கல்வி வரம் தருவார் ஸ்ரீவேதநாராயணர்!

தாமிரபரணி நதி பாயும் நெல்லைச் சீமையில், மன்னார்கோவில் எனும் ஊரில் அற்புதமாகக் கோயில்கொண்டிருக்கிறார் ஸ்ரீவேதநாராயண பெருமாள். இந்தத் திருவிடம், முன்னொரு காலத்தில் வேதபுரி என்றும், ராஜேந்திர விண்ணகரம் என்றும் அழைக்கப்பட்டதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவே திருவரங்கம் திருத்தலம் இருப்பது போல், தாமிரபரணிக்கும் கடனா நதிக்கும் நடுவே அமைந்துள்ளது இந்தக் கோயில்! திருநெல்வேலியில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ளது அம்பாசமுத்திரம். இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலை வில் உள்ளது மன்னார்கோவில் திருத்தலம். சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட பிரமாண்ட ஆலயம்; பிருகு முனிவரும் மார்க்கண்டேய மகரிஷியும் தவமிருந்து திருமாலை வழிபட்டு, அருள் பெற்ற திருத்தலம். மூலவரான ஸ்ரீதேவி- பூதேவி சமேத வேதநாராயண பெருமாள், மூலிகைகளால் செய்யப்பட்ட வர்ணக் கலாப திவ்விய திருமேனியராக, சுதை வடிவில் தரிசனம் தரு கிறார். தனிக்கோயிலில் ஸ்ரீவேதவல்லித் தாயாரும், ஸ்ரீபுவனவல்லித் தாயாரும் காட்சி தருகின்றனர். இங்கே, பிருகு மற்றும் மார்க்கண்டேய முனிவர்களுக்குச் சந்நிதிகள் உள்ளன. குலசேகர ஆழ்வார், தலங்கள் பலவற்றுக்கும் சென்று இறைவனைத் தரிசித்துவிட்டு, வேதபுரித் தலத்துக்கு வந்தார். ஸ்ரீவேதநாராயணரின் பேரழகில் திளைத்து, இங்கேயே தங்கி சேவையாற்றினார். பிறகு, கைங்கர்யங்கள் பலவற்றிலும் ஈடுபட்டு ஆலயத்தை நிர்வகித்த குலசேகர ஆழ்வார், இங்கே இந்தத் தலத்திலேயே பரமபதம் அடைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். ஆழ்வார் திருவாராதனை செய்த ஸ்ரீசீதாபிராட்டி, ஸ்ரீலட்சுமணன் மற்றும் ஸ்ரீராமனின் விக்கிரகத் திருமேனிகளை இன்றைக்கும் இந்தத் தலத்தில் தரிசிக்கலாம். இங்கு, குலசேகர ஆழ்வாருக்குக் கொடிமரத்துடன் கூடிய தனிச்சந்நிதி அமைந்துள்ளது, குறிப்பிடத்தக்க ஒன்று. அஷ்டாங்க விமானத்தின் கீழே மூன்று அடுக்குகளில், மூன்று விதமாகக் காட்சி தரும் அழகே அழகு! பொதுவாக, பெருமாள் சந்நிதிக்கு எதிரில் காட்சி தரும் கருடாழ்வார், இங்கே உத்ஸவருக்கு அருகில் காட்சி தருவது சிறப்பு என்கின்றனர், பக்தர்கள். உத்ஸவரின் திருநாமம்- ஸ்ரீராஜகோபால ஸ்வாமி. மூலவர் சந்நிதிக்கு எதிரில் பிள்ளைத் தொண்டுப் பாதை உள்ளது. சிறிய துளை போன்ற இந்தப் பாதையில், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் நுழைந்து, பெருமாளைப் பிரார்த்தித்தால், விரைவில் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்! இங்கே இன்னொரு விசேஷம்... மண்டப விதானத்தில், 12 ராசிகளுக்கு உரிய