வேண்டும் வரமெலாம் அருளும் வரதராஜப் பெருமாள்

ராமானுஜரின் சீடர், கூரத்தாழ்வான். சீடன் என்றால், தன் குருவுக்காக எதையும் இழக்கத் தயாராக இருந்த அத்யந்த சீடன்! ஒருமுறை கிருமிகண்ட சோழன் என்ற மன்னன் தன்னுடைய சைவக் கொள்கைகளுக்கு எதிராக ராமானுஜர் செயல்படுவதாகத் தனக்குத் தெரிவிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவரை தண்டிக்க நினைத்தான். அவருடைய கண்களைப் பறித்துவிடும் தண்டனையை நிறைவேற்ற, அவரை அழைத்து வரச் சொன்னான். மன்னரும் சரி, ராமானுஜரும் சரி ஒருவரையொருவர் அறிந்திருந்தார்களே தவிர, நேருக்கு நேர் பார்த்துக் கொண்டதில்லை. அதனால் அப்போது ராமானுஜரின் வீட்டில் இருந்த கூரத்தாழ்வான், விவரம் தெரிந்து கொண்டு, தானே ராமானுஜர் என்று சொல்லிக் கொண்டு, குருவைப்போல ஆடை அணிந்து கொண்டு சென்றார். அவரைக் கண்ட மன்னன், ‘பிடுங்குங்கள் இவர் கண்களை’ என்று உத்தரவிட்டான். உடனே கூரத்தாழ்வான், ‘உன்னைப் போன்ற ஒரு கொடியவனைப் பார்த்த இந்த கண்கள் இனி இருந்தென்ன’ என்று கூறியபடி, தானே தன் கண்க¬ளைப் பொத்துக் கொண்டார். அதே சமயம் மைசூரில் தல யாத்திரை மேற்கொண்டிருந்தார் ராமானுஜர்.


பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து, காஞ்சிக்கு ராமானுஜர் திரும்பியபோது, தன் பொருட்டு கூரத்தாழ்வான் கண்களை இழந்த கொடுமை அறிந்து மனம் வெதும்பினார். ‘இவனுக்குப் பார்வையை மீட்டுக் கொடு பெருமாளே’ என்று உள்ளம் நெகிழ வரதரை வேண்டிக் கொண்டார். கூரத்தாழ்வானை, வரதர் கோயிலுக்கு அனுப்பி சேவிக்கச் சொன்னார். அதன்படி சென்ற கூரத்தாழ்வான், ‘வரதராஜஸ்தவம்’ என்னும் நூலை இயற்றி, வரதரின் மனம் கவர்ந்தார். உடனேயே பளிச்சென்று பார்வையும் மீளப் பெற்றார். இப்படி குரு பக்திக்கும் உரிய மரியாதை செய்தவர் வரதராஜப் பெருமாள்.

வரதருக்கு சேவை புரிவதென்றால், அதைவிட வேறு பணியோ, பாக்கியமோ தனக்கு வேண்டாம் என்று கருதியவர்களில் குறிப்பிடத்தக்க இன்னொரு மகான், ஆத்தான் ஜீயர். முகமதியர் படையெடுப்பால் வரதர் கொள்ளையடிக்கப்படவோ, பாதிக்கப்படவோ கூடாதே என்ற ஆதங்கத்தில் காஞ்சியிலிருந்த உற்சவரை திருச்சி உடையார்பாளையத்துக்கு எடுத்துச் சென்று பாதுகாத்தார், இவர். இது நடந்தது 1688ம் ஆண்டு. பிறகு, ஆக்கிரமிப்பு மேகங்கள் விலகியபின், 1710ம் ஆண்டு வரதரை மீண்டும் காஞ்சிக்குக் கொண்டு வந்து உரிய முறையில் பிரதிஷ்டை செய்தார். இதனாலேயே அந்தக் கோயில் நிர்வாகம் ஆத்தான் ஜீயரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தத் தகவலை, இன்றும் தாயார் சந்நதி முன்னாலுள்ள கல்வெட்டில் காணலாம். அவ்வாறு வரதர் மீண்டும் வந்த பங்குனி உத்திரட்டாதி நாள், ‘உடையார்பாளைய உற்சவமா’ கவே இன்றளவும் கொண்டாடப்படுகிறது.

