முப்பெரும் தேவியர் என்று போற்றி வணங்கப்படும் சக்திகளான துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய மூவரும் தனித்தனி சன்னதிகளில் அமர்ந்து அருள்பாலிக்கும் தலம், மதனந்தபுரம்.
26000 சதுர அடியில் அமைந்துள்ள இத்திருக்கோயிலின் கருவறைக் கோபுரங்கள் சோழர் காலத்தை நினைவூட்டும் வகையில் நேர்த்தியாகவும், கலை நயத்துடனும் அமைக்கப்பட்டுள்ளது.
கோயில் முகப்பின் இடது புறத்தில் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் சக்தி கணபதியாக வீற்றிருக்கிறார். இப்பெருமானுக்கு மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி அன்று சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது.
விநாயகப் பெருமானை தரிசித்து விட்டுத் திரும்பும்போது அவருக்குப் பின்புறம் இத்திருக்கோயிலின் முக்கியக் கடவுள்களான வீரத்திற்கு அதிபதியான பட்டீஸ்வரம் து ர்க்கையும், செல்வத்திற்கு அதிபதியான மும்பை லக்ஷ்மியும், கல்விக்கு அதிபதியான கூத்தனூர் சரஸ்வதியும் மிக அழகாய் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றனர்.
இந்த மூன்று சக்திகளையும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் தரிசிப்பதால் நம் பிரார்த்தனைகள் விரைவில் பலிக்கின்றன. இங்கு நவராத்திரி விழா ஒன்பது நாட்களும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும் (தேவி மஹேஸ்வரி, கௌமாரி, வராஹி) அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மிக்கும் (மஹாலக்ஷ்மி, வைஷ்ணவி, இந்திராணி) கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் (சரஸ்வதி, நரசிம்மி, சாமுண்டீ) சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரங்களுடன் கூடிய பூஜைகள் நடைபெறுகின்றன. அச்சமயம் மிகப்பெரிய கொலுப்படிகள் அமைக்கப்பட்டு பலதரப்பட்ட கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு வெகு விமரிசையான விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது. கடைசி நாளான விஜயதசமி அன்று நவ சண்டி ஹோமம் சிறப்பாக நடைபெறுகிறது. இத்திரு நாட்களில் மாலை வேளையில் தினமும் நடனம், இசைக் கச்சேரி ஆகியவை கலைஞர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
இச்சன்னதிக்குப் பின்புறம் தமிழ்க் கடவுளான முருகப்பெருமான் பிரமாண்ட தனிச் சன்னதியில் செந்தில் ஆண்டவராய் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றார். இவருக்கு வளர்பிறையுடன் கூடிய சஷ்டி அன்று ஆறு விதமான பழங்கள், பூக்கள் மற்றும் பிரசாதத்துடன் சிறப்பு அலங்காரமும் செய்யப்படுகிறது. வருடந்தோறும் கந்த சஷ்டி அ ன்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும்.
பிராகாரத்தைச் சுற்றி வரும்பொழுது கோஷ்ட மூர்த்தியாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் முருகர், பழனி ஆண்டவர் மற்றும் பாலமுருகன் ஆகியோர் காட்சி அளிக்கின்றனர்.
முருகன் சன்னதிக்கு நேர் எதிர்ப்புறம் நவக்கிரக சன்னதி அமைந்துள்ளது. இங்கு சனிப்பெயர்ச்சி, குருபெயர்ச்சி நாட்களில் சிறப்பு பூஜைகளும், அர்ச்சனைகளும் நடைபெறுகின்றன. இக்கோயிலில் ஆண்டுதோறும் மே / ஜூன் மாதங்களில் ராதா கல்யாணம் இரண்டு நாட்கள் நடத்தப்படுகிறது. திருமணத்திற்கு காத்திருப்போர் இத்தி ருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்டு மனமுருக பிரார்த்தித்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஆன்மிக அன்பர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதுபோல வருடந்தோறும் மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஆண்டவனுக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு திருப்பாவை, திருவெம்பாவை பாடப்படுகிறது.
அதுபோல் இக்கோயிலில் தினப்படி பூஜையாக செவ்வாயன்று ராகு காலத்தில் துர்க்கைக்கும், புதனன்று சரஸ்வதிக்கும், வெள்ளி அன்று லக்ஷ்மிக்கும் சஹஸ்ரநாம அர்ச்சனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று மஹாமேருவுக்கு நவாவரண பூஜையும் ஹோமங்களும் தை மாத வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அலங்காரங்களாக சந்தனக்காப்பு, வெள்ளிக்காப்பு முத்தங்கிக் காப்பு செய்யப்படுகின்றன. ஆடிப்பூர நிகழ்ச்சி மிக விசேஷமாக நடத்தப்படுகிறது.
இத்திருக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சம், அட்சராப்பியாஸம். இது குழந்தைகளின் கல்விச் செல்வத்திற்காக செய்யப்படுகிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கல்வியில் மேலோங்கி நிற்க இந்த பூஜை அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நடத்தப்படுகிறது.
சென்னை போரூர் ஜங்ஷனிலிருந்து 2 கி.மீ தொலைவில் குன்றத்தூர் செல்லும் வழியில் மதனந்தபுரம் உள்ளது.
Comments
Post a Comment