காஞ்சிபுரத்து திவ்ய தேசங்கள்





திருமங்கையாழ்வார் பிரமிப்பு மேலிட நின்றார். அவனுடைய திவ்ய தலங்கள் ஒவ்வொன்றுக்கும் தன்னை வரவழைத்து, தன்னால் மங்களாசாசனம் செய்துகொள்ளும் பெருந்தகையான திருமாலின் இந்தக் கோலம், அவர் இதற்கு முன் கண்டறியாதது. ‘இது என்ன பல்வேறு வண்ணங்கள் கொண்ட திருமேனியனாக இவன் இருக்கிறானே; கரங்களும் இரட்டிப்பாக, எட்டாக விளங்குகின்றனவே என்று சந்தேகத் திகைப்பில், ‘ஐயா, நீர் யார்?’ என ஆழ்வார் வினவ, ‘அட்டபுயகரத்தேன்’ என்று திருமாலே புன்முறுவலுடன் பதிலளித்திருக்கிறார்.

எங்ஙனும் நாமிவர் வண்ணமெனில் ஏதுமறிகிலம், ஏந்திழையார் சங்கும் மணமும் நிறவு மெல்லாம் தம்மனவாயப் புகுந்து தாமும் பொங்கு கருங்கடல் பூவை காயா பொதவிழ் நீலம் புனைந்த மேகம் அங்ஙனம் போன்றிவர் ஆர் கொல்லென்ன அட்ட புயகரத் தேனென்றாரே...!& என்று பாடுகிறார் திருமங்கையாழ்வார்.

‘எட்டுத் திருக்கரங்கள் மட்டுமல்ல; எட்டிலும் எட்டுவகையான ஆயுதங்கள். அவனுடைய மேனியின் வண்ணத்தை எவ்வாறு விவரிப்பது? பொன் வண்ணம் என்பதா, பட்டுமேனி கொண்ட ஏந்திழையாரின் வண்ணத்தோடு வெண்சங்கின் தூய வெண்மையையும் கலந்து, கருநீலக் கடலின் நிறத்தையும் சேர்த்து, அதே கடலில் அப்போதுதான் பூத்த காயாம்பூவின் வண்ணமும் குழைத்து, கருமையும் நீலமும் பழுப்பும் சேர்ந்த இந்த அதிசுந்தர வண்ண ரூபத்தில் விளங்கும் திருமால் என்று வர்ணிக்கலாமா?

இதுவரை தான் தரிசிக்காத அபூர்வ உருவல்லவோ இது! இந்த அழகனுக்கு என்ன பெயர் சூட்டுவது, எப்படி அழைப்பது? அவனையே கேட்டுவிடலாமா? அப்படி நினைக்கும்போதே வெட்கம் மனதைக் குறுகுறுக்க வைக்கிறதே! ‘யாரிவர்?’ என்று பொதுவாகக் கேட்டால்.... அட, அதற்கும் பதில் சொல்கிறானே, அட்டபுயகரத்தானாமே இவன்!’ என்றெல்லாம் ஒரு நாயகியின் பாவத்தில், தன் நாயகனை வர்ணித்து மகிழ்கிறார் ஆழ்வார்.
சர்வலோக வியாபியான சதுர்புஜனுக்கு எண்கரங்கள் உண்டானது எப்படி?
வரதராஜர் புராணத்தில் சுருக்கமாகப் பார்த்தோமே, அந்த சம்பவத்தின் விளைவுதான் இது.