சென்னையிலிருந்து காஞ்சிபுரம் போகும் வழியிலேயே வைணவ ஆசார்யார்களின் அவதாரத் தலங்களை தரிசிக்கலாம். அவை: திருக்கச்சி நம்பிகள் அவதரித்த பூவிருந்தவல்லி; முதலியாண்டான் & நசரத்பேட்டை; திருமழிசை ஆழ்வார் & திருமழிசை; ராமானுஜர் & ஸ்ரீபெரும்புதூர்; எம்பார் என்ற கோவிந்தன் & மதுரமங்கலம்; கூரத்தாழ்வான் & கூரம்.
காஞ்சிபுரத்திலிருந்து சுமார் பத்து கி.மீ தொலைவிலுள்ள திருப்புட்குழி விஜயராகவப் பெருமாளையும் இந்த இரண்டாவது தொகுதியில் தரிசிக்கலாம்.

இவ்வாறு, பல பெயர்களில், பல ரூபங்களில், பல கோயில்களில் அர்ச்சாவதாரமாக, அருள்வெள்ளம் பெருக்குகிறார் திருமால். முரண்பாடுகள் மனித மனத்தில் விளைவதுதானே தவிர, அவர் அருளில் அவற்றைக் காண இயலாது என்பதுதான் உண்மை. ஒவ்வொருவரும் செலுத்தும் பக்தியின் பரிமாணத்தையும் அவர் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. யார் வந்து கேட்டாலும் வரமளித்து அரவணைக்கும் தயாபரன் அவர்.

இப்படி, கேட்டவர் அனைவருக்கும் வரமளித்து மகிழ்வித்ததாலேயே வரதராஜன் என்று போற்றப்பட்ட வரதராஜப் பெருமாளை, காஞ்சிபுரத்து திவ்ய தேசக் கோயில்களில் முதலாவதாக தரிசிக்கலாம்.

பொதுவாகவே யாகம் இயற்றும்போது வாழ்க்கைத் துணையும் உடனிருக்க வேண்டும் என்ற கருத்து, தேவர்களிடையே விவாதத்துக்கு வந்தது. அந்த விதி, உலகையாளும் மும்மூர்த்திகளுக்கும் பொருந்தும் என்று விவாதம் சூடு பிடிக்கத் தொடங்கியபோது, பிரம்மன் அதை ஒரு சவாலாகவே ஏற்றுக் கொண்டார். தனி ஒருவனாகவே தன்னால் யாகம் இயற்ற முடியும்; அதன் முழுப் பயனையும் பெற முடியும் என்றே அவர் நினைத்தார். யாகம் போன்ற விஷயங்களில் மனைவி, ‘கூடமாட ஒத்தாசை’ செய்யும் உதவியாளர் மட்டுமே என்பது அவருடைய எண்ணம். அதனால், மனைவிக்கு பதிலாக வேறு யாருடைய ‘எடுபிடி’ உதவியையாவது பெற்று யாகத்தை நிறைவேற்ற முடியும் என்ற முடிவுக்கு வந்தார்.

அதை அவர் செயல்படுத்த முயன்றபோதுதான் பிரச்னை வந்தது & மனைவி மூலமாகவே. தன்னைப் புறக்கணித்து விட்டு, தன் கணவர் பிரம்மன் யாகம் இயற்றுவது, உலகோருக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்துவிடக் கூடாது என்றே அவள் நினைத்தாள். சிவனின் உடலில் பாதியாக உமை இருப்பது போல, திருமாலின் மார்பில் மகாலட்சுமி இடம் பெற்றிருப்பது போல, பிரம்மனின் நாவில் தான் குடியிருப்பது போல, உலகில் ஒவ்வொரு கணவனின் அனைத்து நடவடிக்கைகளிலும் அவன் மனைவி பங்கு பெறவேண்டும் என்று உறுதியாகக் கருதினாள் சரஸ்வதி. ஆனால் தன் எதிர்ப்பைக் காட்ட அவள் எடுத்துக் கொண்ட முயற்சிகள்தான் இயல்பான பெண்மைக்கு முரண்பட்டதாகிப் போயின.

