'ஆனை முகம், பானை வயிறு, சூரியன் - சந்திரன் - அக்னி ஆகிய மூன்று ஒளிப்பொருளைக் குறிக்கும் முக்கண்கள், ஐந்தொழில்களை உணர்த்த ஐந்து கரங்கள், குட்டைக் கால்கள்... மொத்தத்தில் பிரணவ தத்துவத்தை உணர்த்தும் ஞான வடிவம்- பிள்ளையார்! தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவர் ஆதலால் விநாயகன் என்று திருநாமம் அவருக்கு! அந்த நாயகனைக் கொண்டாடும் திருநாள்தான் விநாயகர் சதுர்த்தி!'' - பரவசத்துடன் விவரிக்கிறார், திலதர்ப்பணபுரி ஸ்ரீமுக்தீஸ்வரர் கோயில் அர்ச்சகர், சுவாமிநாத குருக்கள்.
''வேழ முகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் பெரியோர்கள். நமது வாழ்வு மட்டுமல்ல, நம் சந்ததி சிறக்கவும்... சதுர்த்தி தினங்களில் பிள்ளையாரை வழிபடுவது சிறப்பு. குறிப்பாக, ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி அன்று வழிபடுவது ரொம்பவே விசேஷம். ஆவணி மாதம், ஹஸ்த நட்சத்திரமும் சுக்லபட்ச சதுர்த்தியும் கூடிய நன்னாளில் வருவது விநாயகர் சதுர்த்தி. இந்தத் திருநாளில்தான் பிள்ளையார் அவதரித்தார்.
ஒருமுறை, ஈசனும் அம்பாளும் திருக்கயிலாயத்தில் இருக்கும் சித்திர மண்டபத்துக்கு எழுந்தருளினார்கள். அங்கேயுள்ள மந்திர மூலங்களின் மீது தங்களின் திருப்பார்வையை செலுத்தினார்கள். அப்போது ஓர் ஒளி வட்டமும் அதிலிருந்து தண்டமும் தோன்றின; தண்டம் ஒலியாக தழைத்தது. இந்த ஒளி-ஒலி இரண்டிலும் இருந்து உதித்த திருவடிவே, வரத கணபதி. ஒளி வட்டம்- பிந்து; தண்டம் (ஒலி) - நாதம். பிந்து மற்றும் நாதத்தில் இருந்து அகர, உகர, மகரம் பிறக்கும். இந்த மூன்றும் சேர்ந்து 'ஓம்’ என்று ஒலிக்கும். ஆக, 'ஓம்’காரம் எனும் பிரணவத்தின் உருவமே பிள்ளையார். அவரை, அவர் அவதரித்த திருநாளில் வழிபட, அனைத்து கடவுளரையும் வழிபட்ட பலன் கிடைக்கும்''
'சரி... விநாயகர் சதுர்த்தியில் அவரை வழிபடுவதற்கான நியதிகள் என்னென்ன?’ என்று விவரிக்கத் துவங்கினார் சுவாமிநாத குருக்கள்.
''மகள் பார்வதிக்கு இமவான் விவரித்ததாக, விநாயக சதுர்த்தி விரத வழிபாடு குறித்து விளக்குகின்றன புராணங்கள். இந்த நாளில், அதிகாலையில் நீராடி, நித்ய கர்மங்களை நிறைவேற்ற வேண்டும். பிறகு பூஜை நடைபெறும் இடத்தைச் சுத்தப்படுத்தி, மாக்கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். மண்ணால் பிள்ளையார் விக்கிரகம் செய்து வைத்து வழிபடுவது விசேஷம்! அழகான குடை அமைத்து, அதன் கீழ் விநாயகரை அமர்த்தி, அருகம்புல், வெள்ளெருக்கு மாலை சார்த்தி, சந்தன-குங்கும திலகமிட்டு அலங்கரிக்கலாம். நைவேத்தியமாக பழங்கள், அச்சுவெல்லம், அவல், பொரிகடலையுடன், சுண்டல் மற்றும் கொழுக்கட்டையை தாம்பூலத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர்...
வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி சமப்ரபா
நிர்விக்னம் குருமே தேவ சர்வ கார்யேஷ§ சர்வதா...
- எனப்போன்ற விநாயகர் ஸ்லோகங்கள், துதிகள் பாடி, தூப- தீப உபசாரங்கள் செய்து வழிபட வேண்டும். வழிபாடு முடிந்தபின் குறிப்பிட்டதொரு நன்னாளில், விநாயகர் விக்கிரகத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலையில் சேர்க்கலாம்.