தன் கணவர் பிரம்மன், தனக்கு முக்கியத்துவம் தராமல் தன்னிச்சையாக யாகம் நடத்த முயற்சிப்பது கண்டு பொறுக்காத சரஸ்வதி, யாகம் நிறைவேறாமல் தடுப்பதற்காக, பல நடவடிக்கைகளில் ஈடுபட்டாள். அவற்றில் ஒன்றுதான் கொடிய ரூபத்தினளாக காளியைப் படைத்து, அவளுடன் கொடிய அரக்கர்களையும் ஏவியது. ஆனால் பிரம்மனோ திருமாலை தஞ்சமடைந்ததால், அவர், அவனுடைய ஒவ்வொரு சோதனைக்கும் தான் பிரத்யட்சமாகி, எந்த உத்தியில் எதிர்ப்புகள் தாக்குகின்றனவோ, அதற்கு மேலான வலுவுடன் எதிர் சக்தியைப் பிரயோகித்து வீழ்த்தினார். இப்போதைய காளிரூப ஆவேசத்துக்கு எதிராக, பேராவேசம் கொண்டு நிமிர்ந்தார்.

நெடிதுயர்ந்த அந்த உருவத்துக்கு எட்டுக் கைகள் முளைத்தன. வலப்புற நான்கு கரங்களும் சக்கரம், வாள், மலர், அம்பு என ஏந்தியிருக்க, இடப்புற நான்கு கரங்களும் சங்கு, வில், கேடயம், தண்டாயுதம் என பற்றியிருந்தன. இந்த அஷ்டபுயக் கரத்தான் தாக்குதலை ஆரம்பிக்கு முன்னரே காளியும் பிற அரக்கர்களும் அவருடைய வெறும் தோற்றத்தைக் கண்டே நிலைகுலைந்து போயினர். தம் கைகளை உயர்த்தி இந்த பிரபஞ்சத்தையே அப்படியே புரட்டிப்போடும் வேகமாய் வீச, அவர்கள் அனைவரும் அந்த ஒரு வீச்சிலேயே வதைபட்டு வீழ்ந்தனர்.

தன் யாகத்தைக் காப்பாற்றிய மஹாவிஷ்ணுவுக்கு பிரம்மன் நன்றி சொன்னதோடு, இந்த சம்பவம் நிரந்தர நினைவாக நிலைத்திருக்க பரந்தாமன் அதே அஷ்டபுயக்கரத்தானாக அங்கேயே கோயில் கொள்ள வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டான். அஷ்ட கரங்களாலும் அவனுக்கு ஆசியளித்து அப்படியே நிலை கொண்டார் எம்பெருமான்.

அஷ்டாட்சர (எட்டெழுத்து) சொரூபியான நாராயணன் அஷ்டபுயக்கரனாக வீற்றிருப்பதுதான் எத்தனைப் பொருத்தம்! அதோடு, வேறு எந்த திவ்ய தேசத்திலும் இப்படி ஓர் அற்புதக் கோலத்தைக் காண முடியாது என்பதும் இத்தலத்துக்குத் தனிச் சிறப்பு. ஆனால் இந்த மூலவர்
அஷ்டபுயகரத்தானாக மாறுவதற்கு முன் ஆதிகேசவனாகவே வழிபடப்பட்டிருக்கிறார். இப்போதும் அட்டபுயக்கரம் என்று ஊரின் பெயரைச் சொல்லி, பெருமாளை ஆதிகேசவன் என்றே அழைக்கிறார்கள்.