தான் விடுத்த சவாலை பூர்த்தி செய்யும் வகையில் பிரம்மன் யாகத்தைத் துவக்கினார். யாக குண்டத்தில் அக்னி இடம்பெற வேண்டிய நேரத்தில் எங்கிருந்தோ ஒரு மாபெரும் அக்னி ஜ்வாலை அந்த யாகசாலையையே அழித்துவிடும் ஆவலில் வெப்பம் பொழிய வந்தது. அதை அனுப்பியவள் தன் மனைவி சரஸ்வதிதான் என்பதைத் தெரிந்து கொண்ட பிரம்மன், மானசீகமாக திருமாலை தியானித்தார். பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன், பிரம்மனைக் காக்க உடனே செயல்பட்டார். தீ நாக்குகளோடு பேருருவாக வந்த அக்னியை அப்படியே சுருட்டி ஓர் பந்தமாக்கித் தன் கையில் பிடித்துக் கொண்டார். இதனால் தீபப் பிரகாசராகத் திகழ்ந்த திருமாலைக் கண்டு அக்னி செயலிழந்தது; வெப்பம் மங்கியது.

தடுக்கும் முயற்சி தவிடுபொடியானதில் மேலும் கோபம் கொண்டாள் சரஸ்வதி. வலுமிகுந்த யானைகளை ஏவினாள். உடனே திருமால் நரசிம்ம ரூபம் கொண்டார்; முரட்டு யானைகளை வெருண்டோடச் செய்தார். தோல்விகள் வக்கிரத்தை வளர்த்தன. உடனே எட்டு கைகள் கொண்ட மாகாளியை அனுப்பினாள் சரஸ்வதி. அவளை, தானும் எட்டு கரங்கள் கொண்டவராகவே எதிர்கொண்டார் திருமால். இந்த அஷ்டபுயகரத்தானுக்கு முன்னால் தான் வலுவிழந்து போவதை உணர்ந்த காளி, துவண்டு சரிந்தாள்.

தான் ஏவியவர்கள் தம் பலவீனத்தால் தோற்றுப்போனதில், தன்னை அவர்கள் ஏமாற்றிவிட்டதாகவே கடுங்கோபம் கொண்ட சரஸ்வதி, தானே நேரடியாக யாகத்தை அழிக்கப் புறப்பட்டாள். வேகமாகப் பாய்ந்து செல்லும் வேகவதி நதியாக மாறினாள். யாகசாலையை நோக்கிப் பாய்ந்தாள். இதைக் கண்டு திடுக்கிட்டார் பிரம்மன். மீண்டும் திருமாலிடம் தஞ்சம் புகுந்தார். அடுத்தடுத்து தடுத்தும் சரஸ்வதி தன் தாக்குதலைத் தொடர்வது கண்டு சற்றே வெகுண்டார். சட்டென்று ஓர் அணையாகக் குறுக்கே படுத்தார். பாய்ந்து வந்த நதி, அணையால் தடுக்கப்பட்டு கட்டுண்டது. சரஸ்வதியின் ஆணவமும் அழிந்தது.

ஞானம் பெற்றோர் அமைதியையும் கற்க வேண்டும்; படித்தவன் பணிவாகவே இருத்தல் வேண்டும் என்று, சரஸ்வதிக்கு மட்டுமல்லாமல் உலகோருக்கே எடுத்துரைத்தார் பரந்தாமன். அவள் பொறுமை பூண்டிருந்தாளானால், பிரம்மனிடம் அவ்வாறு மனைவியின்றி யாகம் செய்தல் முறையன்று என்று தாமே அறிவுறுத்தி, அவரைத் திருத்தியிருக்க முடியும் என்றும் விளக்கினார்.

முடிவில் யாகம் பூர்த்தியாகி அவிர்பாகம் அக்னியில் எழுந்து வந்தபோது, அதைப் பெற தேவர்களுக்குள் போட்டா போட்டி. ஆனால் இந்த அவிர்பாகம் முழுமைக்கும் உரிமையானவர் திருமாலே; அவரின்றி இந்த யாகம் கைகூடியிருக்காது என்று உரைத்த பிரம்மன் அவ்வாறே அதனை நாராயணனுக்கு அர்ப்பணித்தார். கூடியிருந்த தேவர்கள் ஏமாற்றத்துடன் முகம் சுருங்க, உடனே திருமால், அவர்கள் அனைவருக்கும் என்னென்ன வரங்கள் வேண்டுமோ அவை அனைத்தையும் தான் விரும்பித் தருவதாக வாக்களித்தார்; அவ்வாறே
தரவும் செய்தார்.

Comments