ஆலயங்கள் அதிசயங்கள்

எல்லா பெருமாள் கோயில்களிலும் தீர்த்தம், குங்குமம், துளசி கொடுப்பது வழக்கம். ஆனால் கோவை மாவட்டம் சூளூரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலில் மிளகையும் பிரசாதமாக கொடுக்கிறார்கள்.

குளித்தலையிலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது ஐயர் மலை. இங்கு புகழ் பெற்ற கருப்புசாமி கோயில் உள்ளது.இக்கோயிலின் பூசாரி கூறும் மந்திரங்களை நாம் திருப்பிக் கூறிவிட்டு, அங்கே இருக்கும் கதவில் ஒரு பூட்டைப் பூட்டி சாவியை அருகில் இருக்கும் கிணற்றில் எறிந்து விட வேண்டும். இது போல் செய்தால் நாம் நினைத்த காரியம் நடப்பதுடன் திருஷ்டியும் கழிந்து விடுகிறது என்பது நம்பிக்கை.

திருச்சியிலிருந்து புதுக்கோட்டைசெல்லும் வழியில் புதுக்கோட்டைக்கு மூன்று கிலோ மீட்டர் முன்னால் உள்ளது திருக்கோகர்ணம். இங்குள்ள கோகர்னேஸ்வரர் கோயிலின் மேல்மாடத்தில் ஒரே கல்லில் 1008 ருத்ராட்ச லிங்கங்கள் அமைந்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். இங்கு தட்சிணாமூர்த்தியும், விநாயகரும் ஒரே சன்னதியில் அமர்ந்திருப்பது சிறப்பு.

திருக்கேதாரம் சிவன் கோயில் வருடத்தில் ஆறு மாதங்கள் தேவர்கள் பூஜைக்காக மூடப்படுகிறது. மீதி ஆறு மாதங்கள் மானிடர்கள் பூஜைக்காக திறக்கப்படுகிறது. ஆறுமாதம் கழித்து திறக்கும் வரை உள்ளே இருக்கும் தீபம் அணையாமல் எரிந்து கொண்டேயிருக்கும். பூஜை செய்த மலர்களும் வாடுவதில்லை. ஆறு மாதம் வரை அப்படியே காணப்படுகிறது.

வேலூர் மாவட்டம் ஆற்காடுக்கு அருகில் உள்ள சிறுகிராமம் ‘முப்பதுவெட்டி’. இங்குள்ள சோமநாதர் ஆலயத்தில் பஞ்சலோக நடராஜர் விக்ரகம் அற்புதக் கலைப்படைப்பு. சாதாரணமாக நடராஜப் பெருமானின் விரிந்த சடை, வலது, இடது புறங்களில் சுழன்று ஆடும் விதத்தில் இருக்கும். இங்குள்ள திருவுருவில் சடைமுடிகள் முதுகில் புரள்வதோடு, இடது வலது புஜங்களிலும் தவழ்வது அழகுமிகு தரிசனம்.

கோவை மாவட்டம், தேவம்பாடிவலசு கோயில் கருவறையில் சிவபெருமான் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் இருக்க அவரது இருபக்கமும், பார்வதியும் கங்கையும் காட்சி தருகின்றனர். இரு தேவியருடன் சிவபெருமான் காட்சி தருவது அபூர்வமாகக் கருதப்படுகிறது.

காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து ஆலய மூலஸ்தானங்களும் காமாட்சி அம்மனை நோக்கியே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஏகாம்பரர், வரதராஜர் கோயில்கள் பெரிதாக இருந்தாலும் காமாட்சி கோயிலில் மட்டும்தான் 4 ராஜகோபுரங்கள் உள்ளன. காமாட்சி கோயிலில் 5 காமாட்சி அம்மன்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. 1 மூலஸ்தானம் 2. தபசு காமாட்சி 3. பிலாச காமாட்சி 4. உற்சவ காமாட்சி 5. காமாட்சி பாதம். காமாட்சி அம்மன் கருவறை முக்கோண வடிவில் உள்ளது. இதற்கு மூன்றரை சுற்று பிராகாரம்தான். இது காயத்ரியின் 24 அட்சரங்களின் உருவகம்.

திருச்சிக்கு அருகேயுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் பச்சைமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரே கல்லில் செய்யப்பட்டதாம் தஞ்சை பெரிய கோயில் நந்தி. 12.5 அடி உயரமும், 19.5 அடி நீளமும், 8.25 அடி அகலமும் கொண்ட இந்த நந்தி வளர்ந்து கொண்டே வந்ததாகவும், அதனுடைய வளர்ச்சியை அதன் முதுகில் ஆணி அடித்துத் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.

உக்ரநரசிம்மரை மூலவராகக் கொண்ட ஒரே கோயில் பாண்டியை அடுத்துள்ள அபிஷேகபாக்கத்திற்கு அருகில் உள்ள சிங்கிரிகோயில்தான். இங்கு பதினாறு கைகளுடன் உக்ர நரசிம்மர் உள்ளார். அவருக்கு இடப்புறம் சுக்ராச்சாரியார் லீலாவதியுடன் காட்சி தருகிறார்.

திருவெண்காட்டில் தலவிருட்சம் மூன்று; தீர்த்தம் மூன்று; அங்கு அனுசரிக்கப்படும் ஆகமமும் மூன்று. சுவேதாரண்யேஸ்வரருக்குக் காமிகாகமப்படியும், அகோரமூர்த்திக்கு காரணாகமப்படியும், அங்குள்ள நடராஜப் பெருமானுக்கு மகுடாகமப்படியும் பூஜைகள் நடைபெறுகின்றன.

Comments