‘ஆதிமூலமே’ என்று மரண ஓலமாகப் பிளிறி, மஹாவிஷ்ணுவின் சக்ராயுதத்தால் முதலையின் வாய்ப் பிடியிலிருந்து விடுதலை பெற்று, அந்த
சம்பவத்துக்குப் பிறகு வேறு பிறவியில்லாத, மோட்ச நிலைக்குச் சென்றது கஜேந்திரன். அதேபோன்ற சம்பவம் இந்த அட்டபுயகரத்திலும் நிகழ்ந்திருக்கிறது.
மஹாசந்தன் ஒரு மஹா முனிவர். அகங்காரம் கொண்ட இந்திரனை அசராமல் எதிர்த்தவர். இவர் ஒருமுறை மஹாவிஷ்ணுவைக் குறித்து ஆழ்ந்து தவமிருந்தார். இதைக் கண்டு அச்சமுற்றான் இந்திரன். தன் பதவியைக் குறிவைத்தே அவர் இப்படி ஒரு யக்ஞம் நடத்துகிறார் என்று நினைத்தான். அது நிகழ்ந்துவிடாதபடி அவரைத் தடுத்துவிட வேண்டும். உடனே பல சதித் திட்டங்கள் தீட்டினான். வழக்கம்போல தேவ கன்னியரை, அவர் தவம் குலைக்க ஏவினான். அவர்களும், முனிவரை பலவாறாக மயக்க முற்பட்டார்கள். முனிவர் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. சுற்றுச் சூழலால் சற்றும் பாதிக்கப்படாத அவர், தவத்தின் கடுமையைத் தீவிரமாக்கினார். இந்திரனும் விடுவதாக இல்லை. அவர்முன் களிறுகளை நிறுத்தி அவை களியாட்டம் போடுமாறு செய்தான். போகத்தில் மோகம் கொண்ட அவற்றின் கொஞ்சல் பிளிறல்கள் முனிவரின் தவக் கட்டுப்பாட்டைத் தகர்த்தெறிந்தன. காமம் கிளர்ந்தெழ, தானும் ஒரு யானையாக உருமாறி, பெண் யானைகளுடன் சுகித்திருக்க ஆரம்பித்தார். அவற்றுடன் காடுகாடாகத் திரிந்தார்.

ஒருநாள், மஹாசந்தன் சாளக்கிராம தீர்த்தத்தில் பிற யானைகளுடன் நீராடியபோது, பளிச்சென்று தன் முன் பிறவி நினைவுகள் தோன்றின. தான் செய்த தவறுகளை எண்ணி அவர் மனம் வெதும்பினார். உடனே அந்த யானைக் கூட்டத்திலிருந்து விடுபட்டு, கால்போன போக்கில் அலைந்தார். அவ்வாறு கோதாவரி நதிக்குச் சென்று நீராட, அதன் கண்ணீர், ஆற்று நீருடன் கலப்பதைக் கண்டார் அங்கிருந்த மிருகண்டு முனிவர். யானையின் துயரம் அறிந்து, அதனை காஞ்சிபுரத்துக்குச் சென்று வரதராஜரை வணங்கி வந்தால், அதன் வேதனை
அகலும், பழைய உரு கிடைக்கும் என்றும் அறிவுறுத்தினார்.

அதன்படி, அந்தக் களிறு, காஞ்சிக்கு வந்தது. தினமும் நந்தவனத்திலிருந்து மலர் பறித்து வந்து வரதராஜருக்கு சமர்ப்பித்து விமோசன நன்நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தது. அவ்வாறு தினச் சேவை புரிந்தபோது ஒருநாள் அஷ்டபுயக்கரத்தானைக் கண்டு வியந்தது. எட்டுக் கரங்களுடன், ஆயுதம் தரித்து, தீவினைகளை விரட்டும் அந்த நாயகனைக் கண்டு, தொடர்ந்து அவனுக்கே பணிவிடை செய்து வந்தது. நாளாவட்டத்தில் வறட்சி மிகவே, மலரைத் தேடி வெகு தொலைவு செல்ல வேண்டியிருந்தது, யானை முனிவருக்கு. ஒரு குளமும் அதில் அல்லியும் தாமரையுமாக மலர்கள் பூத்திருந்ததும் அதன் கண்களுக்குப் பட்டது. உடனே, ஆவலுடன் குளத்தில் இறங்க, இதற்கென்றே காத்திருந்த முதலை ஒன்று அதன் ஒரு காலைப் பற்றிக் கொண்டது. திகைத்துப் போன முனிவர், திருமாலை நினைத்து ஓலமிட, உடனே அஷ்டபுயகரத்தோனாக திருமால் அங்கு தோன்றி தன் சக்கராயுதத்தால் முதலையை வதம் செய்து முனிவரை விடுவித்தார். சுய உருவம் பெற்றார் மஹாசந்தன்.

