணிக்கு, பிரம்மன் வரதர் சந்நதிக்கு வந்து வரதரை பூஜிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில், பெருமாளுக்கு நைவேத்யமாகத் தயாரிக்கப்பட்ட பலகாரங்களை பெருமாள் சந்நதிக்குள் வைத்துவிட்டு, பட்டர்கள் வெளியே வந்து விடுகிறார்கள். குறிப்பிட்ட நேரம் கழித்து, அதாவது பூஜை முடித்து பிரம்மன் சென்றபின், உள்ளே நுழையும் பட்டர்கள் அந்த நைவேத்ய பாத்திரங்களைத் திறந்து பார்த்தால் அது, புதிதாக தேவலோக விருந்தின் நறுமணத்தைக் கொண்டிருப்பதை நுகர்ந்து பரவசப்படுகிறார்கள்.
அதே சித்திரை மாத பௌர்ணமியை அடுத்த 15 நாட்களில் அஸ்தமன நேரத்தில், தன் கிரணங்களை மூலவரின் முகத்தில் விழுமாறு செய்து வணங்குகிறான் ஆதவன். இந்த அற்புதம் வேறெந்த திவ்ய தேச தலத்திலும் காணக்
கிடைக்காதது!

பிரம்மனைப் போலவே ஆதிசேஷனும் வரதரை வந்து வணங்குகிறான். ஆடிமாத வளர்பிறை தசமியன்றும், தேய்பிறை ஏகாதசியன்றும் இவ்வாறு வந்து பூஜிக்கும் ஆதிசேஷனை, அவன் அவதாரமான திருவனந்தாழ்வானுக்கு சிறப்பு வழிபாடு செய்து, ஆராதிக்கிறார்கள். வரதராஜர் தரிசனத்திற்குப் பிறகு, பக்தர்கள் தட்டாமல் செல்வது பல்லிகள் சந்நதிக்குதான்! ஆமாம், இங்கே தங்கப் பல்லி, வெள்ளிப் பல்லி என்று இரண்டு பல்லி உருவங்களை மேலே விதானத்தில் பதித்து வைத்திருக்கிறார்கள். ஏணிபோன்ற படியேறிச் சென்று அந்தப் பல்லிகளைத் தொட்டு வணங்கி, வரதராஜரையும் தியானித்துக் கொண்டால், தீராத நோய்களும் தீர்கின்றன. பல்லி, பாம்பு வகையினது என்பதால், சந்திர&சூரிய கிரகண பாதிப்புகளிலிருந்து நிவாரணம் கிட்டும் என்பதை விளக்குவதைப் போல சூரிய&சந்திர உருவங்களையும் பொறித்திருக்கிறார்கள்.

ஸ்ருங்கிபேரர் என்ற முனிவரின் புத்திரர்களான ஹேமன், சுக்லன் இருவரும் கௌதம முனிவரால் சாபம் பெற்று இவ்வாறு பல்லிகளாக ஆனார்கள் என்றும் வரதரை வழிபட இந்திரன் வந்தபோது அவன் பார்வை பட்டு அவர்கள் சாப விமோசனம் பெற்றார்கள் என்றும் புராணம் சொல்கிறது.
வரதர் மூலஸ்தானத்தைச் சுற்றி வரும்போது சுவர்களில் அற்புதமான ஓவியங்கள் பாழ்பட்டுக் கிடப்பதை வேதனையுடன் காணமுடிகிறது. அவற்றுக்குப் புது மெருகு கொடுத்தால் அங்கே சாந்நித்தியம் அதிகரிக்குமே என்ற ஏக்கமும் தோன்றியது. வரதராஜப் பெருமாள் கோயிலில் தன்வந்த்ரிக்கும் தனி சந்நதி உள்ளது. நோய் தீர்க்கும் வரதனுக்கு உதவும் மருத்துவ உதவியாளர் போல! இங்கே குறிப்பிடத் தகுந்த இன்னொரு சந்நதி, மலையாள நாச்சியாருடையது. இந்த அத்திகிரியை நிர்வகிக்கும் அம்மையார் என்ற பொருளில், மலை ஆளும் நாச்சியார் என்றும் இவரை அழைக்கிறார்கள். சீதா&லட்சுமண சமேத ராமரும் பிரத்யேக சந்நதியில் அருள்பாலிக்கிறார். இடது கரம் அம் பெடுக்கத் தயாரான நிலையில் ராமரும் லட்சுமணரும் காட்சி தருகிறார்கள். தன் பக்தனுக்கு ஏதேனும் பிரச்னையோ என்ற பரிதவிப்புடன் கூடிய அக்கறை, அந்தக் கோலத்தில் தெரிகிறது. இங்கு தனியே காட்சி தரும் நம்மாழ்வாரும் வித்தியாச தோற்றம் கொண்டுள்ளார். ‘துயரறு சுடர் அடி தொழுதெழு என் மனனே’ என்று தன் நெஞ்சில் கை வைத்து வரதராஜரை வேண்டும் கோலம்.

மொத்தம் ஐந்து பிராகாரங்கள். இவற்றில், மூன்றாவதான ஆளவந்தார் பிராகாரத்தில்தான், ஆளவந்தார் ராமானுஜரை சந்தித்து, ‘ஆம், முதல்வன் இவன்’ என்று பாராட்டி, தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, ஸ்ரீரங்கத்துக்கும் அழைத்துச் சென்றார்.
வரதராஜ தரிசனம் என்னவோ நிறைவடைந்துவிட்டதுதான்; ஆனால் மீண்டும், மீண்டும் தரிசிக்கத் துடிக்கும் மனசுக்கு எப்போதுதான் நிறைவு கிட்டும்?

Comments