கட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தத் தலத்துக்கு வந்து பிரார்த்தித் தால், கிரக தோஷங்கள் யாவும் விலகும் என்கின்றனர் பக்தர்கள். ஸ்ரீவேதநாராயணரை, புரட்டாசியில் வந்து வணங்கினால், கல்வி- கேள்விகளில் சிறந்து விளங்கலாம். திருமணத் தடை அகலும்; வியாபாரம் சிறக்கும் என்கின்றனர் பக்தர்கள். நித்திய கருடசேவை பெருமாள்! ஸ்ரீமந் நாராயணர், தன்னுடைய திருக் கரத்தில் ஒரு சங்கும் ஒரு சக்கரமும் ஏந்தியிருப்பதைத் தரிசித்திருப்போம். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஸ்ரீபுருஷோத்தமர் திருக்கோயிலுக்கு வந்தால், இரண்டு சங்குகள் மற்றும் இரண்டு சக்கரங்களை ஏந்தியபடி அருளாட்சி செய்யும் பெருமாளைத் தரிசிக்கலாம்! அம்பாசமுத்திரத்தில் உள்ள அற்புதமான திருத்தலம் இது. பரந்து விரிந்த தனது எல்லையைச் சிறப்புற ஆட்சி செய்த பராந்தக சோழ மன்னரின் மனதுள் இருந்த ஒரே பாரம்... தனக்குப் பிறகு இந்த தேசத்தை ஆள்வதற்கு ஒரு வாரிசு இல்லையே என்பதுதான்! அவர் செல்லாத கோயில் இல்லை; தரிசிக்காத தெய்வம் இல்லை. தான- தருமங்கள் செய்தார்; ஹோம - யாகங்கள் செய்தார். ஆனாலும், பலனில்லை. அப்போது, முனிவர் ஒருவர்... 'தெற்கில் புண்ணிய நதியாம் பொருநை நதி பாய்கிற தேசத்தில், திருமாலுக்கு ஆலயம் எழுப்பி வழிபடு. குழந்தை பாக்கியம் கிடைக்கும்’ என அருளினார். அதன்படி, மன்னர் இந்த பிரமாண்டமான வைணவ ஆலயத்தை அமைத்து வழிபட்டார்; பிள்ளை வரம் கிடைக்கப் பெற்றார் என்கிறது ஸ்தல வரலாறு. இந்தத் தலத்து மூலவர்- ஸ்ரீபுருஷோத்தம பெருமாள். தாமிரபரணியின் வடகரையில், இந்திர விமானத்தின் கீழ் கருவறை கொண்டு சேவை சாதிக்கிறார் ஸ்ரீபுருஷோத்தம பெருமாள். கருடாழ்வார், தன்னுடைய வலது கரத்தில் திருமாலின் திருப்பாதத்தைத் தாங்கி நின்று காட்சி தரும் தலம். எனவே, இங்கேயுள்ள பெருமாளை நித்திய கருட சேவை பெருமாள் என்று போற்றுகின்றனர், பக்தர்கள். புருஷோத்தமர் என்றால், ஏகபத்தினி விரதர் என்று அர்த்தம். இங்கு வந்து ஸ்ரீபுருஷோத்தமரை வணங்கும் பெண்கள், நல்ல குணமும் பேரன்பும் கொண்ட கணவரைப் பெறுவர் என்பது ஐதீகம். பெண்ணின் ஜாதகத்தைப் பெருமாளின் திருவடியில் வைத்து வணங்கிவிட்டு, வரன் பார்க்கும் படலத்தைத் துவக்குகின்றனர். அதேபோல், திருமணமானதும்... தம்பதி சமேதராக இங்கு வந்து தரிசித்தால், இணை பிரியாமல் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை! இந்தத் தலத்தில் எட்டுக் கரங்களுடன் காட்சி தரும் ஸ்ரீபுருஷோத்தம பெருமாள், இரண்டு சங்குகள் மற்றும் இரண்டு சக்கரங்களைக் கரங்களில் ஏந்தியபடி தரிசனம் தருகிறார். கடன் தொல்லை, வியாபாரத்தில் நஷ்டம், நல்ல உத்தியோகம் கிடைக்காத நிலை என அவதிப்படுவோர், புண்ணியம் மிகுந்த புரட்டாசி மாதத்தில் இங்கு