விநாயக சதுர்த்தியன்று ஆரம்பிக்கும் பூஜையை புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி வரை கடைப்பிடிப்பவர்களும் உண்டு. இப்படி ஒருமாத காலம் வழிபட்டு, பிறகு விநாயக விக்கிரகத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலையில் கரைப்பார்கள். மறுநாள் ஏழைகளுக்கு அன்னதானம் அளித்து விரதத்தை நிறைவு செய்வார்கள். ஒருமாத காலம் கடைப்பிடிக்க முடியாதவர்கள், விநாயக சதுர்த்தியன்று ஒருநாள் மட்டுமாவது, உளமார்ந்த பக்தியுடன் விநாயகரை வழிபட, உன்னத பலன்கள் கிடைக்கும்'' என்கிறார் சுவாமிநாத குருக்கள்.
''விநாயக சதுர்த்தி திருநாளில் பிள்ளையாரை வீட்டில் வழிபடுவதுடன், தலங்களுக்குச் சென்று தரிசிப்பதும் விசேஷ பலன் தரும்.
விநாயக திருத்தலங்களுள் குறிப்பிடத்தக்கது திலதர்ப்பணபுரி! மயிலாடுதுறை - திருவாரூர் வழியில் உள்ள பூந்தோட்டம் எனும் ஊரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஊர். செதிலபதி எனப் புராணங்கள் போற்றும் இந்த ஊரில், ஸ்ரீஸ்வர்ணவல்லி சமேத ஸ்ரீமுக்தீஸ்வரர் ஆலயத்தில், ஆதிவிநாயகராக மனித முகத்தோடு காட்சி தருகிறார் பிள்ளையார்.
தனக்குப் பாதுகாவலாக ஒரு பிள்ளை வேண்டும் எனக் கருதினாள் பராசக்தி. தன்னுடைய திருமேனியில் இருந்து மஞ்சளைத் திரட்டி அவள் ஓர் உருவம் அமைக்க, அந்தத் திருவுருவம் பிள்ளையாராய் அவதரித்ததாம். இந்த ஆதித் திருவுருவத்துடன் விநாயகர் இங்கு அருள்பாலிக்கிறார்'' என்கிறார் விஸ்வநாத குருக்கள்.
மனித முகமும், பாச-அங்குசம்- அபயம் மற்றும் ஊரு அஸ்தத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களும் கொண்டு, வீராசனத்தில், மேற்கு நோக்கி அருள்கிறார் ஸ்ரீஆதிகணபதி. விநாயக சதுர்த்தி அன்று, கணபதி ஹோமமும் விசேஷமாக நடைபெறும். அந்தநாளில் இவரை வணங்கி வழிபட, ஞானம், கல்வி, வீரம், சக்தி மற்றும் தொழில் வளம், உயர் பதவி என சகலமும் வாய்க்கும். அன்று வர இயலாதவர்கள், மாதம்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் வந்து வழிபடலாம். அந்த தினத்திலும் (மாலை 5:30 முதல் 8:30 மணி வரை) கணபதி ஹோமம் நடைபெறுகிறது.
ஸ்ரீஆதிவிநாயகர் தரிசனத்துடன், இன்னும்பல சிறப்புகளும் இங்கு உண்டு. திருஞானசம்பந்தர் பாடிப்பரவிய தலம்; சூரிய- சந்திரர் இருவரும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் ஆலயம் இது. 'பிதுர் லிங்கங்கள்’ தரிசனமும் இங்கு விசேஷம். ஸ்ரீராமன் இந்தத் தலத்தில் தசரதன், ஜடாயுவுக்காக தானம், தர்ப்பணத்துடன் வழிபாடு நடத்த... அதன் பலனாக அவர்கள் இருவரும் அட்சய புண்ணியலோகத்தை அடைந்தனராம். ஆகவே, பிதுர்தோஷ நிவர்த்தி தலமாகவும் திகழ்கிறது.
தற்போது கோயிலில்... திருப்பணிகள் நடைபெறுகின்றன. வாழ்வில் சகல வளங்களும் பெற, திலதர்ப்பணபுரி ஸ்ரீஆதிவிநாயகரை வழிபடுவோம்; வரம் பெறுவோம்.
Comments
Post a Comment