இந்த நிகழ்ச்சியை, ‘தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான் அட்ட புயக்கரத்தான் அஞ்ஞான்று & குட்டத்துள் கோள்முதலை துஞ்சர் குறித்தெறிந்த சக்கரத்தான் தான் முதலே நங்கட்குச் சார்வு’ என்று விவரிக்கிறார் பேயாழ்வார்.

பிரம்மன் முதல், யானைவரை பாகுபாடின்றி யாவருக்கும் ஆதரவளிக்கும் அஷ்டபுயகரத்தான், இந்தத் தலத்தில், ஆஜானுபாகுவாக நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். இந்த மூலவரைச் சற்று உற்று நோக்கினால் நரசிம்மரோ என்று தோன்றும். தன்னை அண்டியவர்களை அரவணைத்து, அவர்களை எதிர்ப்போரை எண்கரம் கொண்டு தாக்கி, அழித்து, வெற்றி கர்ஜனை புரியும் நரசிம்மராகவே இவர் காட்சி தருகிறார். காளியை இவர் வீழ்த்திய சம்பவத்தின் சாட்சியாக இவர் கோயிலுக்கு அருகிலேயே கருங்காளியம்மன் கோயிலைக் காணலாம். பெருமாள் சந்நதியில் வாயு மூலையில் சரபேஸ்வரருக்குத் தனி சந்நதி உள்ளது. இங்கு வந்த சரபம் ஒன்று அஷ்டபுயகரத்தானைக் கண்டு அஞ்சி ஒடுங்கியபோது, அபயமளித்த பெருமாள், அதற்கு பயம் தெளிவித்து, அந்தக் கோயிலின் யாகசாலையைக் காக்கும் பொறுப்பையும் அளித்தாராம். அஷ்டபுயகரத்தானை கல்கி ஸ்வரூபியாகவும் போற்றுகிறார்கள். இத்தனை ஆயுதங்களை வைத்துக் கொண்டு கலியுகத்தில் கல்கி அவதாரம் எடுப்பதும் பொருத்தம்தான்!

அருகிலேயே ஒரு வாசல் இருக்கிறது. யானையான மஹாசந்தன் அறைகூவி அழைத்தபோது இந்த வாசல் வழியாகத்தான் சட்டென புறப்பட்டு புயல்போலச் சென்றாராம் அஷ்டபுயகரத்தான்.
புஷ்பவல்லித் தாயார், பெயருக்கேற்றார்போல, அன்றலர்ந்த மலராக, பூரிப்புடன் திகழ்கிறார். இவரது சந்நதியில் தொட்டில் கட்டி நேர்ந்து கொண்டால், மழலைப் பேறு கிட்டி, வாழ்வும் மகத்தானதாக அமையும்.

அதேபோல லட்சுமி வராகர் சந்நதியில் வேண்டிக் கொண்டால், பூமி சம்பந்தமான எல்லா பிரச்னைகளும் சாதகமாகத் தீர்வாகின்றன. கருடாழ்வார், ஆஞ்சநேயர், ஆண்டாள், ராமன் ஆகியோரும் தனித்தனி சந்நதியில் கொலுவிருந்து பக்தர்களின் குறைகளை தீர்க்க அஷ்ட
புயகரத்தானுக்கு சிபாரிசு செய்கிறார்கள்.

கொடிய நஞ்சுடைய காளிங்கன் எனும் பயங்கரமான பாம்பின் மீது தாவி ஏறி அதன் கொட்டத்தை அடக்கினான் பாலகன் கண்ணன். அதே திருவடிகளைக் கொண்ட அஷ்டபுயகரத்தானும் இங்கே நம் அச்சத்தை விரட்டவும் நம் இளமை எண்ணங்களை நிலை நிறுத்தவும் கம்பீரமாகக் கோயில் கொண்டுள்ளான் என்று பிள்ளை பெருமாள் அய்யங்கார் தன் 108 திருப்பதியந்தாதியில் விவரிக்கிறார்.அது உண்மைதான் என்பதை இந்த அஷ்டபுயக்கரத்தானை தரிசித்தால் புலப்படும்.

Comments