வந்து வணங்கினால், விரைவில் வாழ்க்கை இனிமையாகும் என்கின்றனர் பக்தர்கள். எனவே, புரட்டாசியில், சிறப்பு அலங்கார- ஆராதனைகள், பூஜைகள் என அமர்க்களப்படுகிறது ஆலயம்! மோட்சம் தருவார் ஸ்ரீகஜேந்திரவரதர்! பொதிகை மலையடிவாரத்தில், பொருநை நதிக் கரையில் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீகஜேந்திரவரதர். முதலையிடம் இருந்து யானையைக் காத்தருளி மோட்சம் தந்த பெருமாள், நம்மையும் காத்து, நமக்கு மோட்சத்தைத் தரக் கோயில் கொண்டிருக்கும் திருவிடம், அத்தாளநல்லூர். மூலவர் - ஸ்ரீதேவி- பூதேவி சமேத ஸ்ரீஆதிமூல பெருமாள். திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் வழியில் உள்ளது வீரவநல்லூர். இங்கிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது அத்தாளநல்லூர் (மினி பஸ் மற்றும் ஆட்டோ வசதி உண்டு). கஜேந்திரனுக்கு மோட்சம் தந்ததால், ஸ்ரீகஜேந்திரவரதர் என அழைக்கப்படுகிறார். ஒருகாலத்தில், யானை காத்த நல்லூர் எனப்பட்டு அதுவே பின்னாளில் அத்தாளநல்லூர் என மருவியதாகச் சொல்வர். இந்திர விமானத்தின் கீழ், கருவறையில் அழகு ததும்பக் காட்சி தரும் ஸ்ரீகஜேந்திர வரதரைத் தரிசித்தாலே, நம் பாவமெல்லாம் பறந்தோடிவிடும். இங்கே... சுத்த அன்னத்தை நைவேத்தியம் செய்து வழிபடுவது, மிகுந்த பலனைத் தரும் என்பது ஐதீகம்! கோயில் பிராகாரத்தில், தசாவதாரத் திருக் கோலங்களில் பெருமாளைத் தரிசிக்கலாம். ஸ்ரீவேணுகோபால், ஸ்ரீபரமபத நாதர், ஸ்ரீசக்கரத் தாழ்வார், ஸ்ரீநரசிம்மர் மற்றும் ஸ்ரீஅனுமன் ஆகியோர் சந்நிதிகளில் அற்புதமாகக் காட்சி தருகின்றனர். இங்கு, தாமிரபரணி நதியில் உள்ள கஜேந்திர மோட்ச தீர்த்தக் கட்டத்தில் நீராடினால், நம் பாவங்கள் கரையும். கோயிலுக்குப் பின்புறத்தில் உள்ள ஸ்ரீவிஷ்ணு தீர்த்தமும் விசேஷம். இந்தத் தீர்த்தங்களில் நீராடிவிட்டு, ஸ்ரீகஜேந்திரரை வழிபட, பிறவாத பெருநிலையை அடையலாம் என்பது ஐதீகம்! இதையடுத்து உள்ள சிங்க தீர்த்தத்தில் நீராடி, வணங்கினால்... மரண பயம் நீங்கும்; நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. இங்கிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீசக்கர தீர்த்தத்தில் நீராடினால் (முதலையின் மீது ஸ்ரீசக்கரத்தை ஏவிய திருவிடமாம் இது!), சகல தோஷங்களும் பாபங்களும் விலகும் என்கிறார் கோயில் பட்டாச்சார்யர். புரட்டாசி மாதத்தில், ஸ்ரீகஜேந்திரவரதருக்குப் பட்டு வஸ்திரம் சார்த்தி, திருமஞ்சனம் செய்து வழிபட, திருமணத்தடை நீங்கும்; புத்திர பாக்கியம் கிடைக்கப் பெறுவர்; நல்ல உத்தியோகமும், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெற்று நிம்மதியுடனும் ஆரோக்கியமாகவும் வாழ்வார்கள் என்று பூரிக்கின்றனர், நெல்லை வாழ் மக்கள்!

Comments